பண்டைய இலக்கியங்கள் வெறும் நுகர்ச்சிக்குரியன அன்று. அக்காலத்திய சமூகத்தின் வாழ்வியல் நிலையினைக் காட்டும் காலக்கண்ணாடி மட்டுமல்லாது மனித சமூகம் எட்டவேண்டிய விழுமியங்களைச் சுட்டிக் காட்டுவன எனலாம். அழகியல் செய்திகளையும் மிகையாகக் கூறப்படும் கற்பனை வளங்களையும் திகட்டத் திகட்டத் துய்ப்பதும் வியப்பில் ஆழ்ந்து போவதும் நல்ல இலக்கியப் பயன் ஆகா. இலக்கியத்தின் உயரிய குறிக்கோளும் அவையல்ல. அத்தகு நோக்கும் போக்கும் ஆபத்து நிறைந்தவை. நல்ல இலக்கியம் நற்சிந்தனைகளைத் தூண்டவல்லது.

sati 360இலக்கியத்தில் காணப்படும் மேலோட்ட செய்திகளில் சிலாகிப்பதென்பது வீண்வேலையாகும். அதனுள் ஆழப் புதைந்துக்கிடக்கும் கருத்துகளை நுட்பமாக வெளிக்கொணர்வதுதான் இலக்கியத் திறனாய்வின் முதன்மைப் பணியெனலாம். அந்த வகையில் செம்மொழி நூல்களுள் ஒன்றாகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ள முத்தொள்ளாயிரம் நூலில் இடம்பெற்றுள்ள 104ஆவது பாடலான,

ஏனைய பெண்டீர் எரிமூழ்கக் கண்டுதன்

தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி-யானையெலாம்

புல்லார் பிடிபுலம்பத் தாம்கண் புதைத்தவே

பல்யானை அட்ட களத்து.

என்பதில் வெற்றிவாகை சூடிய பாண்டிய மன்னன், பல்யானைகள் கொன்றொழிக்கப்பட்ட போர்க்களத்தின் கண், இறந்த பகைவர்களின் மனைவியாகிய பெண்கள் உடன்கட்டையேறி தீயில் மூழ்கியெரிவதைக் கண்டு தான் உடுத்தியிருந்த ஆடையால் காணச்சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டான் எனவும், அவனைப்போலவே அவனுடைய யானைகளும் பகைவர்களின் பெண்யானைகள் அவற்றின் ஆண்யானைகள் கொல்லப்பட்டதனால் வருந்திப் புலம்பியதைக் கண்டு தம் கண்களை மூடிக்கொண்டன எனவும் பொதுவாக விளக்கம் கூறப்பெறும்.

இதனையே சற்று நுணுகி ஆராய்ந்தோமானால் பண்டைத் தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவந்த போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவியர் தீமூட்டி அதில் வீழ்ந்து மடியும் உடன்கட்டையேறும் சதிவழக்கு மரபாக இருந்துவந்ததையும் அதனைத் தடுத்து நிறுத்தவல்ல ஆட்சியதிகாரம் நிரம்பப் பெற்ற மாமன்னர்களின்; திராணியற்றுக் கிடந்த இயலா நிலையினையும் அக்கால சமூகத்தில் கோலோச்சிக் காணப்பட்ட பெண்ணடிமைத் தன்மையினையும் சிறப்புற எடுத்துரைப்பதாக இப்பாடல் அமையப்பெற்றுள்ளது நோக்கத்தக்கதாகும். இதன் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயத்தில் சரிபாதி இனமாக விளங்கும் பெண்ணினத்தின் இருப்பையும் ஆணாதிக்கச் சமுதாயத்தினரால் அப்பெண்ணினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையினையும் நன்குணர முடியும். முடியாட்சியாளர்களாலேயே செய்ய முடியாததை மக்களாட்சி மலரயிருந்த சமுதாயத்தில் உதித்திட்ட சமூக சீர்திருத்தவாதிகளால் இதுபோன்ற பெண்கொடுமையினை ஒழிக்க முடிந்ததை இங்கு நினைவுகூர்வது நல்லது. இதன் எச்சங்கள் இன்றும் இந்திய சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வதை பல்வேறு ஊடகங்கள் மூலமாக அறியவிருப்பதைப் பார்க்கும்போது பெண்ணினம் கடக்கவேண்டிய தொலைவு நிறைய உள்ளது. மேலும், இயலாமையால் வாய்பொத்தி அழப் போகின்றாயா?அல்லது அநீதிக்கெதிராகப் பொங்கி எழப் போகின்றாயா?எனக் கேள்விக் கேட்பதாக அமைந்துள்ளது இப்பாடல்.  

- முனைவர் மணி.கணேசன்

Pin It