தோழர் கி.வே.பொன்னையன் தனது மூன்றாவது கட்டுரையில் தோழர் கார்முகில் தீர்த்து வைத்த கோட்பாட்டு சிக்கல்கள் என்று ஒரு பெரிய பட்டியல் போடுகிறார். அந்தப் பட்டியலையும் நாம் மறுக்கவில்லை, தோழர் கார்முகில் பக்கம் பக்கமாக‌ எழுதிய‌தையும் மறுக்கவில்லை. நமக்கு என்ன கேள்வி என்றால், எழுதினார்களா இல்லையா என்பதல்ல; பிரச்சினை தீர்ந்ததா, இல்லயா என்பதுதான்.

lenin 287தமிழ்நாட்டில் ஆவணமாக‌ எழுதி குவித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் சிலபேர் நான்தான் தமிழ்நாட்டின் மாவோ, லெனின், மார்க்ஸ், எங்கெல்சு என்று சொல்லிக்கிறார்கள். மக்கள் என்ன அடிக்கவா செய்தார்கள்? 'பாவம் வயசான காலத்துல பினாத்துற‌த எல்லாம் பெருசா எடுக்க கூடாது'ன்னுதான் சொல்கிறார்கள்.

பாதிக் கிணறு தாண்டும் தோழர் கார்முகிலின் கோட்பாட்டு முடிவுகளும் - தேசிய இனச் சிக்கலும்

தேசிய இனச் சிக்கலை தந்தை பெரியார், தனித்தமிழ் இயக்கத்தினர் தொடங்கி இன்றைக்கு சீமான் வரைக்கும் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோட்பாட்டு வகையில் இதை வளர்த்தெடுப்பதற்கு எஸ்.என்.நாகராஜன் தொடங்கி மக்கள் யுத்தக்குழு, தோழர் தமிழரசன், அவருக்குப் பின்னால் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி என்று பலரின் முயற்சிகள் நடந்தன. (வேறு விபரம் இருந்தால் தெரிவிக்கவும், சேர்த்துக் கொள்ளுவோம்)

இவர்களின் தொடர்ச்சியாக தோழர் கார்முகில் 'பல்தேசிய சமூகத்தில் தேசியச் சிக்கல், ஒடுக்கும்-ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வரலாற்றுப் பாத்திரம், ஒன்றுபட்ட கட்சி ' ஆகிய முரண்பாடுகளைத் தீர்த்தார்.

ஆனால் ஒன்றுப்பட்ட கட்சி தேவையில்லை என்பதோடு ஒட்டுமொத்தப் புரட்சியும் தேவையில்லை, ஆகவே தமிழ்நாடு மட்டும் விடுதலை அடைந்துவிட முடியும் என்கிற அவரது நிலைப்பாடு இன்று கேள்விக்குறியாகி விட்டது.

இந்திய அதிகார வர்க்கம் உலக நெருக்கடியில் சிக்கி பலவீனமடைந்தோ அல்லது உலக நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டோ அல்லது உலக நாடுகளுடனான போரில் சிக்க வைக்கப்பட்டோ இருக்குமானால் அந்த நிலைமையில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தேசிய இனமோ அல்லது பழங்குடியினமோ தனது விடுதலையை தானே தீர்மானித்துக் கொள்ள முடியும்.

இன்றைய நிலையில் இந்திய அதிகாரவர்க்கம் மிக வலுவான நிலையில் உள்ளது. உலக வல்லாதிக்க சக்திகள் அதற்குத் துணையாக உள்ளன. இந்த நேரத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தேசிய இனமோ அல்லது பழங்குடியினமோ தனது விடுதலையை தானே தீர்மானித்துக் கொள்ள முடியாது. அதே போல இன்றைய நிலையில் தமிழ்நாடு தனித்து விடுதலை அடைந்துவிட முடியாது.

இந்த உண்மையை உணர்ந்த தமிழ்நாட்டின் சில இயக்கங்கள் தமிழக விடுதலைக்கான தனித் திட்டத்தை வைத்திருப்பதோடு இந்திய அதிகார வர்க்கத்திற்கு எதிராக பல்வேறு தேசிய- பழங்குடியினங்களோடு இணைந்து செயல்படுவதற்கான பொதுத் திட்டத்தினையும் வைத்து நகரத் தொடங்கிவிட்டன.

ஆனால் தோழர் கார்முகிலுக்கும், த.நா.மா.லெ.க.- வினருக்கும் இந்த செயல்பூர்வமான வளர்ச்சி குறித்து செய்தியே தெரியாது. அவர்கள் பாதிக்கிணறு தாண்டியதோடு நின்று கொண்டிருக்கிறார்கள். ஏன்?

