தடையின்றிக் கிடைக்கும் 'சரக்குத் தண்ணீரும்', குதிரைக் கொம்பாகும் குடிக்கத் தண்ணீரும்

தமிழகம் இதுவரை காணாத தண்ணீர் வறட்சியை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. மின் பற்றாக்குறையிலிருந்து வேளாண்மையில் விளைச்சல் இன்மைவரை பல்வேறு வகையிலும் இதன் தாக்கம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் குடிநீர் வணிகம் மிக உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலை. மற்றொரு புறம் மக்களின் குடிமைப் பயன்பாட்டிற்கே அன்றாடம் தண்ணீருக்காகப் போராடும் அவலம். மின் பற்றாக்குறையின் காரணமாக தொழில் நிறுவனங்களில் மின் விடுமுறை அறிவித்ததைப் போன்று, தண்ணீருக்காகவும் தண்ணீர் விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்படக்கூடும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இப்படியரு நிலை தோன்றுமானால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் தமிழகத்தின் வளர்ச்சியை பல ஆண்டிற்கு பின்னிழுக்கும் என்பது உறுதி. வாழ்வியல் வசதிக்கான தேவையாக உள்ள மின்சாரம்கூட இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். ஆனால் வாழ்வியலின் அடிப்படை ஆதாரமாகத் திகழும் தண்ணீர் இல்லையென்றால், புவியுலகின் உயிர்ச்சூழலே அற்றுவிடும் என்பதுதான் உண்மைநிலை.

sivakumar-undesilted-Tank

தூர்வாரப்படாத நிலையிலுள்ள கண்மாயின் தோற்றம்

பருவம் தவறிப் பொழியும் மழை, நீராதார வன்கைப்பற்றல், பொறுப்பற்ற முறையில் சுரண்டப்படும் நிலத்தடி நீர், நீர்நிலைகள் மீது நிகழ்த்தப்படும் சூழல் சீர்கேடு, நீர் நிர்வாக முறையில் குறைபாடு, இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட நீர் வணிகம், மக்களின் விழிப்புணர்வின்மை, அண்டை மாநிலங்களின் மனிதநேயமற்ற தன்மை போன்றவையே தண்ணீரால் தொடர்ந்து வறட்சிக்குள் தமிழகம் தள்ளப்படுவதற்கான காரணிகள். அண்டை மாநிலங்களின் அர்த்தமற்ற பிடிவாதப்போக்கு, பருவம் தவறிப் பொழியும் மழை ஆகியவை நமது ஆற்றலை மிஞ்சிய புறக்காரணி என்றாலும், மற்றவை அனைத்தும் நாமே சரி செய்யக்கூடிய அகக்காரணிகளாகும். இதற்கு எவரையும் குற்றம் சாட்ட முடியாது. நம் ஒவ்வொருவரையுமே குற்றவாளிகளாக்கும் இந்தக் காரணிகளை எவ்வாறு களையப்போகிறோம்?

ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகளை தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியாக உலகவங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், இந்தியாவிலுள்ள தனிநபர் ஒவ்வொருவருக்கும் சராசரியாகக் கிடைக்கும் தண்ணீரின் அளவு 2300 கனஅடியாகும். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு சராசரியாக வெறும் 750 கனஅடி தான். ஒட்டு மொத்த தமிழகமே தண்ணீர் தட்டுப்பாடுள்ள பகுதியாகத் திகழ்வதால், தண்ணீரை சேமிப்பதற்கான திறன்மிகு வழிவகைகளைக் கண்டறிந்து செயலாற்றுவதற்கு தமிழகம் இப்போதிருந்தே தயாராக வேண்டும். இல்லாவிடில் எதிர்காலத்தில் முழுவதும் வறட்சிக்குரிய மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டால் வியப்பில்லை. தற்போதுள்ள நிலை நீடிக்குமானால் தனிநபரின் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்படும் காலம் வெகுதொலைவிலில்லை.

நடுவண் நிலத்தடி நீர் வாரியம் அண்மையில் நிலத்தடி நீர் குறித்து மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த ஆண்டு மிகக் கடுமையான அளவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்று அப்புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட இந்தியா முழுவதுமுள்ள மாதிரிக் கிணறுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த பத்தாண்டுகளின் சராசரி நிலத்தடி நீர்மட்டம் தற்போதைய ஆய்வுடன் ஒப்பிடப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 457 கிணறுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சற்றேறக்குறைய 110 கிணறுகளில் எடுக்கப்பட்ட மாதிரியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும் அதேநேரம் 347 கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பருவமழை பொய்த்துப்போனதுதான் இதற்குக் காரணம் என்றாலும், தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் இந்நிலைக்கு மற்றொரு காரணமாக அறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீரின் தாழ்வுநிலை தமிழகம் முழுவதுமே பரவலாகக் காணப்படுகிறது (தென் மாநிலங்களில் ஆந்திராவில் மட்டும்தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது).

