kashmir women

இந்திய சமூகத்தின் பொது புத்தியில் காஷ்மீரிகள் என்றாலே தீவிரவாதிகள், பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள், பிரிவினைவாதிகள், வன்முறையாளர்கள் என்ற கட்டமைப்பை இந்திய அரசு வலுவாக உருவாக்கியிருப்பது துரதிருஷ்டவசமானதே. காஷ்மீரிகள் இந்தியாவின் பிற பகுதிகளில் வியபாரம் செய்வது, படிக்க செல்வது என்பது மிகவும் கடினமானது. காஷ்மீரிகள் குறித்த சந்தேகம் அனைத்து இந்தியர்களிடமும் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரிகளை அரவணைக்க இந்தியாவின் பிற பகுதி இந்தியர்கள் தயாராக இல்லை. ஏன் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு கூட காஷ்மீரிகள் மீது எந்த பச்சாதாபமும் இல்லை. காஷ்மீர் பண்டிட்டுகளை அரவணைக்கும் இந்திய அரசு காஷ்மீர் முஸ்லிம்கள் மீது வேறுவிதமான பார்வையை செலுத்தி வருகிறது.

அழகான ஆப்பிள் தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களை அந்த தோட்டங்களிலேயே கொன்று புதைப்பது மிகவும் கொடூரமான அரசியலாகத்தான் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்கிற இந்திய அரசின் ஜனநாயகத் தன்மை குறித்த விமர்சனம் பொதுத் தளத்தில் அதிகம் செய்யப்படுவதில்லை. அப்படி செய்பவர்களை பல்வேறு அடைமொழிகளை வழங்கி இந்திய சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்கிறது. காஷ்மீரிகளின் உரிமைகள் குறித்து, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் இந்திய நாட்டின் துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மிகச் சிறந்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் காஷ்மீரிகளின் உரிமைகள் குறித்து பேசியதற்காக அந்தக் கட்சியை சேர்ந்தவர்களாலேயே எவ்வளவு மோசமாக ஒதுக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் குறித்து விவாதிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்பதை இந்திய அரசு எவ்வளவு மறைமுகமாக தெரிவிக்க முடியுமோ அவ்வாறு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த மனித உரிமைக் குழுவை சேர்ந்த தமிழக ஆய்வாளர் ஒருவரை நமது உளவுத்துறை குடைத்தெடுத்த சம்பவத்தை கேள்விப்பட்டபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காஷ்மீருக்கு எந்த காரணத்திற்காகவும் சென்று திரும்பும் பிற இந்தியர்கள் மீது இந்திய அரசின் உளவுத் துறை கண் வைக்க ஆரம்பிக்கிறது. அதுவும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் மிகவும் பரிதாபகரம்தான்.

சதியின் வரலாறு

காஷ்மீரிகள் குறித்த ஒடுக்குமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கான வரலாற்று அடித்தளத்தை கண்டிப்பாக உற்று நோக்க வேண்டும். சமாதான விரும்பியாக எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் ஜவஹர்லால் நேருவின் உண்மை நிலை குறித்து உரசிப் பார்த்தால்தான் இந்த வரலாற்று உண்மையை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். 67 ஆண்டுகளாக அந்த அழகிய பள்ளத்தாக்கின் சொந்தக்காரர்கள் உரிமைக்காக போராடி வருகிறார்கள். ஆனால் நேருவில் துவங்கி தற்போது மன்மோகன் சிங் வரை அந்த போராட்டத்தை முடக்குவதற்காக பல்வேறு சதிகளை அரங்கேற்றி உள்ளனர். 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி சில விதிமுறைகளுடன் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இணைப்பு உடன்படிக்கையின் படி காஷ்மீர் இந்திய அரசின் கீழ் சுயாட்சி மிக்க மாநிலமாக செயல்படும் என்றும் பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பியல் துறைகளில் மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என உடன்படிக்கை செய்யப்பட்டது. மேலும் முக்கியமாக இந்த உடன்படிக்கை தற்காலிகமானது எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இணைப்பு உடன்படிக்கைக்கு பின்பு இந்திய அரசு மிகவும் வசதியாக இந்த நியதிகளை மறக்க ஆரம்பித்தது. இதற்காக போராடிய காஷ்மீர் மக்களை பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி முடக்க ஆரம்பித்தது. இதனால் 1950களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து சர்வதேச சமூகம் காஷ்மீர் விவகாரத்தில் அக்கறை எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிரந்தரத் தீர்வு ஏற்பட காஷ்மீர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்கு இந்திய அரசும் உடன்பட்டது. ஆனால் ஐ.நாவில் வாக்களித்தபடி இதுவரை இந்திய அரசு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை.