புரட்சியை புத்தகத்தில் மட்டுமே தேட முடியாது

"போல்ஷ்விக் கட்சியை கட்டுவதற்கு பிழையற்ற புரட்சிகர தத்துவம் உதவி செய்தது என்பது உண்மையே. ஆனாலும் அத்தத்துவத்தை வற‌ட்டுச் சூத்திரமாக ஆக்கிவிடாமல் பரந்துபட்ட மக்களிடம் புரட்சிகர நடைமுறையாக மாற்றியதால்தான் கட்சியை உறுதிபடுத்த முடிந்தது.... முன்னணிப் படையின் (கட்சியின்) ஓய்வறியா உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், வீரத்தாலும், தியாகத்தாலும் இது கட்டப்பட்டது..." என்கிறார் தோழர் லெனின்.

"அரசியல் சிந்தனையின் சரியான அரசியல் கட்சியாக 1903 முதல் போல்ஷ்விக் கட்சி திகழ்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கேயான உருக்குறுதி வாய்ந்த கட்சியாக போல்ஷ்விக் கட்சி மட்டும் எப்படி நிமிர்ந்து நிற்கிறது? மிகமிக கடினமான நிலைமைகளிலும் அதை எப்படி கட்டிக் காக்க முடிந்தது? என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

முதலாவதாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சியின் கட்டுப்பாட்டைக் கட்டிக் காப்பாதும், அதை மேலும் உறுதிப்படுத்துவதும் பாட்டாளிகளின் முன்னணிப் படையான கட்சியின் வர்க்க உணர்வாலும், புரட்சியின்பால் அதற்குள்ள பற்றுறுதியாலும், தன்னலம் கருதாத தியாகத்தாலும் , வீரத்தாலும் மட்டுமே சாத்தியமாகும்.

இரண்டாவதாக கட்சியானது உழைக்கும் மக்களின் விரிவான பகுதியிலும், முக்கியமாக பாட்டாளி வர்க்கத்துடனும், பிற உழைக்கும் வர்க்கங்களுடனும் நெருங்கிய தொடர்பும், இணைப்பும் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக முன்னணிப் படையான கட்சியில் தலைமை தாங்கும் பிழையற்ற தன்மையும், அதன் அரசியல் நெறிமுறைகளும், பிழையற்ற போர்த்தந்திரங்களும் பரந்துபட்ட மக்களிடம் நடைமுறைப்படுத்துவதன் மூலமான சொந்த அனுபவம் வேண்டும்.

இவையெல்லாம் சேர்ந்தே உருக்குறுதி வாய்ந்த கட்சியாக போல்ஷ்விக் கட்சி நிலைபெற்றுள்ளது."  - தோழர் லெனின், இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு.

ஆக கட்சியைக் கட்டுவதும், அதை உறுதிப்படுத்துவதும் என்பது கோட்பாடுகளை மனப்பாடம் செய்வதாலல்ல. முதலில் கோட்பாடானது அர்ப‌ணிப்பும், தியாகமும், வீரமும் கொண்ட புரட்சிகர நடைமுறைக்கானதாக இருக்க வேண்டும். இரண்டாவது அப்படியான கோட்பாடுகளை புரட்சிகர நடைமுறையோடு செயல்படுத்திதான் நிறுவ வேண்டும். இதைத்தான் மார்க்சியம் போதனைக்கானது மட்டுமல்ல, புரட்சிகர செயலுக்கானது என்கிறோம்.

தோழர் கார்முகில் ஆசான்களின் நூல்களை விரிவாகப் படித்துள்ளார். அவற்றை வரிப் பிசகாமல் உருப்போட்டுள்ளார். அதிலிருந்து சரியான மேற்கோள்களை எடுத்துக் கையாண்டுள்ளார் என்பதெல்லாம் சரியே. ஆனால் புரட்சிகர நடைமுறையைக் கைகழுவிய அவரால் அதை மேற்கொண்டு வளர்த்தெடுக்கவே முடியாது.

புரட்சிகர நடைமுறையை கைகழுவிய சட்டவாதம்

தோழர் கி.வே.பொன்னையனும், த.நா.மா.லெ.க- வினரும் சொல்வது போல் தோழர் கார்முகில் எதிர்கொண்ட இந்தியப் புரட்சிகர இயக்கங்களின் நெருக்கடி என்ன? இது குறித்து T.N.O.C ஆவணங்கள் சொல்வதாவது- தோழர் சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாத நிலைப்பாடுகளும், அதன் அடிப்படையிலான நடைமுறைகளும் இந்தியப் புரட்சிகர இயக்கத்தை பல்வேறுக் குழுக்களாக சிதற‌டித்துள்ளதோடு, புரட்சிகர கட்சியை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி சீரழித்து விட்டது. ஆகவே "சிதறுண்ட கட்சியை ஒன்றுபடுத்துவோம்! தனிமைப்பட்ட கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்" என்பதாகும். அதற்கு அருமருந்தாக தோழர் கார்முகில் கண்டுபிடித்ததுதான் 'அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம்' என்பதாகும்.

