கல்வி கற்பதன் நோக்கம் அறிவைப் பெறுவது அல்ல, அதன் முதன்மையான நோக்கம் பொருள் ஈட்டுவது தான் என்ற வழக்கத்திற்கு நாம் மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று பாரதி போற்றிய மண்ணின் மைந்தர்களாகிய நாம் தான் கல்விக் கூடங்களை வணிக நிறுவனங்கள் போல மாற்றிவிட்டோம்.

கல்வி வெளிச்சத்தை அறியாமை இருட்டில் அகப்பட்டவர்களுக்கு கொடுக்காததன் விளைவு தான் இன்னும் இந்த நாட்டில் எழுத்தறிவின்மையை நம்மால் முற்றாக ஒழிக்க முடியவில்லை. நாம் சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்கு மேலாகியும் 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் அறியாமை இருட்டில் அழுந்திக் கிடக்கும் அவலம் தொடரத்தான் செய்கிறது.

students

இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, 10 ஆண்டுகளுக்குள் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்று 45வது ஷரத்து (இந்திய அரசமைப்புச் சட்டம் – நெறிமுறைக் கோட்பாடுகள்) அறிவித்தது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் விளைவே 14 வயதுக்குட்பட்ட பல ஆயிரம் குழந்தைத் தொழிலாளிகளை நம் நாடு உருவாக்கி விட்டது. ஏழைகளிடமும், அடித்தட்டு மக்களிடமும் கல்வி இன்று வரை சென்று சேரவில்லை. பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்குக் கூடாரமாக கல்வி நிலையங்கள் காட்சியளிக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தின் 86வது திருத்தம், இன்று கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்கி விட்டது. ஆனால் அனைவருக்கும் கல்வி என்பது தான் ஏட்டளவில் கனவாகிப் போனது. பணம் படைத்தவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தரமானக் கல்வியும், அடித்தட்டு ஏழை மக்களுக்கு அறிவுத் திறனை மேம்படுத்த பயனற்ற கல்வியும் வழங்கப்படுவதே இன்றைய ‘சமூகநீதி’. ‘எல்லோர்க்கும் கல்வி’ என்ற ‘யுனெஸ்கோ’ அமைப்பின் கனவு என்று தான் நனவாகுமோ ?

1950 இல் நம் நாட்டில் 15 பல்கலைக் கழகங்கள் தான் இருந்தன. இன்று 400 பல்கலைக் கழகங்களுக்கு மேல் பெருகிவிட்டன. அன்று 500 கல்லூரிகள்; இன்று 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள். அன்று கல்லூரி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர். இன்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லூரிகளில் பணியாற்றுகின்றனர். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், ஆசிரியர்களும் பெருகிவிட்டதால் கல்வி வளர்ந்து விட்டது என்று அர்த்தமாகி விடுமா? தரமானக் கல்வியை எத்தனை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் போதிக்கின்றன என்று நம்மால் பட்டியல் இட முடியுமா?

நாடு விடுதலை அடைந்த போது உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம். இன்று உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 10 சதவிகிதம். கல்வி பெறுபவர்களில் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இன்று வரை கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை விகிதம் மகிழ்ச்சி தரக்கூடிய அளவிற்கு உயர்ந்து விடவில்லை என்பது தான் சோகமான தகவல். ஆரம்பக் கல்வியில் அடியெடுத்து வைக்கும் 100 குழந்தைகளில் 30 பேர் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பதில்லை. 8 ஆம் வகுப்போடு 50 பிள்ளைகள் நின்று விடுகின்றனர். உயர் கல்வி படிக்க வெறும் 10 பேர் தான் உள்ளே நுழைகின்றனர். அந்த 10 பேரில் பெரும்பான்மையினர் வசதி படைத்தவர்களின் வாரிசுகள்.

