புதுவருடம் நெருங்கிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் இந்திய வெளியுறவு விவகாரம் வெகு வேகமாகச் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. வலுவான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கவல்ல அரசியல் நிகழ்வுகள் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பான 'சார்க்' உறுப்பு நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மாலத்தீவில் பதவியேற்றுள்ள அரசு, இந்தியச் சார்பைக் குறைத்துக் கொள்வதைத் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையின் அச்சாணியாக ஆக்கிக் கொண்டுள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் பொதுத் தேர்தல் தயாரிப்புகள் சூடுபிடித்திருப்பதால், பாகிஸ்தானுடன் சுமூக உறவு கொள்வது குறித்துத் தான் முன்பு மேற்கொண்ட முன்முயற்சியை இந்தியப் பிரதமரால் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அதே சமயம், 2014ல் நேட்டோ (NATO) நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதற்காகப் பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது. வங்காதேசத்தில் 2014ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு அங்கு மேலும் அதிகக் கொந்தளிப்பு நிலவும். நேபாளத்தில் சமீபத்தில் நடைபெற்றத் தேர்தல், அந்நாடு தொடர்ந்து இந்தியாவிற்கு ஒரு தீராத தலைவலியாக இருந்து வருவதையே அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக் காட்டுகிறது. நேபாளம் சீனாவுடன் ஏற்படுத்தியிருக்கும் புதிய போக்குவரத்து வழித்தடங்கள், அந்நாடு போட்டுக் கொண்டு வந்திருக்கும் இரட்டை வேடத்தை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும்.

eelam_234இந்த அரசியல் சூறாவளிக் கொந்தளிப்புகளின் நடுவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மாட்டிக் கொண்டிருக்கிறது. வருங்காலத்தைப் பார்ப்பதற்கான மாயக்கண்ணாடி கைவசம் இல்லாத நிலையில், நடப்பு நிலவரம் குறித்தச் செம்மையான பகுப்பாய்வுக்குப் பஞ்சம் இருப்பதால், நிச்சயமின்மை தலைவிரித்து ஆடுகிறது. பொதுவாகச் சிந்தனைவசப்பட்டே இருக்கின்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்குக்கூட, போதுமான கொள்கை வகுப்புத் தகவல்களின் ஆதரவு கிடைத்திருப்பதுபோலத் தோன்றவில்லை. பிராந்திய மற்றும் சர்வதேச நடப்பு நிலவரங்கள் குறித்த உருப்படியான விவாதங்கள் எதுவும் இந்தியப் பாராளுமன்றத்தில் நடைபெறுவதில்லை. வெளியுறவு குறித்து, தான் சொல்வதுதான் வேத வாக்கு என்று தன்னை வரித்துக் கொள்ளும் வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளிப்படையாக இல்லாமலும், அதே சமயம் உறுதியாகவும் பாராளுமன்ற விவாதத்தை ஊக்குவிக்காமல் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கொள்கைகள் குறித்தத் திரிக்கப்பட்டத் தகவல்களை, உருப்படாத செய்திகளை அச்சடித்துத் தள்ளும் தில்லி ஊடகங்களும் கிளிப்பிள்ளை போல அப்படியே ஒப்பிக்கின்றன. விவாதத்திற்கான கருப்பொருளை ஒருசில ஊடகங்கள் முன்வைத்துள்ளபோதிலும், பரவலாகப் படர்ந்திருக்கும் தேச வெறியின் முன்னால் அது எடுபடாமல் போய்விடுகிறது.

இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து இந்தியா நடந்து கொண்ட விதம் குறித்த விவாதங்கள் இத்தகைய அக்கறையைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அவர் தன் உள்ளுணர்வின்படி நடந்து கொண்டதுதான் காரணம். அவர் அக்கூட்டத்தில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகமும் உளவுத்துறை அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. அப்படி இந்தியப் பிரதமர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்திருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சகர்கள் மட்டுமே இந்த பல்லவிக்கு விதிவிலக்கு. மத்திய ஆளும்கட்சியின் ஆதரவுக் கட்சியாக இருந்து வரும் திமுகவின் தலைவர் கருணாநிதி, பிரதம மந்திரி மனசாட்சிப்படி நடந்து கொள்வார் என்று நம்பிக்கைத் தெரிவித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவழித் தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன்களை நீண்ட காலமாகவே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வடிவமைப்பாளர்கள் அலட்சியம் செய்து வந்துள்ளனர். 1974ல் இந்திரா காந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்குக் கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்தது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வெளியுறவுத் துறையில் இருந்த சில உயரதிகாரிகளுக்கு இது குறித்துத் தீவிரமான மாற்றுக் கருத்துக்கள் இருந்தபோதிலும், அதை இந்திரா காந்தியிடம் சொல்லும் துணிச்சல் அவர்களிடம் இருக்கவில்லை. தீவிர தேசியவாதிகள் அதோடு ஒத்துப் போயினர். அத்தீவையும் அதைச் சுற்றி இருந்த கடற்பரப்பையும், மீன் பிடிக்கவும் படகுகளை நிறுத்தவும் இந்திய மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அம்மீனவர்களின் மீன்பிடி உரிமை பறி போனது. இதுவரை இலங்கைக் கடற்படையினரால் குறைந்தபட்சம் அறுநூறு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பர், மூவாயிரம் மீனவர்கள் ஊனமடைந்திருப்பர். தெற்காசியாவில் ஆட்சிபீடத்தில் இருந்த இரண்டு 'ராணிகள்' தங்களுடைய ராஜதந்திர சிநேகிதத்திற்காகத் தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு காவு கொடுத்தனர் என்பதை 1974ல் இந்தியப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் எடுத்துரைத்தன. இதைச் சட்டரீதியாக அமல்படுத்துவதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் இல்லாமலேயே இது மேற்கொள்ளப்பட்டதால், இது செல்லாது என்று அறிவிக்கும்படி மேற்கொள்ளப்பட்ட வழக்கு, இன்னும் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்காகக் காத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்த பக்தவச்சலத்தின் காங்கிரஸ் ஆட்சியும் சரி, அதற்குப் பின் வந்த காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிகளும் சரி, இலங்கை மலையகத் தமிழர்களின் நலன் காக்கத் தவறிவிட்டன. 1974ல் ஏற்பட்ட ‘சிறிமாவோ பண்டாரநாயக்கா – இந்திரா காந்தி உடன்படிக்கை’யின்படி இந்த மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக் கொண்டிருந்ததாக முழங்கியவர்கள் முதலைக் கண்ணீர்கூட வடிக்கவில்லை. ஹற்றன் முதல் நுவரேலியா வரை இரண்டாந்தரக் குடிகளாக, கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வந்த இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களின் கும்பல் ஒப்புக்குக்கூடக் குரல் எழுப்பவில்லை.

அரசியல் நிர்வாகிகளின் அறிவுரை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. விடுதலைப் புலியினரால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டப் பிறகு, இந்திய நிர்வாகத்தினர், விடுதலைப் புலிகளையும் சாதாரணக் குடிமக்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், வேறுபடுத்திப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்தபோது அதற்கு அப்பாவிப் பொதுமக்கள் கொடுக்கவிருந்த விலையைப் பற்றி இந்திய அரசு கணிக்கத் தவறியது எண்ணிப் பார்க்க முடியாத அளவு கொடுமையாக உள்ளது.

விடுதலைப் புலிகள் மாயையாக உருவாக்கியிருந்த தமிழீழத்தின்மீது நடத்தப்பட்டக் கொடூரமான கடைசி யுத்தத்திற்கு இலங்கை ராணுவத்தினரை புதுதில்லி நன்றாகவே தயார் செய்திருந்தது. இத்தாக்குதலுக்கு போராளிகள் அல்லாத நாற்பதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் பலியானார்கள்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில் இந்தியக் கடற்படையும் கடலோர ரோந்துப் படையினரும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் பாக் ஜலசந்தியில் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தனர். இலங்கையில் இருந்த தமிழர்கள் தங்களுடைய உயிரைக் காத்துக் கொள்வதற்காக அங்கிருந்து வெளியேறி, அகதிகளாக இந்தியா வந்தடைய அவர்களுக்கு இருந்த, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த உரிமையை அவர்கள் பயன்படுத்துவதை இந்த ஏற்பாடு தடுத்தது. இலங்கை அரசு, ஜெனிவா உடன்படிக்கையை மீறும் விதத்தில், திட்டமிட்ட முறையில் அப்பாவிப் பொதுமக்கள்மீதும் மருத்துவமனைகள்மீதும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகள்மீதும் குண்டு வீச்சுக்கள் நடத்தியுள்ளது என்பதற்கு ஆதரவான நம்பத் தகுந்த ஆதாரங்களை சர்வதேசச் சமுதாயம் வைத்துள்ளது என்று ஐ நா சபை ஒப்புக் கொண்டுள்ளதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இது சட்டரீதியாகவும் அறமுறைரீதியாகவும் கொடூரமானது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பேடித்தனத்தைப் பற்றி எந்த அளவு குறைவாகப் பேசுகிறோமோ அந்த அளவு நல்லது.

இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது நடத்திய தீவிர வன்முறைத் தாக்குதல் குறித்து அகதிகளிடம் விரிவான விவரணங்கள் இருந்தன என்பதை இந்திய அரசு நிர்வாகம் நன்றாகவே அறிந்திருந்தது. அகதிகளை இந்தியாவிற்குள் அனுமதிப்பது, இந்தியா, அரசியல்ரீதியாகத் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் விடயமாக இருந்திருக்கும். இந்தியாவும் இலங்கையும் திட்டமிட்டுப் போலியாக நிர்மாணித்திருந்த மாயைக்கு - சாதாரணப் பொதுமக்களும் போராளிகள் அல்லாதோரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று நிர்மாணிக்கப்பட்டிருந்த ஊடக பிம்பத்திற்கு - அகதிகளின் வாக்குமூலம் கடும் சேதத்தை உண்டு பண்ணியிருக்கும். இலங்கை ராணுவம் 'பாதுகாப்பு மண்டலங்களை' அல்லது 'துளிகூடத் தாக்குதல் நடத்தப்படாத மண்டலங்களை' ஏற்படுத்தி உள்ளது என்பதுதான் இந்தக் கட்டுக் கதையின் மைய ஆதாரமாக விளங்கியது. இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் தான் படுகொலைக்குத் துணை போகவில்லை என்ற இந்தியாவின் வாதம்கூட, பொதுமக்களில் ஒருவர்கூடப் பலியாகவில்லை என்ற புனைகதைக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட ஒன்றுதான். அகதிகளின் வாக்குமூலங்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை அவற்றின் வெற்று எதிர்ப்பு முழக்கங்களைத் தாண்டி உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்தித்து இருக்கும். 2009ல் கருணாநிதியும் அவரது தோழமைக் கட்சிகளும் உண்ணாவிரதப் போராட்டம் என்ற கேலிக்கூத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மத்திய அரசுடன் சுமூகமான உறவை நிலைநிறுத்திக் கொள்ளவும், அவர்கள் தூக்கி எறிந்த அதிகாரப் பகிர்வுப் பிச்சைகளைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகுத்தத் தங்களுடைய வழக்கமான கொள்கைகளுக்கு அவர்கள் திரும்பிப் போய்விட்டனர்.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் பெரும்பாலான இந்தியத் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தாங்கள் வழங்கி வந்த தார்மீக ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த இந்தியத் தமிழர்கள், தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டனர். இலங்கைத் தமிழர்களின் நலனையும் விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்துவிட்டிருந்த, தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலி ஆதரவுக் குழுக்களும் இதற்கு உதவவில்லை.

தில்லியிலும் சென்னையிலும் இருந்த ஊடகங்கள், இலங்கையில் தமிழ்ப் பொதுமக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பலியாகியிருந்தனர் என்ற கட்டுக்கதையைப் பொதுமக்களிடம் பரப்பும் வேலையில் குதித்து, பொது மக்களின் ஆதரவைக் கட்டியெழுப்பும் காரியத்தில் இறங்கின. வாசகர்களின்மீது நேரடியாகத் தாக்கம் விளைவிக்கக்கூடிய பத்திரிகை என்று மார்தட்டிக் கொள்ளும் ஒரு சென்னைப் பத்திரிகையில் இடம் பெற்றிருந்த செய்தி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக் கொள்ள முனைந்த முக்கிய இந்தியத் தொலைக்காட்சிச் சேனல்களைச் சேர்ந்த நிருபர்களில் சிலர், போராட்டத்தின் துவக்கக் கட்டத்தில், இலங்கை ராணுவ பீரங்கிகளில் பயணித்து, இந்திய ஊடகங்களின் சுதந்திரப் போக்கு மற்றும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டது, பொதுமக்களின் எதிர்ப்பின்றி ராஜபக்ஷே சர்வதேசச் சட்டங்களை மீறுவதற்கான துணிச்சலை அவருக்கு அளித்தது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அதிமுக அரசு, தமிழக சட்டசபையில் ஏகமனதாக இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்தியப் பிரதமர் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று முதல் தீர்மானம் வலியுறுத்தியது. எந்த இந்தியப் பிரதிநிதியும் அதில் கலந்து கொள்ளக்கூடாது என்று இரண்டாவது தீர்மானம் கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தியாவிற்கு இருந்த ஒரே துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவது குறித்து அந்தத் தீர்மானங்கள் குறிப்பிடவேயில்லை; தற்போது இலங்கையில் பதவியில் இருக்கும் அதிபர், தொடர்ந்து தன் பதவியில் இருக்கும்வரை, அல்லது அங்கு நடைபெற்றப் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச அளவில் தன்னிச்சையாகச் செயல்படும் ஒரு விசாரணைக் குழு ஏற்படுத்தப்படாதவரை, இந்தியா, காமன்வெல்த் அமைப்புடனான தனது ராஜாங்க உறவைத் துண்டித்துக் கொள்வதுதான் அது.

