“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு” - குறள்

மிக்க பசியும், தீராத நோயும், வெளியிலிருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் இனிதாக நடைபெறுவதே நல்ல நாடாகும் என்று இக்குறள் கூறுகிறது. இது ஒரு நாட்டிற்கு மட்டும் அல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும்.

poor girlதற்போது (2011) இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் இரண்டாமிடமாகும். இங்குள்ள மக்கள் ஒவ்வொருவரும் நல்ல உடல் நலமும், மனநலமும் பெற்றவர்களாக விளங்க வேண்டும். முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) இருக்கிறோம். இந்த 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் உள்ளார்ந்த வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது. இதற்கு இடையில் எவ்வளவோ வளர்ச்சித் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான இலக்கை உண்மையாக அடைந்துவிட்டோமா என்றால் இல்லை.

உண்மையான வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்க வேண்டும். ஆனால் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றில் தன்னிறைவு அடையாமல் ஆரோக்கியமான இந்தியாவை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பதுதான் நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி. இந்நிலையில் ஆயிரம் ஆண்டு வளர்ச்சித் திட்டத்தின் (Millennium Development Goals) முக்கிய எட்டு அம்சங்களான 1. வறுமை மற்றும் பட்டினியை ஒழிப்பது, 2. அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, 3. ஆண் பெண் பாகுபாட்டை ஒழித்தல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், 4. குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்தல், 5. பேறுகால தாய்மார்களின் நலனை உயர்த்துதல், 6. எய்ட்ஸ், மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்களை ஒழித்தல், 7. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல், 8. பன்னாட்டு உறவுகளை வளர்த்தல் ஆகியவற்றை 2015க்குள் அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஒரு பக்கம் வருவாய் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதாவது உலக பணக்காரர்கள் தர வரிசையில் இந்தியர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். மறுபக்கம் மனிதனின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல். முக்கியமாக தற்போதுள்ள விலைவாசி உயர்வு மனிதனை மட்டும் அல்ல, மனிதன் சார்ந்துள்ள அனைத்து விசயங்களையும் பாதிக்கிறது. உணவுப் பண்டங்கள், கால்நடைகளுக்கான தீவனம், வாகனங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றின் விலைஉயர்வு இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் வெட்டுக் கிளிகளாக உள்ளது. உலக நாடுகளில் ஏற்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கூட இந்தியா போன்ற வளரும் நாடுகளை மிகவும் பாதிக்கவே செய்கிறது.

உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சியில் தற்போது 11வது இடத்தில் உள்ளது. முக்கியமாக வாங்கும் சக்தி மதிப்பின் (Purchasing Power Parity) அடிப்படையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. மென்பொருள் உற்பத்தி, தொழில் பொருள்களின் ஏற்றுமதி, சேவைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சியைப் பார்க்கும் போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா கோலோச்சும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். மேலும் தற்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% சேவை துறையாகவும், 28% தொழில் துறையாகவும் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்களிப்பு வெறும் 17% மட்டுமே. இருந்தாலும் கூட பால், முந்திரி, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கரு மிளகு போன்றவற்றின் உற்பத்தியில் உலகில் முக்கிய இடத்தில் உள்ளது. நெல், கோதுமை போன்றவற்றின் உற்பத்தியில் நல்ல வளர்ச்சியும் கண்டு வருகிறது. இது போன்ற பல விசயங்களில் இந்தியாவை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டாலும், முக்கியமாக மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் உலக நாடுகளுக்கு மிகவும் பின் உதாரணமாக விளங்குகிறது.

பன்னாட்டு உணவுக் கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute) சமீபத்தில் (2010) வெளியிட்ட ஆய்வின்படி, உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் உள்ள மொத்தம் 84 நாடுகளில் இந்தியா 67 இடத்தில் உள்ளது. மேலும் இது பாகிஸ்தான், நேபாளம், சைனா போன்ற நாடுகளைவிட அதிகம் என்பதுதான் கசப்பான உண்மை. மனித மேம்பாடு குறியீட்டு எண் (Human Development Index) அடிப்படையில் பார்க்கும் போது இந்தியா 119வது இடத்தில் உள்ளது. இது நடுத்தர மனித மேம்பாடு (Medium Human Development) பட்டியலில் வருகிறது. முக்கியமாக இவற்றை மதிப்பீடு செய்வதில் கல்வி, மனிதனின் ஆயுள்காலம், தனிநபர் வருவாய் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மனித மேம்பாடு அடிப்படையில் (2001) கேரளா முதல் இடத்திலும், பஞ்சாப் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது. நாட்டில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வு கொண்டதாக விளங்குகிறது. மனித வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சியே. அதே சமயம் சரிவிகித உணவு உட்கொள்வதில் வளர்ச்சி காணப்படவில்லை.

தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-3) 2005-06 தகவல்படி, 56% பெண்கள் ரத்த சோகை நோயாலும், 30% குழந்தைகள் பிறக்கும் போது குறைந்த எடையுடனும் (2 ½ கிலோவுக்குக் குறைவாக), 47% குழந்தைகள் உடலுக்குத் தேவையான சத்துக் குறைபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. இதில் கிராமப்புற மக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், சமூகத்தில் நலிவடைந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக உலகில் எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதும் ஒரு கசப்பான உண்மை.

இந்தியாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதைப்போன்ற பிரச்சனைகளுக்கு பெயரளவில் உள்ள உணவுக்கு உரிமைச் சட்டம் மட்டும் தீர்வாக அமையுமா? நாட்டில் இதுவரை எவ்வளவோ வறுமை ஒழிப்புத் திட்டங்கள் இருந்தும் நம்மால் வறுமைக்கு கோடு மட்டுமே போட முடிந்தது. ஆனால் அதற்கு முழுமையான தீர்வு காணமுடியவில்லை. அதிலும் “வறுமையை” மதிப்பீடு செய்வதில் பொருளாதார வல்லுநர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள். ஆனால் வறுமைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை. நீண்டகாலமாகவே வறுமைப் பிணி இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருப்பதன் விளைவே நீண்ட கால உணவுப் பாதுகாப்பின்மை(Chronic food insecurity)க்கு முக்கிய காரணமாகும். இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்வோர் எத்தனையோ பேர். சொந்த வீடு இல்லாமல் தெருவோரங்களில் குடியிருப்போர் எத்தனையோ பேர்.

உண்மையான ஏழைகளுக்கு அரசின் திட்டங்கள் அவ்வளவாக சென்றடைவது இல்லை. ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களின் ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்க ஆரம்பித்துவிட்டனர் அரசியல்வாதிகள். ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்வதும், அதைப் பார்த்து ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் பெருமிதம் கொள்வதாலும் என்ன பயன்? 2002-2003ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8% இருந்தது. தற்போது (2010-2011) 8.5% என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த (2011-12) ஆண்டு இதன் வளர்ச்சி வீதம் 9% இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது நாட்டின் தனி நபர் வருவாய் 10.5% உயர்ந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.40,141 (2008-09) லிருந்து ரூ.44,345 (2009-10) ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் வருவாய் உயர்வு மட்டும் உண்மையான வளர்ச்சியைத் தீர்மானிக்காது. தற்போது நாட்டின் வருவாய் மட்டும் உயரவில்லை. உள்நாட்டு தேவையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. முக்கியமாக வாகனங்களுக்கான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் 1 லிட்டர் டீசல் விலை ரூ.18, தற்போது (2010) அதன் விலை ரூ.38.50. அதாவது 113.88% ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பண்டங்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனை உண்மையான வளர்ச்சியாக கருத முடியாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத் தரமும் ஒரே சீராக உயர்த்தப்படுதல் வேண்டும்.

நாட்டின் அடிப்படை தேவைகளான உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்றவை எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைத்தல் வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு படிப்பறிவு அவசியமான ஒன்றாகும். உலகிலேயே படிக்காதோர் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவில் கற்றவர்கள் 64.8%, அதில் ஆண்கள் 75.3%, பெண்கள் 53.7% மட்டுமே. பட்டியல் வகுப்பினர் (SC) 54.7% அதில் ஆண்கள் 66.64%, பெண்கள் 41.9% மட்டுமே. பழங்குடி மக்களில படித்தோர் 47.1%. அதில் பெண்கள் வெறும் 34.76% மட்டுமே. இந்த ஏற்றத் தாழ்வுகள் குறைக்கப்பட வேண்டும். தற்போதுள்ள கல்வி வளர்ச்சி விகிதம் மேலும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது. படிப்பறிவு பெற்றோரில் ஆண் பெண் விகிதாச்சார வேற்றுமை அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் அவற்றின் தரமும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய தர நிலவரம் ஏற்புடையதாக இல்லை என்பதே உண்மை.

