“முற்றுகையிடப்பட்ட கோட்டையுள் ஒழுங்கை உடைப்பது துரோகத்துக்குச் சமம்.” - புனிதர் இக்னேசியஸ் (லோயோலா) –(St. Ignatius of Loyola)

லியோராட் (Lyotard) என்ற ஆய்வாளர் பின்நவீனத்துவக் காலமாகிய தற்காலத்தில் உலகில் பரவலாக நிலவி வரும் கருத்தோட்டங்களைப் பற்றி "பெரும்கூற்றுகளில் அதீத நம்பிக்கையின்மை” என்று விபரித்துள்ளார். இன்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும்கூற்றுகள் தவிர்க்கப்பட்டுச் சிறுங்கூற்றுகளைப் பற்றியும் குறுக்கப்பட்டவை பற்றியுமே அதிகம் அலசப்படுகிறது. இதுவே இசைவான நாகரீகமாக ஆய்வாளர்கள் மத்தியில் பிரபலமாகவுள்ளது. இனம், மானிட பாலினவகைகள், மானிட பாலியல் தன்மைகள் போன்றவற்றைப் பற்றி நீண்டு தொடரும் உரையாடல்கள் “புரட்சிகரமானவை”யாக கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் பரந்துபட்டவையான பட்டாளி வர்க்கம் பற்றிய கேள்விகள், தேசியம், ஒடுக்கப்பட்ட ஒரு தேச மக்களுக்கான நாட்டுரிமை பற்றிய கேள்விகள் ஆகியன ஜனநாயகப் பண்பற்றவை என்றும் சர்வாதிபத்தியமானவை என்றும் ஒதுக்கப்படுகின்றன.

Kadirgamarஇதை எடுத்துக் காட்டுவதாக இன்றைய இந்தியாவின் புத்திஜீவிகளின் கூற்றுக்கள் சிலவற்றைக் கூறமுடியும். இவர்கள் பழங்குடிகளின் உரிமைகளை ஏற்றுக்கொள்வார்கள், ஆதிவாசிகளின் துன்பங்கள் பற்றிப் புலம்புவார்கள். ஆனால் இதே ஆதிவாசிகள் ஒரு கட்சியின் கீழ் இணைந்து போராடுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்கள் காஷ்மீரிகளின் கலாச்சாரத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால் அசாடிக்கு ஆதரவு தரமாட்டார்கள். நாகா மக்களுக்கும் மணிப்பூரி மக்களுக்கும் எதிரான இனத்துவேசங்களைக் கண்டிப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் அத்தேசங்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பார்கள். கம்பீரமான சிந்தனைகள் சிறுமையான உள்ளங்களைப் பயமுறுத்துவது போலவே கடினமான கேள்விகள் “முற்போக்கு” உள்ளங்களை எப்போதும் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.

இக்கட்டுரை, ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை உதரணமாக எடுத்து, பெருகிவரும் சிறுங்கூற்றுகள் மக்கள் கிளர்ச்சியை எதிர்க்கும் ஓர் அரசுக்கு எவ்வாறு துணைபோகின்றன என்பதைக் காட்டும்.

கிளர்ச்சி-எதிர்ப்பும் சிறுங்கூற்றுகளும்

“இது மட்டுமல்ல வேறு கருத்துக்களும் உண்டு”, “எல்லா சமூகங்களும் பல சமூகங்களை உள்ளடக்கியவை”, “எந்த ஒரு போராட்டமும் ஒருமுகத்தன்மை உள்ளது அல்ல” என்பன போன்ற கருத்துக்கள் கேட்பதற்கு அழகானவை. ஒரு மாணவனாலும் இவற்றைச் சொல்லிவிட முடியும். ஆனால் லெனினைப் போலவே போராட்டம் என்பது ஒரு கலை என்று உணர்ந்தவர்கள், அது ஒரு இருதுருவக் கூற்றுகளுக்கு இடையேயான “மனிச்சியன்” (Manichean) போராட்டம் என்பதை அறிவார்கள். அதாவது இருதுருவக் கூற்றுகளில் ஒரு துருவமான கிளர்ச்சியாளரின் கூற்று வெற்றிபெறும். அல்லது மறுதுருவமான கிளர்ச்சி-எதிர்ப்பாளரின் கூற்று வெற்றிபெறும். “ஒரு புரட்சியின் அடிப்படைக் கேள்வியே அதிகாரம் பற்றியதுதான்” (1) என்ற லெனினின் முடிவிலிருந்து ஒன்றைக் கிரகித்துக் கொள்ளலாம். புரட்சியின் முன்னேற்றத்துக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது கிளர்சியாளரின் கூற்றை மேலோங்கச் செய்வதே.

