அழுததும் சிரித்ததும் -3

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு திரைப்படத்தை முழுமையாக உட்கார்ந்து பார்க்க வாய்த்தது எனக்கு; ஒரு படம் விடாமல் ஓடி ஓடிப் பார்த்த காலமெல்லாம் போய்விட்டது. ‘நவ தர்சன்’ போன்ற திரைப்படக் கழகங்களில் உறுப்பினராகி, உலக அளவிலான கலைப்படங்களை எல்லாம் விடிய விடியப் பார்த்த காலங்களை இன்றைக்கு நினைத்துப் பார்த்தால், அப்படியொரு காலம் நமக்கும் இருந்ததா என்பதையே நம்ப முடியவில்லை. இப்படி நாமே நம்ப முடியாதபடி அமைந்து முடிந்து விட்ட நம் வாழ்க்கை நிகழ்வுகள் ஒன்றா இரண்டா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

child labor 340சரி! விஷயத்திற்கு வருகிறேன். நான் சமீபத்தில் பார்த்த படத்தின் பெயர் ‘அங்காடித் தெரு’. என்னை முழுமையாக உள்வாங்கி அமுக்கி வைத்துக் கொண்ட படம். பெரிய பெரிய ‘மால்’ என்கிற கடைகளுக்குள் சென்று வரும் போதெல்லாம் அந்தக் ‘குளிர் குகைக்குள்’ மாட்டிக் கொண்ட அப்பாவிகளை நினைத்து வருத்தத்தோடு திரும்பியிருக்கிறேன். அப்படியொரு வருத்தத்தைப் படமாக்கியிருக்கிறார்கள் திரைப்படக் கலைஞர்கள். கொடூரமான சமூகம்தான் மிக மிக உன்னதமான கலைஞர்களையும் உற்பத்தி செய்யும் போலும்.

அதிபயங்கரமான இரண்டாம் உலகப் போர்தான், ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் உருசியாவிலும் அதி உன்னதமான கலைப்படைப்புகள் உருவாகக் காரணமாக இருந்துள்ளது பாருங்கள். இது என்ன அநியாயம்? ஆனால் இப்படித்தான் முரண்களின் முடிச்சுகளாகத்தான் வாழ்வின் ஆதாரப் புள்ளிகள் இயக்கம் கொண்டிருக்கின்றன.

அந்தப் படம், ஒரு பன்முக வாசிப்பிற்கு ஏதுவாகப் பல்வேறு திசைகளில் பார்வையாளர்களைக் கொக்கி போட்டு இழுத்துச் செல்லுகிற ஒரு முறைமையைப் பின்பற்றிப் புனையப்பட்டுள்ளது. வந்திருக்கக்கூடிய பல இளம் இயக்குநர்களின் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ‘ஆனால் பாவம்! அவர்கள் உலக அளவில் அநாதைகளாக்கப்பட்டுள்ள தமிழினத்திற்குள் அல்லவா சிக்கிக் கொண்டார்கள்’ என்று நம்மை வருத்தும் அளவிற்கு அவர்களின் திறமை தீவிரமாக வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. ‘அங்காடித் தெரு’ - இப்படிப் பல வகையில் நம்மை வருத்தப்பட வைக்கிறது. என்னைப் பெரிதும் வருத்தப்பட வைத்தது வீட்டு வேலைக்காரச் சிறுமி. பூப்படைந்து விட்டாள் என்றவுடன், நாய்க் கொட்டகைக்கு அருகில் அவளைத் தள்ளிவிடும் காட்சி. மேலும் கருக்கலைந்து விட்ட தன் மகளுக்குப் பணிவிடை செய்வதற்காக எஜமானி அம்மாள் அந்தச் சிறுமியை அஸ்ஸாமிற்கு ஏற்றுமதி செய்வதும், ‘அந்த அஸ்ஸாம் அக்கா ரொம்ப நல்லவங்க’ என்று அந்தச் சிறுமி சொல்வதும், இயக்குநரின் படைப்பாற்றலுக்குச் சரியான எடுத்துக்காட்டுகள்.

