முதலில் ஓரின ஈர்ப்பு என்பது என்ன என்று பார்ப்போம். இதற்கு மரபியலை துழாவினால் துல்லியமாக ஜீன்கள் அகப்படலாம்.

இரட்டையராகப் பிறந்தவர்களை கணக்கில் கொண்டு இதை நிரூபிக்கவே செய்யலாம்.

இரட்டையர்களில், ஐடென்டிகல் ட்வின்ஸ் (Identical twins), ஃப்ராடெர்னல் ட்வின்ஸ் (fraternal twins) என்பார்கள். ஐடென்டிகல் ட்வின்ஸ் என்பவர்கள் நூறு சதம் ஒரே மரபியல் கொண்ட இரட்டையர்கள். ஃப்ராடெர்னல் ட்வின்ஸ் என்பவர்கள் ஐம்பது சதம். இதில் ஐடென்டிகல் ட்வின்ஸில் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பின், இன்னொருவரும் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க, ஃப்ராடெர்னல் டிவின்ஸாக இருப்பவர்களுக்கு இருக்கும் சாத்தியக்கூறுகளை விடவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என ஜெர்னல் ஒஃப் ஜெனிடிக்ஸில் (Journal of Genetics) ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது.

homosexual 370அதே ஜெர்னல் ஆஃப் ஜெனிடிக்ஸில் இன்னொரு கட்டுரை, ஆண் குழந்தையை சுமக்கும் பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தைக்கான தாயின் ஒவ்வாமை சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்த்துவதால், அதன் விளைவாக பிறக்கும் ஆண் குழந்தை ஓரின ஈர்ப்பு கொண்டதாக இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறதென சொல்கிறது.

இங்கே இன்னும் சில விஷயங்களையும் பேசியாக வேண்டி இருக்கிறது.

பெரும்பான்மையானவர்கள், ஓரினச்சேர்கையாளர்களையும், பாலின மாற்றுக்காரர்களையும் ஒன்றே போல் பார்க்கிறார்கள். அது தவறு. இரு தரப்புகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பால் மாற்றுக்காரர்கள் தங்களை, தவறான பாலினத்தில் பிறந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் சில குறிப்பிட்ட உளவியல் காரணங்களுக்காய் தன்னுடைய பாலினத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். இதுதான் மிக முக்கியமான வித்தியாசம்.

ஓரினச்சேர்க்கைக்கான காரணிகள் உளவியல் ரீதியிலானதா, அல்லது வேதியியல் பூர்வமானதா, அல்லது வேறு ஏதாவதா என்றும் குழப்பங்கள் நிலவுகின்றன. அமேரிக்க மனோதத்துவச்சங்கம், 1973 களிலேயே தன்னுடைய அதிகாரப்பூர்வமான மனோதத்துவ கோளாறுகளின் பட்டியலில் (Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM)) இருந்து ஓரினச்சேர்க்கையை நீக்கிவிட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது சொல்வது என்னவெனில், ஓரினச்சேர்க்கை என்பதை கோளாறு அல்லது மன‌நோய் எனக் கொள்ளுதல் கூடாது என்பதைத்தான்.

இன்னுமொன்றையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஓரினச்சேர்க்கை (Homosexual), நேர்ச்சேர்க்கை (straight) என்கிற இரண்டையும் கருத்தில் கொண்டோமேயானால், எந்த ஒரு மனிதரிடமும் இவ்விரண்டும் இயற்கையிலேயே இருக்க வாய்ப்பிருக்கிறது எனவும், எப்படி நெட்டையாக இருக்கும் மனிதனிடம் குட்டைத்தன்மைக்கான மரபணு வீரியமாக இல்லாமல் இருக்கிறதோ, அது போல நேர்ச்சேர்க்கை மனிதர்களிடம் ஓரினச்சேர்க்கைக்கான மூலக்கூறும் வீரியமாக இல்லாமல் பலவீனமாக இருக்கலாம் என்பதுதான்.

இது விளக்கமாக என்ன சொல்கிறதெனில், ஓரினச்சேர்க்கைக்கான மூலக்கூறுகள் இல்லாமல் இருப்பதைக் கூட நாம் பலவீனம் என்றே கொள்ளவேண்டும் என்பது தான். ஏனெனில், டார்வினின் உயிர்மலர்ச்சிக்கோட்பாட்டின்படி, நெட்டையாக உள்ள மனிதன் முழுவதும் நெட்டை இல்லை எனவும், குட்டைத்தன்மை பலவீனமாக இருக்கிற அல்லது எதிர்காலத்தில் குட்டைத்தன்மையை தனது சந்ததிகளுக்கு பரப்பத் தகுதியுள்ள ஒரு நெட்டை என்றே கொள்ள வேண்டும் என்பதுதான்.