தரமான கல்வி மட்டுமே சமூகத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது தரமான கல்வி எல்லோருக்கம் பாரபட்சமில்லாமல் கிடைக்கிறதா என்றால் இல்லை. கல்வி நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் சமூக அந்தஸ்துக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் மட்டுமே பயன்படுவது போல் தெரிகிறது. கல்வி என்பது வெறும் பட்டங்கள் பெறுவது மட்டுமல்ல, படித்த கல்வி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பது மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தற்போது கல்வி நிறுவனங்கள் வளர்ந்த அளவு கல்வியின் தரம் உயரவில்லை. உதாரணமாக படித்த கல்விக்கும், சிந்தனைக்கும் தொடர்பில்லாத நிலை. மேலும் இந்த கல்வி முறை சமூக முன்னேற்றத்திற்கு உதவுமா என்பது கேள்வியாக உள்ளது. கவிஞர் வைரமுத்து சொன்னது போல “இந்த கல்வி முறை நல்ல குடிமகன்களை அல்ல – கையொப்பமிடத் தெரிந்த மரங்களைத்தான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது”.

சுகாதார வசதியில் இன்னும் பின்தங்கிய உள்ளோம். இன்னும் பல கிராமங்களில் திறந்தவெளியில் சாலை ஓரங்களில் மலம் கழிக்கும் அவலநிலை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. 2001ம் ஆண்டு புள்ளி விபரப்படி இந்திய கிராமங்களில் 78.08% குடும்பங்களில் கழிவறை வசதி கிடையாது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 85.64% கேரளாவில் மட்டும் குறைவு (18.67%). இந்நிலை மாறவேண்டும். மேலும் மனிதனின் ஆயுள்காலம் வளர்ந்து கொண்டிருந்தாலும் தற்போது இந்தியரின் சராசரி ஆயுள் காலம் 64.4 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது உலக நாடுகளில் உள்ள மக்களின் சராசரி வயதோடு (69.3) ஒப்பிடும் போது குறைவே.

சுத்தமான குடிநீரும், சுத்தமான காற்றும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள். மேலும் நகர்மயமாதல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.

மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் மனிதன் உயிர் வாழ்வதற்கு வழி செய்கிறது. ஆனால் ஆரோக்கியத்தோடு வாழ்விற்கு சத்துள்ள உணவும் அதற்கான சுற்றுப்புறச் சூழலும் மிக அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்தபட்ச கலோரிக்கும் குறைவான உணவே கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கடின வேலை செய்யும் தொழிலாளிக்கு 2400 கலோரிக்கும் அதிகமான உணவே தேவைப்படும். தற்போதுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலையில், உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய தரமான உணவுப் பொருள்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அன்றாட வருமானத்தில் உணவுக்காக மட்டும் 50% மேல் செலவிட வேண்டிய கட்டாய சூழ்நிலை, தற்போதுள்ள உணவு பணவீக்கத்தினால் மாத ஊதியம் பெறுவோருக்கே அவர்களுடைய குடும்பப் பொருளாதாரம் பாதிக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. இதில் தினக்கூலி பெறுவோரின் நிலை எவ்வாறு இருக்குமென்று சிந்திக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் மட்டும் உணவுப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்து விடாது. அத்தியாவசிய சத்துள்ள தரமான பொருள்களை வெளி அங்காடியிலும் எல்லோராலும் வாங்கிச் சாப்பிடக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கூலித் தொழிலாளியின் சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.50க்கும் குறைவாக இருந்திருக்கலாம். தற்போது அவர்களின் கூலி 100% மேல் உயர்ந்திருந்தாலும்கூட அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுப் பொருள்களை அங்காடியில் வாங்கக்கூடிய சூழ்நிலை இல்லை. காரணம், பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தி குறைவாக உள்ளது. மேலும், இந்நாட்டில் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான கூலி பெறும் அவல நிலையும் தொடர்ந்து கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வருவாய் ஏற்றத் தாழ்வுகள் ஏழை பணக்காரர் என்ற இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது.