இந்தக் காட்சிகள் என்னைப் பெரிதும் வாட்டி எடுத்ததற்குக் காரணம் இருக்கிறது.

நாங்கள் அப்பொழுது மதுரையில் வாழ்ந்தோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு குடும்பம். சாதி வேறு வேறுதான் என்றாலும் மிக இனிமையாகப் பழகினார்கள். கிராமம் போலச் சமைத்த பண்டங்களை ஒருவருக்கொருவர் கொடுப்பதும், வாங்கிக் கொள்வதும் என்கிற அளவிற்கு நட்பின் ஆட்சி நிலவியது. எங்களுக்கொரு ஆண் குழந்தை; ஒரு வயசு. அவர்களுக்கொரு பெண் குழந்தை; அதே வயசு. குழந்தைகளுக்கு விளையாட்டுத் துணை வேறு கிடைத்தது. அவங்க வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்றொரு வேலைக்காரச் சிறுமி. ஒன்பது அல்லது பத்து வயதுதான் இருக்கும். அந்த அம்மா, எங்க வீட்டிற்கு என் மனைவியோடு நான் இல்லாத நேரங்களில் பேச வரும் போது, குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த வேலைக்காரச் சிறுமியும் வரும். என் மனைவிக்கு அந்தக் குழந்தையைவிட, அந்த வேலைக்காரச் சிறுமி மேல் ரொம்பப் பிரியம். அப்படியொரு பிரியம் ஏற்படும் அளவிற்கு அதன் முகவாகும் பாவமும் அமைந்திருக்கும். நான் அதோடு பேசியதில்லை; ஆனாலும் எனக்கும் அதன்மேல் ஒரு பிரியம் உண்டாகியிருந்தது.

ஒருநாள் பக்கத்தூரில் இருக்கும் அவங்க அம்மா வீட்டிற்குக் குடும்பத்தோடு புறப்பட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் கார் புறப்பட்ட அடுத்த நொடியில் அந்தச் சிறுமியின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர். என் மனைவி பயந்து விட்டார்கள்.

‘என்ன? என்ன? உள்ளே வா?’ என்று வீட்டிற்குள்ளே தள்ளிக் கொண்டு போனார்கள்!

‘அக்கா! (என் மனைவியை அப்படித்தான் அந்தச் சிறுமி கூப்பிடுவாள்) நான் பாவிக்கா! எங்க அப்பா அம்மா பரமக்குடில குடிச வீட்லதான் இருக்காங்க! ஆயிர ரூபா வாங்கிக்கிட்டு என்ன இங்க அனுப்பிட்டாங்க! பள்ளிக்கூடம் போய்க்கிட்டு இருந்தேன். நல்லா படிப்பேன்; நான்தான் கிளாஸ்ல பஸ்டு; அப்பாவால சம்பாதிக்க முடியல்ல… பள்ளிக்கூடத்தில் இருந்து, தம்பிய நிறுத்திறதா? என்ன நிறுத்திறதா?ன்னு பேச்சு வந்தப்போ, என்ன நிறுத்திட்டாங்க. இங்க வந்து தள்ளிட்டாங்க! எங்க வீட்ல கோழி வளர்ப்போம். கோழிப்பிய்ல மண்ண அள்ளிப் போடச் சொன்னாக் கூட அருவருத்துக்கிட்டு அள்ளிப்போட மாட்டேன். அப்பா உட்காந்த இடத்துல இருந்து எச்சத் துப்புவார். அதில மண்ண அள்ளிப் போடும்பார்! போட மாட்டேன்! அப்படிப்பட்ட நானு இன்னிக்கு! யாரோ பெத்த பிள்ள பேண்ட பிய்ய அள்றேன்; பிய்த்துணிய அலசுறேன்; அதுகூட பரவாயில்லன்னு போச்சு, நேத்து நடந்த கூத்து! அந்த அக்கா கால் வழியா குடகுடமா ரத்தமும் ரத்தக் கட்டியுமா கொட்டிருச்சு! வீடு முழுக்கத் தீட்டு ரத்தம். எல்லாத்தையும் அழுகையை அடக்கிக்கிட்டு நான்தான் தண்ணீ ஊத்தி ஊத்திக் கழுவுனேன். கொஞ்சங்கூட அந்த அக்கா இரக்கப்படல… செத்திடலாம் போல இருக்கு”. ஏங்கி ஏங்கி அழுதாள்.