ஆதலால், ஓரினச்சேர்க்கையாளர்களை எவரும் உதாசீனம் செய்யவோ, மரியாதைக்குறைவாகவோ நடத்த வேண்டியதில்லை. அது ஒரு குறை அல்ல. அது ஒரு இயல்பு.

அப்படி யாரேனும், அதை குறை எனக் கொள்வார்களானால், அவர்கள் உலகில் உள்ள அத்தனை பேரையும், ஏன் தங்களையும் சேர்த்தே குறை என்று சொல்லிக்கொள்ளலாம் என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய செய்தி.

இப்போது சொல்ல இருப்பது, இருப்பதிலேயே மிக மிக முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.

பழக்கவழக்கங்களின் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை, நேர்ச்சேர்க்கையாளர்களாக மாற்றலாமா, என்றால், முடியாது என்பது தான் பதிலாக இருக்க முடியும். எப்படி நேர்ச்சேர்க்கை என்பது இயல்போ, அது போலவே ஓரினச்சேர்க்கை என்பதும் இயல்பே. நேர்ச்சேர்க்கைக்காரர்களையும், எதையாவது செய்து ஓரினச்சேர்க்கையாளர்களாக மாற்ற இயலாது. ஆகவே ஓரினச்சேர்க்கையாளர்களை நாம் சமூகத்தை விட்டு ஒதுக்கிவைக்க வேண்டிய தேவைகள் இல்லை என்பது புலனாகிறது. மேலும், அதைக் குற்றமென்று கருதி தண்டனை அளிப்பதோ, மிக மிக அறிவீனமானதும் கூட‌. ஆகவே ஓரினச்சேர்க்கையாளர்கள் சூழ வளர நேர்ந்தால் நேர்ச்சேர்க்கை பிள்ளைகள் கூட ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிவிடுவார்கள் என்கிற பயமெல்லாம் அதீத கற்பனை மட்டுமே. அதில் எள்ளவும் உண்மை இல்லை.

சரி ஐயா, ஓரினச்சேர்க்கைக்கு காரணிகள் தான் என்ன என்றால் அங்கும் நான் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். நேர்ச்சேர்க்கைக்கு என்னைய்யா காரணி? என்று நான் உங்களைக் கேட்டால் எப்படி பேந்த பேந்த விழிப்பீர்களோ அதே தான் ஓரினச்சேர்க்கைக்கும். நேர்ச்சேர்க்கை எவ்வாறு ஒரு வித இயல்போ அதே போல் ஓரினச்சேர்க்கையும் ஒரு இயல்பே.

அறிவியல் வளராத காலத்தில், பூமி தட்டையென நம்பிக்கொண்டிருந்த காலத்தில், காரணிகள் தெரிந்து கட்டமைக்கவேண்டிய நிர்பந்தம் புரியாத காலத்தில், நம் சமூகத்தை நம் முன்னோர்கள் கட்டமைத்தபோது, எவ்வாறு சுயமைதுனமும், சொப்பன ஸ்கலிதமும் தவறு என்றும், ஒரு குற்ற உணர்ச்சியுடனும் பார்க்கப்பட்டதோ அதே போல், எண்ணிக்கையில் மிக மிகக் குறைவாக‌வே இருந்த ஓரினச்சேர்க்கையும் ஒவ்வாத ஒன்றாக பார்க்கப்பட்டுவிட்டது என்றே நான் கொள்கிறேன்.

உங்களையும் அவ்விதமே எடுத்துக்கொள்ளச் சொல்லி பரிந்துரைக்கிறேன்.

இப்போது கட்டுரையின் தலைப்பிற்கு வருவோம்?

ஓரினச்சேர்க்கையை அனுமதிப்பதா? வேண்டாமா? இந்தக் கேள்வியே இப்போது தவறாகிவிட்டது பார்த்தீர்களா? ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க நாம் யார்? நேர்ச்சேர்க்கை நம்மைக் கேட்டா அனுமதிக்கப்பட்டது? நேர்ச்சேர்க்கையை அனுமதிப்பதா ? வேண்டாமா? என்று என்றாவது கேள்வி எழுப்பியிருக்கிறோமா? எனினும்,

என்னைக் கேட்டால் நான் முதலில் பின்வரும் வாதங்களை முன்வைக்கவே விரும்புகிறேன்.

1. இக்காலத்தில் ஓரினச்சேர்க்கை ஆண்களை, சமூகத்திற்கு அடையாளப்படுத்த பயந்து, ஊருக்கு சொல்லாமல் மறைத்து, பொய் சொல்லி ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து, பாவம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கும், அதேபோல், ஓரினச்சேர்க்கை பெண்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்த பயந்து, ஊருக்கு சொல்லாமல் மறைத்து, பொய் சொல்லி ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைத்து, பாவம் ஒரு ஆணின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கும், ஓரினச்சேர்க்கைக்கு வெளிப்படையாக ஓர் அடையாளம் தந்து அங்கீகரித்து விடலாம்.