இது ஏன் முக்கிமானது? கிளர்ச்சியின் ஆரம்பத்தில், கிளர்ச்சி-எதிர்ப்பாளருக்கே சூழல் சாதகமாக உள்ளது. அவர்களிடமே அடக்குமுறைக்கு தேவையான அரசுக்குரிய வசதிகள் யாவும் இருக்கும். அவர்கள் சிறுங்கூற்றுகளைப் (பெண் உரிமை, சிறுவர் உரிமை போன்றவை) பற்றி பேசுவதற்கு இடம்கொடுத்தாலும், அங்கு ஏற்கனவே நிலவும் அவர்களின் அரசு என்னும் அரசியல் பெருங்கூற்றானது, இதை உடைக்க எண்ணும் கிளர்ச்சியாளருக்கு, பெரும் சவாலாகவே இருக்கும். கிளர்ச்சி செய்வதற்குக் கிளர்ச்சி-செய்யும்-சிறுபான்மை ஒன்று தீவிரமாக செயற்படுவது அவசியம். அதே நேரம் செயலற்று இருக்கும் பெரும்பான்மையைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். இதற்காக இவ்விரு பகுதிகளையும், அதாவது கிளர்ச்சி-செய்யும்-சிறுபான்மையையும் பொதுமக்களாக இருக்கும் பெரும்பான்மையையும், ஒன்றாக இணைக்கும் ஒரு பெருங்கூற்று கிளர்ச்சியாளருக்குத் தேவைப்படும். ஈழத்தமிழர் விவகாரத்தில் 80களில் பல கிளர்ச்சிக் குழுக்கள் தோன்றினாலும். விடுதலைப் புலிகளின் இலக்குரையே மக்களின் எண்ணங்களில் பிரபலமாகவும், ஆழமாகவும் பதிந்தது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற அவர்களின் இலக்குரை பின்னர் மக்களிடம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று பிரபலமானது. கிளர்ச்சியாளரின் கூற்றானது பொதுமக்களிடம் அவர்கள் யார், அவர்கள் யாரல்ல, அவர்களின் எதிரி யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் இலக்குரை, “நாம் ஈழத்தமிழர், நாம் சிறீலங்காவினர் அல்ல, நாம் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக்கு எதிரானவர்கள்” என்பதைத் தெளிவுபடுத்தியது.

கிளர்ச்சி-செய்யும்-சிறுபான்மையைச் பலமிழகச்செய்வது அல்லது முற்று முழுதாக அழிப்பது, அதே நேரத்தில் செயலற்றிருக்கும் பெரும்பான்மைப் பொதுமக்களை அடக்குவது இரண்டும் கிளர்ச்சி-எதிர்ப்பாளரின் தேவையாக இருக்கிறது. “ஓர் இசைவான சிறுபான்மையை கண்டெடுத்து, அதை ஒழுங்கமைத்து, அதனூடாகக் கிளர்ச்சி-செய்யும்-சிறுபான்மையினருக்கு எதிராகத் திருப்புவது கிளர்ச்சி-எதிர்ப்பின் ஒரு பயன் மிக்க விதி” என்கிறார் நிபுணர் டேவிட் கலூலா (David Galula) (2).

எதிரியின் மத்தியில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பது மிகப்பழமையான ஒரு போர்த்தந்திரம். அர்த்தசாஸ்திரத்தில் இதைத்தான் பேதம் என்று சொல்லப்படுகிறது. எதிரிகளின் மத்தியில் கலகத்தை விளைவிக்கவும் தனக்கு எதிரான கலகத்தை அடக்கவும் இது அரசனுக்கு அறிவுரை கூறுகிறது. இதையே நேர்த்தியாக அமுலாக்கினால் எதிரிகளின் மத்தியில் அர்த்தசாஸ்திரம் கூறும் மாயையையும் கூடத் தோற்றுவிக்கலாம். சிறீலங்கா அரசு தனது இராணுவ செயற்பாட்டிற்கு “இசைவான சிறுபான்மையினரை” துணைக்குழுக்களில் கண்டது. இராணுவ நடவடிக்கைக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழர்களை இராணுவத்தில் அடிமட்டத்தில் நுழைபவர்களாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறது (3).

சிறீலங்கா அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு “இசைவான சிறுபான்மையினரை”, இத்தகைய அடிமட்ட இராணுவ செயற்பாட்டாளர்களில் கண்டுகொண்டது. அதே நேரத்தில், விடுதலைப் புலிகளின் தமிழ்த் தேசியக் கூற்று ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறுபவர்களில், சிறீலங்கா அரசு அதன் கருத்தியல் செயற்பாடுகளுக்கு “இசைவான சிறுபான்மையினரை” கண்டுகொண்டது. இவ்வாறு சொல்பவர்களில், கொழும்புவாழ் மேல்மட்டத்தவர், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், நாவலாசிரியர்கள் மற்றும் மாற்றுக்கருத்துடைய தமிழ்ப் புத்திஜீவிகள் அடங்குவார்கள். இப்பகுதியினர் இந்தியாவிடமிருந்தும், மேற்குலக அமைப்புக்களிடமிருந்தும் நிதி உட்பட பலவிதமான சலுகைகளைப் பெற்றார்கள், பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

“கிளர்ச்சி-எதிர்ப்பு உத்திகள்” என்ற அமெரிக்காவின் கையேடு (US Field Manual 3-24.2)> டேவிட் கில்கலன் (David Kilcullen) என்ற கிளர்ச்சி-எதிர்ப்பு நிபுணரின் “இருபத்தியெட்டு பத்திகளை” பிற்குறிப்பாக இணைத்துள்ளது. அதில் அவர் மாற்றுக் கூற்றுக்களின் முக்கியத்துவத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

