தமிழகத்தில் ஏப்ரல் 24 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். இருப்பவர்களில் யார் நல்லவர்? எனப் பகுத்தாய்ந்து அன்றைய தேதியில் வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை எனப் ஊடகர்களும் அரசியல் அலசர்களும் எப்போதும் போல் உபன்யாசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வாக்கும் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகும் மந்திரச் சாவியாம்! ஒவ்வொரு கட்சியும் "நாங்கதான் ரொம்ப நல்லவங்கன்னு" தம்பட்டமடித்துக் கொள்கிறது.

modi rss 230நீங்க எப்படி நல்லவங்கன்னு காங்கிரஸ்காரர்களைக் கேட்டா, மோடி மாதிரி ஒரு கொடூர மனிதன் உண்டா? குஜராத்தில் மூவாயிரம் முஸ்லீம்களைக் கொலை செய்வதற்குப் பின்புலமாக இருந்தவரல்லவா அவர்? கோத்ராவில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்களால் நடந்த வினைக்கு எதிர்வினையே இதுவென குஜராத் படுகொலைகளை நியாயப்படுத்தியரவல்லவா அவர்? இந்த மோடி பிரதமரானால் இந்தியா என்னாகும்? என்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு இந்து மத வெறியரை தலைமை அமைச்சராக்க நினைப்பது முறைதானா? என பாஜகவினரைக் கேட்டால், இந்திராகாந்தியைக் கொன்றவர்கள் சீக்கியச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அப்பாவிச் சீக்கிய மக்களை தில்லி வீதிகளில் காங்கிரஸ் குண்டர்கள் கொன்று குவிக்கவில்லையா? பெரிய ஆலமரம் சாயும் போது நிலம் அதிரத்தான் செய்யுமென அலட்சியமாகக் கூறி ராஜிவ் காந்தி அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்தவில்லையா? எனப் பதிலுக்குக் கேட்கின்றனர்.

ஏன் வால்மார்ட்டைக் கொண்டு வருகிறீர்கள்? என பாஜக கேட்க, அவர்களை முதலில் இன்னும் பெரும் பங்குடன் வெற்றிலைத் தாம்பூலத்துடன் அழைத்தது நீங்கள்தானே என்கிறது காங்கிரஸ்.

ஆக, நீ என்னத்த கிழிச்ச? அவங்க ரொம்ப யோக்யமா? எனக் குழாயடிக் கூச்சலாகத்தான் இந்திய, தமிழகத் தேர்தல் பரப்புரைகள் நடந்து வருகின்றன. குஜராத் வளர்ச்சி என்னும் முழக்கம் வெறும் பித்தலாட்டமே என்ற உண்மை நாளுக்கு நாள் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது. எனவே தங்கள் நேர்மை பற்றிப் பேச வக்கில்லாமல் மற்றவர்களின் கதைகளைப் பற்றிப் பேசுவதில்தான் அனைத்துக் கட்சிகளின் கவனம் முழுதும் குவிந்துள்ளது. இவர்கள் யாருக்கும் வெட்கமில்லை. ஏனென்றால் இவர்கள் யாருக்கும் நிரந்தரக் கொள்கையில்லை. எனவேதான் இவர்கள் "அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை" என்னும் தத்துவ முத்தைப் புதுக் கூட்டணிக்குத் தாவும் போதெல்லாம் உதிர்த்து வருகிறார்கள்.

