22-10-2014 தீபாவளி அன்று வெளியான தமிழ் இந்து நாளேட்டில் ‘பெரியாரின் சர்வாதிகாரம்’ என்ற க,திருநாவுக்கரசு என்பவர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். இந்தியாவில் வேறு எங்கிலும் விட தனிநபர் வழிபாடு அதிகமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு கடவுள் வழிபாடு - அதிலும் உருவ வழிபாடு மிகுந்திருப்பதும், அதனையொட்டிய சடங்குகளில் இங்கு மக்கள் தன்னிச்சையாக பழக்கப் படுத்தப் பட்டிருப்பதும்தான். இதனைத் தொடர்ந்து வரும் ‘அரச வழிபாடு’ என்பதும் இன்றும் தொடரும் ‘ராஜ விசுவாசம்’ என்பதும் உற்று நோக்கி உணர்ந்தறியப் பட வேண்டியவை. இத்தகைய மக்கள் இயல்பாகவே அடிமையாக இருப்பதற்கு எப்போதும் ஆயத்தமாக இருப்பர். இவ்வாறு அவர்களை வைத்திருக்க வேண்டும் என்பதே மதக் கருத்தியலின் அடிப்படையும் நோக்கமும் ஆகும். மாவீரன் அலெக்சாண்டர் தனது வீரர்களை தனது மீளமுடியாத கட்டுக்குள் வைத்திருக்க என்ன வழி என்று யோசித்தார். அதன் விளைவாக பரப்பப்பட்ட கதை ஒன்று அவர் கடவுளின் மகன் என்று பிரச்சாரம் செய்தது. கடவுள் அலெக்சாண்டரின் கனவில் தோன்றி அவரை வழி நடத்துவதாக மக்கள் நம்ப வைக்கப் பட்டார்கள். அலெக்சாண்டரின் மாபெரும் வெற்றிகளுக்குப் பின்னால் இந்தக் கதை நிற்கிறது. இவ்வாறாக கடவுள் பக்தி என்பது அரசர்களால் தங்களுக்கு சாதகமாக உயிரூ ட்டப் பட்டுக் கொண்டது.

Periyar

அரச மரபை எதிர்த்துதான் உலக அளவில் தலைவர்கள் மக்களுக்கானவர்களாக உருவானார்கள். கட்டுரையாளர் சுட்டிக்காட்டும் ஸ்டாலின் இந்த எதிர் மரபில் வந்தவர்தான். கட்டுரையாளர் கூறுவது போல இந்தத் தலைவர்கள் திட்டமிட்டு எந்த பக்தி மரபையும் வளர்க்கவில்லை. பக்தி மரபு ஏற்கனவே மக்களிடம் இருந்தது. தலைவர்கள் தெளிவாக தங்கள் செயல் திட்டத்தை முன் வைத்தார்கள். எந்தவொரு செயல் திட்டத்தை செய்ய முன்வருபவருக்கும் அதிகாரம் அளிக்கப் பட்டுதான் ஆக வேண்டும். அப்படி அதிகாரம் பெறப் பட முடியாதவர்களால் அரசியல்வாதிகளாக ஆக முடியாது. அரசியல் விமர்சகர்களாத்தான் இருக்க முடியும். கட்டுரை எழுதலாம். தாங்கள் முன்வைத்த செயல் திட்டத்துக்கான அதிகாரத்தைதான் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஒருபோதும் அவர்கள் தங்களை ‘கடவுளின் வாரிசு’ என்று அறிவிக்கவில்லை. மக்களிடமிருந்து தாங்கள் வேறானவர்கள். உயர்ந்தவர்கள் என்று பறை சாற்றவில்லை. மக்களை அப்படி நம்ப வைக்கவுமில்லை. கட்டுரையாளர் குறிப்பிடும் திட்டமிடல் நடைபெறவேயில்லை.