இந்த உரிமைகள் குறித்து போராட காஷ்மீர் மக்கள் வீதிக்கு வரும்போதெல்லாம் சமாதானத் தூதுவர் நேரு ராணுவத்தைக் கொண்டு மிகவும் குரூரமான அடக்குமுறைகளை மேற்கொண்டது வரலாற்றில் அழிக்கமுடியாத களங்கம்தான். நேருவின் இந்த செயலை அப்போதைய பத்திரிகைகள் அரசின் பயங்கரவாதம் என்றே வர்ணித்தன‌. 1986 வரை மட்டும் 42 சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறித்தது.

காஷ்மீர் மக்களின் போராட்டங்களுக்கு வீரியமான துவக்கம் குறித்த, பள்ளத்தாக்கின் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட ஷேக் அப்துல்லா பின்பு இந்திய அரசிடம் சரண் அடைந்தது மிகவும் கொடூரமானதுதான். ஒருபுறம் ராணுவத்தைக் கொண்டும் மறுபுறம் அமைதி பேச்சுவார்த்தை என்ற போலி பேச்சுவார்த்தைகளைக் கொண்டும் ஒட்டுமொத்த காஷ்மீரிகள் மீதும் அங்குள்ள ஆட்சியாளர்களான(கைக் கூலிகள்) பக்ஷி குலாம் முகம்மது, சாதிக் முகம்மது, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரைக் கொண்டே இந்திய அரசு போராட்ட வீரியத்தை முடக்கியது. காஷ்மீர் மக்கள் வீதிக்கு வருவதை கட்டுப்படுத்துவதற்காகவே ஜம்மு காஷ்மீர் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம், ஆயுத படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் உட்பட பல்வேறு கொடூர சட்டங்களை கொண்டு வந்து மிகவும் மோசமான அடக்குமுறைகளை அரங்கேற்றியது. இந்த அடக்குமுறைகளின் மூலம் காஷ்மீர் மக்கள் உட்பட பிற இந்திய சமூகத்தின் பொது புத்தியிலிருந்து சுயாட்சி என்ற அம்மக்களின் அடிப்படை உரிமையையே இந்திய அரசு துவஷம் செய்து விட்டது.

ஆயுதங்கள் திணிப்பு

1986ம் ஆண்டு அந்தப் பள்ளத்தாக்கில் நடந்த ஒரு விநோதமான நிகழ்வு காஷ்மீரில் தீர்வு ஏற்படுத்த முடியாத அளவிற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த ஆண்டின் துவக்கத்தில் மவுலானா அப்பாஸ் அன்சாரி என்ற மிகவும் பிரபலமான இஸ்லாமிய அறிஞர் காஷ்மீரைச் சேர்ந்த மத அறிஞர்கள், அரசியல் வாதிகள், ஆயுதப் போராட்டக்குழுக்களின் பிரதிநிதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோரை இணைத்து முஸ்லிம் யுனைட்டட் ப்ரண்ட் என்ற மாபெரும் ஜனநாயக இயக்கத்தை கட்டமைத்தார். இந்த இயக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த தேர்தலில் குதிப்பது என முடிவு செய்தது. அதன்படி மார்ச் 23, 1987ம் ஆண்டு நடந்த காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் யுனைட்டட் ப்ரண்டைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் முஸ்லிம் யுனைட்டட் ப்ரண்ட் 90 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டது. ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கிக்கொண்டிருந்த இந்த தேர்தலை இந்திய அரசு மிகவும் எளிதாக சீர்குலைத்தது. முஸ்லிம் யுனைட்டட் ப்ரண்டைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என்று கூறி அந்த இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை மத்திய அரசு சிறையில் இட்டது. இதற்கு எதிராக போராடிய முஸ்லிம் யுனைட்டட் ப்ரண்டின் தொண்டர்களை துப்பாக்கி சூடு நடத்தி கொன்று குவித்தது. மேலும் அந்த தேர்தலில் மத்திய அரசு பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி அந்த கட்சியை அமோக வெற்றி பெறச் செய்தது.