கோத்தாரி கமிசன் தேசிய வருவாயில் ஆறு சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இன்று வரை மூன்று சதவிகிதத்துக்கு மேல் கல்விக்கு மத்திய அரசால் பணம் ஒதுக்க முடியவில்லை. ஆனால் ராணுவத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒரு லட்சம் கோடிக்கும் மேலே செலவழிக்கிறது. உள்நாட்டில் தொழில்நுட்பம் வளர்ந்தால் தானே ஆயுத இறக்குமதி குறையும். அதற்கு கூட தரமான கல்வி தான் அவசியம் என்பதை அரசு உணராவிடில் வருங்காலத்தில் கல்வி நிலையங்கள் எல்லாம் ஆயுதங்களை குவித்து வைக்கும் கூடாரங்களாக மாறிப்போகும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. கல்வி என்பது ஒருவருடைய அடிப்படை உரிமை. அடித்தட்டு மக்கள் முன்னேறுவதற்கான முதல் படியே கல்விதான். அத்தகைய கல்வியை தனியார் வசம் ஒப்படைத்ததால் கள்ளச்சாராயம் காய்ச்சியவன் எல்லாம் கல்வி வள்ளல் ஆகிவிட்டான். ஆரம்ப கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட மத்திய, மாநில அரசுகள் உயர் கல்வியை தனியாரிடம் தாரை வார்த்து விட்டன.

அரசு பொறுப்பேற்று நடத்தும் கல்விக் கூடங்களில் அடிப்படை வசதி கூட இல்லாத அவலத்தை யாரிடம் போய் சொல்வது? இந்தியா முழுவதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களில் வகுப்பறைகளே கிடையாது. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கண்ணகில் அடங்காதவை. இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆரம்ப பள்ளிகள் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஆசியர் விகிதம் கிடப்பில் உள்ளன. இதனால் ஏழை மக்கள் கூட தனியார் பள்ளிகளை நாட வேண்டிய அவல நிலையை அரசாங்கம் உருவாக்கி விட்டது. இதெல்லாம் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்த்தெடுக்க அரசே செய்யும் வழிமுறைகள்தானோ என சந்தேகப்படும் அளவிற்கு அரசுப் பள்ளிகளின் நிலை உள்ளது. தனியார் பள்ளிகள் எல்லாம் பகற்கொள்ளையில் ஈடுபடும் வணிகக் கூடாரங்களாக உள்ளன.

‘இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் படிப்பதை விட, தொடக்கப் பள்ளியில் படிப்பதற்கு அதிக செலவாகிறது. இதனால் ஏழைகள் அவர்களது குழந்தைகளை பள்ளிக் கூடங்களில் சேர்ப்பது கனவாகி விட்டது. தங்கள் ஆண்டு வருமானத்தில் 28 சதவிகிதத்தை குழந்தைகளின் தொடக்கக் கல்விக்காக பெற்றோர்கள் செலவழிக்கின்றனர். உயர் கல்விக்காக பல்கலைக் கழகங்களில் 14 சதவிகிதத்தை பெற்றோர்கள் செலவு செய்கின்றனர். தொடக்கக் கல்வியில் தனியார் துறையின் ஈடுபாடு அதிகரித்தால், ஏழைகளுக்குக் கல்வி எட்டாக் கனியாகிவிடும்’ என்று அக்டோபர் 13, 2007 இல் யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கை எச்சரித்ததை அரசு என்று தான் உணரப் போகிறதோ?

தனியார் பள்ளிகள் வசூலிக்கும் தொகைக்கு அரசு உச்ச வரம்பு நிர்ணயித்து உள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை தாண்டி பன்மடங்கு பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் வசூல் செய்கின்றன. இதை அரசும் கண்டுகொள்வதில்லை. பெற்றோர்களை கடனாளி ஆக்குவதில் முதல் இடம் வகிப்பது கல்வி தான். எப்படியாவது தங்கள் குழந்தைகளை ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆக்கிவிட வேண்டுமென துடிக்கும் பெற்றோர்களின் கனவை தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய நேரத்தில் அறுவடை செய்யத் தவறுவதில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களின் முறைக்கேடுகளை அரசு தட்டிக் கேட்க முன்வந்தால் பள்ளிகளை மூடிவிடுவோம் என கொள்ளையடித்த கூட்டம் மிரட்டுகிறது. அரசுப் பள்ளிகளையே தரமான முறையில் பராமரிக்கத் தவறும் அரசாங்கம் தனியார் பள்ளிகளையா தானே ஏற்று நடத்தப் போகிறது? தனியார் பள்ளிகளின் முறைகேடுகளை அரசு தட்டிக் கேட்க முன்வராததால் முதலில் பாதிக்கப்படுவது பெற்றோர்களும் அவர்தம் பிள்ளைகளின் கல்வியும் தான். பொறுப்புள்ள அரசாங்கம் இதனை ஏனோ கண்டிக்க முன்வரவில்லை.