இதைத்தான் இந்தியப் புரட்சிகர இயக்கங்களை சீரழித்துக் கொண்டிருந்த இடது தீவிரவாதத்திற்கும், இடது சந்தர்ப்பவாதத்திற்கும் முடிவு கட்டிய 'புரட்சிகர மக்கள் பாதை' என தோழர் கார்முகிலும், த.நா.மா.லெ.க- வினரும் கொண்டாடுகின்றனர்.

ஆனால் இடதுத் தீவிரவாதமும், இடது சந்தர்ப்பவாதமும் எப்படி மக்களிடமிருந்து இன்றுவரை தனிமைப்பட்டுக் கிடக்கின்றனவோ அதைவிட தோழர் கார்முகில் கண்டுபிடித்த 'புரட்சிகர மக்கள் பாதையான' 'அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம்' என்பது மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

காரணம்...

படை கட்டுவதை மட்டுமே இலக்காகக் கொண்ட ஆயுதப் போராட்டத்தோடு ஆயுத நடவடிக்கைகள் அனைத்தையும் இணைத்து கொச்சைப்படுத்திய தோழர் கார்முகில்

"போல்ஷ்விக் கட்சியானது 1903 முதல் 1917 வரை என்ற 15 ஆண்டுகாலத்தில் பல்வேறு நடைமுறை அனுபவங்களில் புடம்போடப்பட்டது. சட்டப்பூர்வமானதும் - சட்டப்பகையானதுமான, அமைதியானதும் - புயலின் மூர்க்கம் கொண்டதுமான, தலைமறைவானதும் - பகிரங்கமானதுமான, சிறுகுழு அளவிலானதும் - பரந்துபட்ட மக்கள் தன்மைக் கொண்டதுமான, நாடாளுமன்ற வடிவிலானதும் - பயங்கர வடிவிலானதுமான எந்த நாடும் கண்டிராத எண்ணற்ற வடிவங்களால் புடம் போடப்பட்டது..." - தோழர் லெனின், இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு.

யுத்த நிலப்பிரபுக்களின் சீனா மாதிரி அல்லது ஹிட்லரின் ஜெர்மன் மாதிரி இராணுவ காட்டாட்சி நடைபெறாத நாடுகளில் ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழிமுறை என்பது தவறானதுதான். ஆனால் எந்தவித ஆயுத நடவடிக்கையும் வேண்டாம் என்பது முட்டாள்களின் வாதமாகும்.

எந்த ஒரு சுரண்டல் அரசு இருக்கும் நாட்டிலும் புரட்சி என்பது அனுமதிக்கப்பட்ட செயலல்ல. அங்கு சீர்த்திருத்தத்திற்கான போராட்டங்கள் அனுமதிக்கப்படுவது போல் புரட்சிக்கான போராட்டங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நிலவுகிற அரசுக்கு எதிராக மக்கள் அமைப்பாகிறார்கள் என்றவுடன் அவர்கள் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும். அப்படி அமைப்பாகிற மக்களுக்கு தலைமை தாங்குகிற நபர்கள் குறிவைத்து வேட்டையாடப்படுவார்கள்.

ஆகவே அமைப்பாகும் போதே மக்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் தற்காப்பு நடைமுறைகள் தவிர்க்க முடியாததாகும். தற்காப்பு நடைமுறைகளுக்கு அதற்கேயான ஆயுத நடவடிக்கைகளும் தவிர்க்க முடியாததாகும். இதைத்தான் தோழர் லெனின் "சட்டப்பூர்வமானதும் - சட்டப்பகையானதுமான, அமைதியானதும் - புயலின் மூர்க்கம் கொண்டதுமான, தலைமறைவானதும் - பகிரங்கமானதுமான, சிறுக்குழு அளவிலானதும் - பரந்துபட்ட மக்கள் தன்மைக் கொண்டதுமான, நாடாளுமன்ற வடிவிலானதும் - பயங்கர வடிவிலானதுமான எந்த நாடும் கண்டிராத எண்ணற்ற வடிவங்களால் புடம் போடப்பட வேண்டும்" என்கிறார்.

ஆனால் தோழர் கார்முகில் கண்டுப்பிடித்த 'புரட்சிகர மக்கள் பாதையான' 'அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம்' என்பது புரட்சியின் பெரும்பகுதி காலகட்டத்தில் அரசியல் போராட்டம் மட்டுமே இருக்கும் என்கிறார். ஆயுதப் போராட்டப் பாதையை மறுத்தவர் ஆயுத நடவடிக்கையின் அவசியத்தையும் சேர்த்தே மறுக்கிறார்.

தமிழ்நாட்டிலோ, இந்தியத் துணைக்கண்ட அளவிலோ புரட்சிகர அரசியலின் கீழ் அமைப்பாவதற்கு மக்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் தற்காப்பு நடைமுறைகளும், தற்காப்பு நடைமுறைகளுக்கான ஆயுத நடவடிக்கைகளும் தேவையில்லையென்று தோழர் கி.வே.பொன்னையனும், த.நா.மா.லெ.க- வினரும், தோழர் கார்முகிலும் விவாதிக்கத் தயாரா?

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It