அன்றாடம் அயல் இனத்தார் தமிழ்நாட்டிற்குள் ஆயிரம் பல்லாயிரமாய்ப் புகுந்து தமிழர்களுக்குரிய தொழில் , வணிகம், வேலை ஆகியவற்றைக் கைப்பற்றி வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழகம் தமிழர் களுக்குரிய தாயகமாக இருக்காது. கலப்பினத் தாயகமாக மாறிவிடும். தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அயல் இனத்தாரை அண்டி வாழும். இரண்டாம் தரக் குடிமக்களாக மாறிவிடுவார்கள். தமிழகத்தின் தேசிய மொழி தமிழ் என்ற உரிமையும் பறிபோய்விடும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

chennai railway station1956 நவம்பர் 1–இல் தமிழர்களின் மொழிவழித் தாயகமாக இந்திய அரசால் ஏற்கப்பட்ட நாளுக்கு முன் தமிழகத்தில் குடியேறிய பிறமொழி மக்கள் அனைவரையும் தமிழக மண்ணின் மக்களாக சம உரிமையுடன் ஏற்றுக் கொள்வோம். 1956 நவம்பர் 1 –க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறியவர்களைய் வெளியாராகவே கருத வேண்டும் என்று த.தே.பொ.க. கூறிவருகிறது.

இவ்வகைப்பட்ட வெளியாரை வெளியேற்றும் உரிமையும் அனுமதிக்கும் உரிமையும் தமிழகத்திற்கு வேண்டும். வெளியேற்ற வேண்டியவர்களை வெளியேற்ற வேண்டும். உலகமயப் பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்கள் தமிழ் நாட்டில் அதிகமாகத் திறக்கப்பட்ட பின் அன்றாடம் பல்லாயிரக் கணக்கில் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள் ஒரியர்கள், வங்காளிகள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மராத்திகள் எனப் பலரும் வந்து குவிகிறார்கள்.

இவர்களெல்லாம் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகளாக மாறிட அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்குக் குடும்ப அட்டையும் வாக்காளர் அட்டையும் கொடுக்கக் கூடாது என்று பரப்புரை செய்து வருகிறது த.தே.பொ.க.

த.தே.பொ.க.வின் இந்நிலைபாட்டைத் தோழர் பொழிலன் திறனாய்வு செய்து தென்மொழி இதழில் எழுதி வருகிறார். திறனாய்வோடு நிற்காமல் ஆத்திர மடைந்தவராக த.தே.பொ.க.மீது அவதூறுகளையும் அள்ளி வீசியுள்ளார்.

“தமிழ்நாட்டிற்குரிமையுடைய முல்லைப் பெரியாற்று நீரைப் பெற இயலாமைக்கும், காவிரி நீரைப் பெற இயலாமைக்கும் மலையாள இனப் பகையும், கன்னட இனப்பகையுமே காரணம் என்பதாகக் கூறுவதோடு, தமிழகத்திலுள்ள கேரள கன்னட மக்களைத் தாக்கி வெளியேற்றும் நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஈடுபடுகிறது”. - தென்மொழி, பிப்ரவரி 2014, பக்கம் 37,38

உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் ஆகியவை தீர்ப்பளித்தும் அவற்றைச் செயல்படுத்த மறுத்து, தமிழகத்திற்குரிய தண்ணீரைத் தடுத்து வைத்துக்கொண்டுள்ள மலையாளிகளை, கன்னடர்களைக் குற்றம் சொல்லக் கூடாதாம். தமிழ்நாட்டிற்குரிய முல்லைப் பெரியாறு நீரையும் காவிரி நீரையும் தமிழகத்தால் “பெற இயலாமை” இருக்கிறது என்கிறார். மலையாளிகளையும் கன்னடர்களையும் பகைமை யாகக் காட்டுகிறது த.தே.பொ.க. என்கிறார். முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நீரை மலையாளிகளும் கன்னடர்களும் தடுக்கிறார்கள் என்று சொல்லக் கூடாது. பொழிலன் மொழியில் “தமிழர்களால் பெற இயவில்லை” என்றுதான் சொல்ல வேண்டும். குப்புசாமி கோவிந்தசாமியைக் கொலை செய்தால், கோவிந்தசாமியால் தன்னுயிரை பாதுகாத்துக் கொள்ள இயலவில்லை என்றுதான் சொல்லவேண்டும். குப்புசாமியைக் கொலையாளி என்று சொல்லக் கூடாது என்பது போல் உள்ளது பொழிலன் தருக்கம்!