இப்போது திமுகவைப் பாருங்கள். அது புடம்போட்ட மதச்சார்பின்மைக் கட்சி போல் இப்போது படம் காட்டிக் கொண்டிருக்கிறது. கலைஞரின் மதச்சார்பின்மையை நம்பி மதச்சார்பற்றவர்கள் அனைவரும் திமுகவுடன் கைக்கோக்க வேண்டுமாம். நீங்கள் தேர்தல் முடிந்ததும் பாஜகவுக்குத் தாவ மாட்டீர்களா? எனக் கேட்டால், மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசி விட்டு நாங்கள் எப்படி இந்துத்துவத்துக்கு ஆதரவளிப்போம் என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. கே. எஸ். இளங்கோவன். கலைஞர் ரசிகர்களும் இதே பாணியில் மதவெறியை எதிர்க்கும் தேர்தலிது என்கிறார்கள். இவர்களது சொல் நாணயத்தைப் புரிந்து கொள்ள 1998க்குச் செல்ல வேண்டும். பாஜகவின் வாஜ்பாய் முகமூடியைக் கழற்றி விட்டுப் பார்த்தால் ஆர்எஸ்எஸ் என்னும் காட்டுமிரண்டிக் கும்பல்தான் நம் கண்ணுக்குத் தெரியுமென 26.02.1998 முரசொலியில் எழுதினார் கலைஞர். எனவே வாஜ்பாயே ஆனாலும் மதவெறி பாஜகவை எதிர்ப்போம் எனக் கூறி அந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது திமுக. தேர்தல் பரப்புரையில் பண்டார, பரதேசிகள் என பாஜகவை ஏசியது. பாஜகவினர் காட்டுமிராண்டிகளென 15.02.1999 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்குப் பேட்டியளித்த முரசொலி மாறன் அடுத்த இரண்டே மாதத்தில் 17.04.1999 அன்று ஜெயலலிதா வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்த போது பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். காட்டுமிராண்டி வாஜ்பாய் இரண்டே மாதத்தில் திமுகவினருக்கு ஜென்டில் மேன் ஆனார், கலைஞருக்கோ மனிதருள் மாணிக்கமானார். இதுதான் இவர்களின் வாக்கு நேர்மை என்றால், இன்னும் இரண்டே மாதத்தில் மோடி இவர்களுக்கு குஜராத்தின் குறள்மகன் ஆக மாட்டாரா என்ன?

மோடியையோ ராகுலையோ ஆதரிக்க மாட்டோம் எனக் கலைஞர்தான் கூறி விட்டாரே எனச் சிலர் இப்போதும் சந்தேகப்படலாம். 2002 குஜராத் கலவரங்களுக்குப் பின்னர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத் தீர்மனம் வந்த போது அதற்கு எதிராக வாக்களித்ததும், அதைத் தொடர்ந்து மோடி குஜராத்தில் தன்னைக் கொலைப் பாதகங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மாநாடு போட்ட போது, அங்கு தஞ்சை பழனி மாணிக்கத்தை அனுப்பி வைத்து மோடியின் கொலைக் கரங்களை உயர்த்திப் பிடிக்கச் செய்ததும் சாட்சாத் கலைஞர்தான். ஆனால் இவரைத்தான் மதச்சார்பின்மைக் காவலர் என ஒரே ஒரு சீட்டுக்காகத் தூக்கிப் பிடிக்கின்றன மனிதநேய மக்கள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும்.

பாஜகவோடு ஒரு ஐந்தாண்டு, காங்கிரசோடு ஒரு பத்தாண்டு குடித்தனம் நடத்தியாயிற்று. இப்போது யாரை எதிர்த்துப் பேசுவது. எனவேதான் இந்தத் தேர்தல் பரப்புரையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள ஸ்டாலின் ஜெயலலிதாவைக் குறி வைத்தே பேசி வருகிறார். நாட்டைக் கூறு போட்டு அயலாருக்கு விற்பது, விரும்பிய போதெல்லாம் எரிபொருள்களின் விலைகளை உயர்த்துவது, தனியார்த் துறை இடஒதுக்கீட்டுக்கும் இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டுக்கும் குழிதோண்டுவது என மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் ஜெயலலிதா எதிர்ப்புப் பரப்புரையாக இத்தேர்தலை மாற்றியுள்ளார் ஸ்டாலின். அடுத்த ஊர்க்காரி லட்ச லட்சமாய்ப் பணம் குவித்தாலும் கவலைப்படாதவளுக்கு அடுத்த வீட்டு அக்கா எட்டணா தோடு வாங்குவதுதான் பெருங்கதை! கோடி கோடியாய் ஆயுதப் பேரம் நடத்தி ஊழலில் திளைக்கும் தில்லி ஏகாதிபத்திய அண்ணன்கள் பற்றி ஸ்டாலினுக்கு என்ன கவலை? பாவம்! சென்னை அக்காவின் மீதுள்ள அச்சமே நமது தளபதியை வாட்டி வதைக்கிறது.

