இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ‘தற்கொலை’யைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பிரச்சனைகள் என்பது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஒன்றாகும். குடும்பப் பிரச்சனை, கடன் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனைகள் என்று பிரச்சனைகளுக்கு மத்தியிலேயே எல்லோரும் வாழ்ந்து வருகின்றனர்.

suicideஇதுபோன்று சூழ்நிலைகளில் அவனுடைய உடம்பில் நேரடியாக பாதிக்கும் ஒரு இடம் தான் உள்ளம். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படையாக தெரிந்து விடும். ஆனால் உள்ளத்தில் உள்ள பிரச்சனைகள் வெளியே தெரியாது. அதை அவர்கள் மற்றவர்களிடம் கூறும்போதுதான் வெளியே தெரியும். அதற்குண்டான மருந்தே உள்ளத்தில் உள்ள பிரச்சனைகளை வெளியெ சொல்வது தான்.

ஆனால், இன்று அந்தப் பழக்கம் மக்களிடம் இல்லை. உள்ளத்தை கடுமையான நிர்பந்தத்திற்கு உள்ளாக்கும் போது, ஒரு கட்டத்தில் அதனால் செயல்பட முடியாமல் போய்விடும். இதனுடைய இறுதித் தீர்வாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரர், சிறுவர், சிறுமி என்ற வேறுபாடு இல்லை. அனைவருமே இதில் இரையாக்கப்படுகின்றனர்.

இதில், மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. அஸ்ஸாம், பீகார், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களை விட தமிழகம் தற்கொலையில் முன்னணியில் உள்ளது.

இது தொடர்பாக, தேசிய குற்றவியல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளன‌. தமிழ்நாடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதே நேரத்தில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வேலையில்லாமல் இருப்பவர்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று தெரிய வருகிறது.

இது தொடர்பாக தேசிய குற்ற ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் 2013ம் ஆண்டில் மட்டும் 1509 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் அதிகமானவர்கள் வேலையில்லாதவர்கள் தான். கடந்த வருடங்களை ஒப்பிடும் போது, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் 2234 பேர் தற்கொலை செய்துள்ளனர். தொடர்ந்து நாட்டில் நடைபெறும் தற்கொலைகளின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து வருகிறது.

தற்கொலை செய்து கொள்ளக்கூடியதற்கு பெரும்பாலான காரணங்கள் கடன் தொல்லை, கல்விப் பிரச்சனை போன்றவைகள் என்று ஆய்வு கூறுகிறது. மேலும், படித்தவர்கள் 684 பேர் 2013ல் தற்கொலை செய்துள்ளனர். அதற்கு முந்திய வருடம் 986 பேர் தற்கொலை செய்து உள்ளனர். 2011ம் ஆண்டு 541 பேர் தற்கொலை செய்து உள்ளனர். படித்த இவர்கள் பெரும்பாலும் சின்ன சின்ன காரணங்களுக்காகவே தற்கொலை செய்கின்றனர். அலுவலகங்களில் ஏற்படும் சில மனக்கசப்பான சம்பவங்கள் தற்கொலைக்கு தூண்டுகின்றனது என்று அனுபவம் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அரசு சாரா அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லெஷ்மி விஜயகுமார் கூறும்போது, தென் மாநிலங்கள் நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் தற்கொலைகளும் அதிகரித்து வருவது அதிர்ச்சிகரமானதாக உள்ளது என்றார்.

இதற்கு பெரும்பாலான காரணம் நல்ல படிப்பு இருக்கின்றது. நல்ல உயர்ந்த வேலையை எதிர்பார்க்கின்றனர். அதில் தோல்வி அடையும் பொழுது, தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்படுகின்றனர் என்றார்.

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு பெரு நகரங்களும் விரைவாக முன்னேறி வருகின்றன. தற்கொலையிலும் இந்த இரண்டு நகரங்களே முன்னணியில் இருந்து வருகின்றன‌. வட மாநிலங்களில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது என்றார்.

இதிலும் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், பெண்களை விடவும் ஆண்களே தற்கொலை செய்வதில் மிகைத்திருக்கின்றனர். பெண்கள் ஓரளவு கல்வியிலும், வளர்ச்சியிலும் மாநிலத்தில் முன்னேறிச் செல்கின்றனர். இதனால் பெண்களின் தற்கொலை விகிதம் குறைவாகவே உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகமாக இருந்தது. தற்பொழுது ஆண்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்குண்டான முறையான தீர்வை ஏற்படுத்த முனைய வேண்டும்.

இன்று படித்த எத்தனையோ இளைஞர்கள் வேலைக்கு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலை என்பது வெறும் கனவாகவே போய்விடுகிறது. படித்த இளைஞர்களுக்க வேலை வழங்காமல், பண முதலைகளுக்கு வேலை வழங்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனால் அரசு இது விஷயத்தில் கவனம் எடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்க அடுத்த கட்டத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்.

நமக்கு ஏற்படும் மனரீதியான நெருக்கடிக்கு தீர்வுகளை கண்டறிந்து அதை தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கு தற்கொலை என்பது தீர்வல்ல. எதிர்காலத்தில் தற்கொலை இல்லாத தமிழகமாக மாற முன்வர வேண்டும்.

- நெல்லை சலீம்

Pin It