ஒரு நாட்டுப்புறக் கதை உண்டு. ஒரு முறை ஜான் கென்னடி இந்தியவிற்கு வந்திருந்த போது ஜவஹர்லால் நேருவுடன் ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். திறந்த வெளியில் ஒருவர் மலங்கழித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, கென்னடி கேலி செய்தாராம். நேரு தலை குனிந்து நின்றாராம். இன்னொரு முறை நேரு அமெரிக்கா சென்று இருந்தாராம். அப்பொழுது இருவரும் ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது தொலைவில் ஒருவர் திறந்த வெளியில் மலங்கழித்துக் கொண்டு இருப்பதை நேரு பார்த்து விட்டாராம். உடனே கென்னடியிடம் "உங்கள் நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது? அதோ பாருங்கள் ஒருவன் திறந்த வெளியில் மலங்கழித்துக் கொண்டு இருக்கிறான்" என்று கென்னடியிடம் காட்டினாராம். உடனே கென்னடிக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டதாம். காவலர்களை அழைத்து அவனைச் சுட்டுக் கொன்று விடும் படி ஆணையிட்டாராம். ஓடிச் சென்ற காவலர் அவரைச் சுடாமல் அதே வேகத்தில் திரும்ப வந்தாராம். "ஏன் சுடவில்லை" என்று கென்னடி கோபமாகக் கேட்க "அவன் அந்நிய நாட்டைச் சேர்ந்தவன்" என்று காவலர் பதில் சொன்னாராம். அவர் எந்த நாடடைச் சேர்ந்தவர் என்று விசாரித்த போது இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்ததாம். நேருவின் முகத்தில் ஈயாடவில்லையாம்.

up gang rape

இந்தியர்கள் திறந்த வெளியில் மலங்கழிக்கும் அவலத்தை மேற்கண்ட நாட்டுப்புறக் கதை மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) புள்ளி விவரமும் தெரிவிவிக்கிறது. இவ்விவரங்களை 9.5.2014 அன்று புது தில்லியில் வெளியிட்ட அந்நிறுவனத்தினர் இந்தியாவில் 59.7 கோடி மக்கள் திறந்த வெளியில் மலங்கழிப்பதாகவும், வங்க தேசம், வியட்னாம், பெரு போன்ற மற்ற ஏழை நாடுகள் சுகாதார வசதிகளை மேம்படுத்தி இருக்கையில், இந்தியாவில் மட்டும் இவ்வசதி மேம்படுத்தப்படவில்லை என்றும் கூறி உள்ளனர்.

வல்லரசாக உயர ஆசைப்படும் இந்திய ஆதிக்க வர்க்கத்தினரால் சுகாதாரமாக / பாதுகாப்பாக மலங்கழிக்கும் வசதியை ஏற்படுத்த ஏன் முடியவில்லை? அரசு இதைச் செய்யாத நிலையில் பெண்கள் பாதுகாப்பினமையின் விளிம்பில் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை நீக்கிக் கொள்ள அதிகாலையிலோ அல்லது இரவிலோ திறந்த வெளிக்குச் செல்ல வேண்டி உள்ளது. உத்தரப் பிரதேசம், பதான் (Badaun) என்ற கிராமத்தில் 27.5.2014 அன்று இரவில் சென்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரு பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதோடு அல்லாமல் கொலையும் செய்யப்பட்டு உள்ளனர். பார்ப்பனர்களின் தலைமையில் / வழிகாட்டுதலில் இயங்கும் 'சுலப் இன்டர்நேஷனல்' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு இந்நிகழ்வு நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அதாவது 31.5.2014 அன்று தான் இப்பெண்களின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தான் அவர்கள் வெளியே செல்ல நேர்ந்தது என்ற ஞானோதயமும, அப்படி இருட்டில் வெளியே சென்றதால் தான் தாக்குதலுக்கு உட்பட்டார்கள் என்ற ஞானோதயமும் ஏற்பட்டது. அடுத்த நாளே அந்நிறுவனத்தினர் அக்கிராமத்தில் தங்கள் செலவில் கழிப்பறை கட்டித் தருவதாகக் கூறி உள்ளனர். அவ்வாறு கூறி, மைய அரசு அமைச்சர்கள் உட்பட பல அமைப்புகளின் பாராட்டுதலையும் பெற்றனர்.