விஜயகாந்தும் சூடு பறக்கப் பரப்புரையைத் தொடங்கியாகி விட்டது. ஊழலை ஒழிக்கத்தான் பாஜகவுடன் கூட்டணியாம். ஆ. ராசாவின் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழலுக்கு எதிராக பாஜக செய்த ரகளையைப் பார்த்து அவங்கள ரொம்பவும் நல்லவங்கன்னு நமது கேப்டன் நம்பி விட்டார் போலும். ஆனால் இதே பாரதிய ஜனதா பார்ட்டி சுக்ராம் என்னும் காங்கிரஸ்காரர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டி 13 நாள்களுக்கு நாடாளுமன்றத்தையே திமிலோகப்படுத்தியது. அவர் கீழமை நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்டார். காங்கிரஸ் அவரைக் கட்சியை விட்டு நீக்கவே இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த மனிதருடன் பாஜக 1998 இமாசலப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கூச்சமில்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டு அவரை அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக்கி அழகு பார்த்தது. இன்னும் பொட்டலத்தைத் திறந்தால் பாஜகவின் வீச்சம் ஃபெர்ணான்டஸ், சிபு சோரன் வரை நாறும். ஊழல் பெருச்சாளிகளுக்கு இந்துத்துவத்தில் கரைந்தால் பாப விமோசனம் கிடைக்காமல் போய் விடுமா என்ன? இதில் பாஜகவின் சொந்த எடியூரப்பாக்களும் பங்காரு லட்சுமணன்களும் தனிக் கணக்கு! திடீரென ஊழல் பற்றியெல்லாம் மிகவும் கவலைப்படும் 'கேப்டன்' பல்லாண்டுகளாய் விஜய்காந்த் ரசிகர் மன்றக் கொடி கட்டி வரும் ஏழை ரசிகர் ஒருவருக்கேனும் மக்களவைத் தொகுதியைக் கொடுப்பாரா?

வாஜ்பாயின் பாஜக தமிழீழத்துக்கு ஆதரவாக இருந்ததாம், அதனால் இன்றைய மோடியின் பாஜகவுக்கும் ஆதரவுக் கரம் நீட்டுகிறாராம் வைகோ. தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்ததாகச் சிறையில் அடைத்த ஜெயலலிதாவுக்கு பாஜக பின்புலமாய் இருந்ததாகக் கூறித்தான் காங்கிரசுக்குத் தாவினார் வைகோ. கொடுங்கோலன் ராஜபட்சனுக்கு மத்திய பிரதேசத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்த பாஜகவுக்கு எதிராகத்தான் சாஞ்சி வரை சென்று ஆர்ப்பரித்தார் வைகோ. தமிழர்களுக்கு எதிராக ராஜபட்சே அரசு நடத்திய போருக்கு வருத்தம் தெரிவிக்க சம்பிரதாயமாக காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்தத் தயாராக இல்லை சுஷ்மா சுவராஜ். ராஜீவ் கொலை வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள ஏழு தமிழர்களை விடுவிப்பதற்குத் தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது கட்சித் தலைமைக்கு எதிரான செயல் என்கிறார் ராஜ்நாத் சிங். இந்திய மொழிவழிப் பிரிவினையே தவறு எனத் திருச்சிராப்பள்ளி வந்து முழங்குகிறார் மோடி. இவர் தமிழீழ மக்களின் மொழி காக்கக் குரல் கொடுப்பாரென நம்மை நம்பச் சொல்கிறார் வைகோ.