சட்டப் படியான தமிழக உரிமையை மறுக்கும் கன்னட வெறியர்களுக்கும் மலையாள வெறியர்களுக்கும் தமிழ்நாட்டில் காவல்பணி செய்யும் பொறுப்பிற்குப் பொழிலன் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. அதற்காகத் தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாதல்லவா? காவிரி முல்லைப் பெரியாறு உரிமைகளைத் தமிழ்நாட்டால் பெற இயலவில்லை என்றால் என்ன பொருள்?

“கேரள, கன்னட மக்களைத் தாக்கி வெளியேற்றும் நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஈடுபடுகிறது” என்கிறார். அவ்வாறான நிகழ்வு எங்கே நடந்தது? எப்போது நடந்தது? தமிழகக் காவல்துறை கூட அப்படி ஒரு வழக்கை த.தே.பொ.க. தோழர்கள் மீது போடவில்லை.

2011 நவம்பர் டிசம்பர் மாதங்களில் கேரளத்தில் மலையாளிகள் அப்பாவித் தமிழர்களை அடித்தார்கள், உதைத்தார்கள். மலைத் தோட்டங்களில் வேலைக்குச் சென்ற தேனிமாவட்ட பெண்கள் 400 பேரை மலையாளிகள் சிறைப் பிடித்து காவலில் வைத்து அவமானப்படுத்தினர். தமிழகத்திலிருந்து சென்ற அப்பாவி ஐயப்ப பக்தர்களை அடித்து நொறுக்கினார்கள். தமிழக அரசு மற்றும் தமிழக எண் கொண்டுள்ள ஊர்திகளை அடித்து நொறுக்கினர். குமுளியில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பொதுப்பணித் துறை அலுவலகத்தைத் தாக்கினர். அங்குள்ள தமிழக அதிகாரிகள் குமுளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனை வாங்க மறுத்தனர் மலையாளக் காவல் துறையினர். அய்யப்பசாமி கோயிலுக்குப் போன தமிழக இளைஞர் மீது தேநீர்க் கடையில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கொன்றார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் தமிழர்களைக் கேரளத்தில் மலையாளிகள் தாக்கினர். கேரள அரசு அந்த இனவெறி வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய அரசு அந்த இனவெறியாட்டத்தைத் தடுக்க முன்வராதது மட்டுமல்ல, ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. குடியரசுத் தலைவரோ, அல்லது பிரதமரோ கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வர் செயலலிதா தில்லிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். எந்தப் பயனும் இல்லை. தமிழர்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை.

1991-1992இல் கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கி, பல்லாயிரக்கணக்கான வீடுகளை எரித்தனர். பலநூறு தமிழர் நிறுவனங்களை, கடைகளைத் தாக்கினர், தமிழர்களை கொலை செய்தனர். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினர். இரண்டு இலட்சம் தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடிவந்தனர். தமிழக அரசு எல்லையோரங்களில் ஏதிலிமுகாம்கள் திறந்தது.

இந்த அவலம் கேரளத்திலும் அரங்கேறக் கூடாது என்று த.தே.பொ.க. தலைமை கருதியது. பதிலடி கொடுக்கும் வகையில் மலையாளிகளின் நிறுவனங்களை மூடச் செய்யும் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. 2011 டிசம்பர் 7 ஆம் நாள் தஞ்சை, குடந்தை, சென்னை, கோவை, ஓசூர் ஆகிய ஐந்து இடங்களில் மலையாளிகளின் நிறுவனமான ஆலுக்காஸ் கடைகளை மூடச் செய்யும் போராட்டம் நடத்தியது. தஞ்சையில் தேநீர்க் கடைகள் போன்ற மலையாளிக்கடைகளையும் மூடச் செய்தனர். ஓசூர் தவிர மற்ற இடங்களில் பிணை மறுப்புப் பிரிவுகள் போட்டுத் தளைப்படுத்தினர். வழக்குகள் நடக்கின்றன.

அன்று பிற்பகலே தமிழகம் முழுக்க இவ்வாறான போராட்டங்களைத் தமிழ் இன உணர்வு அமைப்புகளும், வழக்கறிஞர்களும், இன உணர்வாளர்களும் தொடங்கினர். மலையாளிகளின் நிறுவனங்களை மூடச் செய்யும் போராட்டம் தமிழகமெங்கும் கிட்டத்தட்ட ஒருவாரம் நடந்தது. அதன் பிறகு தமிழக மலையாளி அமைப்புகள் ஒன்று கூடி கேரள வன்முறையைக் கண்டித்தன. முல்லைப்பெரியாறு அணையில் தமிழக உரிமையைக் கேரளம் ஏற்கவேண்டும் என்று தீர்மானம் போட்டன. கேரள வன்முறையைக் கண்டித்துத் தமிழக மலையாளிகள் ஒருநாள் தங்கள் நிறுவனங்களை மூடிக் கடையடைப்பு நடத்தினர். அதன் பிறகே கேரளத்தில் தமிழர்களுக்கெதிராக நடந்த இனவெறி வன்முறைகள் நின்றன.