இன்று காலநிலை மாற்றம் (Climate change) உலக அளவில் பேசப்படும் முக்கியமான விசயமாக உள்ளது. இதில் இந்தியாவின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய நீண்டகால திட்டங்கள் என்னவாக இருக்க முடியும். இந்தியாவின் தானிய உற்பத்தி மற்றும் தனிநபர் கலோரி உணவு நுகர்வு (Per capita calorie consumption) வேகமாக குறைந்து வருகிறது. இதில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. இந்நிலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வளர்ந்த வண்ணம் உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் சாமானிய மக்களை பல்வேறு வகையில் பாதிக்கவே செய்கிறது. கழனியை (வேளாண்மை) விட கணினியின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. மனித வளத்திற்கான அஸ்திவாரம் பலவீனமாக இருந்து கொண்டு பலம் வாய்ந்த இந்தியாவை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பது தான் கேள்வி. சேவை துறை, தொழிற் துறையின் பங்களிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தாலும், வேளாண்மை மட்டுமே நாட்டில் உள்ள சுமார் 65 விழுக்காடு கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. எனவே வேளாண் விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளோம். வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது ஒரு ஏக்கருக்கு 4ல் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். வேளாண் உற்பத்தியில் வளர்ச்சி இருந்தாலும், உற்பத்திப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவையில் சுயசார்புடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும். இதற்கு இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், எல்லோருக்கும் அவை பாரபட்சம் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சிறு தொழில்களை, குடிசை தொழில்களைப் பாதுகாப்பது உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நாட்டின் உண்மையான சமூகப் பாதுகாப்பு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேதோடு மட்டுமின்றி மனித வாழ்வாதாரங்களைப் பெருக்கச் செய்வதே. இந்தியா கூட்டுக் குடும்பமாக மட்டும் இல்லை, கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது. இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் மட்டுமே மேலும் செல்வங்களைப் பெறமுடியும். தேடிய செல்வங்களை அனுபவிக்க முடியும். மேலும் பல புத்தாக்கங்களை செய்த வண்ணம் இருக்க முடியும்.

பல நோய்கள் மனித உடலை வேகமாக தாக்குவதற்கு முக்கியமான காரணம் ஆரோக்கியமற்ற உடல் நிலையே. காசநோய், மலேரியா, எய்ட்ஸ் போன்ற பயங்கரமான நோய்களினால் இறப்போரை விட ஊட்டச்சத்து குறைவினால் இறப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருவது வளரும் நாடுகளுக்கு முக்கியமாக இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலே.

தற்போது உணவுப் பிரச்சனை முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம், உணவு உற்பத்தி ஆகியவற்றிற்கு நீண்டகால திட்டங்கள் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வருங்கால இந்தியாவை வல்லரசாக மாற்றப்போகும் குழந்தைகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் குறைவே. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 35 விழுக்காடு குழந்தைகளாவர். ஆனால் நமது நிதிநிலை அறிக்கையில் ஆண்டுதோறும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான ஒதுக்கீடு வெறும் 4.12% தான். எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி, சுகாதார வசதி, சத்தான உணவு, இருப்பிட வசதி ஆகியவற்றை உறுதி செய்து தருவது மிக அவசியம்.

வளர்ச்சியென்பது நாட்டின் தேசிய வருமானமும், தனிநபர் வருவாயும், அன்னியச் செலாவணி இருப்பும், அன்னிய முதலீடும் மட்டுமே ஆகாது. நாட்டில் உள்ள அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நல்ல மனநிலையோடும் வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அதற்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் கிடைக்கச் செய்தல் வேண்டும்.

உலக மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா பெரிய நாடாக இருந்து கொண்டு, உடல் ஆரோக்கியத்தில், சமூக முன்னேற்றத்தில் மெலிந்த நாடாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.

- இல.சுருளிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், பொருளாதாரத் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைகழகம்

Pin It