நம்முடைய ஒவ்வொருத்தர் வாழ்விலும் இது நிகழக் கூடியதுதான். அதாவது எதை வேண்டாமென்று தவிர்க்க விரும்புகிறோமோ அதையே செய்து தீரவேண்டிய ஒரு சூழலுக்குள் நம்மைக் கொண்டுவந்து நிறுத்திவிடும் இந்த வாழ்க்கை. யாரிடமும் கைநீட்டி கடனே வாங்காமல் வாழ்ந்துவிட வேண்டுமென்று நினைத்தால், நினைத்த மறுநாளே கடன் வாங்கியே ஆக வேண்டிய சூழலைக் கொண்டுவந்து நிறுத்தும். அதற்கு நம்மைப் பார்த்தால் எப்படி இருக்குமென்று தெரியவில்லை; ஒவ்வொரு விஷயத்திலும் இப்படித்தான் எதிரும் புதிருமாக நம்மை ஈவிரக்கமில்லாமல் கையாளுகிறது.

dog 340நகரத்தின் புறப்பகுதியில் வீடுகட்டி, இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளோடு குடியிருக்க வந்தோம். ஒன்றிரண்டு வீடுகள்தான் முளைத்திருந்த‌து பயமாக இருந்தது; தூரம் தூரமாக இருந்த வீடுகளில் இருந்து நாய்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்; என் மனைவி சொன்னார்கள்;

“நாமும் ஒரு நாய் வளர்த்தால் என்ன? நம்ம ஊர் இராசபாளையத்து நாய் உலகப்புகழ் பெற்றதாயிற்றே! உங்கள் அண்ணனிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்களேன்”

இராத்திரி நேரங்களில் திடீர் திடீரென்று கண்விழிப்பதும் எழுந்திருந்து ஜன்னல்கள் ஒழுங்காக மூடப்பட்டிருக்கின்றனவா? கதவு பூட்டப்பட்டிருக்கின்றதா? என்று சரிபார்த்துவிட்டுப் படுப்பதும் என்று பழக்கமாகி விட்டார்கள். எனக்கும் அண்ணனுக்கு எழுதிவிடுவதுதான் சரி என்று பட்டது. ஆனாலும் ஆர்வம் காட்டாமல் நாட்களைத் தள்ளினேன். மனைவியின் நச்சரிப்பு கூடிக்கொண்டே போனது; பிள்ளைகளுக்கும் நாயோடு விளையாட ஆசை வந்துவிட்டது. உயிரற்ற பொம்மைகளோடு மட்டுமே விளையாட விதிக்கப்பட்ட நகரத்தில் வளரும் பிள்ளைகளுக்கு ஓர் உயிரோடு விளையாட வாய்ப்பு கிடைக்குமே என்று நினைத்துப் பார்ப்பதே சந்தோஷம் தருவதாக இருந்தது. என்ன செய்வது? முடிவு எடுக்க முடியாமல் திணறினேன்.

“ஒரு நாய் வளர்ப்பதில் உங்களுக்கு என்னதான் பிரச்சனை”

மனைவி பிடுங்கத் தொடங்கிவிட்டார்கள்.

‘நாய் வளர்த்தால் அது நமது பிள்ளை மாதிரி ஆகிவிடும்; ஆனால் சீக்கிரமே செத்துவிடும்; நன்றாகப் பாத்து வளர்த்தாலும் ஒரு பன்னிரெண்டு ஆண்டுதான். அந்தப் பிரிவை எப்படித் தாங்குவது? இதுதான் பிரச்சனை. அந்த வேதனையும் வலியும் வேண்டுமா?

எப்பொழுதும் என் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என் மனைவி. எங்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால், ஒரே நாளுக்குள் முதலில் பேசக்கூடியவர் அவர்கள்தான்; என் உணர்வு படும் வலிகளை அவர்களால் தாங்க முடியாது; அதனாலேயே என் நண்பர்களிடம் சொல்லுவேன்; “வீட்டில் சண்டை வந்தால், முதலில் தானாக வந்து பேசக்கூடிய மனைவியைப் பெற்றவர்கள் இந்தப் பிறப்பில் பாக்கியவான்கள்” வீட்டுக்குள்ளேயே மாதக்கணக்காக யார் முதலில் பேசுவது என்கிற வீம்பில் பேசாமலேயே வாழ்கிற தம்பதியினர் பலரை அறிவேன். என் மைத்துனரின் மனைவி சொன்னார்கள்:

“எங்க அம்மாவும் அப்பாவும் ஒருத்தர்க்கொருத்தர் 15 ஆண்டுகளாகப் பேசிக்கொள்வதில்லை; அப்படி என்ன காரணம் என்பதும் இதுவரை எங்களுக்குத் தெரியாது”

சென்ற ஆண்டுதான் 65-வது வயதில் அவர் இறந்து போனார்; அப்பொழுதுதான் இந்த உண்மையும் வெளிவந்தது.