கொஞ்ச நாளாய் காதல் நாடகம் எனப் பேசி சாதியத்தீயைப் பற்ற வைத்த ராமதாஸ் இப்போது மோடியின் இந்துத்துவ நாடகத்தை அரங்கேற்றக் களமிறங்கி விட்டார். சரியான படிமலர்ச்சிதான். இத்தனை நாள் திரை நடிகர்களைக் கோமாளிகள் என்றும், அவர்கள் ரசிகர்களை முட்டாள்கள் என்றும் பகடி பேசியவர், நடிகன் நாடாளக் கூடாதென முழக்கமிட்டவர் இப்போது அவர்களின் தயவில் வெல்ல ஆசைப்படுகிறார். ஒரு காலத்தில் தமிழரின் வாழ்வுரிமைக்குக் குரல் கொடுத்துச் சிறை சென்றவர் இன்று சின்ன கவுண்டரின் குடைக்குள் தஞ்சம் அடையத் தயாராகி விட்டார். குடைக்குள் தஞ்சம் கிடைக்குமா அல்லது ஹவுஸ் ஃபுல் பலகை மாட்டி பாஜக எட்டி உதைக்குமா? என வேர்த்து விறு விறுத்து வரிசையில் நின்றவருக்கு, ஒரு வழியாக கேப்டனின் அரங்கில் டிக்கெட்டும் கிடைத்து விட்டது. இனி என்ன? தமிழரின் வாழ்வுரிமையைப் புரட்சிக் கலைஞரின் ரசிகர் மன்றக் கொட்டகையில்தான் தேட வேண்டும்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழலில் மாட்டிக் கொண்டதால்தான் காங்கிரஸ் நடத்தி முடித்த தமிழீழப் படுகொலைகளைக் கலைஞர் ஆதரிக்க வேண்டியதாயிற்று என்றார் திருமாவளவன் (12.06.2011 பாலிமர் தொலைக்காட்சி மக்களுக்காக நிகழ்ச்சி நேர்காணல்). இப்போது அவர் இன்னுமொரு சீட்டு கேட்டுக் கலைஞரிடம் மன்றாடிய போதே இந்த அலைக்கற்றை மோசடி இன்னுமொரு தமிழின அழிப்புக்குத் துணைபோகாதிருக்குமா என வாக்குறுதியேதும் பெற்றாரா தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் ஐந்து நிமிடத்துக்கு மேல் பேச அனுமதிக்கப்படாத நான் தமிழர்களுக்கும் தலித்துகளுக்கும் என்ன செய்து விட முடியும் என ஊடகங்களில் அங்கலாய்க்கும் திருமாவளவன் திரும்பவும் அதே மக்களவை தரிசனத்துக்கு வரிசையில் நிற்கிறார்.

