இலக்கிய வழிகாட்டியாகவும் பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும் தமிழ்த் தேசியச் சான்றோராகவும் விளங்கிய தோழர் தி..சி. அவர்கள் 25.03.2014 அன்று இரவு காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தோழர் தி..சி. அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

thi ka si 330மார்க்சிய லெனினியத்தின் மீது நீங்காத பற்றுறுதி கொண்ட தோழர் தி..சி., அந்தந்த மண்ணுக்கேற்ப மார்க்சியம் பயன்படுத்தப்படவேண்டும் - வளர்க்கப்படவேண்டும் என்ற தெளிவில் உறுதியாக இருந்தார். கடந்த பத்தாண்டுகளாக தி..சி. அவர்களோடு எனக்கும் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. தமிழர் கண்ணோட்டம் இதழில் வரும் கட்டுரைகள் மற்றும் படைப்புகள் அவர் கவனத்தை ஈர்த்ததே அந்த நெருக்கத்திற்குக் காரணம். தம்மைத் தமிழ்த் தேசியராக அறிவித்துக் கொண்டார் தி..சி. மார்க்சிய - லெனினியம் தேசிய இன விடுதலைக்கு எதிரானது அல்ல என்ற உண்மையை நூற்றுக்கு நூறு ஏற்றிருந்த அவர் தேசிய இனத் தன்னுரிமையைப் பயன்படுத்த இந்தியாவிலுள்ள எல்லா தேசிய இனங்களும் உரிமை படைத்தவை என்று அவர் கருதினார். தொடக்கம் முதல் இறுதி மூச்சு வரை அவர் இந்திய கம்யூனிஸ்ட்க் கட்சியில்தான் இருந்தார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் வைத்திருந்தார். ஆனாலும் தற்சார்புள்ள சிந்தனையாளராக அவர் விளங்கினார்

வர்ணசாதி எதிர்ப்பு, வர்க்கச் சுரண்டல் எதிர்ப்பு, தேசிய இன இறையாண்மை உரிமை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்ட ஒரு மார்க்சியராக அவர் திகழ்ந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஐயம் திரிபற ஆதரித்தார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். தி..சி. அவர்கள் மேற்கண்ட தம் நிலைப்பாடுகளை ஒருபோதும் ஒளித்து வைக்கவில்லை. அவருடைய கட்டுரைகளில், சொற்பொழிவுகளில், ஏடுகளுக்கு எழுதிய வாசகர் கடிதங்களில் தமது இந்த நிலைப்பாடுகளை அவர் வெளிப்படுத்தினார். தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி இலக்கிய அரங்குகளில் அவர் பேசிய பேச்சுகள் ஏடுகளில் வந்துள்ளன. அவர் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராக விளங்கியதைப் போலவே சிறந்த அரசியல் திறனாய்வாளராகவும் விளங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஒருபோதும் தவறிவிடக் கூடாது என்று அவர் அடிக்கடி கூறுவார்

திருநெல்வேலிப் பக்கம் செல்லும்போதெல்லாம் சுடலைமாடன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் தி..சி. அவர்களைப் பார்த்து உடல்நலம் விசாரித்து அவரோடு உரையாடி ஊக்கம் பெற்றுவருவதைக் கடந்த சில ஆண்டுகளாக நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். தொண்ணூறு அகவையைத் தொடும் நிலையில் இருந்தபோதும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருந்த தி..சி. அவர்களின் இயங்கு ஆற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தும். கடைசியாக 3.3.2014 அன்று திருநெல்வேலியில் அவர் மகன் கல்யாணசுந்தரம் (கல்யாண்ஜி) அவர்கள் இல்லத்தில் நோயுற்ற நிலையில் இருந்த போது பார்த்துப் பேசிவந்தேன். வரும் மார்ச் 30 அன்று அவர் தொண்ணூறாவது அகவையில் அடியெடுத்து வைக்க இருந்தார். அப்போது அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பினோம். ஆனால் அதற்குள் தோழர் தி..சி. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்

தி..சி. அவர்கள் எழுதிய நூல்களிலும் கடிதங்களிலும் கட்டுரைகளிலும் நண்பர்களுடனும் தோழர்களுடனும் நடத்திய உரையாடல்களிலும் தி..சி. தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார், வழிகாட்டிக் கொண்டிருப்பார் என்ற ஆறுதலை தி..சி.யின் தோழர்களாகிய நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டு தி..சி. அவர்களுக்கு மீண்டும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Pin It