நாய் வளர்க்கும் யோசனை கைவிடப்பட்டது; 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் எங்களையும் மீறி நாங்கள் ஒரு நாயின் அன்பிற்குப் பலியாக வேண்டிய விபத்து நடந்தேறியது.

எங்கள் வீட்டின் இருபக்கமும் காலி மனை. வலது பக்க மனையின் மூன்று பக்கமும் வீடு; எனவே காம்பவுண்ட்டு சுவர் உண்டு. தெருப்பக்கம் மட்டும் காம்பவுண்டு இல்லாமல் இருந்தது. புதுச்சேரியில் ‘மனை வியாபாரம்’ கொடிகட்டிப் பறந்த காலம். இப்படி கேட்பாரற்று நீண்டநாளாகக் காலியாகக் கிடக்கும் மனைகளை அரசியல் அதிகாரம் பெற்ற ‘பெரிய மனிதர்கள்’ சுற்றி வளைத்து ஆக்ரமித்துக் கொள்வதைத் தங்களின் பழக்கமாக்கிக் கொண்டிருந்த காலம்.

ஒருநாள் ஒரு ஆட்டோவில் செங்கல், மண், சிமிண்ட் வந்து இறங்கியது. கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் தெருப்பக்கத்திலும் காம்பவுண்ட் எழுந்துவிட்டது. இப்பொழுது நாலு பக்கமும் அடைத்தாகிவிட்டது. புதராகிப் போனது வீட்டுமனை.

ஒரு காலைப் பொழுதில் குட்டிநாய்களின் சத்தம். புதராகிப் போன மனையை ஒட்டித்தான் எங்களுக்கான மாடிப்படி. மாடிப்படியில் ஏறிக்கொண்டே பார்த்தேன். ஒரு தாய்நாய் படுத்திருந்தது. இரண்டு குட்டிகள் முண்டி முண்டி பால் குடித்துக் கொண்டு கிடந்தன. பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த பசங்களுக்கு நின்று பார்க்க நேரமில்லை. நானும் மனைவியும் அந்தக் குட்டிகளின் அழகையும் அதற்குள் இயங்கும் உயிரின் துடிப்பையும் பார்த்துக் கொண்டே நின்றோம். சாம்பல் நிறம்; சுத்த வெள்ளைநிறத்திட்டுகள். வெள்ளைநிறமென்றால் சும்மா இல்லை; தும்பைப்பூ போன்ற வெள்ளை நிறம்.

“ஒன்றை எடுத்து வளர்த்தாலென்ன?” பழசை மறந்தவர்களாய் மனைவியின் வாய் முணுமுணுக்கிற அளவிற்குக் கொள்ளை அழகு! வந்து பாலூட்டுவதும் வெளியே இரைதேடிப் போவதுமாக அந்தப் பெரிய நாய் வந்து போய்க் கொண்டிருந்தது. பசிக்கும் போது தாயைத் தேடும் குட்டிகளின் சத்தம் எங்களுக்குப் பரிச்சயமாகிவிட்ட ஒன்றாக மாறி இருந்தது. பத்துநாள் ஆகி இருக்கும். ஒரு குட்டி மட்டும் கத்திக் கொண்டு கிடந்தது; மற்றொன்றிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

“தாயில்லாத நேரத்தில் புதரைவிட்டு வெளியே வந்திருக்கும்; காக்கா கொத்தித் தின்றிருக்கும்” என்றார்கள் மனைவி. தனியாகிவிட்ட அந்தக் குட்டிக்கும்கூட பாலூட்ட தாய் வரவில்லை. அதுக்கும் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. இராத்திரி எங்களால் தூங்க முடியவில்லை. குட்டியின் அந்தப் பசிக்குரல் எங்கள் அவ்வை நகர் முழுவதும் பரவி நிலைத்துவிட்டது போல் எனக்குப் பட்டது.

காலையில் நடை போய்விட்டு வந்தால், மனைவி காம்பவுண்ட் சுவரை ஒட்டி நின்று கொண்டிருந்தார்கள். என்ன இங்கே நிற்கிறாய்? என்று கேட்கும் போதே பார்த்துவிட்டேன். வீட்டில் கிடந்த மண்ணாலான பழைய ‘உலைமூடி’ ஒன்றை உள்ளே போட்டு அது நிறைய சுண்டக் காய்ச்சிய பாலை ஊற்றிக் கொண்டு இருந்தார்கள்; முகத்தில் நம்பிக்கை இல்லை; அந்தக் ‘கத்தும்குட்டி’ எழுந்துவந்து பால் குடிக்குமா என்று; “த்தோ! த்தோ!” என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அந்தக் குட்டி பாலில் வாய் வைத்துவிட்டது. அவர்களுக்கு முகத்தில் அப்படியொரு பூரிப்பு.