அந்தச் சிறுமியின் பெயர் தனலட்சுமி.

என் மனைவியிடம் அவள் சொல்லி அழுத அந்தக் காட்சி ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தவுடன், என் முன்னால் அதே உணர்வு வேகத்தோடு விரிந்தது. ஒரு படைப்பின் வெற்றி என்பது இதுதான்!

இயக்குநர் அந்த எஜமானிக்குப் பார்ப்பன‌ சாதி என்கிற சாதி அடையாளத்தை வழங்கியிருக்கிறார். பணக்காரர்களாகி விட்ட எல்லாச் சாதியினரும் (தலித்துகள் உட்பட) இப்படித்தான் வேலைக்காரச் சிறுமிகளை நடத்துகிறார்கள். வர்க்கம்தான் இங்கே வினைபுரிகிறது.

இந்திய ஏழைச் சிறுமிகளும் சிறுவர்களும் அரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் கல்கத்தா, மும்பை, டில்லி, சென்னை முதலிய பெரும் நகரங்களிலும் வேலைக்காரர்களாகச் சிக்கிச் சுமக்கும் சிலுவையின் சரித்திரத்தைத் (பாலியல் கொடுமை, அடித்தல், நெருப்பால் சுடுதல், இருட்டறையில் அடைத்தல், கொலை செய்தல், எச்சில் உணவையே உண்ணக் கொடுத்தல், பெற்றோருடன் தொலைபேசியில் பேசக்கூட மறுத்தல், இப்படிப் பல) தெரிந்தும் இந்த நாட்டை ஆளுகின்றவர்களால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது? இந்தியா ஒரு வல்லரசாகும்; இந்தியா வளர்கிறது என்றெல்லாம் எப்படிப் பேச முடிகிறது? இதுவும் ஓர் ஆச்சிரியம்தான்!

வேலைக்காரச் சிறுமிகள் குறித்த இத்தகைய பார்வையை எனக்குள் முதன்முதலில் செலுத்தி என்னை அழவைத்த ஒரு படைப்பு, கி.ரா.வின் ‘பூவை’ என்கிற சிறுகதைதான்.

அந்தக் கதை நிலவுடைமைச் சமூகச் சூழலில் சொல்லப்பட்டாலும், வேலைக்காரச் சிறுமிகளின் அவலத்தை உன்னதமான கலை நுட்பத்தோடு சொல்லப்பட்ட ஒரு சிறுகதையாகும்.

அந்தக் கதையில் வரும் சிறுமியின் பெயர் ‘பேரக்கா!’

கி.ரா அந்தப் பாவப்பட்ட சிறுமியை இப்படி அறிமுகப்படுத்துகிறார்:-

“கல்யாணப் பெண் ஓர் அனாதை. சின்ன வயசிலேயே எங்க சித்தப்பாவின் வீட்டு எருமை மாடு மேய்க்க வந்தாள். வீட்டு வேலையெல்லாங்கூடச் செய்வாள்; சாப்பிடுகிற நேரம் தவிர அந்த எருமை மாடுகளின் மூத்திரவாடையில்தான் வாசம் அவள். ஊமை இல்லையென்றாலும் வாய் திறந்து அதிகம் பேச மாட்டாள். செய்யச் சொல்லுகிற வேலையை எவ்வளவு நேரமானாலும் தட்டாமல் செய்வாள்.