இவர்கள் அனைவரையும் முந்திக் கொண்டு பிரதமர் நாற்காலிக் கனவுகளுடன் மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ராசா மத்திய அமைச்சராக பதவி வகிக்கக் கூட தகுதியற்றவராம். ஆனால் முதலமைச்சர் தொழிலைப் பயன்படுத்தி கணக்கு காட்டாமல் பல கோடிச் சொத்துக்களைக் குவித்த வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கும் இவர்தான் உள்ளபடியே ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூட தகுதியற்றவர். ஆனால் தலைமையமைச்சராகத் துடிக்கிறார். இதுதான் இவரது புரட்சி போலும். ஒரு பக்கம் இந்தியா ஆயுதம் கொடுத்துத் தமிழீழ மக்களை அழித்தது என்கிறார், இந்திய இராணுவம் தமிழர்க் கடலில் கொல்லப்படும் மீனவர்களைக் காப்பாற்றாது வேடிக்கை பார்க்கிறது என்கிறார். ஆனால் அந்த இராணுவத்துக்குக் கொட்டும் பணம் போதாதாம், இவர் தில்லியைக் கைப்பற்றினால் இராணுவத்தை பலப்படுத்தி இந்தியாவை வல்லரசு ஆக்குவாராம். தமிழகத் தமிழ்ப் பள்ளிகளை ஆங்கிலமயமாக்கித் தமிழகக் கல்வியின் எதிர்காலத்தையே அழிக்கத் துடிப்பவர் இப்போது இந்தியாவை வல்லரசாக்கப் புறப்பட்டு விட்டார். ஒருபுறம் இலங்கைக்கு எதிராகத் தடைகோரி சட்டமன்றத் தீர்மானம் இயற்றுகிறார். மறுபுறம் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கொளத்துர் மணி போன்றவர்களைத் தளைப்படுத்துகிறார். ராசபட்சே தமிழீழத்தைத் தரைமட்டமாக்குவதை எதிர்த்துக் கொண்டே நெடுமாறனின் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கத் துணிகிறார். ஆனால் தில்லி போய் தமிழீழ விடுதலையை வாங்கித் தருவேன் என்று அளக்கிறார். ராமாயணத்தை ஆரியக் குப்பை எனத் தூக்கி எறிந்த அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக் கொண்டு இராமர் பெயரிலான பொய்ப் பாலத்தைக் காக்கக் கோரி உண்மைச் சேது பாலத்துக்கு சமாதி கட்ட நினைக்கிறார்.

இவரால் தனித்து விடப்பட்டுத் தனி அணி கண்டுள்ள இடதுசாரிகளைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? பெருமுதலாளி டாடாவை நம்பி மோசம் போனவர்கள். தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்கள். இன்று மம்தாவிடமே பம்மி உள்வாங்கிக் கொண்டு, முலாயம், நிதிஷ் (நேற்று வரை ஜெயலலிதா) போன்ற அரைகுறைகளுடன் கூட்டுச் சேர்ந்து தில்லியில் புரட்சிச் சோறு சமைக்க ஆசைப்படும் இடதுசாரிகளின் ஆர்வக்கோளாறை என்னென்பது?

இந்திய நலன் காக்க ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு பாரதமாதா நலன் காக்க காஷ்மீரத் தேசிய ஓர்மையை அழித்தொழிப்பது பற்றிக் கவலையில்லையாம். ஏழு தமிழரும் ஆயுளுக்கும் சிறைக் கொட்டடியில் கிடக்க வேண்டுமாம். இவரை நம்பி சுப. உதயகுமார் போன்ற சமூகப் போராளிகள் தேர்தல் அரசியலில் இறங்கத் துணிந்திருப்பது கெடுவாய்ப்பே!

vaiko vijayakanth anbumani 630

தமிழகத்தின் வெறும் 40 மக்களவை இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு தில்லியில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பது தெரிந்தேதான் ஸ்டாலினும், விஜயகாந்தும், ராமதாசும் இந்தத் தேர்தலைச் சட்டமன்றத் தேர்தலாகவே மாற்றி விட்டனர். கூட்டணிப் பேச்சுக்களை நாட் கணக்கில் நடத்தும் தமிழகக் கட்சிகள் அனைத்தும் தங்கள் கொள்கைத் திட்டங்கள் எதையும் முன்வைக்காமல் சீட்டுப் பேரங்களிலேயே குறியாய் இருக்கின்றன. இக்கட்சிகள் அனைத்தும் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் கச்சத்தீவை மீட்போம், தமிழை நீதிமன்ற மொழியாக்குவோம், காவிரி மேலாண்மைக் குழு அமைப்போம் என உரிமையுடன் முழங்குவதில்லை. மாறாக, அவ்வுரிமைகள் கேட்டு நாங்கள் இடம்பெறும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கின்றனர். சும்மா வலியுறுத்துவதற்கு இவ்வளவு செலவழித்துத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ன? இவர்களின் மாநில மாநாட்டுத் தீர்மானங்களே போதுமே! ஆனால் இவர்கள் தில்லி செல்வது உரிமைகளை மீட்டுப் பெற அல்ல, ஊழல் கோடிகளில் தங்களுக்குரிய பங்கைப் பெறவே.

