நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த துணைவேந்தரான முனைவர். சபாபதிமோகன் அவர்களின் காலகட்டத்தில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிந்தபின் கன்வீனர் கமிட்டியின் கட்டுப்பாட்டில் ஒன்றரை வருடங்களாக இருந்த இப்பல்கலைக்கழகம் பல நூறுகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட இழுபறிக்குப் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முனைவர். குமரகுரு அவர்கள் துணை வேந்தராக நியமிக்கப்படார். பதவியேற்று சுமார் ஒரு ஆண்டுகாலமாக இவர் எவருக்கும் பிடிகொடுக்காமல் அமைதியாக நிர்வாகத்தை கொண்டு சென்றபோது, இங்குள்ள பிரச்சினைகளை நுணுக்கமாக உள்நோக்கி வருகிறார்; நிச்சயம் அடுத்து வரும் இரண்டாண்டுகளில் சிறப்பான நிலைக்கு பல்கலைக்கழகத்தை கொண்டு வருவார் என பெரும்பாலானவர்களால் நம்பப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இவரது திறமையின்மையும், சுயமுடிவு எடுக்கும் தன்மையில்லாமையும், பயந்த சுபாவமும் இப்பல்கலைக்கழகத்தை மரணப்படுக்கையில் இருந்து எழ விழாமலே செய்து விடும் என்ற விபரீதத்தை உணர்த்த தொடங்கி உள்ளது.

manonmaniam-sundaranar-univ

ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தை சாதீய சாக்கடை அரசியல் ஆசிரியர் மட்டத்தில் தொடங்கி, மாணவர் மட்டம் வரையிலும் நாறடித்துக்கொண்டு இருந்தது. இது தவிர மூட்டாவின் பல நேர்மையற்ற மிரட்டல்களும், நடவடிக்கைகளும் இங்கு பெரும் குழப்பமான சூழலை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் நிதிச்சுமை என்ற ஒரு பெரும்பிரச்சினையை இந்த துணைவேந்தர் பதவியேற்ற காலம் தொடங்கி இன்றளவும் பல்கலைக்கழகம் முன்வைத்துள்ளது. துணைவேந்தர் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களைத் தண்டி விட்ட நிலையில், இதுவரை பதிவாளரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியும் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. முதலில் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட முனைவர். கோவிந்தராஜ் அவர்கள் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டபின், பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறையின் தலைவராக இருக்கும் முனைவர். தமிழ்செல்வம் அவர்கள் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இதன்பின் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் அனைத்துமே சமூக விரோத, மாணவர் விரோத நடவடிக்கைகளாக அமைந்து விட்டன.

தேர்வுத்துறை, தொலை நெறிக்கல்வித்துறை, ஆராய்ச்சிப்பிரிவு, பல்கலைக்கழக துறைகள் பிரிவு ஆகியவற்றில் மாணவர்களை மதிக்காமலும், மணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், உதவித்தொகை வழங்குதல் போன்றவற்றை சரியாக வழங்காமல் இழுத்தடிப்பதுடன், மாணவ, மாணவியருக்கு முறையான பதிலளிக்காமல் இழுத்தடிக்கும் வேலைகளும் அதிகரித்தன. இவை குறித்து பதிவாளரிடம் புகார் தெரிவித்தால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரிக்கும் நிலையே இருந்து வருகிறது. துணைவேந்தரும் இத்தகைய பிரச்சினைகளுக்கு எவ்வித உடனடித்தீர்வும் எடுக்காமல் இருப்பதும் வியப்பானது.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் இரண்டாயிரமாக கொடுக்கப்பட்டு வந்த பல்கலைக்கழக ஆய்வு உதவித்தொகை நிறுத்தப்பட்டது. அந்த உதவித்தொகையை தொடந்து வழங்க வேண்டும் என மாணவர்களால் வைக்கப்பட்ட கோரிக்கை நிதிச்சுமை என்ற ஒற்றைக்காரணத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டது. முதுகலை மற்றும் இளம் ஆய்வு படிப்பிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை திடீரென பாதி அளவில் குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நொண்டிச்சாக்கும் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணமாக கூறப்பட்டது. (உண்மையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக கூட போராடக்கூடாது, அப்படி போராடினாலும் எண்ணிக்கை அதிகமாக சேரக்கூடாது என்ற பாசிச அடக்குமுறையின் காரணமாகவே இந்த சேர்க்கைக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.)

ஆராய்ச்சி மாணவர்களும் தங்களது பிரச்சினைகளை பிரதிநிதித்துவத்தின் மூலம் எடுத்துக்கூற வழியில்லை, நெறியாளர்களின் மூலம் மிரட்டப்படும் சம்பவங்களும் நடக்கிறது எனவே கூட்டமைப்பு அவசியம் என மாணவர்கள் வேண்டுகோள் வைத்தபோது, இந்த பதிவாளர் தமிழ்செல்வன் அவர்கள் எந்தப் பிரச்சினையானாலும் தைரியமாக வந்து என்னிடம் சொல்லுங்கள், கூட்டமைப்பு வேண்டாம் என சப்பைக்கட்டு கட்டியதுடன், கூட்டமைப்புக்கு அனுமதி வழங்க முடியாது என மறுத்து விட்டார். பல்கலைக்கழகத் துறை பிரிவு பணியாளர்களின் மெத்தனப்போக்கால் முதுகலை மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை மிகுந்த கால கடத்தலுக்குப் பின்னரே வழங்கப்பட்டது. பணியாளர்களின் அலட்சியப்போக்கு குறித்தும், மாணவர் விரோதப் போக்கு குறித்தும், கடமை தவறுதல் குறித்தும் பதிவாளர் கவனத்துக்கோ, துணைவேந்தர் கவனத்துக்கோ கொண்டுவந்தால், எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என வெட்கமே இல்லாமல் கூறுவது இயல்பான சம்பவமாகி விட்டது.

