பாரதிய சனதாக் கட்சியின் இந்தியச் செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வைகோ பிரதமர் நரேந்திர மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற நாடு போற்றும் நல்ல தலைவர்களையோ எதிர்த்துக் கடுமையாகப் பேசிவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்ப முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றும் “அவர் நாவை அடக்காவிட்டால், அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பா.ச.க. தொண்டனுக்கும் தெரியும்” என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் கூறியுள்ளார்.

H.Rajaஅனைத்துக் கட்சித் தலைவர்களின் மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்று வன்முறை அரசியலுக்கு இடமில்லாமலும், தனிநபரை இழிவுபடுத்தும் கொச்சை அரசியல் செய்யாமலும், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருபவர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள். அவர், தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதாகச் சொல்லப்படும் சென்னை தியாகராயர் நகர் ‘தியாகத் திருநாள் – பினாங்குப் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டத்தில்’ நானும் கலந்து கொண்டேன்.

அக்கூட்டத்தில், இந்தியாவில் 75 விழுக்காட்டினர் இந்தி பேசுவோர் என்று ராஜ்நாத் சிங் கூறியிருப்பதைத் தவறான தகவல் என்றும், இந்தி பேசாத தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இந்தியாவிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என்றும், காட்மாண்டு சார்க் மாநாட்டில் நரேந்திர மோடி இராசபக்சேவுக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துப் பேசியது ஓர் அரசு வெளிநாட்டுத் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய பொதுநிலை தவறிய போக்கு என்றும் வைகோ விமர்சித்தார். இது பற்றித் தஞ்சையில் செய்தியாளர்கள் கேட்டபோது, எச்.ராஜா மேற்கண்டவாறு கூறி, வைகோவுக்கு எதிராகத் தன் கட்சித் தொண்டர்களிடம் வன்முறைவெறியைத் தூண்டியுள்ளார்.

“வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று எச்.ராஜா கூறியிருப்பது கொலை மிரட்டல் குற்றமாகும். எனவே, தமிழக அரசு, எச்.ராஜா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் – 506(II) பிரிவின்கீழ், கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்ய ஆணையிட வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழினம் – தமிழ் மொழி ஆகியவற்றின் தற்காப்புக்குப் பா.ச.க. கட்சி பேராபத்தாக உள்ளது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி புரிந்து கொண்டு, அக்கட்சியைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Pin It