அரசுப் பள்ளிக் கல்லூரிகளில்தான் ஆசிரியர் பற்றாக்குறை, வசதி குறைவின்மை இருக்கிறது என்றால், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு மாறாகத் தான் 90 சதவிகித தனியார் பள்ளிக் கல்லூரிகள் இயங்கி கொண்டிருக்கின்றன. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் சாதி, மத அடிப்படையில் தான் ஆட்கள் நியமிக்கப்படுகின்றன என்கிற போக்கு கவலையளிப்பதாக உள்ளது.

சிபாரிசு இருந்தால் தான் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி விட்டதால் தகுதி உள்ள ஒரு மாணவனின் கல்வி முற்றாக பாதிக்கப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, சத்தீஸ்கர் மாநில அரசு ஒரே சட்டத்தின் மூலமாக 112 தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவராக இருந்த யாஷ்பால் சத்தீஸ்கர் மாநில அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். சில அடுக்கு மாடிக் கட்டிடங்களில் பல்கலைக்கழகம் இயங்கியதையும், முறைகேடுகளையும் அவர் ஆதாரத்துடன் எடுத்து வைத்தார். மாநில அரசின் சட்டத்தை ரத்து செய்த உச்சநீதி மன்றம், ‘கட்டிட வசதியின்றி, கற்பித்தல் வசதியின்றி பட்டங்கள் வழங்க முடியுமெனில், நாட்டில் இதை விட பெரிய தீங்கு வேறு எதுவும் இருக்க முடியாது’ என்று தன் தீர்ப்பில் தெரிவித்தார்.

‘பல்கலைக்கழகம் என்பதன் அடிப்படையே அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுவிட்டது. அது தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து விட்டது. அதன் சுய அதிகாரம் கரைந்து விட்டது. பட்டப்பகலில் கல்வி புதைக்கப்பட்டு விட்டது. அறிவுத் துறைகள் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது. பெருமளவில் கல்வி வணிகமயமாக்கப்பட்டு விட்டது’ என்று தான் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியது யாஷ்பால் குழுவின் அறிக்கை.

தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் சேர்கைக் கட்டணத்தை உச்சநீதி மன்றம் அங்கீகரிக்க மறுத்தது. மேலும் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஏற்கனவே ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சேர்கை கட்டணத்துக்கு எதிராக அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளிய தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து சேர்க்கை கட்டணத்தை வசூல் செய்து கொண்டு தான் உள்ளன.

அரசின் கவனக்குறைவு தான் இதற்கு காரணம் என்று சொல்லிவிட முடியுமா? ஏனெனில் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை வைத்திருக்கும் பெரும்பாலானோர் மத்திய மாநில அரசின் அமைச்சர் பெருமக்கள் தானே! ஊழலின் ஊற்றுக்கண்ணாக கல்வி நிலையங்கள் செயல்படுவதற்கு அடிப்படைக் காரணமே இவர்கள் தான். இங்கே கொள்ளையடித்த கணக்கில் வராத பணங்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற உயர்ந்த நோக்கத்தை கொண்டிருப்பவர்கள் இவர்கள் தானே!?