இந்த நிகழ்வுகளைத்தான் “கேரள, கன்னட மக்களைத் தாக்கி வெளியேற்றும் நிகழ்வுகளில்” த.தேபொ.க. ஈடுபடுகிறது என்கிறாரோ? அல்லது தோழர் பொழிலனுக்குக் கேரளத்திலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் அவருக்கு வேண்டியவர்கள் தவறான தகவல் தந்திருப்பார்களோ?

எதிர்வினையாக மலையாளிகளின் கடைகளை மூடச் சொன்ன போராட்டங் களையே பொழிலனால் தாங்கிக் கொள்ள முடியாமல் பொங்குகிறார்! ஆனால் 2011 இல் ஒருமாதம் அப்பாவித் தமிழர்களை மலையாளிகள் தாக்கினர்களே, அதனை ஒரு ”நிகழ்வாகக்” கூட தமது கட்டுரையில் குறிப்பிடவில்லையே ஏன்?

காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளைத் தமிழர்களால் “பெற இயலவில்லை” என்று குறிப்பிட்டது போல கேரளத்தில் தமிழர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே! அதேபோல் கர்நாடகத்தில் தமிழர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டிருக்கலாமே!

ஒருமாதமாகத் தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளைக் கண்டிக்கக் கூடாது; தமிழர்களை இனப்படுகொலை செய்து இரண்டு இலட்சம் பேரை விரட்டியடித்த கன்னடர்களைக் கண்டிக்கக் கூடாது; ஆனால் “தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்காதீர்கள் அயலாரே” என்னும் த.தே.பொ.க.வினரை மட்டும் கண்டிக்கிறார்; அவதூறு செய்கிறார். பொழிலன் பேசுவது தமிழ்த் தேசியமா? திராவிடத் தேசியமா? கேரள கன்னட மக்களைத் தாக்கி வெளியேற்றும் நிகழ்வுகளில் த.தே.பொ.க. ஈடுபட்டது என்று பொய் சொல்லும் அளவுக்குப் பொழிலனைத் தூண்டியது எது?

கன்னடர்கள் மலையாளிகள் மீது காட்டும் கரிசனத்தில் பத்தில் ஒரு பங்குக் கரிசனம் கூடத் தமிழர்கள் மேல் பொழிலனுக்கு இல்லாமற் போனதற்குக் காரணம் என்ன?

இந்திய அரசதிகாரத்தில் மலையாளிகள் உயர்பதவி வகித்துக் கொண்டு தமிழர்களுக்கெதிராகச் செயல்படுவது நீண்ட நெடுங்காலமாக நடக்கிறது. மொழி வழி மாநிலப் பிரிவினைபோது, தமிழ்மண் கேரளத்தில் சேர்க்கப்பட பண்டித நேருவின் நண்பரும் உயர்பதவிகளில் இருந்தவருமான மலையாளி கே.எம். பணிக்கர் காரணமாக இருந்தார். ஈழத் தமிழரை அழித்த இலங்கைப் போரை இயக்குவதில் மலையாள அதிகாரிகளான அன்றைய பாதுகாப்பு மதியுரைஞர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச்செயலாளர் சிவசங்கர மேனன், ஐ.நா. அதிகாரி விஜய நம்பியார் போன்றவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் பெரிய மொழிப்பற்றோ இனப்பற்றோ கிடையாதாம். இவர்கள் தமிழகப் ப.சிதம்பரம் போன்றவர்கள் தானாம். பொழிலன் சொல்கிறார்.

”இந்திய அரசாட்சியில் தமிழகத்தின் சிதம்பரங்களும், வாசன்களும், நாரயணசாமி நாச்சியப்பன்களும் இருப்பது போன்று கேரளத்தில் அந்தோணிகளும் அதிகாரிகளும் பிறரும் உண்டு. அவர்களுக்கெல்லாம் மொழிவழித் தேசப்பற்றோ, காழ்ப்புணர்வோ இருந்திடுவதில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பார்ப்போ மானால், கேரளாவிலும், கருநாடகாவிலும் அந்தந்த தேசத்தை முன்னிறுத்துகிற கட்சிகள் கூட இருந்திடவில்லை..

……………………… …………………………. ………………………….