உலகமயக் கொள்கையில், சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில், இந்தி, ஆங்கிலத் திணிப்பில், காவிரி மறுப்பில், பெரியாற்றணை உடைப்பில், தமிழீழ அழிப்பில், மீனவர்க் கொலையில், மூவர் தூக்கில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்கும் வேறுபாடே இல்லை எனப் பல சூழல்களிலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அமைக்கும் ஏதோ ஒரு கூட்டணியில் இடம்பெற்றுத்தான் தமிழகக் கட்சிகள் ஒரு சில பதவிகளில் அமர முடியும் என்ற நிலையில், நமது வாக்குச் சாவி உரிமைக் கதவுகளைத் திறக்குமா? அல்லது இன்னும் பல ஊழல் பெருச்சாளிகளைத் திறந்து விடுமா?

சரி, அதற்காக வாக்களிக்காமல் வீட்டில் சிவனே என்று கிடப்பது தவறில்லையா எனக் கேட்கலாம். வாக்களிக்க மறுப்பது சுருண்டு படுத்துத் தூங்குவதற்கு அல்ல. தமிழர்தம் உரிமைகளை மீட்டெடுக்கவே! நாள்தோறும் வீதிகளில் இறங்கிப் போராடவே!

தேர்தல்களைப் புறக்கணிக்கச் சொல்லி இந்திய விடுதலைக்குப் போராடியவர்தான் காந்தியார்.

தேர்தலுக்கு வெளியே நின்ற தந்தை பெரியாரால்தான் பிற்படுத்தப்பட்டு மக்களுக்குக் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கும் இந்திய அரசமைப்பின் முதல் சட்டத் திருத்தம் நிறைவேறியது.

தமிழ்ப் போராளிகளின் முதுகில் சுட்டுக் கொன்ற சிங்களப் படையாட்களின் வெறிச்செயலைக் காட்சிப்படுத்திய சேனல் 4 காணொளி போலியானதில்லை எனத் தெரிந்த பிறகே கருத்துக் கூறுவதாக ராஜபட்சே பாணியில் சொன்ன கருணாநிதியைச் சிறுவன் பாலச்சந்திரன் இறந்து கிடந்த ஒளிப்படத்தைக் கண்டவுடன் அழ வைத்ததும், இலங்கைக்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கத் தயாராயிருந்த தமிழகக் கட்சிகளை அத்தீர்மானத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வைத்ததும் வாக்கு வங்கி அரசியலுக்குத் தொடர்பில்லாத மாணவர்களின் எழுச்சியே என்பதை மறந்து விடக் கூடாது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தூக்குதான் ஒரே முடிவு எனக் கூறி வந்த ஜெயலலிதாவை அந்த மரணத் தண்டனையைக் குறைக்கக் கோரிச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தது மூன்று பெண் வழக்குரைஞர்களின் திடமான பட்டினிப் போராட்டமும், தீக்குத் தன்னைத் தின்னக் கொடுத்த தமிழச்சி செங்கொடியின் ஈகமுமே என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

எனவே 2014 ஏப்ரல் 24 தேர்தல் நாளில் எவருக்கும் வாக்கில்லை (நோடா) எனும் பொத்தானை அமுக்குவோம்! ஏமாற்று அரசியல் நாடகத்துக்கு முடிவு கட்டி தமிழர் இழந்து வரும் உரிமைகளை மீட்டெடுப்போம்!

(ஏப்ரல் 2014 ஆழம் திங்களிதழில் வெளியான கட்டுரை)

- நலங்கிள்ளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It