'ஒவ்வொரு கூலி உயர்வுப் போராட்டமும் வர்க்கப் போராட்டமே' என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினார்கள் என்பதற்காக, நம் நாட்டில் உள்ள தொழிற் சங்கங்கள் கூலி உயர்வு ஒன்றைத் தவிர, வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல் உள்ளன. பொதுவுடைமைச் சமூகத்தைப் படைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாத முதலாளித்துவக் கட்சிகளின் பிடியில் உள்ள தொழிற் சங்கங்கள் அவ்வாறு நடந்து கொள்வதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரை வைத்துக் கொண்டு, மார்க்சின், எங்கெல்சின், லெனினின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு, கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டோம் என்று அடம் பிடிப்பது வேதனைக்கு உரியது.

workersஇதைப் பற்றி விவாதம் வந்தால், அதற்கு மறுமொழி கூறாமல் நழுவுவது அக்கட்சிகளின் வழக்கம். அப்படியே மறுமொழி கூறியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பொழுது. உண்மையான கள நிலைமைகளைப் (ground realities) புரிந்து கொள்ள வேண்டும் என்றும், களத்தில் வராமல் தொலைவில் இருந்து கொண்டு பேசுவதில் பொருள் இல்லை என்றும், தத்துவப் போராட்டத்தைப் பற்றியும், அரசியல் போராட்டத்தைப் பற்றியும் பாடம் நடத்தினால், தொழிலாளர்கள் விலகிப் போய் விடும் அபாயம் உள்ளது என்றும், முடிவில் தொழிற்சங்கங்களே கரைந்து போய் விடும் என்றும். அப்பொழுது தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க எந்த அமைப்பும் இல்லாமல் போய் விடும் என்றும் கூறுவார்கள்.

ஈரக் காற்றில் துரு ஏறித் தேய்வதை விட. உழைத்துத் தேய்வது மேல் என்று ஒரு வாசகம் உண்டு. அது போல் உழைக்கும் மக்களின் அரசை அமைக்க உழைக்காத தொழிற் சங்கங்கள், பெரு முதலாளியக் குழுமங்களின் தாக்குதலுக்கு இரையாகி மறைந்து வருவதைப் பார்த்தால், அரசியல் போராட்டத்தைப் பற்றியும், தத்துவப் போராட்டததைப் பற்றியும் பாடம் எடுத்து மறையும் நிலை ஏற்படுவது எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.

புது தில்லியில் 15.9.2014 அன்று பொதுவுடைமைக் கட்சிகளைச் சார்ந்த தொழிற் சங்கங்கள் மட்டும் அல்லாது, முதலாளித்துவக் கட்சிகளின் தொழிற் சங்கங்கள் உட்பட பதினொரு தொழிற் சங்கங்கள் இணைந்து, மைய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அரசை எதிர்த்து 5.12.2014 அன்று நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளன. இதில் ஆளும் கட்சியான பா.ஜ,க.வைச் சார்ந்த தொழிற் சங்கமும் சேர்ந்து உள்ளதானது, அவ்வாறு செய்யாவிடில் தொழிலாளர்களின் நடுவில் நிற்க முடியாது என்ற கள உண்மை நிலைமை இருப்பதை பா.ஜ.க. புரிந்து கொண்டு உள்ளதைக் காட்டுகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு முன், தொழிற் சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கும் மரபை, அரசு உதாசீனம் செய்து வருகிறது என்றும், தொழில் தகராறு சட்டத்தில் (Industrial Dispute Act) 300ஐ விட அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் உள்ள தொழில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று இப்பொழுது ஒரு திருத்தத்தைக் கொண்டு வர அரசு முனைந்து உள்ளது என்றும், அவ்வாறு செய்தால் 60% தொழில்கள் இச்சட்டத்தில் இருந்து விடுபட்டு விடும் என்றும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாமல் போய் விடும் என்றும் ஹிந்த் மஸ்தூர் சபாவின் (Hind Mazdoor sabha) பொதுச் செயலாளர் ஹெச்.எஸ்.சித்து (H.S.Sidhu) கூறினார்.

மொத்தத்தில் புது தில்லியில் கூடிய பதினொரு தொழிற் சங்கங்களும் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்கு முடிவு நெருங்கி வருவதை அறிந்து, புலம்பித் தீர்த்து உள்ளன. தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியையும், தத்துவக் கல்வியையும் அளித்து இருந்தால், ஆளும் வர்க்கம் இது போன்ற தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கத் துணிந்து இருக்குமா?

முதலாளித்துவக் கட்சிகளின் தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பலவீனப் படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் முதலாளிகளின் நலன்களுக்காக வேவு பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உருவானவை என்பதால், தொழிற் சங்கங்கள் அழிவது பற்றி அக்கட்சிகள் பெரிதும் கவலைப்பட மாட்டா. ஆனால் பொதுவுடைமைக் கட்சிகளின் பெயரில் உள்ள தொழிற் சங்கங்கள் என்ன செய்யப் போகின்றன? இனிமேலாவது தங்கள் போராட்டங்களை. மார்க்சிய மூலவர்கள் கூறியது போல், பொருளாதாரப் (கூலி உயர்வுப்) போராட்டம், அரசியல் போராட்டம், தத்துவப் போராட்டம் ஆகிய மும்முனைகளில் கொண்டு செல்வார்களா?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.9.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It