நாம் பயணிக்கக்கூடிய ரயில், பஸ் போன்ற இடங்களில் குழந்தைகள் பிச்சை எடுப்பது என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாம் போகும் ஒவ்வொரு இடங்களிலும், நம்மைப் பின் தொடருபவர்களாக இருக்கின்றனர்.

child begger 348குழந்தைகள் கையேந்தி வரும் சூழ்நிலை இன்று நம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் என்றால், கைக்குழந்தைகள், இரண்டு வயது, மூன்று வயதுக் குழந்தைகள் என்று வீட்டில் இருக்க வேண்டியவர்கள் வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரயில்களில் குட்டிக் கர்ணம் அடித்துக் கொண்டும், பல்டி அடித்துக் கொண்டும் மக்கள் முன் காட்சிப் பொருளாக பயன்படுத்தப்படுகிறார்கள். பிறகு அவர்களின் தாய்மார்கள் தட்டுக்களை ஏந்தி காசுகளை வசூலிப்பார்கள். இது பார்ப்பவர்களின் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்கின்றது.

இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் பெரும் நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்தான் குழந்தைப் பிச்சைக்காரர்கள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குர்காவன் பகுதியில் 'ஆல் இந்தியா சிட்டிசன் அலைன்ஸ் ஃபார் புரோகிரஸ் அண்ட் டெவலப்மெண்ட்' என்ற தன்னார்வ அமைப்பும் மற்றும் இனோவேஷன் மொபைல் ஸ்கூல் என்ற அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சாலையோரங்களில் உள்ள 6,000 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தினர். இவர்களின் வயது வரம்பு 614 வயது வரை இருக்கும்.

இந்த ஆய்வு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெற்றது. மாநகர நிலையங்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பிச்சைக் எடுத்துக் கொண்டிருந்த 4,000 சிறுமிகள் மற்றும் 2,000 சிறுவர்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டார்கள்.

எவ்வளவு பிச்சை எடுக்கும் குழந்தைகள் இருக்கின்றார்கள், அவர்களை ரைட் டூ எஜுகேஷன் மூலம் கல்வி பயில வைப்பது என்ற நோக்கத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வு.

குழந்தைகள் பிச்சை எடுப்பதில் வருமானம் மாதம் 5,000 ரூபாய் கிடைக்கின்றது. இன்னும் சில நேரங்களில் 12,000 ரூபாய் வரையும் சம்பாதிக்கின்றனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சில குழந்தைகள் படிப்பதற்காகத்தான் பிச்சை எடுக்கின்றனர் என்ற தகவலும் ஆய்வில் வந்துள்ளது.

குழந்தைகளின் இந்த நிலைக்கு மூன்று விதமான காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, பிறக்கும்போதே அவர்கள் வறுமையின் காரணமாக பிச்சை எடுக்கின்றனர். இரண்டாவதாக, பெற்றோர்களின் அக்கறையின்மையால் பிச்சை எடுப்பதற்கு தள்ளப்படுகின்றனர். மூன்றாவதாக சில தீய சக்திகளால் குழந்தைகள் விலைக்கு வாங்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர்.

இந்த முதல் வகையினர் எப்படி என்றால், இவர்களின் பிறப்பே வீதியில் தான். இவர்களின் பெற்றோர்களும் வீதியில்தான்; இவர்களின் இருப்பும் வீதியில் தான். இவர்களின் அனைத்துவிதமான செயல்பாடுகளும் வீதியில் தான். அதனால் தான் அவர்களும் வீதிக்கு வருகின்றார்கள். இவர்களின் நிலை என்பது காலம் காலமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இவர்களிடம் மாற்றம் என்பது அவ்வளவு இலகுவாக நடைபெறுவதில்லை. ஆனாலும், அரசுகள் இவர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, பெற்றோர்களின் அக்கறையின்மையால் வீதிக்கு வரும் குழந்தைகள். இவர்களின் பெற்றோர்கள் தங்களின் மேல் அக்கறையில்லாமல், தங்களின் பிள்ளைகள் மேல் அக்கறை இல்லாமல் இருப்பது, வேலைக்குச் செல்லாமல் இருப்பது, திருட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவபர்கள். இதனால், குழந்தைகளை கவனிப்பது என்பது இல்லாமல் போய்விடும். பள்ளிக்கும் குழந்தைகள் செல்ல மாட்டார்கள். அவர்களை ஒழுங்காக நடத்துவது போன்ற செயல்களில் அக்கறை காட்டாமல் இருப்பார்கள். இதனால், வயிற்றுப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வேண்டிய சூழல் வந்து விடும். ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளுக்குச் சென்று கைநீட்டத் தொடங்குவார்கள். இதுவே அவர்களின் தொழிலாக மாறிவிடும். அதன்பிறகு, அவர்களின் தேவைகள் அனைத்தும் இதை வைத்தே பூர்த்தியாகும்.

அடுத்ததாக, மூன்றாவது புரோக்கர்கள் மூலம் பிச்சை எடுக்க வைக்கப்படுவது. இன்று, பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருந்தும், இதையும் ஒரு வழியாக பயன்படுத்துகின்றனர். குழந்தைகளின் உடல்களில் ஏதாவது காயப்படுத்திவிட்டு குழந்தைகளை விட்டு விடுகின்றனர். இதனால், அவர்களின் அடையாளங்கள் கூட யாருக்கும் தெரியாது. இப்படி குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் வடமாநிலங்களில் அதிகமாக நடைபெறுகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகமாக குழந்தைப் பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, குழந்தைகளை மீட்டெடுத்து கல்விக்கூடங்களில் சேர்க்க முயல வேண்டும். வல்லரசு இந்தியாவை உருவாக்க முயலும் அரசுகள் அதில் குழந்தைகளின் பங்கு இன்றியமையாததாகும் என்பதை உணர வேண்டும்.

நெல்லை சலீம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It