குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் 'கிளிஷே' (பாகம் 1)

"மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் மானிட விரோத செயல்களே..."

குண்டு வெடிப்போ, பயங்கரவாத தாக்குதல் சம்பவமோ நடைபெற்ற பின், அரசியல்வாதிகள் முதல் அறிவுஜீவிகள் வரை அனைவரும் சம்பிரதாயத்துக்காக பயன்படுத்தும் தீர்ப்பு தான் இந்த வார்த்தைகள். எவ்வளவு தான் நியாயங்கள் இருந்தாலும், போராட்ட அமைப்புகள், சமூக அக்கறை கொண்ட இயக்கங்கள் பயங்கரவாத செயல்களில் இறங்கக் கூடாது என்ற அற ஒழுக்கத்தின் பின்னணியில் உருவானதுதான் இந்தக் கருத்தாக்கமாகும்.

bomb squad

போராட்ட அமைப்புகள், சமூக அக்கறை கொண்ட இயக்கங்கள் ஆகியன மட்டுமே எப்போதுமே குண்டுவெடிப்பு போன்ற நாசகர செயல்களில் நம்பிக்கை வைத்துள்ளன என்ற மாயத் தோற்றத்தை, இந்த அறக் கூற்று ஏற்படுத்தி வைத்துள்ளது.

ஆனால் இது போன்ற தீவிரவாத செயல்களில் போராட்ட அமைப்புகள், சமூக அக்கறை கொண்ட இயக்கங்கள் மட்டும்தான் ஈடுபடுகின்றனவா? இறையாண்மை கொண்ட அரசுகள் ஈடுபடுவதில்லையா?

இந்தக் கேள்வியே பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஏதோவொரு 'தீவிரவாத' அமைப்பு பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டால், பீறிட்டெழும் மத்திய தர மக்களின் அறச்சீற்றம், ஓர் அரசே பயங்கரவாதத் தாக்குதலில் அப்பட்டமாக ஈடுபடும்போது வெளிப்படுவதில்லை.

-காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் தாக்குதல்களைப் போலத்தான், இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசிய போது, அரச பயங்கரவாதம் எப்படி மூர்க்கத்தனமாக செயல்படுகிறது என்பதைக் குறித்து நாம் கவலை கொண்டோமா?

- கார்ப்பரேட்டுகளின் பொருளாதார நலன்களுக்கு எதிராக தண்டகாரண்ய பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகள் மீது இந்திய அரசு போர் தொடுக்கிறதே, இதைப்பற்றி நாம் கேள்வி எழுப்புகிறோமா?

- பரமக்குடியில் தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்ட போது நாம் அறச்சீற்றம் கொண்டோமா?

இல்லை. மத்திய தர வர்க்கம் கொதித்தெழாது என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் அரசுகள், 'பயங்கரவாதம் எது?' என்பதை தங்கள் மொழியில் நமக்கு கற்பிக்கின்றன.
அரசு பரிபாலனத்தைப் பற்றி கேள்வி கேட்காமல் இருக்க, மக்கள் வேறு விஷயங்களின் பக்கம் கவனம் குவிக்க வேண்டும் என்பதற்காக பழங்காலம் தொட்டு வெவ்வேறு உத்திகளை ஆட்சியாளர்கள் கையாண்டு வந்துள்ளனர். சர்க்கஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்த இந்த உத்திகளை, பயம் கொள்ளும் அம்சமாக மாற்றியது அமெரிக்காதான்...

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்பு, நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி ஆஃப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது. இதற்குப் பின்னால் நடைபெற்ற ஆயுத வியாபாரம், சரிந்திருந்த அரசியல் இமேஜை புஷ் அதிகப்படுத்திக் கொண்டது என திரைமறைவில் ஆயிரம் கதைகள் உள்ளன. இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமாகச் சொல்லப்பட்ட அல்கொய்தாவை உருவாக்கி வளர்த்ததே அமெரிக்காதான் என்பதை அறிந்திருந்தவர்களுக்கு, அந்தக் கதைகளின் முடிச்சும், கிளைமாக்சும் ஆச்சரியம் தரவில்லை.

சாதாரண இந்தியப் பிரஜைகளுக்கு செல்லுபடியாகும் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட 'விடுதலைப் பிரதேசங்கள்' சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக இந்தியாவில் ஆதிக்கம் பெற்றுள்ளன. வனங்களில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக, அங்கு ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த ஆதிவாசிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இவைகளுக்கு எதிராக காடுகளுக்கு வெளியே உள்ள மக்களும், ஆதிவாசிகளும் கிளர்ச்சியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கார்ப்பரேட்டுகளின் நலன்களைக் காக்க, இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும், சொந்த நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கவும் அமெரிக்க உத்தியையே இந்திய அரசாங்கமும் பின்பற்றி வருகிறது. தேசப் பாதுகாப்புக்கு முன்னால் எதுவுமே எடுபடாது என்கிற நிலையில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின் போது, வேறு எதைப் பற்றி பேசினாலும் நீங்கள் தேச விரோத சக்தியாவீர்கள்.

வெகு மக்கள் எழுச்சியை ஒடுக்க, கிளர்ச்சியாளர்களை 'உடனடியாக போட்டுத்தள்ள' இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை என்பதை நவீன காலனியவாதிகள் உணர்ந்துள்ளனர். இதற்கு அமெரிக்கா மாதிரியிலான தாக்குதல்களை இங்கு அரங்கேற்றினால்தான் அடக்குமுறைச் சட்டங்களை எந்த எதிர்ப்புமின்றி அமல்படுத்த முடியும் என்பதை இந்திய அரசு அறிந்து வைத்துள்ளது. இதற்காக பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு அரசே அரங்கேற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுவதில் உண்மை இல்லாமலில்லை.

2001-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலும், 2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலும் இந்திய அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும், குறிப்பிட்ட சட்டங்களை இயற்றுவதற்கு ஏதுவாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ-க்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின் பொடா சட்டமும், மும்பை தாக்குதலுக்குப் பின் UAPA (Unlawful Activities Prevention Act) சட்டமும் எந்த எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மும்பை தாக்குதலுக்குப் பின் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. UAPA சட்டத்தால் முஸ்லிம்கள், நக்ஸலைட்டுகள் மட்டும் கைது செய்யப்படவில்லை; நக்ஸலைட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக பீஹாரைச் சேர்ந்த ஒரு சி.ஆர்.பி.எஃப். வீரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்கில் போரில் சவப்பெட்டி வாங்கியதில் நடைபெற்ற ஊழல் விவகாரத்தை திசை திருப்ப, நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரம் பாஜக அரசுக்கு உதவியது. இதேபோல் இந்தியாவில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் உள்ள இந்துத்துவ தீவிரவாதிகளை அடையாளம் காட்டிய அதிகாரி ஹேமந்த் கர்கரேயை பலி கொடுக்க, மும்பை தாக்குதல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஆக சர்வதேச அளவில் எங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றாலும், அதன் பின்னணி, அதனால் பயனடைபவர்கள், அர்த்தம் - உள் அர்த்தம், அரசியல் காரணம் என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது எனும் போது, இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற சில மணி நேரங்களில், இவர்கள் தான் குண்டு வெடிப்புக்குக் காரணம் என சிலரை நோக்கிச் சுட்டு விரலை நீட்டுவது அறிவு நாணயமற்ற செயலாகும்.

எங்கே, எப்போது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றாலும் குற்றவாளிகளை உடனே அடையாளப்படுத்தும் 'கிளிஷே'வுக்கு மக்களை பழக்கப்படுத்தியது யார்? ஊடகங்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

(தொடரும்)

- இயக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It