தோழர் கி.வே.பொன்னையன் த.நா.மா.லெ.கட்சியின் அரசியல், அமைப்பு, வரலாறு பற்றிய விவாதம் என்று 4 கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில் அவர் “1988களில் பல்வேறு மக்கள் திரள் அமைப்புகளைக் கட்டி கட்சி மக்களை அமைப்பாக்கி அணிதிரட்டியது. பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயத் திட்டத்தை நோக்கி முன்னேற பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளை 1988ல் நடத்திய பாசிச எதிர்ப்பு இயக்க மாநாட்டின் மூலம் தொடங்கி வைத்தது... புதிய வாழ்க்கைக்கு மக்களை அணிதிரட்டும் திசையில் மக்களின் தற்சார்பு, தன்மானம், ஜனநாயகம் ஆகிய கூறுகளை உள்ளடக்கிய முழக்கங்கள் முன்வைக்கப்பட்டு நடவடிக்கைகள் மூலம் மக்கள் புதிய வாழ்க்கை முறைக்கு பயிற்றுவிக்கப்பட்டனர்” என்று த.நா.மா.லெ.க-வின் பொற்காலத்தை பதிவு செய்துள்ளார். உண்மையில் அன்றைக்கு T.N.O.C-யாக இருந்த த.நா.மா.லெ.க-விற்கு அது பொற்காலம்தான். 'பாசிச எதிர்ப்பு தேசிய சனநாயக இயக்க' வேலையின் நிமித்தம் பகுதிநேரமாகவும், முழுநேரமாகவும் கட்சிக்கு 100 பேர் வரை ஊழியர்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

lenin 287நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நேரத்திலும் உறுதி வாய்ந்த தலைமைக்கமிட்டி இல்லாமல் கட்சி சிக்கலாகவே இருந்தது. உறுதி வாய்ந்த தலைமைக்கமிட்டி இல்லையென்றால் அது கட்சியே இல்லை. இதன் முக்கியத்துவம் இரசியா, சீனா, வியட்நாம் உட்பட புரட்சி நடந்த நாடுகளின் பின்னடைவு மூலமான படிப்பினைகளால் அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் உணர்ந்துள்ளன. இரசியாவில் தோழர்கள் லெனின் மற்றும் ஸ்டாலினுக்குப் பிறகும், சீனாவில் தோழர் மாவோக்குப் பிறகும், வியத்நாமில் தோழர் ஹோசிமின்னுக்குப் பிறகும் அடுத்த மட்டத் தலைமைகள் இல்லாமல் புரட்சிப் பின்னடைவை சந்தித்தது மட்டுமில்லாமல் துரோகிகள் அதிகாரத்தைக் கைப்பற்றவும் முடிந்திருக்கிறது.

இதன் அனுபவம் உலக நாடுகளின் கட்சிகளுக்கு எதை உணர்த்தியது என்றால் கம்யூனிஸ்ட் கட்சி என்பது ஒட்டுமொத்தத்தில் தலைவர்களின் நிறுவனம் என்பதையும், அதிலும் தலைமைக்கமிட்டி என்பது ஓய்வறியா உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், வீரத்தாலும், தியாகத்தாலும் தேர்ச்சிப்பெற்ற ஊழியர்களை தலைவர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். கட்சி எல்லாவற்றிலும் தலையாயப் பிரச்சினையாக எதிர்கொண்டிருந்த உறுதிவாய்ந்த தலைமைக் கமிட்டிக்கான ஊழியர்களைக் கண்டறிவதற்கான வாய்ப்பை பாசிச எதிர்ப்பியக்கம் அளித்தது. அற்புதமான, படித்த, திறன்வாய்ந்த ஊழியர்களை அள்ளித்தந்தது.

தோழர் கார்முகிலால் இந்த வாய்ப்பை துளியாவது சரியாகப் பயன்படுத்த முடிந்ததா?