அடுத்து காந்திக்கு வருகிறார். காந்தியை அவர் குறிப்பிடுவது பெரியாரைப் பற்றி கடுமையாக எழுதுவதற்கான நடுநிலையாளர் அந்தஸ்த்தை பெறுவதற்குதான். காந்தி கடவுளின் தூதனாக தன்னை நோரிடையாக அறிவித்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு ‘தலைவன்’ என்ற நிலையைத் தாண்டி தன்னை ஒரு முனிவராக்கிக் கொள்கிறார். அதீத ஒழுக்க விதிகள், நடைமுறைகள், மதக் கோட்பாடுகளுக்கான வியாக்கியானங்கள் மூலமாக சராசரி மனிதனிலிருந்து தன்னை வேறுபடுத்தி கடவுளுக்கு பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறார். தன்னை அவர் மகாத்மாவாக்கிக் கொண்டது கூட திட்டமிட்டு என்று நான் கூற மாட்டேன். ஆனால் தான் அறிவித்த சுயராஜ்ய செயல் திட்டங்களுக்கு மாறாக காங்கிரசு எடுத்த எந்த முடிவுடனும் அவர் தீர்மானகரமான எதிர்நிலையை எடுக்கவில்லை. அந்த இடத்தில் தான் அம்பேத்கர் மட்டுமல்ல, காந்தியின் கொள்கைகளுக்காக தன்னையும் தனது குடும்பத்தையும் தத்தம் செய்த பெரியாரும் காந்தியை கண்டனத்துக்குள்ளாக்கினார். இந்த இடத்தில் அம்பேத்கர் தெரிவித்த கருத்துக்களை ‘அம்பேத்கரே தனது தலைவர்’ என்று கொண்டாடிய பெரியாருக்கு எதிராக திருப்பி விட கட்டுரையாளர் முயல்கிறார். ஆனால் காந்தியுமே அவ்வாறு தன்னைப் பின்பற்றிய மக்கள் சக்தியை இந்து முஸ்லீம் கலவரத்தின் போது ஒற்றுமையை உருவாக்கவே பயன்படுத்தினார் என்பதும் எண்ணத் தக்கது. இரத்த ஆறு ஓடிய அந்த தருணத்தில் தலைவன் சொன்னதும் கேட்கக் கூடிய தொண்டர்கள் இல்லாமல் மக்களின் வரலாறு எழுதப் பட முடியாது.

பெரியாரைப் பொருத்தவரை தன்னை தலைவனாக்கிக் கொள்ள அதற்கான அதிகாரத்தைப் பெற அவர் எந்த முயற்சியும் மேற்கொண்டதில்லை. அதற்கு மாறாக மக்கள் ஏற்றுக் கொள்ள கடுமையாக மறுக்கும் அல்லது அஞ்சும் விசயங்களையே அவர் கையில் எடுத்தார். முதலாவதாக கடவுள் மறுப்பு. மக்களை பக்தி வழியிலும், அடிமை கொள்ளும் வழியிலும் செயல்பட்டவர்கள் எதையெல்லாம் உருவாக்கி வைத்திருந்தார்களோ (கடவுள், மதம், சாதி, ஆணாதிக்கம்) அவற்றையெல்லாம் போட்டுடைத்தார் பெரியார். ‘கடவுள் இல்லை’ என்றார். ‘ஆணுக்கு வாரிசு தர பெண் வாழ வேண்டுமா அறுத்தெறி அந்த கர்ப்பப்பையை’ என்றார். ‘மாட்டுக் கறியையும் மாட்டுக் கறி உண்போரையும் ஒதுக்குகிறாயா ... நான் கூட்டுகிறேன் மாநாடு அதில் மாட்டுக் கறி தான் விருந்து’ என்றார். விபச்சாரத் தொழிலில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களை தனது மாநாட்டுக்கு வரச் சொன்னார் பெரியார். மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன், வந்தால் மலை போனால் மயிரு என்று தனது வாழ்க்கையை துச்சமாக மதித்து இந்த மண்ணின் கடைக்கோடி மனிதன் வாழும் தெருக்களுக்கு வந்து நின்றார் பெரியார். இன்று வரை மக்கள் பெரியாரை ஜீரணிக்கவில்லை. ஆனால் அவரது அயராத உழைப்புக்கும். தன்னல மறுப்புக்கும் தலை வணங்கி நின்று கட்டுப் பட்டார்கள்.

