காஞ்சி மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், சித்தாமூர் மற்றும் அச்சரப்பாக்கம் பகுதியில் பரவலாக தலித்துகளும் வன்னியச் சமுதாயமும் தான் அதிகமாக வசித்து வருகிறார்கள். இதற்கு முன்னர் இப்பகுதியில் அதிகப்படியான சாதிச்சண்டைகளோ வன்முறைகளோ பெரிதாய் ஏதும் நிகழவில்லை. ஆனால் தருமபுரி கலவரம் மற்றும் மரக்காணம் கலவரத்திற்குப் பின் இப்பகுதியில் நிலை தலை கீழாய் மாறி விட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் மதுராந்தகம் அடுத்த வில்வராய நல்லூர் பகுதியில் தலித் மானவர்களுக்கு எதிராக மிகப்பெறிய சாதிவெறித் தாக்குதலை நடத்தினார்கள் சாதிவெறியர்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். ஆம் குற்றவவளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் பகுதியிலும் தலித் மக்கள் மீது தாக்குதல்; அடுத்து மதுராந்தகம் அடுத்து தச்சூர் பகுதியிலும் வன்முறை வெறியாட்டம்.

இப்படி அடுக்கடுக்காய் பல்வேறு இடங்களில் வன்முறையை சாதி வெறியர்கள் திட்டமிட்டு நிகழ்த்தினாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை சாதி வெறியர்கள் சாதகமாக பயன்படுத்தி மீண்டுமொறு வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.

காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ளது நுகும்பல் எனும் கிராமம், அங்கு சுமார் 200 தலித் குடும்பங்களும் 20 வன்னிய குடும்பங்களும் மேலும் வேறு சமூகத்தினர் ஒரு 30 குடும்பங்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த மாதம் ஒரு கோவில் திருவிழாவில் 'வன்னியர் கோவிலில் அந்நியருக்கு இடமில்லை' என சுவரொட்டிகளை வன்னியர்கள் அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு சில சில வாய்த்தகராறுகள் நடந்துள்ளது. இதை காரனமாக வைத்து சாதி வெறியர்கள் அப்பகுதி வன்னிய இளைஞர்களை அழைத்துப் பேசியுள்ளனர்.

கடந்த 16.06.2014 அன்று சாதிவெறியர்களோடு இணைந்து அப்பகுதி வன்னிய இளைஞர்கள் தலித் மக்களின் பகுதிக்குள் நுழைந்து குடிசைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 26 குடிசைகள் முற்றிலுமாக எறிந்து சாம்பலாகியிருக்கிறது. அப்பகுதி தலித் மக்கள் தங்களின் வாழ்வுக்காக கூலி வேலைகள் மட்டுமே செய்து வருகிறார்கள் மேலும் அப்பகுதி தலித் இளைஞர்கள் வேலைக்காக சென்னை சென்று உழைக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்று தலித் மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு சென்றதால் தீயை அணைக்கவும் முடியவில்லை.

திருமணத்திற்கு சீதனமாய் வாங்கி வைக்கப்பட்ட பல பொருட்கள் கருகி நாசமாய்ப் போனதைப் பார்த்து கதறும் காட்சிகள் மனசு வலிக்கச் செய்தது. மேலும் கருகிய குடிசைக்குள் ஏதேனும் நோட்டு புத்தகங்கள் மிஞ்சியிருக்குமா என்று தேடிக் கொண்டிருந்த மாணவச் செல்வங்களை காணும் போது இது ஈழமா அல்லது தமிழகமா என்ற கேள்வி எழுந்தது. இப்படி ஒரு மிகப்பெரிய வன்முறையாட்டம் நடந்தது யாருக்கும் தெரியாமல் அமைதியாய் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்க இது வரையில் எந்த தலித் இயக்கங்களோ அல்லது முற்போக்கு அமைப்புகளோ முன் வரவில்லை. ஆம் ஒரு சில நிவாரணங்களை விடுதலை சிறுத்தைகள் மற்றும் அப்பகுதி கிருத்துவப் பாதிரியார் அய்யா ஜான் சுரேஷ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் வழங்கியுள்ளனர்.

இப்படி எந்த தலித் இயக்கமும் இந்த பிரச்சனையை கையெலெடுக்காததை சாதி வெறியர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சுதந்திரமாய் வலம் வருகிறார்கள். எத்தனையோ வன்முறையாட்டங்களுக்கு எதிரக போராட்டங்களை கையிலெடுத்த தலித் இயக்கங்கள் இதற்கு மவுனம் காப்பதன் காரனம் என்ன என்பதை யூகிக்க முடியவில்லை.

வாழ்விழந்த தலித் மக்களின் வாழ்வாதாரத்தை யார் மீட்டெடுக்கப் போகிறார்கள்? சாதி வெறியர்களுக்கு யார் தண்டனை பெற்றுத் தருவது? அங்கிருக்கும் தலித் மக்களின் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? இப்படி பல வினாக்கள் நம்முள் எழுகிறது.

கருத்து வேறுபாடுகளை தூக்கியெறிந்து விட்டு அடித்தட்டு மக்களுக்காக களமிறங்கினால் மட்டுமே இதற்க்கான தீர்வு கிடைக்கும். இல்லையேல் இதே போல் மீண்டுமொரு வன்முறையாட்டம் அங்கே நிகழ்த்தப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

- வழக்கறிஞர் கீழ்.கா.அன்புச்செல்வன், மனித உரிமை செயற்பாட்டாளர், மனித உரிமைகள் பாதுகாப்புக்கழகம்

Pin It