“தனி ஒரு கூற்றை” பயன்படுத்து. கிளர்ச்சி-எதிர்ப்பு என்பது பொதுமக்களைக் கிளர்ச்சி-எதிர்ப்புக்கு ஆதரவானவர்களாகத் தூண்டும் ஒரு போட்டியே என்பதால், பொதுமக்கள் எவ்வாறு தூண்டப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்திருத்தல் பயனுள்ளது. சமூகங்களில் கருத்துருவாக்கம் செய்பவர்கள் அநேகமாக இருக்கிறார்கள் - தலைவர்கள், சமூகத்தின் தூண்கள், சமயம் சார்ந்தவர்கள், ஊடகக்காரர்கள் மற்றும் மக்களிடையே புதிய கருத்துக்க‌ளைக் கொண்டு சேர்ப்பவர்கள். கிளர்ச்சியாளர்கள் உட்பட இத்தகையவர்கள் பொதுமக்கள் மேல் செலுத்தும் தாக்கம் “தனி ஒரு கூற்றை” பயன்படுத்துவதில் தான் அதிகமாக தங்கி இருக்கிறது. எளிமையான, எல்லோரையும் இணைக்கும், இலகுவாக விளங்கப்படுத்த கூடிய ஒரு கூற்றாக அது இருக்க வேண்டும். மக்களின் அனுபவங்களையும் நடப்புகளையும் விளங்குவதற்கான ஒரு வரைவாக அது இருக்க வேண்டும். தேசியம், இனம் பற்றிய ஒரு புனைக்கதை, சமயக் கோட்பாடு… போன்ற அவர்களின் கூற்றை பலமிழக்கச் செய்வதற்கு ஒரு மாற்றுக் கூற்றைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஏற்கவே நிலவும் ஒரு கூற்றை ஆனால் கிளர்ச்சியாளர்களை விலத்தி வைக்கும் ஒரு கூற்றைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.” (4)

இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்கள் உடைபடாமல் நிலைத்து நிற்பதற்கு, அதுவும் கிளர்ச்சி-எதிர்ப்பாளர் இஸ்லாமியர் அல்லாதவர்களாய் இருந்தால், அவர்களின் சமயம் பற்றிய தீவிரமான கூற்றே காரணம். அது கிளர்ச்சியாளரின் பொதுமக்களைக் கிளர்ச்சி-எதிர்ப்பாளர்களிடமிருந்து தெளிவாகப் பிரிக்கிறது. இதுபற்றி சிலவற்றை பிரான்ஸ் பனனின் (Frantz Fanon) சிறந்த கட்டுரையான “Algeria Unveiled” என்னும் கட்டுரையில் காணலாம்.

அயல் நாடுகளிடமிருந்து இவ் இஸ்லாமிய அமைப்புக்கள் பெறும் உதவிகள் இவற்றின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், இவ் இஸ்லாமிய அமைப்புக்களின் “வெறியார்ந்த” கூற்று அதன் உள்ளக நடப்புக்களை வடிவமைப்தில் ஆழமானதும் முக்கியமானதுமான பங்கை ஆற்றுகிறது. அயல் நாடுகளின் உதவி முற்போக்கான ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்ற உண்மையையும் இங்கு குறிப்பிட வேண்டும் (உதாரணமாக ஈரான் ஆதரிக்கும் ஹமாஸ் PFLPI ஓரங்கட்டுவது). இவ் இஸ்லாமிய அமைப்புக்களின் வீரியத்தை கட்டுப்படுத்தவே மேற்குலக இராணுவ ஆய்வுகள் அதிகளவான வளங்களை செலவளித்து “ஆக்கிலீஸ் குதி (Achilles Heel)” ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

மறுபக்கத்தில் சமயம்சாரா அமைப்புக்களான LTTE, PKK, FARC, NPA ஆகியனவற்றுள் முரண்பாடுகள் விதைப்பது சுலபமாக உள்ளது. இச் சமயம்சாரா அமைப்புக்கள் வர்க்கம் பற்றிய சிந்தனை கொண்டவர்களாகவோ, இராணுவம் சார்ந்த புது வரலாற்றை உருவாக்கியவர்களாகவோ அல்லது இரண்டும் ஆகவோ உள்ளார்கள். இதனாலேயே இவ்வமைப்புக்கள் பூகோள மட்டத்தில் உள்ள நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். நிற்சே (Nietzsche) சொல்வது போல ஒருவரின் நற்குணங்களுக்காகவே ஒருவர் திறமையாக தண்டிக்கப்படுகிறார்.

தெரிந்தும் தெரியாமலும் கிளர்ச்சி-எதிர்ப்புக்கு உதவுதல்

தெரிந்து உதவுபவர்கள் இருக்கும் போது கிளர்ச்சி-எதிர்ப்பு வெற்றியுடன் செயற்படும். ஆனால் அதன் உண்மையான வெற்றி தெரியாமல் அதற்கு உதவுபவர்களாலேயே கிடைக்கிறது. தெரிந்து உதவுபவரை கண்டறிவது சுலபம். அவர்கள் கிளர்ச்சியாளரின் பெருங்கூற்றை ஒளிவுமறைவின்றி மறுப்பார்கள். அவர்கள் மாற்றாக குறுக்கப்பட்ட கூற்றுக்களை முன்வைத்து கிளர்ச்சியாளர்களின் கூற்றுக்குக் குழிபறிப்பார்கள்.

சில தமிழர்கள், விடுதலைப்புலிகள் வடக்கையே முன்னிறுத்துகிறார்கள் என்றும் அவர்கள் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் சொன்னார்கள். இக்கூற்றால் உருவானதே கருணா-பிள்ளையான் பிரிவு. மார்ச் 2004ல் கருணா பிரிந்து சென்றபோது, விடுதலைப் புலிகள் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதே அவரின் முதன்மைக் குற்றச்சாட்டாக இருந்தது. அது போலவே தமிழ்-இஸ்லாமிய பிரிவும் உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் குறிப்பிட்ட சமூக அடையாளத்தைச் சிறுங்கூற்றாக வைத்தே இது உருவாக்கப்பட்டது. அதுவே துரதிஸ்டவசமான பல நிகழ்வுகளுக்கு வித்திட்டது. இஸ்லாமியர்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியமை, இஸ்லாமிய துணைக்குழுக்களைச் சிறீலங்காவின் இனவழிப்பு இராணுவத்துடன் சேர்ந்து கிழக்கில் தமிழர்கள் மேல் பல கொடூரச்செயல்களைச் செய்யவைத்தமை எல்லாம் இதன் விளைவே.(5)