தனியார் தொழிற்கல்லூரிகள் 5 லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை சேர்க்கை கட்டணத்தை வசூல் செய்கின்றன. தங்கள் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களை கடும் சோதனைக்குப் பிறகே கல்லூரிகளுக்குள் நுழைய அனுமதிக்கின்றன தனியார் கல்வி நிறுவனங்கள். கொள்ளையடிப்பதிலும் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருக்கும் இத்தகைய தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பணம் இருந்தால் போதும் பட்டம் வாங்கி விடலாம் என்ற நோக்கில் நமது சமுதாயம் நடைபோடத் தொடங்கி விட்டால் நாடு எப்படி உருப்படும்? தரமற்ற கல்வியின் விளைவாக தரமான மாணவர்களை உருவாக்கி விடமுடியாது என்பதற்கான சான்று தான் லட்சக்கணக்கில் வேலையில்லாமல் திரியும் பட்டதாரிகள். வெறும் புத்தகப் புழுக்களை மட்டுமே உற்பத்தி செய்யும் கல்வி நிலையங்களின் முதல் நோக்கமும், கடைசி இலக்கும் பணம் ஒன்று தான்.

நாம் கடந்த ஆண்டின் பொறியியல் கல்லூரி தேர்ச்சி விகிதத்தை எடுத்துப் பார்த்தால் அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இணைக்கப்பட்டிருக்கும் 45க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் முட்டை! அதாவது ஒருவர் கூட அந்த குறிப்பிட்ட பருவத் தேர்வில் வெற்றி பெறவில்லை. லட்சங்களை கொட்டி படிக்க வைப்பது இந்த மதிப்பெண்களை பெறுவதற்காகத் தானா? நம் நாட்டில் உற்பத்தி திறன் குறைந்ததற்கு முதல் காரணமே தரமற்ற கல்வி தான்.

நாம் அன்றாடம் உபயோக்கிக்கும் பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை தானா என்றால், நூறில் ஒரு சதவிகிதம் கூட நம் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டவையல்ல என்பது தான் அதிர்ச்சிகர உண்மை. நம் தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் பொறியாளர்களில் மூன்றில் ஒரு சதவிகிதம் கூட முப்பது கோடிப் பேருக்கும் மேலே வசிக்கும் அமெரிக்காவில் இருந்து படித்து விட்டு வெளியேறுவதில்லை என்பது தான் உண்மை. இந்தியா முழுமைக்கும் ஒரு வருடத்தில் படித்துவிட்டு வெளியேறும் பொறியாளர்களின் எண்ணிக்கையை நாம் அமெரிக்காவோடு ஒப்பிட்டால் மிக மிக சொற்ப எண்ணிக்கையில் தான் அமெரிக்கா பொறியாளர்களை உருவாக்குகிறது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்கா எங்கே இருக்கிறது, நாம் எங்கே இருக்கிறோம்?

அடிப்படைத் தேவையான கழிவறைகள் கூட நம் நாட்டில் உள்ள பள்ளிகளில் முழுமையாக அமைத்து தரப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

தரமற்ற கல்வி நமக்கு பட்டங்களை மட்டும் தான் பெற்றுத் தரும், கண்டுபிடிப்புகளை உருவாக்கிடும் அறிவியலாளர்களை அல்ல. இன்று கல்வியும் கடைத்தெருக்களில் விற்கும் வியாபாரப் பொருளாகி விட்டது. வணிக நோக்கத்தோடு புகட்டப்படும் கல்வியில் நமக்குத் துளியும் பயனில்லை. இயந்திரக் குப்பைகளை உற்பத்தி செய்யும் கல்வி ஆலைகளின் மூலம் நாம் ஒரு போதும் அறிவுக் கோயிலைக் கட்டி எழுப்பிட முடியாது. கல்வியின் அடிப்படை நோக்கமே ஒழுக்கம் தான். ஆனால் நாம் வியாபாரச் சந்தையில் ஒழுக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். பெற்றோர்களும் தரமற்ற தனியார் கல்வி நிறுவங்களைப் புறந்தள்ள வேண்டும். நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவர்களை அறிவும், ஆற்றலும் நிறைந்தவர்களாக உருவாக்கிட வணிக நோக்கில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் ஒரு போதும் உதவாது. கல்வி வியாபாரப் பொருள் அல்ல என்பதை அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும். கல்வி அரசுடமையாக்கப்பட வேண்டும்.

- சசிகுமார், மாநில அமைப்பாளர், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It