விளைவுகளுக்குக் கண்டிப்பாகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்திய தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. இது குறித்த அவர்களுடைய கண்ணோட்டங்கள் குழப்பமாக இருந்ததோடு ஒரே சீராகவும் இருக்கவில்லை. அதற்கு ஒருசில எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம். பிஜேபியின் தமிழ் மாநிலத் தலைவர், இந்தியப் பிரதமர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். அதே சமயம், தில்லியில் இருக்கும் பிஜேபியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் ராஜபக்ஷேயின் குடும்ப தர்பாரை ஆதரித்தார். ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய அறிவிப்பாளர், அவர்களது தமிழகக் கிளையின் நிலைமையைப் பற்றிக் கொஞ்சம்கூட எண்ணிப் பார்க்காமல், இந்தியப் பிரதமர் இக்கூட்டத்தில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தீடீரென்று தொண்டை கட்டிக் கொண்டுவிட்டதால் அவர்களுக்குப் பேச்சே எழும்பவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக இணை அமைச்சர் ஒருவர், மூத்த அமைச்சர்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசு நிர்வாகம் திரித்துள்ள கதையையே மீண்டும் ஒப்பித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் துரதிர்ஷ்டமான நிலை குறித்த நியாயமான அக்கறையை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. இந்திய தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் தமிழ் தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகள், தங்களுடைய 'இந்தியத்தனத்தை' நிரூபிக்குமாறு கட்டாயப்படுத்தப்படவும் வேண்டியதில்லை. இனரீதியான வேறுபாடு இந்திய தேசியவாதத்தையும் நாட்டுப்பற்றையும் தூக்கியெறிந்துவிடுகிறது என்ற வாதத்திற்கு இது வலு சேர்க்கிறது. இது திராவிட இன அடையாளங்களை அழித்து, நியாயமான மனித உரிமை குறித்த அக்கறைகளை வெறும் 'தமிழர்களின் பிரச்சனையாக' மட்டுமே கருதி அதை ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவு மேம்பாடு அடைவதற்கு அனைத்து முட்டுக்கட்டைகளையும் இட்ட, 1947ஐ ஒட்டிப் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்த பஞ்சாபிக் கும்பல், வெளியுறவு விவகாரங்களில் தலையிட மாநில அரசுகளுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்று வாதிடுவது அபத்தமாக இருக்கிறது.

தற்போது இலங்கையில் பதவியில் இருக்கும் அதிபர், தொடர்ந்து தன் பதவியில் இருக்கும்வரை அல்லது போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச அளவில் தன்னிச்சையாகச் செயல்படும் ஒரு விசாரணைக் குழு ஏற்படுத்தப்படாதவரை, இந்தியா, காமன்வெல்த் அமைப்புடனான தனது ராஜாங்க உறவைத் துண்டித்துக் கொள்வதை உறுதியளிக்கும் கட்சிக்கு மட்டும்தான் 2014 பொதுத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்று திமுகவும் அதிமுகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய அரசின் ஆதரவு மிகமிக இன்றியமையாதது. இப்போது இருப்பதைப் போலவே ராஜபக்க்ஷே தொடர்ந்து செயல்பட அனுமதித்தால், 2014 மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் கூட்டத்திற்கு முன்பாக, அவர், காமன்வெல்த் நாடுகளின் தலைவர் என்ற முறையில் மற்ற காமல்வெல்த் நாடுகளின் ஆதரவை எளிதாகத் தனக்குச் சாதகமாக அணிதிரட்டிவிடுவார். ஐக்கிய நாடுகள் சபையின் முந்தைய தீர்மானங்களை, நீர்த்துப் போன, செல்லாக் காசான ஒரு தீர்மானமாக ஆக்க எவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவியதோ, இம்முறை அதுபோல நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மனித உரிமைகள் மறக்கப்பட்டுவிடவில்லை என்பதை இந்திய அரசிற்கு அழுத்தம் திருத்தமாக உணர்த்த எல்லா இந்தியர்களும், குறிப்பாகத் தமிழர்கள் அனைவரும் உறுதி பூண வேண்டும். இலங்கை அரசு செய்துள்ள போர்க் குற்றங்களுக்கு அதைப் பொறுப்பேற்க வைப்பதில் கவனம் குவிக்கப்பட வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மற்றபிற தமிழக அமைச்சர்களுடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து கொண்டுள்ளது ஆறுதலான விஷயம். தெற்காசியாவில் போர்க் குற்றங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதில் அனைத்துக் கட்சிகளும் தெளிவாக இருப்பதோடு, ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாகக் கைவிடப்பட்டால், அதே போன்ற உணர்வு இங்குள்ள சராசரித் தமிழர்களிடம் தோன்றுவதற்கு வெகு காலம் பிடிக்காது. இது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு மிகமிக முக்கியமான ஆண்டாக இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி.

- ரவி நாயர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It