“தமிழ் சிறுபான்மையினர் உரிமைகள்” என்றும், “பல்முகம் கொண்ட தமிழர் அடையாளம்” என்றும் சொல்பவர்கள் துரதிஸ்டவசமாக அன்றும் இன்றும் கூட இருக்கிறார்கள் - சிறீலங்காவில் தமிழர் சிறுபான்மையினர் என்றும், அவர்களின் சில உரிமைகளுக்கு பாதுகாப்புக்கள் இருக்க வேண்டும் என்றும் இவை சிறீலங்காவுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையாகவும் இருக்கலாம் என்றும் கூட இவர்கள் சொல்வார்கள். அதே நேரத்தில் ஈழத்தமிழர் தேசியம் என்னும் பெருங்கூற்றையும், அவர்கள் இறைமையுள்ள ஒரு தேசம் என்பதையும், அவர்களுக்குப் புறச்சுயநிர்ணய உரிமையும் தனிநாடாக தமிழீழத்தை உருவாக்கும் உரிமையும் உண்டு என்பதையும் மறுப்பார்கள். இச் சிறுங்கூற்றூடாகவே நீலன் திருச்செல்வம் என்னும் முற்போக்கு புத்திஜீவி உருவாகி சிறீலங்காவின் ஆளும் வர்க்கத்துடன் பேரம் பேசினார். அது போலவே லக்சுமன் கதிர்காமரும் தமிழ்த் தேசியத்தை நிராகரித்து விடுதலைப் புலிகள் மேற்குலகில் தடைசெய்யப்படுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

சில தமிழ்ப் புத்திஜீவிகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சாதியம் என்னும் சிறுங்கூற்றையும் கையாண்டார்கள். இவர்கள் விடுதலைப்புலிகள் சாதிய ஒழிப்பு முயற்சியில் கண்ட வெற்றிகளை மறுத்தார்கள். (6)

ஈழத்தமிழர் மத்தியில் சாதியம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எல்லாச் சாதியையும் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இருந்தும் தமிழ் நாட்டிலுள்ள சில செல்வாக்குள்ள புத்திஜீவிக் குழுக்கள், முக்கியமாக, திருத்தல்வாதிகளான CPI(M), சார்பில்லா பின்நவீனத்துவவாதிகள் போன்றோர் தொடர்ந்தும் தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை மேல்சாதியினரின் அமைப்பாகக் காட்ட முனைகின்றனர்.

இவர்களின் செயற்பாடு இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக, அதாவது தமிழீழப் போராட்டத்தின் பின்தளமாக இருக்கும் தமிழ்நாட்டில் அதற்கான பொதுமக்களின் ஆதரவை பலமிழக்கச் செய்வதாக உள்ளது.

அதேபோல புலம்பெயர் தமிழர் மத்தியிலும் சாதியப் பிளவுகளும், தமிழ்த் தேசியவாதிகள் பற்றிய தனிப்பட்ட அவதூறுகளும், சிறீலங்கா புலனாய்வுத்துறையுடனும் வெளிநாடுகளின் புலனாய்வுத்துறையுடனும் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட முறையில், முடுக்கி விடப்படுகிறது.

தமிழீழத்தில் 2009க்குப் பிற்பட்ட காலத்தில் தமிழர் தாயகத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும், சிறீலங்கா இராணுவம், சாதியப் பிரச்சனைகளைத் தூண்டுவதால் ஏற்படும் இராணுவப் பின்விளைவுகள் தெளிவாகவே தெரிகிறது. (7)

இலங்கைத்தீவிலும், தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களும், கல்விமான்களும், ஒற்றுமையை வளர்ப்பதைத் தவிர்த்து, சாதியம் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வது கவலைக்கிடமானது. அவர்களின் நோக்கம் சிறந்ததாகவோ அல்லது வேறு உள்நோக்கம் கொண்டதாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் கிளர்ச்சி-எதிர்ப்பு என்ற வலையில் முற்று முழுதாக அகப்பட்டுக் கிடக்கிறார்கள். இதுவும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் பெருங்கூற்றுக்குக் குழிபறிக்கும் செயற்பாடாக இருக்கிறது. (8)

சில பெண்ணியவாதிகளும் விடுதலைப்புலிகளின் கூற்றை விமர்சித்தார்கள். ரஜனி தினரகம போன்றவர்கள் விடுதலைப்புலிகளின் “ஆணாதிக்க அதிகாரம்” தமிழ்ப் பெண்கள் எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றார்கள். ராதிகா குமாரசாமி போன்றவர்களுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பெண்கள் “சக்கரத்தின் பற்களாக”, முக்கியத்துவம் அற்றவர்களாகத் தெரிந்தார்கள். தமிழ்ப் பெண்கள் தங்கள் முந்தைய அமைதிகாக்கும் நிலைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியமே அவர்களுக்குத் தெரிந்தது. கிளர்ச்சி-எதிர்ப்புச் சூழலில் இவ்வாறான கருத்துக்கள் உருவாக்கும் விளைவுகளைச் “சங்கதி” இதழில் அண்மையில் வெளிவந்த கௌதம் நவ்லகாவின் (Gautam Navlakha) கட்டுரை விளக்குகிறது:

“கிளர்ச்சி-எதிர்ப்புத் திட்டத்தின் சமாதானப்படுத்தலின் அம்சமாக செய்யப்படும் பெண்கள் பற்றிய ஆய்வுகளும் அறிக்கைகளும் பிரமிக்க வைக்கின்றது.