இந்நிகழ்வு காஷ்மீர் பிரச்சினையில் பெரும் சிக்கலை உருவாக்கியது. இதற்கு பின்பு காஷ்மீரில் உள்ள அடிப்படை பாமர மக்களிடம் கூட ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தவிடுபொடியானது. ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய போராட்டக் குழுவினர் மீண்டும் ஆயுதங்களை கையில் எடுத்தனர். சுமார் 15க்கும் மேற்பட்ட அதிதீவிர ஆயுதக் குழுக்கள் இச்சம்பவத்திற்குப் பிறகு உருவாகி இன்றும் அம்மக்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். இதில் சில ஆயுதக்குழுக்களை இந்திய உளவுத்துறையே உருவாக்கி வைத்துள்ளது என்பது வேறு விஷயம். அந்த அழகிய பள்ளத்தாக்குக்கு சொந்தக்காரர்களின் கைகளில் ஆயுதங்களை வழங்கி அம்மக்களை இந்தியாவின் பிற பகுதி மக்களிடமிருந்து பிரித்த பெருமை இந்திய அரசையே சாரும் என்பது கசப்பான உண்மை.

பிணம் தின்னி கழுகுகளின் வருகை

காஷ்மீர் பிரச்சினை மேலும் சிக்கல் ஆவதற்கு இன்னும் ஒரு காரணம் என்னவென்றால் காஷ்மீர் பிரச்சினையை கையாள இந்திய அரசு இஸ்ரேலின் உதவியை நாடியதுதான். இஸ்ரேலும் இப்பிரச்சினையில் தலையிட பெரும் ஆர்வம் எடுத்துக்கொண்டது. இஸ்ரேல் உளவு நிறுவனத்துடன் இந்துத்துவ பயங்கரவாதிகளும் கைகோர்த்து கொண்டனர் என்பது சொல்லப்படாத வரலாறு.

kashmir youthநாடு சுதந்திரம் பெற்ற பின் வெளிப்படையாக இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுடன் ரகசிய உறவை வைத்திருந்தது. இந்த ரகசிய உறவிற்காக அப்போது பெயரிடப்படாத இந்தியாவின் வெளிவிவகார உளவு நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண மேனனை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ரகசியமாக பயன்படுத்தி வந்தார். 1968ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளிநாடுகளுக்கான இந்திய உளவு நிறுவனமான ரா உருவாக்கப்பட்ட பிறகு இந்த உறவு மிகவும் பலமானது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ரா வின் தலைவர் ராமேஷ்வர்நாத்திடம் இஸ்ரேலுடனான உறவை மேலும் வலுப்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதற்குப் பின்பு இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாதைச் சேர்ந்த உளவாளிகள் சுற்றுலா பயணிகளைப் போன்று காஷ்மீருக்குள் நுழைந்து பாரிய ஆய்வு மேற்கொண்டனர். இத்தகவலை இந்திய அரசே உறுதிப்படுத்தியது. இதற்குப் பின்பு இந்திய ராணுவத்தினருக்கும் உளவு நிறுவன அதிகாரிகளுக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளும் திட்டங்களை எப்படி காஷ்மீரில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தான முகாம்களை நடத்தியது.

1967 ல் நடைபெற்ற அரபு நாடுகளுக்கும் இஸ்ரேல் கூட்டணி நாடுகளுக்குமிடையிலான போரின் சூத்திரதாரியான மோஷே தயான் எந்த வித அரசு அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக இந்தியாவிற்கு பலமுறை வந்து காஷ்மீர் பிரச்சினை குறித்து பல்வேறு விவாதங்களை இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ளார். இவரது வருகைக்குப் பின்புதான் காஷ்மீரில் முஸ்லிம்களின் பெரும்பான்மையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் மேலாதிக்க சாதியான இந்து பண்டிட்டுக்களை அதிகமாக குடியமரச் செய்யும் நிகழ்வுகள் அரங்கேறின.

மத்தியில் பாஜக ஆட்சியின் போது இந்த உறவு மேலும் அதிகரித்தது. 2000மாவது ஆண்டு ஜுன் 13 முதல் 16 வரை இந்தியாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு, உளவுத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதன்பிறகு பல்வேறு பயிற்சி முகாம்களை காஷ்மீரில் வைத்து இஸ்ரேல் இந்திய அதிகாரிகளுக்கு நடத்தியது.பின்பு காங்கிரஸ் ஆட்சியின் போது 2008 செப்டம்பர் மாதம் 9 முதல் 11ம் தேதி வரையும், 2009, 2010 ஆகிய ஆண்டுகளிலும் பல்வேறு பயிற்சி முகாம்களை இஸ்ரேல் நடத்தியது. இந்த பயிற்சி முகாம்களின் அருகில் செல்லக்கூட பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரேலின் பாலஸ்தீன அடக்குமுறை மாதிரி அப்படியே காஷ்மீரில் பின்பற்றப்படுவதை காஷ்மீர் பிரச்சினையை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு கணிக்க முடியும். இதுவே காஷ்மீரில் இஸ்ரேலின் இருப்பை வலுப்படுத்த போதுமான ஆதாரமாகவும் உள்ளது.(இஸ்ரேல் இந்தியா குறித்த கள்ள உறவை தெரிந்து கொள்ள இந்த தொடர்கண்ணியை கிளிக் செய்யவும்: http://www.butitis.com/index.php/politics/38-india-isreal-a-wrong-alliance)