கட்சியின் முதன்மைப் பிரச்சினையான தலைமைக் கமிட்டிக்கானத் தேவையைத் தீர்க்க முடிந்ததா?

அவர் அதற்காக ஏதாவது செய்தாரா?

இல்லவே இல்லை.

புரட்சிகர கட்சியின் அடிப்படையான தேவையை உணராத தோழர் கார்முகிலின் போக்கிற்கு பாசிச எதிர்ப்பியக்க நிலைமைதான் நல்ல எடுத்துக்காட்டு.

இந்த வேலையை நினைவு கொள்கிற யாரும் தோழர் P.V. பக்தவத்சலத்தை நினைக்காமல் இருக்க முடியாது. பாசிச எதிர்ப்பு தேசிய சனநாயக இயக்கத்தின் வேலைகளில் கட்சியின் உரிமை அமைப்பான மக்கள் உரிமைக் கழகம் (ம.உ.க) முன்னிருத்தப்பட்டது. இந்த ம.உ.க- வின் முக்கியப் பொறுப்பாளராக தோழர் P.V.P இருந்தார். ஒரு கட்சியின் உறுப்பு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புக்கு ஒருவர் வரவேண்டுமானால் அவர் கட்சியின் மையக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் கட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உறுப்பு அமைப்பின் பணிகளை வகுத்துக் கொள்வார். உறுப்பு அமைப்பானது நாடு தழுவிய அளவில் எதிர்கொள்ளும், சிக்கல்களையும், சவால்களையும் தீர்ப்பதற்கு தான் சார்ந்த மையக்குழுவை உடனுக்குடன் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குத்தான் இருக்கிறது. கூடவே உருப்பாமைப்பானது எதிரியின் சதிக்கு பலியாகாமலும், விலை போகாமலும் கண்காணிக்கும் வாய்ப்பை கட்சியும் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இந்த முறையைக் கணக்கில் கொண்டு தோழர் P.V.P யைப் பாருங்கள். ம.உ.க மற்றும் தோழர் P.V.P யின் செயல்பாட்டு காலத்தையும் நினைவில் கொள்ளுங்கள். அக்காலகட்டம் என்பது தோழர் கி.வே.பொ அவரது கட்டுரையில் குறிப்பிட்ட “1975ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் மிகக் கொடிய கறுப்புச் சட்டமான MISA (Maintanance of Internal security Act) உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை கொடூரமாக ஒடுக்கினார். நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. ஊடகங்கள் முடக்கப்பட்டன. விசாரணையின்றி ஆகப்பெரும் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சிறையில் அடைக்கப் பட்டனர். சுருக்கமாக இட்லரின் ஜெர்மனியை விட இந்திராவின் இந்தியா பாசிசமயமானது.” என்பதைப் போன்ற காலகட்டமாகும். இந்த சவால்களை எதிர்கொண்டு செயல்பட்ட ம.உ.க-வுக்கு தோழர் P.V.P பொறுப்பாளர். அவர் ம.உ.க- வை வழிநடத்துகிற கட்சியின் மையாக்குழுவில் இருந்திருக்க வேண்டும்.

ஒரு புரட்சிகர கட்சியில் அப்படித்தான் இருக்க முடியும். ஆனால் உண்மை என்ன தெரியுமா?2003- 4 களில் ம.உ.க குறித்த ஒரு சர்ச்சை நடந்தது. அது குறித்து விளக்கமளிக்கும் வகையில் த.நா.மா.லெ.க ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தது. அந்த வெளியீட்டின் முக்கியமான அம்சம் என்னவென்றால், ம.உ.க- வின் முக்கியப் பொறுப்பாளராக இருந்த தோழர் P.V.P ஒருநாள் கூட ம.உ.க- வை வழிநடத்துகிற கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்தவரில்லை என்பதாகும்.