கடந்த ஆண்டு டெல்லியிலுள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், இந்தியாவின் வறண்ட நகரங்களில் சென்னையும், ஹைதராபாத்தும் முதன்மை இடத்திலிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளுக்குள் இந்நகரங்களின் நீர்மட்டம் நிலத்தின் அடி ஆழத்திற்குச் செல்லக்கூடும். அதிகப்படியாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரால், சாக்கடைக் கழிவுகள் நிலத்தடியில் ஊடுருவி, பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக்கூடும். நோய் பரப்புகின்ற தன்மையில்தான் நிலத்தடி நீர் தற்போது இருப்பதாக மேலும் பல்வேறு ஆய்வுகள் எச்சரிக்கை செய்து வருகின்றன. மழையாகப் பெறப்படும் தண்ணீரில் 16 விழுக்காடு நிலத்திற்குள் ஊடுருவினால் மட்டுமே, நிலத்தடி நீரின் தன்மையையும், அதன் அளவையும் ஓரளவிற்குப் பேண முடியும். ஆனால் நேர்மாறாக 8 விழுக்காட்டிற்கும் குறைவாகவே மழைநீர் நிலத்தடிக்குள் ஊடுருவுகிறது. இது மிகுந்த அபாயத்திற்குரியதாகும். இந்திய நகர்ப்புறங்களில் தொடர்ந்து நீடிக்கும் இந்நிலையின் காரணமாக ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் நிலத்தடி நீர்மட்டம் அச்சுறுத்தும் அபாயநிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக, சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலைமை படுமோசம். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்பிற்காக மக்கள் இந்த மாவட்டங்களுக்குப் புலம்பெயர்வதும், தொழிற்சாலைகள் அதிகளவு பெருகுவதும் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதற்கு காரணமாகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் நிலத்தடியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும், மோசமான நீரால் நோய் பரவும் அபாயநிலையும் காணப்படுகிறது. சென்னையில் கடந்த ஆண்டில், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு, குறைந்தபட்சம், 3.85 மீட்டரிலும், அதிகபட்சமாக, 4.30 மீட்டர் அளவிலும் கிடைத்து வந்தது. இந்த ஆண்டில், புவியியலாளர்கள் ஆய்வின்படி, குறைந்தபட்ச அளவு, 4.10 மீட்டர் அளவிலும், அதிகபட்சம், 5.10 மீட்டர் அளவிலும் இருந்து வருகிறது. இதை வைத்துப் பார்த்தால், நிலத்தடி நீர் மட்டம், ஓராண்டில் குறைந்தபட்சம், 0.25 மீட்டரும், அதிகபட்சமாக, 0.8 மீட்டரும் கீழே சென்றுள்ளது.

sivakumar-Water-Volunteers_

மதுரை வண்டியூர்க் கண்மாயைச் சீரமைக்கும் பொதுமக்கள்

வரம்பற்ற தண்ணீர்ச்சுரண்டல் நிலத்தடி நீரின் தன்மையையும் பெருமளவு மாற்றியிருக்கிறது. ஏற்றத்தின் மூலம் நீர் இறைப்பை மேற்கொண்ட நமது பழமை நீர் நிர்வாகம், மின்சாரத்தின் வரவால் நவீனம் பெற்றது. இதனால் 50, 100அடிகளில் கிடைத்த நிலத்தடி நீர் இன்றைக்கு 500, 1000அடியாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள அடுக்கக மனைப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேல் நிலத்தடி நீரின் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தின் ஆழம் செல்லச் செல்ல தண்ணீரில் உள்ள வேதிப் பொருட்களின் தீங்கும் அதிகரித்துக் கொண்டே வரும். அதன் தொடக்கமாக தண்ணீரில் அதிகபட்ச உப்புத்தன்மையையும் தற்போது காண முடிகிறது. நிலத்தடி நீரில் உப்பின் அளவைக் கணிக்கும் இ.சி. என்ற எலெக்ட்ரோ கனெக்டிவிட்டி ஆய்வு முறையின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரில் 300பி.பி.எம்மிலிருந்து 500பி.பி.எம்க்குள் உப்பின் அளவு இருக்கலாம். இது அனுமதிக்கக்கூடிய அளவு. இந்த அளவு கடல் நீரில் 10 ஆயிரமாக இருப்பதால்தான் அந்நீர் குடிக்க உகந்ததாக இல்லை. சிவகங்கை மாவட்டத்தில் 700ஆகவும், இராமநாதபுரத்தில் 2000ஆகவும், தூத்துக்குடி போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் 3000ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் இந்த அளவு 1600பி.பி.எம்.ஆக உள்ளது. இதனால் நீரின் சுண்ணாம்பு சத்து அளவு அதிகரித்து அந்நீரைப் பயன்படுத்த இயலாத நிலையேற்படலாம்.