நான் சொன்ன எதையும் ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளாதே என்று மக்களிடம் பிரச்சாரம் செய்த பெரியார் தனது சுயமரியாதை இயக்கத் தொண்டர்களிடம் சொன்னார். “நான் கட்டுகிற கட்சி இராணுவத்திற்கு ஒப்பானது. எனது கட்சி தொண்டர்களுக்கு இராணுவக் கட்டுப்பாடு தேவை. மக்கள் நம்பும் அனைத்தையும் எதிர்த்து பணி செய்கிறவர்கள் நாம். நமது கொள்கைகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமெனில் நமது கட்சிக் காரர்களுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும், நாணயமும், நேர்மையும் கண்டிப்பான தேவைகளாகும். பொது வாழ்க்கைக்கு செலவழிக்க ஒரு பைசா உன் சட்டைப் பையில் இருந்தால் நீ கட்சிப் பணி செய்ய வா. பொது வாழ்க்கையில் வந்து பிழைத்துக் கொள்ளலாம் என்று வராதே. வருமுன் நீ எவ்வளவு வேண்டுமானாலும் தீர ஆலோசித்து முடிவு எடு, ஆனால் உள்ளே வந்த பின் நான் என்ன சொல்கிறேனோ அதனை செய்கிற, எதிர்க் கேள்வி கேட்காத முட்டாளாக இருந்தால் போதும்.” இவையெல்லாம் ஓர் இராணுவ படை தளபதி போருக்கு செல்லும் தனது படைகளை நோக்கி பேசும் வார்த்தைகளுக்கு ஒப்பானவை. பெரியார் காலத்தில் மட்டுமல்ல இன்றும் என்றும் இவ் வார்த்தைகள் மட்டுமே தலைவருக்கும் தொண்டர்களுக்குமிடையே உள்ள உறவை வரையறுக்கும் சரியான வார்த்தைகளாகும். இந்த சர்வாதிகாரம் மனித சமூகம் உள்ளவரை தேவையான ஒன்றேயாகும். உடம்புக்கு சில நல்ல கொழுப்புகள் தேவையென்று மருத்துவர்கள் கூறுவதற்கு ஒப்பானது இது. இதனை ஒழிக்கப்பட வேண்டிய சர்வாதிகாரம் என்று அடையாளப்படுத்தி பிரச்சாரம் செய்தால் குழுக்கள்தான் தோன்றுமேயொழிய கட்சியோ, இயக்கமோ தோன்றாது, வளராது. இதற்கு பெரியாருக்குப் பிந்தைய முற்போக்கு சிந்தனையாளர்தம் செயல்பாடுகளே சாட்சி. அனைத்து கட்சிகளிலும் இருக்கும் இந்த விசயத்தை வெளி வார்த்தைகளாக சொன்னவர் பெரியார். ஏனெனில் இராஜ தந்திரத்தை குற்றமென கூறியவர் அவர். ஆனால் அந்த பெரியார் வருவதற்காக ஒரு சீனிப் பட்டாசு கூட யாரும் கூட்டத்தில் வெடித்ததில்லை. மக்கள் வருமுன் மேடைக்கு வந்து மக்களுக்காக காத்திருந்த தலைவர் அவர். இந்தி எதிர்ப்புப் போரில் சிறை வைக்கப்பட்டு அவர் உயிருக்கே ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சப்பட்ட நிலையிலும் அவருக்காக யாரும் உண்ணா விரதம் இருந்ததில்லை, தீக்குளித்ததில்லை.