இதன் மூலம், நம் நண்பனோ/தோழியோ, உறவினனோ/உறவினளோ, ஓரினச்சேர்க்கையாளராக இருந்து கண் முன்னே அவமானப்பட நேராமல், இன்னொரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்காமல் நாம் எல்லோரும் இணைந்தே நமக்கான பூமையை, அதில் நமக்கான வாழ்க்கையை வாழலாம் என்கிற கோணம் எனக்கு பிடித்திருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்துவிடுவது இந்தக் கோணத்திலும் ஒரு சமூகத்திற்கு நன்மையே.

2. ஓரினச்சேர்க்கையோ, நேர்ச்சேர்க்கையோ இயல்பு என்று முன்பே சொன்னேன். அதற்கும் மரபியலுக்கும் கூட உள்ள தொடர்பையும் பார்த்தாகிவிட்டது. என் இரண்டாவது வாதம் என்னவெனில், ஓரினச்சேர்க்கையை அனுமதிப்பதன் மூலம், ஓரினச்சேர்க்கை இயல்புள்ள ஆண் - ஆண், பெண் - பெண் மரபணு, மரபணு தொடர்ச்சி விடுபட்டு அந்த தலைமுறையோடு நின்றுவிடும். அப்படிச்செய்யாமல், ஓரினச்சேர்க்கையை அனுமதிக்காததின் மூலம், ஓரினச்சேர்க்கை பெண் ஒரு நேர்ச்சேர்க்கை ஆணோடும், ஓரினச்சேர்க்கை ஆணை ஒரு நேர்ச்சேர்க்கை பெண்ணோடும் சேர்க்கின், அந்த ஓரினச்சேர்க்கை இயல்பு மரபணு தொடர்ச்சி காண நாமே வழி வகுத்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தக் கோணத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்துவிடுவது ஒரு சமூகத்திற்கு நன்மையே பயக்கிறது.

3. அவ்வாறு, ஓரினச்சேர்க்கையை அனுமதிக்காமல் போனால், ஓரினச்சேர்க்கையாளர்கள் அவமானத்திற்கு பயந்து மறைந்து மறைந்து தங்களுக்குள் ஒரு வகைப்படுதல் இல்லாமலும், ஒழுங்கின்றியும் பாலின சேர்க்கை புரிந்து புதிது புதிதாக‌ பால் வினை நோய்களுக்கு அது வழி வகுக்கலாம். அதலால் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்துவிடுவது இந்தக் கோணத்திலும் ஒரு சமூகத்திற்கு நன்மையே.

3. மேற்சொன்னவாறு, ஓரினச்சேர்க்கை மறுக்கப்பட்ட ஓரின ஆணும் பெண்ணும், சமூகத்திற்கென, ஒரு பெண்ணையும் ஆணையும் மணம் புரிந்து ஒன்றுக்கு மேற்பட்டவருடன் கலவி புரிவதால், வரும் பால்வினை நோய்களை தங்கள் துணைக்கும், குழந்தைகளுக்கும் கடத்தும் அபாயம் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துவிட்டால் இந்த அபாயம் தவிர்க்கப்படும். இதுவும் சமூகத்திற்கு நன்மையே.

4. ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு இயற்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. ஆயினும், அப்படியான (ஆண்-ஆண், பெண்-பெண்) தம்பதிகளுக்கு குழந்தை வளர்க்க அரசின் தொட்டில் குழந்தைகள் பயன்படலாம். இதற்கு அரசு ஏற்பாடு செய்யலாம். இப்படிச் செய்வதின் மூலம் அனாதை குழந்தைகளுக்கு ஒரு குடும்பம் கிடைக்கலாம். இதுவும் ஒரு சமூகத்திற்கு ஒரு கோணத்தில் நன்மையே.

இப்போது வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்கள் . ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கலாமா? வேண்டாமா?

Reference:

http://www.impactprogram.org/youth/biological-characteristics-associated-with-homosexuality-2/
http://psychology.ucdavis.edu/faculty_sites/rainbow/html/facts_mental_health.html
http://www.scientificamerican.com/article/homosexuality-cure-masters-johnson/
http://www.trincoll.edu/StudentLife/Help/safezone/Pages/Myth.aspx

(நன்றி: காவ்யா கலை, இலக்கியம், பண்பாட்டுக்கான காலாண்டிதழ் மலர் - 3, இதழ் - 2 ஏப்ரல் - ஜூன் 2014)

- ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., http://ramprasathkavithaigal.blogspot.in/)

Pin It