பாலைக் குடித்துவிட்டு, நாங்கள் நிற்கும் போதே புதருக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் தந்திரமும் அதுக்குத் தெரிந்திருந்தது. பிள்ளைகள் இப்பொழுது 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு என்று படிப்பின் தீவிரத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தார்கள். எனவே குட்டியை வீட்டுக்குள் எடுத்து வருவதில் யாருக்கும் விருப்பமில்லை. இப்படியாக அந்தக் குட்டி செல்லமாக அந்தக் காம்பவுண்டுக்குள்ளேயே வளர்ந்தது. ஆனால் வளர்ந்து பெரிதானவுடன் காம்பவுண்ட் சுவரைத் தாவி தாய் போலத் தெருவிற்குள் ஓடிவிடும் என்று மனைவி நம்பியது பொய்யாகிவிட்டது. வளர்ந்த பிறகும் அந்த நாற்சுவர் எல்லையே அதற்கான வாழ்வெல்லையாகிவிட்டது. சுவருக்கு வெளியே உள்ள உலகம் அதற்குப் பரிச்சயம் ஆகவில்லை என்பதால் தெருவைப் பார்த்துப் பயந்தது. ஆனால் மற்ற தெரு நாய்களைப் போலப் பிற நாய்களைப் பார்த்தால்-எங்களைத் தவிர, வேறு ஆட்களைப் பார்த்தால்- நாய் போலவே குரைக்க மட்டும் தெரிந்து கொண்டது. அதனால் எங்களுக்குத் திருட்டு பயமும் குறைந்தது.

நான் படியேறி வீட்டிற்குள் போகும் வரைக்கும் அங்கே நின்று கொண்டு என்னையே பார்க்கும். “இன்றைக்கு இரவில் எனக்குச் சாப்பாடு கிடைக்குமா?” என்று என்னைக் கேட்பது போல இருக்கும். இப்படியாக எங்கள் வீட்டில் மற்றொரு உறுப்பினராகிவிட்டது. சோறு மிஞ்ச வேண்டும் என்பதற்காகவே அதற்கும் சேர்த்துப் பொங்கத் தொடங்கி விட்டோம். நாங்கள் போடுவதைப் பார்த்து பக்கத்து வீடு, எதிர்வீட்டுக்காரர்களும் மிஞ்சிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் எங்கள் ‘ராமுக்குப்’ போடத் தொடங்கி விட்டார்கள். நன்றாகக் ‘கொழுகொழு’ என்று ‘ராமு’ செழிப்பாக வாழ்ந்தான்.

ஒருநாள் அலுவலகத்தில் இருந்து மதியம் சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வந்தேன். முதற்படியில் கால் வைக்கும் போதே, மேலே நின்று கொண்டிருந்த மனைவி,

“அங்க பாருங்க என்ன நடக்குதின்னு”

என்று சிரித்துக் கொண்டே ‘ராமு’ இருக்கும் பக்கம் காட்டிச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்கள். பார்த்தால் எனக்கு ஆச்சிரியம்! ஒரு பெண் நாய் வெளியே இருந்து காம்பவுண்ட்டு சுவருக்குள் குதித்து வந்து எங்கள் “ராமுவின்” கற்பைக் கெடுத்துவிட்டது. இரண்டும் மாட்டிக் கொண்டு திண்டாடுகின்றன. எங்களுக்கு ஒரே சிரிப்பு. “இந்த காம்பவுண்டு சுவருக்குள்ளேயே ஒரு முழு வாழ்க்கையை இந்த ராமு வாழ்ந்திட்டுப் பாத்தியா? என்னென்ன லீலைகள்?" என்று சொல்லிச் சிரித்தேன்.

ஒருநாள் இரவில் யார் வைத்த சாப்பாட்டையும் இராமு சாப்பிடவில்லை. சோறெல்லாம் காலையில் வேப்ப மரத்தில் வாழும் காக்கைகளுக்காயின. முகம் வாடித் திரிந்தது. வயிற்றுப் பிரச்சனையாக இருக்கும்; இரண்டு நாளில் சரியாகிவிடுமென்றுதான் நினைத்தோம்; அப்படியே சொல்லிக் கொண்டோம். ஆனாலும் மனதில் எனக்குப் பயம் வந்துவிட்டது; ‘செத்துவிடுமோ?’. அன்றைக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. காலை நடைக்குக்கூட எழுந்திருக்காமல் தூங்கிவிட்டேன் போலும்; மனைவி வந்து எழுப்பினார்கள்.