இச்செயற்பாடுகள் பெண்களைத் தனிப்படுத்தி அவர்களின் அனுபவங்களைப் பெரிதுபடுத்துகின்றன. ஆனால் உண்மையில் முழுச்சமூகமுமே பாதிக்கப்படுகிறது – சிலர் அதிகமாகவும் சிலர் கொஞ்சம் குறைவாகவும் - ஒருவரும் பாதிக்கப்படாமல் இல்லை.

இராணுவ அடக்குமுறையில் பெண்களின் அனுபவங்களையும் கரிசனைகளையும் ஆண்களின் தேவைகளுக்கு எதிரானதாகப் படமிடுவதற்கும், பெண்களைப் போராட்டத்திலிருந்து தூரத்தில் வைப்பதற்கும் புத்திஜீவிகளின் இத்தகைய மேலதிக ஆய்வுகள் பெரும் உதவியாக - சமாதானப்படுத்தலுக்கு உதவியாக உள்ளது.

அதே நேரத்தில், இந்த ஆய்வுச் செயற்பாடுகள், கிளர்ச்சி-எதிர்ப்பு நடைவடிக்கைகள் எவ்வாறு பெண்களைக் குறி வைக்கின்றது என்பதையோ, அவர்களின் ஏதுநிலையைப் பயன்படுத்தி எவ்வாறு பாலியல் தேவைகளுக்கும் மிரட்டல்களுக்கும் அவர்களைக் கையாளுகிறது என்பதையோ, பெண்களை அவமானப்படுத்துவதை ஒரு போர்த்தந்திரமாக எவ்வாறு கையாளுகிறது என்பதையோ பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இந்த நிகழ்வுகள் ஆய்வுகளுக்குள் வருவது அரிதாகவே உள்ளது. ஏனெனில் இந்த ஆய்வாளர்கள் அரசின் சேவையில் இருப்பதால் போரினால் ஏற்படும் சமூக விளைவுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களாகவே உள்ளனர்.

இதற்கு மாறாகப் புரட்சிப்போரில், இவ்விடயம் கூர்மையடைகிறது. ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் ஊக்கி இதில் பங்கெடுக்கிறார்கள். பெண்களைத் தனிப்படுத்துவதையோ, பெண்களை இயற்கையாகவே அமைதி விரும்புவர்களாக சித்தரிக்கும் ஆய்வுகளோ கருத்தற்ற வெறுமையாக இங்கே உணரப்படுகின்றது.

நோக்கம் என்ன? புரட்சிப்போர், சந்தேகமில்லாமல் இடங்களுக்கேற்ப மாறுபட்டாலும், வர்க்கம், சாதி, சமூகம் போன்ற சமுதாயப்பிளவுகள் இயற்கையானவை என்ற கருத்துக்களை உடைக்கும் பெரும் வல்லமை கொண்டது.” (9)

கிளர்ச்சி-எதிர்ப்புக்குத் தெரியாமல் உதவுபவர் செய்யும் உதவிகள் தெரிந்து உதவுபவர் செய்யும் உதவிகள் போன்ற விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. தெரிந்து உதவுபவர் கிளர்ச்சியாளரின் கூற்றுக்கு திட்டமிட்டே குழிபறித்து ஏற்கனவே நிலவும் கூற்றையோ அல்லது அதையும்விட சிறப்பு என்று கருதும் ஒரு அரச அமைப்பையே பாதுகாக்கிறார். தெரியாமல் உதவுபவரோ தனக்குத் தெரிந்ததைத் தான் சிறப்பாகச் சொல்வதாக எண்ணிக்கொள்கிறார்.

தெரியாமல் உதவுபவர்கள், தமிழ்த் தேசியம் என்பது ஒருமுகப்படுத்தப்பட்டதல்ல என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். அதன் பகுதிகளாக உள்ள பெண்கள், குறிப்பிட்ட பிரதேசத்தவர், பாலியல் சார்புடையோர், ஒரு மதத்தைச் சேர்ந்தோர், மற்றும் ஒரு சாதியைச் சேர்ந்தோர் போன்ற குழுக்களுக்குத் தனித்து நிற்கக்கூடிய தமக்கான கூற்றுக்கள் தேவை என்ற கருத்தாடல்களை முன்வைக்கிறார்கள்.

கிளர்ச்சியாளரின் பெருங்கூற்று, அதாவது தமிழ்த் தேசியம், மேலே குறிப்பிட்டவை போன்ற பல்வேறு குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது, சமத்துவத்தைப் பேணவும், கிளர்ச்சியைச் சிறப்புடையதாக்கவும் அவசியமானது.

ஆனால் தமிழ்த் தேசியத்தின் பெருங்கூற்றுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையேயான முதன்மையான முரண்பாட்டிலிருந்து இவ்ஏனைய கூற்றுகளை விலத்தி இவை தனித்து நிற்பதாக முன்வைத்தால் அது இனவழிப்புச் செய்யும் சிறீலங்கா அரசை எதிர்க்கும் அமைப்பைப் பிளவு படுத்துவதாகவே முடியும். இவர்கள் அத்தகைய நோக்கத்துடன் செய்யாவிட்டாலும் அதன் விளைவுகள் அமைப்பை பிளவுபடுத்துவதாகவே இருக்கும்.

நீண்ட காலமாக தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தங்களின் அடக்குமுறைக்குத் தாங்களே கருவியாக மாறி, தம் மக்களைத் தாமே அழித்தொழிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று உளவியலாளர் ஹூசேன் புல்ஹான் (Hussein Bulhan) கூறுகிறார். அவர் மேலும், “அடக்குமுறைகளுக்கு மத்தியில் பாதுகாப்பை தேடுவதற்கும், சமூக வன்முறைகளிடையே தனிப்பட்ட அமைதியைத் தேடுவதற்கும், ஒட்டுமொத்த மக்களின் அபிலாசைகளுக்குத் துரோகம் செய்து தனிப்பட்ட வெற்றிகளை வேண்டி நிற்பதற்கும் அதிக பிரயத்தனங்களோ திறமைகளோ தேவையில்லை.