அடக்குமுறை கொட்டகைகள்

இஸ்ரேலின் கொடூர அறிவுரையின்படி பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் அமைத்திருக்கும் ரகசிய வதைசிறைகளைப் போன்று காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வதை சிறைகளை இந்திய அரசு அமைத்தது. இந்த வதைசிறைக் கொடூரங்கள் குறித்தும் இங்கு நிகழும் மர்ம மரணங்கள் குறித்தும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆய்வுகள் செய்து அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளன. அப்பாவி காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் இந்த வதை முகாம்களில் வைத்து மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்யப்படுகிறார்கள்.

உடலின் கூர்மையான பகுதிகளில் மின் அதிர்வு கொடுத்தல், கனமான மர உருளைகளைப் பயன்படுத்தி உடலை நசுக்குவது, மயிர்கூசும் பகுதிகளில் நெருப்பு வைப்பது உட்பட பல்வேறு கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த வதைகளுக்குப் பின்பு அவர்கள் வாழ்க்கை முழுவதும் வெறும் கசக்கிப்போட்ட காகிதங்களைப் போன்றுதான் வாழ முடியும். சில இளைஞர்களின் ஆண்மையையும் இந்த வதை முகாம்களில் வைத்து சிதைப்பது மிகப்பெரிய கொடூரம்.

இஸ்ரேலின் கருத்தியலில் உருவான இந்த வதை முகாம்கள் குவாண்டனமா, அபு குரைப் வதை சிறைகளை விட குரூரமானது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. காஷ்மீர் மானிட்டர் அசோசியேசன் என்ற மனித உரிமை அமைப்பு நடத்திய புலனாய்வில் இந்த வதை முகாம்களில் 1990களில் தினமும் 25 பேர் வரை இறந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த வதைமுகாம்களில் மரணித்தவர்களை கூட்டம் கூட்டமாக காஷ்மீர் தோட்டங்களில் இந்திய ராணுவம் புதைத்துள்ளது. இப்படிப்பட்ட கூட்ட புதைகுழிகளின் எண்ணிக்கை காஷ்மீரின் பல்வேறு தோட்டங்களில் அமைந்துள்ளது. இதை விட கொடூரம் இந்த தோட்டங்களின் சொந்த காரர்கள் நேருவின் ஆதிக்க சாதியான பண்டிட்டுகளுடையது.

சுயாட்சி மட்டும்தான் தீர்வு

லட்சக்கணக்கான அகதிகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள், ஆயிரக்கணக்கான படுகொலைகளை உள்வாங்கிய அந்த அழகிய பள்ளத்தாக்கின் சொந்தக்காரர்களிடம், அந்த மண்ணிற்கு உரிமைப்பட்டவர்களிடம் சுயாட்சி வழங்குவது மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். பல்வேறு சர்வதேச அமைப்புகள் நடத்திய கருத்துக்கணிப்பில் 85 சதவீத காஷ்மீரிகள் சுயாட்சியைதான் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் பிரச்சினைக்காக அம்மாநில மக்கள் பிரதிநிகளிடம் இந்திய அரசு இதுவரை 130 பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அத்தனை பேச்சுவார்த்தைகளுமே ஏமாற்று வித்தைதான். அம்மண்ணைச் சேர்ந்த 5 வயது குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை சுயாட்சியைத்தான் கேட்கிறார்கள். ஆகையால் சூடானில் சர்வதேச சமூகத்தின் முன்பு நடந்ததைப் போன்று காஷ்மீரிகளின் விருப்பத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பை இந்திய அரசு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் காஷ்மீரில் புதைக்கப்பட்டுள்ள கப்று குழிகளிலிருந்து ஒரு வலுவான புரட்சி வெடிக்கும் என்பது திண்ணம். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் எப்போதும் அடங்கியே போகமாட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.

- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It