பாகம் 3

உள்ளூர் வார்டு கவுன்சிலர் காலையிலேயே முதல் வேலையாக, தன்னுடைய எடுபிடிகளுக்கு டீ வாங்கிக் கொடுத்து, பிற அரசியல் கட்சி நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக தனக்கு எதிராக உட்கட்சிப் பிரமுகர்களின் உள்ளடி வேலைகள் என்னென்ன என கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

இதே போல முதலமைச்சர் முதல் நம்மூர் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி, பெரியண்ணன் ஒபாமா வரை அனைத்து ஆட்சியாளர்களும் தினந்தோறும் சந்திக்கும் முதல் நபர் உளவுத்துறை அதிகாரி தான்...

வார்டு கவுன்சிலர் தமது அடிப்பொடிகளிடம் கேட்டுப் பெறும், அதே தகவல்களைத் தான் கொஞ்சம் விரிந்த அளவில் உளவுத்துறை சேகரிக்கிறது.

kashmir atrocity 600

அரசுக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகள், சதி வேலைகளைக் கண்டறிய பரந்த அளவில் பல்வேறு பிரிவுகளாக உளவுத்துறை செயல்பட்டு வருகிறது. சீருடை கிடையாது என்பதால் உளவுத்துறை பணியாளர்கள் எங்கும் எளிதாக ஊடுருவ முடிகிறது. இது தவிர உளவுத்துறைக்கு உதவும் தகவலாளிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளனர்.

நாம் முன்னர் விவரித்தது போல அரசே நடத்த விழையும் பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிடுவது, அதற்கான நபர்களைத் தேர்வு செய்வது என இதற்கு மூளையாக இருந்து செயல்படுவது உளவுத்துறைதான்... பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பின் காவல்துறையின் பணி ஆரம்பமாகிறது. அவர்களுக்கு உதவ ஊடகங்கள் தயாராக உள்ளன.

பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த ஆட்களைத் தேர்வு செய்வதில் அமெரிக்க உத்திகளையே இந்திய உளவுத்துறை பின்பற்றுகிறது. 'ஆசிய பையன்களைக் கொண்டே ஆசியாவில் போரை நடத்துவது (Asian boys must fight Asian wars)' என்பது பிரபலமான நிக்ஸன் போர் உத்தியாகும். வெளியாட்களெல்லாம் போரில் ஈடுபடுவது கிடையாது. நீங்களே அடித்துக் கொள்ளுங்கள் என்பது போலத்தான்...

ஒரு தனி நபரையோ, குழுவையோ குற்றவாளி(கள்) எனத் தீர்மானிக்க, அவரை/அவர்களைச் சார்ந்தவர்களை தகவலாளிகளாக உளவுத்துறை தேர்வு செய்கிறது. பின்னர் அவர்களின் உதவியைக் கொண்டோ அல்லது அவர்களை நேரடியாக ஈடுபடுத்தியோ தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய பின், குறி வைத்தவர்கள் சிக்க வைக்கப்படுவார்கள்.

தகவலாளிகள் உளவுத்துறையின் பிடியிலிருந்து மீள முடியாது. அவர்கள் மீள விரும்பினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயங்கரவாதத் தாக்குதலில் அவர்களை சிக்க வைத்து விடுவது உளவுத்துறையின் வழிமுறையாக உள்ளது. அஃப்ஸல் குரு அப்படி சிக்கியவர்தான்... அவருக்கும் நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் எந்த தொடர்புமில்லை; அவர் எந்த தீவிரவாத இயக்கத்திலும் உறுப்பினராக இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இந்தியர்களின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தவே அவருக்கு தூக்குத்தண்டனை என்றும் உச்சநீதிமன்றம் திருவாய் மலர்ந்தது. உளவுத்துறை தகவலாளியாக செயல்பட்ட அவர், அதிலிருந்து விடுபட முயலும் போதுதான் நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரத்தில் சிக்க வைக்கப்படுகிறார்.

இதெல்லாம் மர்ம நாவல் போல விரிவதாக கருத வேண்டாம். உளவுத்துறை எவ்வாறு தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது என்பதை அறிந்து கொள்ள மதுரையில் அவ்வப்போது நடைபெற்று வரும் குண்டுவெடிப்பு சம்பவங்களே போதுமானதாகும்.

மதுரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள், அவ்வப்போது பிடிபடும் 'சொல்லி வைத்தாற்போல' வெடிக்காத குண்டுகள் ஆகியவற்றின் பின்னணியில் உளவுத்துறை தகவலாளிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ADGP ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் உளவுத்துறை தகவலாளிகளுக்கு தொடர்பிருப்பதாகவும், நில விவகாரங்களில் மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட உளவுத்துறை தகவலாளிகளை கைது செய்ய விடாமல் உளவுத்துறை அதிகாரிகள் குறுக்கிடுவதாகவும் அந்த கடிதத்தில் குறிட்பிட்டுள்ளார்.

police letter 1

police letter 2

police letter 3

இந்த விவகாரத்தில் முழு உண்மையையும் வெளிக்கொணர்வதற்காக எஸ்டிபிஐ கட்சி (Social Democratic Party of India) சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவின் ADSP கார்த்திகேயன், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் மாரி ராஜன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகிய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிக்ஸன் உத்தி மட்டும் இந்தியாவில் செயல்படுத்தப்படவில்லை. நிக்ஸன்கள் தான் நம்மவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்தான் இந்த ADSP கார்த்திகேயன். இந்த இணையதளத்தை பார்க்கவும்: http://goo.gl/wWvnHv

இந்த வீடியோ காட்சியையும் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=BYbI84D1v1Q

இப்படித்தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது போன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும் போது காவல்துறை சார்பில், ஊடகங்களுக்கு செய்தி அளிக்கப்படுகிறது என முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுருந்தோம். இது ஓரளவுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்களை வழங்கும் முறையாக இருக்கிறது. ஆனால் உளவுத்துறை புழக்கடை வழியாக, ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக புலனாய்வு இதழ்கள் என்று சொல்லப்படும் வார, இருவார இதழ்களுக்கு உளவுத்துறை தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து, அந்த இதழ்களின் கட்டுரைகள் மூலம் எந்தக் கோணத்தில் விசாரணையை நடத்திச் செல்ல வேண்டும் என ஒரு முன் அனுமானத்தை உருவாக்குகிறது.

சில நேரங்களில் பயங்கரவாத சம்பவங்களுடன் குறிப்பிட்ட இயக்கங்களை தொடர்புபடுத்தி எழுத வேண்டும் என்று ஊடகங்களை உளவுத்துறை நிர்ப்பந்திக்கவும் செய்கின்றன.

இந்த செய்திகளின் அடிப்படையில் அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பதும், இதன் பிறகு எழும் அழுத்தங்களின் அடிப்படையில் அப்பாவிகளை கைது செய்வதையும் நாம் பார்த்து வருகிறோம். அல்லது ஊடகச் செய்திகளின் அடிப்படையில் கைது செய்து விசாரித்து வருவதாக உளவுத்துறை சொல்லும். பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு இவர்களே கொடுத்து விட்டு, பின்னர் ஊடகச் செய்திகளின் அடிப்படையில் கைது செய்வதாக ஓர் ஏற்பாட்டை உளவுத்துறை பின்பற்றி வருகிறது.

கடுமையான அடக்குமுறைச் சட்டங்களை எந்த எதிர்ப்புமின்றி நிறைவேற்ற தேவையான சூழ்நிலையை உருவாக்க இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என நாம் முன்பு குறிப்பிட்டோம். இதே போல் உளவுத்துறைக்கு அபரிமிதமான அதிகாரங்களை வழங்கவும் இது போன்ற தாக்குதல்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பெரும்பாலான நாடுகளில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களைக் காரணமாக வைத்து, தனி மனித சுதந்திரத்தைப் பறிக்க இறையாண்மை கொண்ட அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

மக்களை ஒருவர் மற்றொருவரை உளவு பார்ப்பதற்காக அமர்த்துவது நாட்டின் சுதந்திரமான நிலையை பாதுகாப்பதற்கான வழியாக அமையாது.  – டாமி டக்ளஸ், கனடா அரசியல்வாதி

இயக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It