கட்டுரையாளரிடம் ஒரு பொருள் பேசப்பட்ட காலம், அதன் தன்மை குறித்தும், பேசுகிறவரின் உள்ளக் கிடக்கையையும் புரிந்து கொள்வதிலுமே அறியாமை நிலவுகிறது. சௌந்திரபாண்டியனாரை மாநாட்டுத் தலைவராக முன்மொழிந்து பெரியார் பேசும் போது இதனை யாரும் ஆட்சேபிக்க அதிகாரம் கிடையாது என்றும், வேறெவரும் முன்மொழியத் தேவையில்லை என்றும் கூறுகிறார் என்று அவரது சர்வாதிகாரத்திற்கு சாட்சியம் காட்டுகிறார். பெரியார் அவ்விதம் எங்கு பேசுகிறார்? மாநாட்டில், கட்சி கமிட்டி கூட்டத்தில் அல்ல. மாநாட்டில் அவ்விதம் அவர் பேசிய அந்த அத்தனை வார்த்தைகளுக்கும் ஒரே ஒரு பொருள் மட்டும்தான் உண்டு. அது என்னவெனில் சௌந்திரபாண்டியன் ஆகச் சிறந்தவர் என்பதுதான் அது. ‘பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு இடம் கிடையாது’ என்றிருந்த வாசகத்தை நீக்கியவர் சௌந்திர பாண்டியனார். அவரைப் பாராட்டி போற்றி பெரியார் பேசிய வார்த்தைகள் அவை. அவர் வாழும் வரையில் அவராக யார் மீதும் எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும் நடவடிக்கை எடுத்ததில்லை. இப்படிப் பட்ட ஒரு தலைவரை இன்றை தமிழகத்தின் அரசியல் விமர்சனத்தில் வேறு ஒரு கோணத்தில் கொண்டு வந்து இணைக்கிறார் கட்டுரையாளர். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் சுயமரியாதைக்கு பங்கம் வந்திருப்பதாக அதுவும் சுயமரியாதை இயக்கத்தால்தான் வந்திருப்பதாகவும் சொல்ல விரும்புகிறார்கள். இந்திய மக்களின் பண்பாட்டு ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை உண்மையாகவே நடத்தினால் தெரியும் தமிழக மக்களிடையே சுயமரியாதை வளர்ந்திருக்கிறதா இல்லையா என்று.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தோன்றிய திராவிடர் முன்னேற்றக் கழகம் அரசு அதிகாரத்தைப் பெறுவதற்காகவே தோற்றுவிக்கப் பட்டது. இது பெரியாரை எதிர்த்து எடுக்கப் பட்ட நிலைப்பாடாகும். எனவே அது கொள்கையிலும் தனது முதல் சமரசமாக கடவுள் மறுப்பிலிருந்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்துடனே துவங்கியது. திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாறிச் சென்றவர்கள் தவிர அதன்பின் புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்களுக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக்கும் தொடர்பறுந்து போய் விட்டது. அவ்வியக்கம் அரசதிகாரத்தை பெற்ற பின், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கு தொடர்பேயில்லாத ‘எம்.ஜி.ஆர்’ அவர்களால் தொடங்கப் பட்டது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். எம்.ஜி.ஆர்., அண்ணாவை தன் தலைவராக சொல்லிக் கொண்டார். ஆனால் பெரியார் பெயரை அவர் சொன்னதாகக் கூட எனக்கு நினைவில் இல்லை. அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா பெண்களுக்காக பேசுகிற வாக்கில் கூட பெரியாரை நினைவு கூர்ந்தது இல்லை. (பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்களை விட்டு விடுங்கள்). பெரியாருடன் அவர் இருக்கும் புகைப் படம் இந்துவில் வெளியானது அவர் நடிகையாக இருக்கும் போது சூரிய காந்தி திரைப்படத்தில் பெண்ணுரிமை பேசி நடித்ததற்காக பெரியாரிடம் பாராட்டுப் பெறும் போது எடுத்த படம். அப்போது அவர் அரசியல்வாதியல்ல. பெரியாரின் புகைப் படத்தை அடையாளம் காணக் கூட அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களால் முடியுமா என்பது அய்யத்துக்குரியதே. பெரியாரின் கொள்கைகளோடு மட்டுமல்ல அவர் கட்சி நடத்திய முறையோடு கூட திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்திற்கும் எந்த வித தொடர்புமில்லை. கட்டுரையாளர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தையும் சேர்ப்பாரோ என்னவோ தெரியவில்லை. இங்கு திமுகவிற்கு சொல்லப் பட்டிருக்கும் அனைத்தும் மதிமுக வுக்கும் பொருந்தும்.