சரி! இத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் செய்துள்ள சேவையினால் எந்த அளவு பயன் விளையப் போகிறது? உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லாததால் 59.7 கோடி மக்கள் திறந்த வெளியில் மலங்கழிக்க வேண்டி உள்ளது. இத்தொண்டு நிறுவனத்தினால் அவ்வளவு மக்களுக்கும் பாதுகாப்பான கழிப்பறை வசதி செய்து தர முடியுமா? இதற்கு அரசின் திட்டம் அதுவும் அவசர அவசரமாகச் செயல்படுத்த வேண்டிய திட்டம் கட்டாயமாகத் தேவை என்று தோன்றவே இல்லையா? அதைப் பற்றி யாரும் பேசவே இல்லையே! ஏன்?

அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஆகும் செலவை அரசு ஏற்க வேண்டி இருக்கும். அச்செலவினை அரசு ஏற்றால் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்க முடியக் கூடிய திட்டங்கள் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். எடுத்துக் காட்டாக அயல் நாடுகளில் வாழும் பார்ப்பனர்களின் பிள்ளைகள் அங்குள்ள மற்ற மாணவர்களுடனான போட்டியில் வெல்ல முடியாத பொழுது உயர் கல்வி கற்க வழி இல்லாமல் போய் விடுகிறது. (இந்தியாவில் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களை விட அதிகமான திறமை உடையவர்கள் என்ற மாயையை உருவாக்கவும் நிலைக்க வைக்கவும் முடிகிறது. அயல் நாடுகளில் அப்படி முடிவதில்லை) அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்கள் இந்தியாவில் உயர் கல்வி நிலையங்களில் வந்து படித்து விட்டு மீண்டும் அவர்கள் இருக்கும் நாட்டிற்குச் செல்வதற்காக உயர் கல்வி நிலையங்களில் இடமும் அளித்து அதற்கான செலவையும் இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இது போல் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படும் பல திட்டங்கள் உள்ளன.

அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பிடங்கள் திட்டத்தை அமல்படுத்தினால் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்க முடியக் கூடிய பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போய்விடும். திறமைக் குறைவான பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்ற மாயையை நிலைநிறுத்துவது முக்கியமா அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரமான கழிப்பிடம் முக்கியமா? இந்திய பார்ப்பன ஆதிக்க அரசுக்குப் பார்ப்பனர்களின் நலம் தான் முக்கியமே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் நலம் முக்கியம் அல்ல. ஆகவே உலகிலேயே மகா வெட்கக்கேடான முறையில் உலக சுகாதார நிறுவனத்தினால் அம்பலப்படுத்தப் பட்டாலும் தீர்வை நோக்கிப் பயணிக்காமல் இருக்கிறது. பார்ப்பனர்களின் பிடியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் 'யானைப் பசிக்குச் சோளப் பொரி' அளிப்பது போன்ற எதற்கும் போதாத தீர்வைக் காட்டி, பிரச்சினைகளை மறக்கடிக்கிறது.

அப்படி என்றால் நாம் என்ன தான் செய்ய வேண்டும்? அரசு, தனியார் நிறுவனங்ளிலும், சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும், ஊடகங்களிலும் உயர்சாதிக் கும்பலினர் நிரம்பி வழிவதால் தான் அங்கு உள்ளவர்களால், பிரச்சினைகளினால் மக்களுக்கு ஏற்படும் வலியை உணர முடிவதில்லை. அங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மிகக் குறைவாக இருப்பதால் அவர்களால் உயர்சாதிக் கும்பலினரின் வலிமைக்கு எதிராகச் செயல்பட முடிவதில்லை.

அவ்வாறு இல்லாமல் அவ்விடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மதசிறுபான்மை, முற்பட்ட வகுப்பு மக்கள் அவரவர் மக்கட் தொகை விகிதத்தில் இருந்தால் இது போன்ற அயோக்கியத்தனமான முடிவுகளை எடுக்க முடியுமா?

ஆகவே அரசு, தனியார் நிறுவனங்ளிலும், சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும், ஊடகங்களிலும் அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார ஒதுக்கீடு அமல்படுத்துப்படுவது தான் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே முதலில் பிரச்சினைகளுக்கான வேர் எங்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள. விகிதாச்சாரப் பங்கீட்டை வென்றெடுக்க அணியமாகுங்கள்.

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.6.2014 இதழில் வெளி வந்துள்ளது)

- இராமியா

Pin It