ராத்திரி பத்து, பதினொரு மணிக்கு வீட்டு ஆட்கள் பூராவும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்; தொழுவில் மாடுகள் தூங்கிக் கொண்டு இருக்கும். கடைசியில் பாட்டிதான் சொல்லுவாள். ‘பேரக்கா!’ சரி, போதும், நீ தூங்கப் போ! பாட்டிக்குத் தூக்கம் வரும் வரை கை, கால்களைப் பிடித்துவிட வேண்டும் அவள்.

சேவலின் முதல் சத்தத்தை அடுத்து, பாட்டியின் சத்தம் வரும். ‘பேரக்கா, ஏட்டீ எந்தி!’ இந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்தது போல் துள்ளி விழுந்து எழுந்திருப்பாள் பேரக்கா… உடனே முற்றம் தெளிப்பதிலிருந்து தொடங்கி விடும் வேலை… அவள் வளர்ந்த பிறகு மொட்டையிலிருந்து ‘பாப்’ வைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். சித்தப்பா வீட்டுப் பையன்களுக்கு பார்பர் வந்து கிராப் வெட்டி விடும்போது பேரக்காளுக்கும் அது ஒழுங்காக நடைபெறும் அவளைக் கேளாமலேயே… அந்த வளர்த்தியிலும் அவள் பாப் வைத்துக் கொண்டிருந்ததால், சிலர் அவளை இந்திரா காந்தி என்று பட்டப்பெயர் சூட்டி அழைத்தார்கள். பேரக்காள் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாள். இந்திரா காந்தி தன்னைப் போல் ஒரு பெண் என்றோ, இந்தியாவையே ஆளும் ஒரு மாதரசி என்றோ அவளுக்குத் தெரியாது… இதனால் (இந்தக் கல்யாணத்தினால்) பேரக்காளும் குமரய்யாவும் (இரண்டு அடிமைகளும்) அந்த வீட்டுக்கு மேலும் கடமைப்பட்டவர்களானார்கள்…” இந்த வர்ணனைக்குள் அடங்கியிருக்கும் கதைகள் ஏராளம்! ஏராளம்! அதுதான் கி.ரா!

கல்யாணத்தன்று அவள் தலையில் பூச்சூடிச் சிங்காரிக்கத் தொடங்குகிறார்கள்; அவள் மயக்கம் போட்டு விடுகிறாள்; எல்லோரும் என்னவோ ஏதோவென்று ஓடி வந்து அவளைத் தூக்குகிறார்கள்; பாட்டி மெதுவாக வந்து பார்க்கிறாள்.

ஓ!வென்று சிரிக்கிறாள்; ‘அட! சிறுக்கி… பூ வாடத் தாங்காம மயங்கிட்டா, போயி அவங்க அவங்க வேலயப் பாருங்க’ என்கிறாள். பிறந்தநாள் தொட்டு எந்நாளும் இல்லாதபடி இன்றைக்குத் தானே அவள் தலையில் ‘பூ’ சூட்டப்படுகிறது; அது பாட்டிக்குத்தானே தெரியும். எல்லோரும் சிரிக்கிறார்கள்;

அந்த நேரத்தில் எனக்குச் ‘சிரிப்பு வரவில்லை’ என்று கதைசொல்லி சொல்வதாகக் கதை முடிகிறது.

எனக்கு வாசித்து முடித்தவுடன் நெஞ்சுக்குள் என்னமோ ஏற்பட்டுக் கண்களில் கண்ணீர் வடிந்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கதைக்குள் மீண்டும் பயணிக்கத் தொடங்கினேன்.

‘ஒரு நல்ல கதை முடிகிற இடத்தில்தான் தொடங்குகிறது’ என்று சொன்னவன் எவ்வளவு பெரிய இலக்கிய அனுபவசாலி என வியக்கத் தோன்றுகிறது.

- முனைவர் க.பஞ்சாங்கம், புதுச்சேரி

Pin It