கட்டுரையாளர் ஜெயலலிதா பிணை பெற்று தனது வீட்டுக்கு வந்த போது தமிழகத்தில் நடந்த கூத்துகளுக்கு தமிழக மக்களின் சுயமரியாதையற்ற தன்மைதான் பொறுப்பு என்கிறார். கிட்டத்தட்ட நான்கு தொலைக்காட்சி ஊடகங்கள் இரண்டரை மணி நேரம் நேரடி ஒளிபரப்பு நடத்தினார்கள். ஊடகங்கள் என்ன மக்களா? ஊடகங்கள் என்பவை நிறுவனங்கள். மக்கள் சக்தியை உருவாக்கும் ஆயுதங்கள். அன்றைய தினம் ஊடகங்களும் அதிமுக கட்சியினரும் சேர்ந்து அவரை வரவேற்றார்கள். அந்த மக்கள் எந்தவிதத்திலும் திராவிட இயக்கத்தினால் வளர்ந்தவர்களில்லை. இன்னும் சொல்லப்போனால் தங்கள் இனத்தை அழித்ததன் குறியீடாக உள்ள நரகாசுரனின் மரணத்தை தீபாவளியாக கொண்டாடுகிற மக்கள்தான் இதுபோன்ற தலைவர்களின் தனிமனித துதிபாட்டிற்கும் பலியாகிறார்கள்.

ஜெயலலிதா வழியில் வண்டியை நிறுத்தி பிள்ளையாரை கன்னத்தில் போட்டுக் கொண்டு வழிபடுகிறார். இவர் எப்படி பெரியாரின் வாரிசாக அடையாளப் படுத்தப்படுகிறார்?

இப்போதெல்லாம் மக்கள் கூடுவதில்லை, கூட்டப் படுகிறார்கள். பணம் பாதாளம் வரை பாய்கிறது. அறிவுரிமை மறுக்கப் பட்டிருக்கும் இந்த மக்கள் ஜனநாயகத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்று பெரியார் கூறினார். உண்மையில் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகள் அவரின் அந்தக் கூற்றைத்தான் மெய்ப்பிக்கின்றன. அரசின் இலவசத் திட்டங்களை இடதுசாரிகள் உட்பட எல்லோரும் ஆதரிக்கிறார்கள். ஒரு சாதாரண விற்பனை வரி வழக்கில் கூட வரியையும் அபராதத்தையும் கட்டாமல் மேல் முறையீடு போக முடியாது. ஆனால் அபராதத்தைப் பற்றி எதுவும் பேசாமல் இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் என்ன தமிழ் நாட்டிலா இருக்கிறது? அதனை இயக்குபவர்கள் யார்? இப்படி ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் (வெறும் சொத்து வழக்கு அல்ல) சொல்லப் பட வேண்டிய விவாதிக்கப் பட வேண்டிய விசயங்கள் நிறைய இருக்க அவற்றையெல்லாம் விட்டு விட்டு இதனை வெறும் தனி நபர் துதி என்றும் இதற்கு பெரியார்தான் காரணம் என்றும் கட்டுரை வடிப்பது விசயத்தின் கன பரிணாமங்களை சுருக்கிப் பார்ப்பதும் திசை திருப்புவதுமாகும்.

(இக்கட்டுரை தமிழ் இந்து நாளேட்டிற்கு 23.10.2014 அன்று அனுப்பப்பட்டது. அங்கு வெளியிடப்படவில்லை என்பதால் தற்போது கீற்றில் வெளியிடப்படுகிறது)

Pin It