Karunaஏனெனில் இவை அங்கு நிலவும் அடக்குமுறையை நிரந்தரமானதென்று ஏற்றுக்கொள்கிறது. சுதந்திரத்திற்குப் புதுத்தைரியமும், புதுத்தொலைநோக்கும், புதுஈடுபாடுகளும் அவசியம்.” (10)

சிங்களவர்களுடன் சமரசம் செய்ய வேண்டும் என்பதை முன்வைக்கும் புத்திஜீவிகளை அதிகாரம் மிக்க அமைப்புக்கள் ஆதரிக்கின்றன. சிறுபான்மையினர் பற்றிய ஆய்வுகள் செய்வதற்கும், ஈழத்தமிழர் மத்தியில் சாதியம், தமிழரின் ஆணாதிக்கம் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கு மேற்குலகின் தாராளமான நிதியுதவி கிடைக்கிறது.

தனியாக பெண்உரிமைகளுக்காக வேலை செய்யும் பெண்ணியவாதிகளுக்கும், தனியாக சிறுவர் உரிமைகளுக்காக வேலை செய்யும் மனிதாபிமானிகளுக்கும் வளங்கள் மிகுந்த சர்வவேதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகள் கிடைக்கின்றன. பல்முகத் தமிழ்ச் சமூகத்தை விபரிக்கும் நாவலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் இலக்கிய விழாக்களில் சிறப்பு இடங்கள் கொடுக்கப்படுகின்றன.

இம்மனிதர்கள் யாவரும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு இல்லாவிடினும், தமிழ்த் தேசியத்தின் வெற்றியில் நம்பிக்கை அற்றவர்களாக ஒருங்கிணைகிறார்கள். அதனாலேயே தமது வாழ்க்கைக்கு உதவியாக மாற்றுக் கூற்றுகளை முன்வைக்கிறார்கள். நம்பிக்கை இழந்த பிள்ளைகளாக இவர்கள் உள்ளார்கள். இம்மனிதர்கள் எவருக்கும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இனவழிப்பு அரசையும் அதன் சர்வதேச ஆதரவாளர்களையும் எதிர்த்துச் செல்வீச்சுக்கும், இரசாயன ஆயுதங்களுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும் முன்நின்ற மனிதர்களின் துணிவும், தொலைநோக்கும், ஈடுபாடும் இல்லையே.

அவர்களே உண்மையான விடுதலையைப் பெற்றோர். இவர்களோ தமது சொந்த மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டோம் என்பதை மறைக்கவும் மறுக்கவும் தமது சொந்த பிரதிநிதித்துவப்படுத்து மக்களைப் பற்றியே சித்தப்பிரமைகள் கொண்டு அலைகிறார்கள்.

அவர்களின் குறிக்கோள் என்ன என்பது முக்கியமல்ல. விடுதலைப் போராட்டத்தில் குறிக்கோள்கள் முக்கியமல்ல – அதன் விளைவுகளே முக்கியமானவை.

சிறுங்கூற்றுகள் மேல் உளவியல் ஈர்ப்பும் “அவதி ஆபாசங்கள்” பரவலும் - பெருங்கூற்றின் விடுதலை பெற்றுத் தரும் ஆற்றலின் மேல் நம்பிக்கை இல்லாமையினாலேயே சிறுங்கூற்றுக்கள் மேல் நம்பிக்கை வளர்கிறது. இது அவர்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இருக்கலாம். இதையும் விட கிளர்ச்சிக்கு குழிபறிப்பதால் நிதி மற்றும் பல நன்மைகளும் அவர்களை வந்து சேர்கின்றன. ஆனால் எல்லாவாற்றிற்கும் மேலாக மனிதரின் ஒரு குணமான நம்பிக்கை இழத்தலே இதற்குக் காரணம். இதுவே அடக்குமுறையாளர்களின் உளவியல் போருக்கு தூண்கல்லாக இருக்கிறது. 60 வருடங்களாக தொடரும் இனவழிப்பின் விளைவாக ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கை இழப்பு தோன்றுவது எதிர்பார்க்கக் கூடியதே.

இதோடு நெருக்கமான தொடர்புடைய இன்னுமொரு நிகழ்வை நான் “அவதி ஆபாசங்கள்;” (Suffering Pornography) பரவல் என்று விபரிப்பேன். இலக்கியம், கவிதை, தனிநபர் அனுபவங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவை அடக்கப்பட்டோரின் வேதனைகளை, அதன் அரசியல் பின்னணிகளை அகற்றிவிட்டு, விபரிப்பதையே “அவதி ஆபாசங்கள்” பரவல் என்கிறேன். மனிதர்களுக்கு அன்று தொட்டு அவதிகளைப் பற்றிய கட்டுமீறிய கவர்ச்சி இருந்து வந்திருக்கிறது. இதனாலேயே போற்றப்படும் இலக்கியங்கள் பல துன்பியல்களாகவே இருக்கின்றன.

இன்பத்தை சித்தரிப்பதில் காணும் அதேயளவு அழகுணர்ச்சி அவதியை சித்தரிப்பதிலும் காணப்படுகிறது. முதலாளித்துவ சந்தையில் அவதியைச் சித்தரிக்கும் முகங்களையும், காட்சிகளையும், ஒலிகளையும், இரத்தத்தையும், கொடூரங்களையும் தேடி நுகர்வதற்கு பலருள்ளனர்.