இவை அனைத்திற்கும் மேலாக நிதிச்சுமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் தேர்வு முறைகளில் இந்த பல்கலைக்கழகம் செய்திருக்கும் மாற்றங்கள் இந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் கையாலாகாத் தன்மையையும், சமூகவிரோதப்போக்கையும், மாணவர்களின் மீது கட்டவிழ்க்கப்படும் நவீன அடக்குமுறைகளையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அந்தந்த துறைகளில் பருவத்தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் வழங்கி அவர்களே தேர்வு முடிவை துறையின் மூலம் அறிவிக்கலாம் என தடாலடியாக அறிவிப்பை வெளியிட்டு தற்போது நடந்து முடிந்த பருவத்தேர்வை இந்த அடிப்படையிலேயே நடத்தி உள்ளது பல்கலைக்கழகம். சாதி, மத பாகுபாட்டாலும், மாணவர்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் பாரபட்சம் இருந்து விடக்கூடாது என்பதாலும், தனக்கு பிடித்த மாணவ, மாணவியர்க்கு மட்டும் மதிப்பெண்களை அதிகமாக வழங்கி விடக்கூடாது என்பதாலும்தான் தேர்வு, விடைத்தாள் திருத்துதல், மதிப்பெண் வழங்குதல் ஆகியவற்றில் பல ரகசிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களும் மனிதர்கள்தான், இவர்களும் இத்தகைய பாரபட்சங்களை நிச்சயம் கடைபிடிப்பார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த ரகசிய முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் தங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அனைவரும் உத்தமர்கள், நடு நிலையாளர்கள் என்ற ரீதியில் இப்பல்கலைக்கழக நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்திருப்பது ஒரு மடத்தனமான முடிவாக மட்டும் அல்லாமல், எதேச்சாதிகார பாசிச நடவடிக்கையும் ஆகும் (உண்மையில் தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களிலேயே அதிகமான குற்ற உணர்வு கொண்ட ஆசிரியப்பெருமக்களும், பணியாளர்களும் இந்த பல்கலைக்கழகத்தில்தான் உள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை).

மேலும் தற்போது பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து தேர்ச்சி முறையில் ஆய்வு உதவித்தொகை பெற்று வரும் 13 மாணவ, மாணவியருக்கு கடந்த 14 மாதங்களாக உதவித்தொகை பெற முடியாத நிலை பல்கலைக்கழக துறைகள் பிரிவின் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் மெத்தனப்போக்கால் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பதிவாளரிடம் கேட்கப்பட்டபோது, ஏதோ பல்கலைக்கழகத்திடம் பிச்சை கேட்டு நிற்பது போல மாணவர்களிடம் பேசியுள்ளார் பதிவாளர் தமிழ்செல்வன். இந்த சம்பவத்திற்கு பதிவாளரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், பல்கலைக்கழக பொது நிதியிலிருந்து தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்றும் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, பல்கலைக்கழகம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதாக பதிவாளர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார். ஏற்கனவே மாணவர்களிடம் ஒற்றுமையை சிதறடித்து பய உணர்வை விதைத்திருக்கும் பல்கலைக்கழகம் இப்போது மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் பொறுப்பற்று நடப்பது வருத்தமளிக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், சம்பந்தப்பட்ட கடமை தவறிய பணியாளர்கள் மீதும், அவர்களை கண்டிக்காமலும், கட்டுப்படுத்தாமலும், அவர்களது கடமை மீறலை ஊக்குவித்தும் வரும் பதிவாளர் மீதும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான முயற்சியை மாணவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இறுதியாக துணைவேந்தருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தான் டெல்லிக்கு செல்வதாகவும், மாணவர்களின் உதவித்தொகை பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருவதாகவும், துணைவேந்தர் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஆனால் கடமை தவறிய, மாணவர்களிடம் இளக்காரமாக பேசிய பணியாளர்கள் மீதும், பதிவாளர் மீதும், நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒன்றும் கூறவில்லை.

பல்கலைக்கழகத்தில் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என துணைவேந்தர் நினைத்தாலும் சுற்றி இருப்பவர்கள் தவறாக வழிகாட்டி துணைவேந்தரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே பல்கலைக்கழக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் இதே நிர்வாக நிலை தொடர்ந்தால் மரணப்படுக்கையில் இருந்து பல்கலைக்கழகம் மீளமுடியாத நிலையே ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

- முகமதுகான், ஆராய்ச்சி மாணவர், குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It