“எனவே கேரளர்களுக்கும் கன்னடர்களுக்கும் மொழிப்பற்றும் இனப்பற்றும் உண்டென்றாலும் அவை, அத்தேசந் தழுவிய நிலையில் இன்னும் உருக்கொண்டு வளரவில்லை. இன்னுஞ்சொன்னால் அவ்வாறு வளர்க்கப்பட வில்லை! ” – மேற்படி தென்மொழி.

கன்னடர்கள், மலையாளிகள் முழுமையாக மொழி, இன உணர்வுகளை வளர்த்துக் கொள்ளவில்லை, தங்களுக்கென்று மாநிலக் கட்சிகள் கூட வைத்துக் கொள்ளவில்லை என்று கவலைப்பட பொழிலனுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் உண்மை விவரங்களை மூடி மறைக்க யாருக்கும் உரிமை இல்லை.

தமிழீழ இன அழிப்பில் மலையாள அரசியல்வாதிகளும் மலையாள அதிகாரிகளும் குறிப்பிடத் தகுந்த பங்கு வகித்தார்கள் என்பது எல்லோர்க்கும் தெரிந்த உண்மை. இது குறித்து ஆங்கில இதழ்களிலும் தமிழ் இதழ்களிலும் பல கட்டுரைகள் வந்துள்ளன.

எந்தத் தவறும் செய்யாத அப்பாவித் தமிழர்களைக் கன்னடர்களும் மலையா ளிகளும் தாக்கினார்களே அது என்ன பற்று? என்ன வெறி? மொழியுணர்வு இன உணர்வு இல்லாத பாப்பாக்கள் நடத்திய தாக்குதல்களா அவை?

ப.சிதம்பரம் போல்தான் ஏ.கே. அந்தோணி இந்திய அரசில் இருக்கிறார் என்கிறார். 2011இல் மலையாளிகள் தமிழர்களைத் தாக்கிய போது, கேரளத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் ஒன்றுக்காக நடக்கும் விருப்பத்தகாத செயல் இது என்றார் ப.சிதம்பரம். அதற்காக அவரை மன்னிப்புக் கேட்க வைத்தது இந்திய அரசு. இருவரும் சமமா? எட்டப்பத் தமிழருக்குக் கூட தில்லியில் சம உரிமை இல்லை.

கேரள, கர்நாடக மாநிலங்களில் அனைத்திந்தியக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன என்று கூறுகிறார். இந்த அனைத்திந்தியக் கட்சிகள் தான் தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளுக்கில்லாத மொழி இன உணர்வோடு செயல்படுகின்றன. மொழி – இன உணர்வு தவறில்லை, ஆனால் வெறியோடு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தர வேண்டிய காவிரிநீரைத் தரமுடியாது என்றும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரமுடியாது என்றும் ஒற்றைக்குரலில் கொக்கரிக்கின்றன. காங்கிரசு முதல்வர் பங்காரப்பா தூண்டுதலில்தான் கர்நாடகாவில் தமிழர்கள் 1991-1992ல் தாக்கப்பட்டனர். வலுவாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை, உச்சநீதி மன்றத் தீர்ப்பையும் மீறி உடைப்போம் என்கின்றன கேரளாவின் அனைத்திந்தியக் கட்சிகள்.

முல்லைபெரியாறு அணையில் தமிழ்நாடு 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் 07.05.2014இல் தீர்ப்பளித்தது. உடனே அதை எதிர்த்து கேரளத்தில் முழு அடைப்பு நடத்தினர். மாநிலத்திற்கு என்று தனிக் கட்சி வைத்துக் கொள்ளாத கேரளாவின் இன நல்லிணக்கப் பண்புகளுக்கான சான்றுகள் போலும் இவை எல்லாம்! தோழர் பொழிலனுக்கே வெளிச்சம்!

வாட்டாள் நாகராசு கட்சி, கன்னட வேதிகே அமைப்பு போன்றவை தமிழர்களுக்கு எதிராக நடத்தும் கன்னட இனவெறியாட்டங்கள் எதுவுமே பொழிலன் கண்ணுக்குத் தெரியவில்லை; அவர் கருத்துக்கும் எட்டவில்லை. ஆனால் த.தே.பொ.க.வின் சனநாயக வழிப்பட்ட தமிழினத் தற்காப்புக் கொள்கைகள், செயல்கள் மட்டும் அவருக்கு இனவெறியாகத் தெரிகின்றன. தோழர் பொழிலனின் மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் ஒளிவு மறைவற்ற தமிழின இரண்டகக் கருத்துகள் தவிர வேறல்ல!

Pin It