‘வந்து பாருங்க ராமு செத்துக்கிடக்குங்க’

எந்தப் பிரிவுத் துன்பத்தைத் தவிர்க்க நினைத்தோமோ, அந்தத் துன்பமே வந்து சேர்ந்துவிட்டது. இரண்டு பேரும் அப்படியே உட்கார்ந்து விட்டோம். படியேறுகிற வரை என்னையே பார்க்கும் அந்தக் கண்கள், எனக்குள் வந்து வந்து போயின. தொட்டு வளர்க்காத அந்த உயிர், எந்த அளவிற்கு எங்களுக்குள் பரவிப் படர்ந்திருக்கிறது என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தோம்;

‘செத்துக்கிடக்கே, என்ன செய்றது? எப்படிப் புதைப்பது? யாரைப் பார்ப்பது?’

அடுத்த கேள்விகள் வந்துவிட்டன.

பார்ப்போம்; யாரும் கிடைக்காட்டி நாந்தான் குழிதோண்டிப் புதைக்கணும்; வேறென்ன செய்ய?

தெருவைப் பார்த்துக் கொண்டும், கண்மூடிக் கால்நீட்டிப் படுத்துக்கிடக்கும் இராமுவைப் பார்த்துக் கொண்டும் நின்று கொண்டிருந்தோம். காலையில் குப்பை பொறுக்கும் ஒரு பையன் சரியாக வந்து சேர்ந்தான். மண்வெட்டி எடுத்துக் கொடுத்தேன்; குழிதோண்டத் தொடங்கினான். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நாயைக் குறித்து எழுதிய அந்தக் கதைக் காட்சி நினைவுக்கு வந்தது. இலுமிச்சை மரத்திற்குக் கீழே புதைத்தால் காய் நன்றாகப் பிடிக்குமாம். அந்த மனையில் ஒரு எலுமிச்சைக் கன்று நின்றது. அதற்குப் பக்கத்தில் ‘குழி தோண்டு’ என்று சொல்ல வாய் எடுத்தேன். அதற்குள் செத்த பிறகும் அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று கணக்குப் போடுகிற மனிதப் புத்தியைச் செருப்பால் அடித்தாலென்ன? என்ற எண்ணம் வரவே,

“இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டுப்பா”

என்றேன்; முன‌ங்காமல் தோண்டினான். எங்கள் ராமு இல்லியா? நாலுகாலையும் பிடித்துத் தூக்கிக் குழிக்குள் வைத்தான். தலை மேல் நோக்கி இருந்தது; ஒரு பக்கமாகச் சாய்த்து வைக்கச் சொன்னேன்.

வீட்டிற்குள் இருந்த சால்வைகளுள் ஒரு நல்ல சால்வையை மனைவி எடுத்து வந்தார்கள். முதலில் பாலை வாங்கி அதன் வாய்க்கு நேரே ஊற்றினான்; பிறகு சால்வையை வாங்கி அதன் உடல் தெரியாமல் மூடினான். நான் இப்பொழுது காம்பவுண்டுக்குள் குதித்து விட்டேன். வாய்மண் போட்ட பிறகு, ‘மூடுப்பா…’ என்றேன்.

முடிந்தது ஒரு நாய்க்குட்டியின் கதை.

“ஒவ்வொருத்தரும் இப்படி ஒரு குறிப்பிட்ட காம்பவுண்ட்க்குள்ளதான் வாழ்ந்திட்டுப் போறோமோ” என்கின்ற உயிரைத் தொடும் வலியும் எனக்குள் நீள்தொடராய் விரிந்தது;

பள்ளிப் பருவத்தில் எங்கள் காளைமாடு ஒன்று வயலில் உழுது கொண்டிருக்கும்போது திடீரென்று குப்புற விழுந்து செத்தவுடன், எங்கள் குடும்பமே அந்த வயல்வெளியில் சத்தம் போட்டு அழுததும், வாரக்கணக்காக எங்கள் விதவைத்தாய் தொழுவத்தில் அந்த மாடு படுத்துக் கிடந்த பரந்த இடத்தைப் பார்த்துப் பார்த்து அழுததும் காட்சியாய் வந்து போயின. நானும் இப்பொழுது ராமு படுத்துக்கிடந்த அந்தப் புதரைப் பார்த்தபடியே ஏறுகிறேன்; இறங்குகிறேன்.

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8.

Pin It