அவர் கட்சிக்கே தகுதியில்லாத நபர் என்பதை நிரூபிக்க அவ்வெளியீட்டில் தோழர் P.V.P பால் குடிக்கும் பருவத்திலேயே பாலியல் மோகியாக இருந்தார், ஆரம்ப பள்ளி காலத்திலேயே பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டார் என்பது போன்ற அறிவுக்கு ஒவ்வாத கதைகளை எல்லாம் எழுதியிருந்தனர்.

நாங்கள் அப்போது த.நா.மா.லெ.க-வில் இருந்தோம். எங்கள் பகுதிக்கு 125 வெளியீடுகள் ஒதுக்கப்பட்டு அதற்கானத் தொகையை கேட்டார்கள். பகுதிப் பொறுப்பாளன் என்கிற வகையில் வெளியீட்டைப் பெற்ற நான் பின்வரும் கேள்விகளைக் கேட்டேன்.

1. கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவரை கட்சி எப்படி உறுப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் அனுமதித்தது?

2 . கட்சி உறுப்பினராக இல்லாத அவரை உறுப்பு அமைப்பின் பொறுப்பு நிலையில் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன?

3 . உறுப்பு அமைப்புக்கு பொறுப்பேற்க அன்றைக்கும் கட்சியின் தலைமைக்குழுவில் யாருமேயில்லையா?

4 . இது கட்சியின் அல்லது தோழர் கார்முகிலின் புரிதலோடுதான் நடந்ததா? தன்னியல்பாக நடந்ததா?

5. இது குறித்து கட்சியில் அனுபவத் தொகுப்பு மற்றும் சுயவிமர்சன – விமர்சன அறிக்கைகள் உண்டா?

6. கட்சி உறுப்பினராக இல்லாத அவருடைய வேலைகளுக்கு கட்சி எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?

இவைகளுக்கு பதில் சொன்னால்தான் வெளியீடுகளை விநியோகிக்க முடியும் என்றேன். அவர்கள் பதில் சொல்லவும் இல்லை, நாங்கள் விநியோகிக்கவும் இல்லை. எங்களை உட்கட்சிப் போராட்டத்தில் தள்ளிய விவகாரங்களில் இதுவும் ஒன்று.

தோழர் கார்முகிலுக்கு கட்சி கட்டுவதில் உறுதி வாய்ந்த தலைமைக் கமிட்டி குறித்து அக்கறை உண்டா?

தோழர்களே! S.O.C- யிலிருந்து முரண்பட்டு தோழர் கார்முகில் வெளியேறும்போது அவருடன் வந்தவர்கள் புரட்சிகரப் பணியைத் தொடர விருப்பம் இல்லாமல் ஒப்புக்கு உடனிருப்போம் என்றும், விரைவில் புதிய தோழர்களை உருவாக்கிக் கொள்ளுமாறும் கூறியதாக கட்சி ஆவணங்கள் கூறுகின்றன.

ஒப்புக்கு உடனிருப்பவர்களைக் கொண்டு எந்தப் புரட்சிகரப் பணிகளையும் மேற்கொள்ள முடியாதென்பதும், எந்த நெருக்கடியையும் அவர்கள் எதிகொள்ள மாட்டார்கள் என்பதும், சோதனை காலங்களில் அவர்கள் ஆபத்தையே உருவாக்குவார்கள் என்பதும் மூளையுள்ள எல்லோராலும் உணர முடியும்.

இந்த நிலைமை என்பது தோழர் கார்முகிலுக்கு உடனடியாக உறுதிவாய்ந்த தலைமைக் கமிட்டியைக் கட்டுவதற்கான வேலையைத்தான் முன்னிறுத்துகிறது. ஆனால் அவர் அந்த வேலையை செய்யாமல் தனது தலைமையின் கீழ் கட்சி ஒன்று இருப்பதாக காட்டுவதிலும், அதை மாநாட்டின் (பிளீனம்) மூலம் வெளிப்படுத்துவதிலும் அக்கறை காட்டினார்.