2009க்குப் பிற்பட்ட காலத்தில், சித்திரவதை, பாலியல் வன்முறைகள், குடிபெயரல், பிரிவு போன்றவற்றை மட்டும் மையப்படுத்திய பல ஆவணப்படங்களையும், நூல்களையும், அறிக்கைகளையும், தனியார் அனுபவங்களையும் தமிழர்கள் கண்டனர்.

அழுது புலம்பும் தமிழர், செத்து மடியும் தமிழர், பட்டினியால் வாடும் தமிழர், தப்பியோடும் தமிழர், துர்பிரயோகிக்கப்பட்ட தமிழர் போன்றவர்களின் கதைகள் நல்ல விற்பனையைக் கண்டன. ஆனால் இச்சந்தைகள் போராடிய தமிழரின் பெருங்கூற்றான வீரத்தையோ, அவர்களின் தேசியத்தையோ ஏற்கவில்லை.

இவ்வாறான சித்தரிப்புகள் தமிழரின் அவதிகளைப் பிரபல்யமாக்கி, இலங்கைத் தீவில் இடம்பெறுவனவற்றை வெளிக்கொண்டு வருவதாகச் சிலர் நியாயமாகவே வாதாடுவார்கள். ஆனால் இவ்வாறான சித்தரிப்புக்கள் அடக்கப்படும் மக்களின் உளவியலில் சாதகாமான பாதிப்புகளை விட மோசமான பாதிப்புக்களையே அதிகம் ஏற்படுத்துகிறது. கொடூரமான இனவழிப்பு இடம் பெற்றுக்கொண்டிருக்கும் இக்காலத்தில், தமிழத் தேசிய விடுதலையில் நம்பிக்கை வளர்க்கும் கூற்றுகள் அற்ற படைப்புக்கள் மக்களுக்கு அவநம்பிக்கையையே வளர்க்கிறது.

அது மட்டுமல்ல. மக்களின் அவதிளையும் துன்பங்களையும் பிரதிபலிக்கும் ஏராளமான படைப்புகள் அடக்கப்படுபவர்களிடம் கொடூரத்தை ரசிக்கும் ரசனையை வளர்க்கிறது. அவர்கள் அழுது புலம்புவதிலும், அதிலும் மோசமாக அவதியில் இன்பம் காணுவதிலும் திருப்தியடைகிறார்கள். கொடூரத்தை ரசிப்பது பற்றிய பிராய்டின் (Freud) சிறப்பான கருத்தும் இக்கருத்துக்கு ஒத்ததே. கொடூரத்தை ரசிப்பது தன்னை நோக்கியே திருப்பப்படுகிறது என்றும், அதற்கு பாலியல் சிற்றின்பக் குணங்களும் உண்டு என்றும் அவர் சொன்னார். (11)

இத்தகைய “அவதி ஆபாசங்கள்” கூட்டான அகவெளிப்பாடாக(Collective Catharsis) அமையாது, உளவியல் ரீதியாக தன்னையே சேதம் செய்வதாகவே அமைகிறது. மே 2009இல் நிகழ்ந்த, தமிழர் வரலாற்றில் முன்னெப்போதும் அறியப்படாத படுகொலைகள் தமிழரின் ஆழ்மனதைப் புண்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. தளராத உறுதி உள்ளவர்களுக்கும் கூட இதனால் நம்பிக்கை இழப்புக்கள் ஏற்படும். அதே நேரத்தில் உறுதியான மனமும், சிறந்த அரசியல் விழிப்புணர்வும், ஈடுபாடும் கொண்டவர்கள் மீண்டெழுந்தார்கள்.

மெலிந்த தடுமாறும் உள்ளம் கொண்டவர்கள் தம்மையே சேதம் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். துன்பங்களையும் அவதிகளையும் விபரிக்கும் படைப்புகள் அதே நேரத்தில் நம்பிக்கையையும் வளர்க்காவிட்டால் இவ்வகையான நடத்தைகளையே தூண்டும்.

“அவதி ஆபாசங்கள்” பரம்பல் அடக்குமுறையாளருக்கு எங்கும் வியாபித்திருக்கும் ஒரு தகுதியைக் கொடுக்கிறது. அடக்கப்படுவோரில் மெலிந்த மனமுடையவர்களுக்கு நிலைமையை விதியையென்று ஏற்கும் மனநிலையையும் அது கொடுக்கிறது. அடக்குமுறையாளரைத் தோற்கடிக்க எந்த வழியுமில்லை என்று ஏற்றுக் கொண்ட இவர்கள் அடக்கப்படுபவர்கள் மேலும் அவர்களின் சிறந்த பிரதிநிதிகள் மேலும் பிழைகளைக் கண்டறிந்தோ கற்பனை செய்தோ பார்க்கிறார்கள்.

தம்மைத் தனிப்பட்டவர் என்றும் தமது தனிப்பட்ட அனுபவங்களினூடாகவும் ஒடுக்கிக் கொண்டோர், தமிழ்ப் போராளிகளையும் அவ்வாறே மதிப்பிடுகிறார்கள். அதனூடாகப் போராளியையும் அவரது சாதி, பிரதேசம் ஆகியவற்றை வைத்து மதிப்பிடுகிறார்கள். சிங்கள அரசின் ஆணாதிக்கத்துக்குச் சவால் விடமுடியாது என்று கண்டவர் தனது வெறுப்புக்களைத் தமிழர் ஆணாதிக்கத்திற்கு எதிராகத் திருப்புகிறார். தாயகத்திலிருந்து ஓடித்தப்பியோர், தமது கதைகளில் தாயகத்தை மீட்பது பற்றிய விருப்பங்களைத் தவிர்க்கிறார். ஏனெனில் தோல்வியை அவர் மனதில் உள்வாங்கி விட்டார்.

