2014ம் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றி செயலாற்றி வரும் சூழ்நிலையில், நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் மீது நம்பிக்கை இழந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. மோடியின் ஆட்சியில் மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வோம் என்று வாய்ஜாலம் பேசிய பாரதிய ஜனதாவால், நூறு நாட்களில் கூட மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.

Modi Amit Shahபாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனையே சிறுபான்மை மக்களுக்கெதிராக கலவரங்கள், ராமர் கோயில் கட்டும் விவகாரம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்குதல் போன்றவைகளை மக்கள் முன் சர்ச்சைகளாக எழுப்பினர்.

அதேபோன்று, ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று மாற்ற வேண்டும், சமஸ்கிருதம் மொழி தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்துதல், ஹிந்தி மொழி திணிப்பு போன்றவைகளும் விவாதங்களாக மாறின. இதுபோன்று, தங்களின் அரசியல் இலாபங்களுக்காக பல்வேறு பிரச்சனைகளையும் கிளப்பினர். பல்வேறு வகையிலும் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி தங்களின் அரசியல் காய்களை நகர்த்தி வந்த பா.ஜ.க.வின் செயல்பாடுகளுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் நல்ல பதிலடியை தந்துள்ளது.

உ.பி., குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம், அசாம், ஆந்திரா பிரதேசம், திரிபுரா, சத்தீஷ்கர் என்று ஒன்பது மாநிலங்களில் 33 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வெறும் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி ஒன்பது இடங்களிலும், காங்கிரஸ் ஆறு இடங்களிலும், தெலுங்குதேசம் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

உத்திரப்பிரதேச நாடாளுன்றத் தேர்தலில் பா.ஜ.க. கலவரங்களை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாகவே இந்தியா முழுவதும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இலக்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் முழு வடிவமுமே கலவரம்தான். கலவரம் ஒரு பக்கம் என்றால், குண்டுவெடிப்பு திட்டங்கள் மறுபக்கம் என்று ஒட்டுமொத்த மக்களையும் பாரதிய ஜனதாவின் பக்கம் திருப்புவதற்குண்டான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்கு முக்கிய அஜண்டாவாக மோடியின் குஜராத் வளர்ச்சி என்ற ஒரு மாயையை மக்கள் மன்றத்தில் வைத்தன. மோடி பிரதமரானால் எல்லா மாநிலங்களிலும் பாலாறும், தேனாறும் ஓடும்; அதனால், மோடிக்கு ஆதரவு தாருங்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் மொத்த உருவமாக மோடி காண்பிக்கப்பட்டார். இதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் தங்களுடைய பணியையும் மறந்து செயல்பட்டன. மோடி தான் இந்தியாவின் தலையெழுத்து என்று எழுதித்தள்ளின. இதற்கு குஜராத்தில் உள்ள வளர்ச்சி தான் என்று தம்பட்டம் அடித்தன. ஆனால், அங்குள்ள உண்மை நிலையைப்பற்றி எழுத முன்வரவில்லை.

மக்கள் வறுமையில் வாழக்கூடிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. பெண்கள் தங்களுடைய கர்ப்பப்பையை விற்று, வெளிநாட்டினருக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கும் அவலம், ஜாதிக் கொடுமைகள், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் என்று குஜராத் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

மோடி பதவிக்கு வருவதற்கு முன்பும், பின்பும் ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டே வருகின்றார். அதுதான், கழிவறையின் முக்கியத்துவம். குஜராத்தில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் கிடையாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோன்று, குஜராத்தில் ஒரு கிராமத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குளத்தில் நீந்தியே பள்ளிக்கூடத்திற்கு செல்கின்றனர். அங்கு, குஜராத் அரசால் ஒரு முறையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர முடியவில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் முன்னிறுத்தும் ஒருவர் தான் ஆட்சிக்கு வரவும் முடியும், ஆட்சியில் இருந்து இறக்கவும் முடியும் என்ற சூழல்தான் இந்தியாவில் நிலவுகின்றது. டெல்லி வரலாற்று சிறப்புமிக்க இடமான ஜந்தர் மந்தரில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அறிமுகமான அண்ணா ஹஸாரேவாக இருந்தாலும் சரி, யோகா குரு ராம்தேவாக இருந்தாலும் சரி, கெஜ்ரிவாலாக இருந்தாலும் சரி, அனைவரையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் இந்த ஊடகங்களின் பங்கு அளப்பறியது. ஆனால், இன்று அவர்கள் அடையாளமே தெரியாமல் இருக்கின்றார்கள்.

ஆனால், தங்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காவும் போராடிக் கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளா, ஜக்கியா ஜஃப்ரி போன்றோர்களால் மீடியாக்களின் கவனத்தைப் பெற முடியவில்லை. இதுதான், இன்றைய இந்தியாவின் நிலவிவரும் இரட்டைச் சூழல். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் சக்தியை இன்றைய ஊடகங்கள், தனியார் நிறுவனங்களின் மூலம் பெற்றுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு காலத்தில் மன்மோகன் சிங் சிறந்த நிர்வாகியாக இதே மீடியாக்களால் காட்டப்பட்டார். தற்பொழுது, இவரால் இந்தியா ஊழலின் கூடாரமாக மாறிவிட்டது என்று கூறி, மோடிதான் ஊழலை ஒழிக்க வந்தவர் என்று முன்னிறுத்துகின்றனர். வரும் காலங்களில் மோடி வேண்டாம், இன்னொருவரை அடையாளப்படுத்துங்கள் என்று பெருமுதலாளிகள் உத்தரவிட்டால் அதையும் செய்ய இந்த ஊடகங்கள் தயாராக உள்ளனர். அதனால், மோடியை தூக்கியெறியும் காலமும் ஒரு நாள் உண்டு.

எது எப்படியோ, பாரதிய ஜனதாவின் மோடி மானியா இந்த இடைத்தேர்தலில் காணாமல் போய்விட்டது என்பதே உண்மை. மோடியின் நூறு நாள் பரிசாக பாரதிய ஜனதா பெற்றது இடைத்தேர்தல் தோல்வியைத்தான்.

Pin It