ஒப்புக்கு உடனிருப்பவர்களைக் கொண்டு தன்னை ஒரு கட்சியின் தலைவராகக் காட்டிக் கொள்கிற தோழர் கார்முகிலின் போக்குதான் இன்றுவரை த.நா.மா.லெ.க-வை சீரழித்துக் கொண்டிருக்கிறது. 1992-க்குப் பிறகு மாநாடு நடத்த முடியாமலும், 22 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அமைப்புகள் இல்லாமலும், திட்டமிடப்பட்ட எந்த வேலைகளும் இல்லாமலும் முடமாகிக் கிடக்கிறது.

இதற்கு காரணம் புரட்சிகர தத்துவத்தின் மீது அவருக்குள்ள நம்பிக்கை புரட்சிகர நடவடிக்கையின் மீது இல்லை என்பதேயாகும். புரட்சிகர நடவடிக்கையோடு தத்துவத்தை இணைக்காவிட்டால் கட்சியைக் காட்டவே முடியாதென தோழர் லெனின் கூறுவதாவது‍:

"போல்ஷ்விக் கட்சியை கட்டுவதற்கு பிழையற்ற புரட்சிகர தத்துவம் உதவி செய்தது என்பது உண்மையே. ஆனாலும் அத்தத்துவத்தை வற‌ட்டுச் சூத்திரமாக ஆக்கிவிடாமல் பரந்துபட்ட மக்களிடம் புரட்சிகர நடைமுறையாக மாற்றியதால்தான் கட்சியை உறுதிபடுத்த முடிந்தது.... முன்னணிப் படையின் (கட்சியின்) ஓய்வறியா உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், வீரத்தாலும், தியாகத்தாலும் இது கட்டப்பட்டது..."

"அரசியல் சிந்தனையின் சரியான அரசியல் கட்சியாக 1903 முதல் போல்ஷ்விக் கட்சி திகழ்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கேயான உருக்குறுதி வாய்ந்த கட்சியாக போல்ஷ்விக் கட்சி மட்டும் எப்படி நிமிர்ந்து நிற்கிறது? மிகமிக கடினமான நிலைமைகளிலும் அதை எப்படி கட்டிக் காக்க முடிந்தது? என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும். முதலாவதாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சியின் கட்டுப்பாட்டைக் கட்டிக் காப்பாதும், அதை மேலும் உறுதிப்படுத்துவதும் பாட்டாளிகளின் முன்னணிப் படையான கட்சியின் வர்க்க உணர்வாலும், புரட்சியின்பால் அதற்குள்ள பற்றுறுதியாலும், தன்னலம் கருதாத தியாகத்தாலும் , வீரத்தாலும் மட்டுமே சாத்தியமாகும். இரண்டாவதாக கட்சியானது உழைக்கும் மக்களின் விரிவான பகுதியிலும், முக்கியமாக பாட்டாளி வர்க்கத்துடனும், பிற உழைக்கும் வர்க்கங்களுடனும் நெருங்கிய தொடர்பும், இணைப்பும் இருக்க வேண்டும். மூன்றாவதாக முன்னணிப் படையான கட்சியில் தலைமை தாங்கும் பிழையற்ற தன்மையும், அதன் அரசியல் நெறிமுறைகளும், பிழையற்ற போர்த்தந்திரங்களும் பரந்துபட்ட மக்களிடம் நடைமுறைப்படுத்துவதன் மூலமான சொந்த அனுபவம் வேண்டும். இவையெல்லாம் சேர்ந்தே உருக்குறுதி வாய்ந்த கட்சியாக போல்ஷ்விக் கட்சி நிலைபெற்றுள்ளது." - தோழர் லெனின், இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு.

தோழர் கி.வே.பொன்னையன் இதை மறுத்து பதில் சொல்ல வேண்டுகிறோம்.

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It