இத்தகைய மனிதர்கள் போராட்டத்தின் தொலைநோக்கைத் தொலைத்தவர்களாகவும் அதனால் போராட்டத்திற்குப் பாதகமில்லாதவர்காளாயினும் பயனற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். சாதாரணமான சூழலில் இவ்வகையோருக்காகப் பரிதாபப்படலாம். இவர்கள் மற்றவர்களுக்கும், போராட்டத்திற்கும் பாதகமாக இருப்பதாலேயே இவர்களைக் கொள்கையளவில் எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

போராட்டத்தின் துரோகி பிறப்பிலேயே கெட்டவராகப் பிறப்பதில்லை என்பதை விளங்கிக் கொள்ளல் அவசியம். அவநம்பிக்கைக்கு ஆளானவர், தோல்வி மனப்பான்மையில் உழல்பவர், தொலைநோக்கைத் தொலைத்துவிட்டவர், அடக்கப்படுபவர்களுடன் சேராமல் அடக்குமுறையாளருடன் சேர்ந்து செயற்படுவதே தனது நலத்திற்குச் சிறந்தது என்று கணிப்பிடுகிறார். தனது செயற்பாடுகளால் அவர் பொருங்கூற்றை நிராகரிக்கிறார் அல்லது அதற்குக் குழிபறிக்கிறார்.

மேற்கோள்கள்:

1) VI Lenin, “Left-Wing Childishness and the Petty-Bourgeois Mentality” in Lenin: Selected Works, Moscow: Progress Publishers, 1977, p. 446

2) David Galula, Counter-Insurgency Warfare: Theory and Practice, New York: Frederick A. Praeger, 1966, p. 77

3) அமெரிக்கா இராணுவப் போர்க் கல்லூரியில் பரிசு பெற்ற மேஜர் ஜெனரல் உதயா பெரேரா எவ்வாறு இராணுவ ஆட்சியின் கீழ் தமிழர் தாயகத்தில் சமூகப் பிளவுகளை உருவாக்குகிறார் என்பதை இக் கட்டுரையில் காணலாம்: “Sinhala military operates US-trained ‘counterinsurgency’ in Jaffna

4) David Kilcullen, “Twenty-Eight Articles: Fundamentals of Company-Level Counterinsurgency”, in Tactics in Counterinsurgency, FM 3-24.2, Washington, April 2009, p. C6-7

5) இஸ்லாமிய துணைக்குழுக்கள் சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தது இஸ்லாமியர்களை 1990ல் யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றிய பின்னர்தான் என்று ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் சிறீலங்கா இராணுவம் இஸ்ரேலிய மோசாட்டின் உதவியுடன் இஸ்லாமிய துணைக்குழுக்களை 80களின் ஆரம்பத்திலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. இஸ்லாமியர்களின் குறுக்கப்பட்ட அடையாளத்தை எவ்வாறு சிறீலங்கா அரசு பயன்படுத்திக்கொண்டது என்பதைப்பற்றி நடேசன் சத்தியேந்திராவின் இக்கட்டுரையில் கண்டுகொள்ளலாம். “Tamil National Struggle and the Muslim Factor”. அதே போல தற்கால நோக்கில் தமிழ்-இஸ்லாமிய உறவு பற்றிய கல்விமான் ARM Imtiyaz நேர்காணல்.

6) தமிழீழ நடைமுறை அரசின் சமாதானச் செயலகத்தில் பணியாற்றியவரும், நிசோர் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் முக்கிய உறுப்பினருமான ந மாலதி என்பவர், “எனது நாட்டில் ஒரு துளி நேரம் - விடுதலைப்புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு ஆண்டுகள் (விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், 2013;)”, என்ற நூலில் விடுதலைப்புலிகளின் கீழ் சாதிய எண்ணங்கள் எவ்வாறு உடைக்கப்பட்டது என்று விபரித்திருக்கிறார். அத்துடன் ஆதித்தன் ஜெயபாலனின் கட்டுரையையும் பார்க்க: “LTTE and the Annihilation of Caste

7) “SL military machinates caste, anti-diaspora violence in Jaffna villages” .

8) ஆர்வமுள்ள வாசகர்கள் தமிழ்நெற் ஆசிரியர், காலம் சென்ற சிவராமின் தமிழர் போரியல் பற்றிய கட்டுரைகளை வாசிக்கலாம்: Sivaram’s set of essays on ‘Tamil Militarism காலனித்துவ காலத்தில் தமிழ் மறக்குலத்தவரின் கிளர்ச்சிகளை எவ்வாறு காலனியாளர்கள் உள்@ர் மேல்மட்டத்தவர்களையும் அடிமட்ட போர்வீரர்களையும் கொண்டு அடக்கினார்கள் என்பது பற்றி எழுதியுள்ளார். அத்துடன் காலனித்துவ மானுடவியல் கருத்துக்கள் அம்மறக்குலத்தவர்களை குற்றம் புரிபவர்களாக திரிபு செய்ததைப் பற்றியும் எழுதியுள்ளார்.

9) Gautam Navlakha, “Ambush amplifies a struggle

10) Hussein Abdilahi Bulhan, Frantz Fanon and the Psychology of Oppression, New York: Plenum Press, 1985, p. 127

11) Sigmund Freud, Civilization, Society and Religion, New York: Penguin Books, 1985, p. 311

ஆசிரியர் விவரங்கள்: இரா. ம. கார்த்திக்

கட்டுரையை மொழிபெயர்த்தது: Dr. நா. மாலதி, வடகிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் (NESoHR) உறுப்பினர்

Pin It