இந்திய நுகர்வோர் சங்கம் என்ற சமூக அமைப்பு தமிழகத்தில், சென்னை, திருச்சி, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர் என ஆறு மாவட்டங்களில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரை எடுத்து ஆய்வு செய்தது. இதில், 44 விழுக்காடு மாதிரிகளில் வேதி உப்புக்கள் அதிகமாக இருந்ததும், 51 சதவீத மாதிரிகளில் கோலிபாம் எனும் மலக்கழிவுகளில் உள்ள பாக்டீரியா இருப்பதும் தெரிய வந்துள்ளது. தண்ணீரில் நிகழும் வேதி மாற்றங்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து, தண்ணீர் அதிகபட்ச சுரண்டலுக்கு ஆளாகாமல் கண்காணிப்பதற்காகத்தான் தமிழக அரசு மூன்று நில நீர் மண்டலங்கள், ஒன்பது கோட்டங்கள், இவற்றின் கீழே உபகோட்டங்களையும் அமைத்துள்ளது. வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவோர், மேற்காணும் அரசு அமைப்புகளில் கண்டிப்பாக சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாகவே வணிக நிறுவனங்கள் தங்களது தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளை சட்டத்திற்கு புறம்பாக அமைத்து வருகின்றன. தண்ணீரை சந்தைப்படுத்துவதற்கு முறைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை இல்லாததாலோ அல்லது நிர்வாகத் திறமையின்மையினாலோ, நிறுவனங்கள் விருப்பம்போல் விலை நிர்ணயம் செய்து மக்களிடம் தண்ணீரை ஏகபோகமாக விற்பனை செய்து வருகின்றன.

திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் மாசுத்தன்மை மிகத் தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அம்மாநகரிலுள்ள 520 சாயப்பட்டறைகளும், 200 பிளீச்சிங்பட்டறைகளும் நிலத்தடி நீரின் தன்மையையே பெருமளவு மாற்றியுள்ளன. அதேபோன்று கோவைக்கு அருகேயுள்ள பொன்னையராஜபுரம் மற்றும் தெலுங்குபாளையத்தில் உள்ள 87 சாயப்பட்டறைகள் அப்பகுதியின் நிலத்தடி நீரை பாழாக்கியுள்ளன. இனிமேல் தமிழக நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாகக்கூடும். அப்படியே கிடைத்தாலும், அந்நீர் குடிப்பதற்கு மட்டுமல்ல, புழங்குவதற்கும் கூட பயனற்றதாக மாறும் அபாயச்சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தண்ணீர் எதிர்காலம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களின் கவனமோ 'தண்ணி' விற்பனையில் இலக்கு நிர்ணயிப்பதைத்தான் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 'சரக்குத் தண்ணீர்' தடையின்றிக் கிடைக்கும் தமிழ்த்திருநாட்டில், குடிக்கத் தண்ணீர் இனி குதிரைக்கொம்பாக மாறப்போகிறது. விழித்தெழு தமிழகமே!

தீர்வு உண்டு... அதனைக் கடைப்பிடிக்கும் திறன் உண்டா..?

கிடைக்கும் நீர்வளத்தை சரியான முறையில் நிர்வாகம் செய்யத்தவறினால், வருகின்ற 2025ஆம் ஆண்டில் தமிழக நீர்த்தேக்கங்களில் உள்ள நிலத்தடி நீர் முழுவதும் வறண்டு விடக்கூடும் என்று நிலத்தடி நீர் வாரியம் சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக நிலப்பரப்பில் 73 விழுக்காடு கடினப்பாறைகளும், 27 விழுக்காடு வண்டல் மண்ணும் நிறைந்துள்ளன. நிலத்தடி நீரை மண்ணுக்குள் தேக்கி சேமித்து வைக்கும் தன்மை வண்டல் மண்ணுக்கே உண்டு. ஆகையால் மழைநீரைச் சேமித்துப் பாதுகாக்கும் அதே நேரம், வண்டல் மண்ணையும் சேதமுறாமல் பாதுகாப்பதும் நம் கடமையாகும்.

தமிழ்நாட்டின் நீர்வளம் என்பது மழை மற்றும் ஆறுகள் மூலமாக கிடைக்கும் 1240 டி.எம்.சி. தான். இந்த தண்ணீர் வெறும் 58 டி.எம்.சி. மட்டும்தான் குடிநீருக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பருவமழைக் காலங்களில் மழையின் வாயிலாகக் கிடைக்கும் தண்ணீரில் 50 விழுக்காட்டிற்கும் மேல் குடிமைப்பயன்பாட்டிற்கு அன்றி, கடலில் கலந்துவிடுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததும், சேமிப்பதற்குத் தேவையான நீராதாரங்கள் இல்லாததும் இதற்குக் காரணமாகும். இது தவிர, ஆறுகளில் அவ்வப்போது பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், 7,563 ஹெக்டேர் நிலங்களும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் 5,112 மில்லியன் ஹெக்டேர் நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் கீழ்க்கண்ட வழிமுறைகளை அரசு கடைப்பிடித்தல் அவசியம்.

sivakumar_Team-of-Wakeupmadurai

நீர்நிலைகளைக் காப்பதற்காக மதுரையில் உருவாக்கப்பட்டுள்ள 'விழித்தெழு மதுரை' இயக்கம்

தமிழக நிலப்பரப்பில் பெய்யும் மழையளவில் ஏறக்குறைய 170 டி.எம்.சி. கடலில் சென்று கலக்கிறது. ஆறுகள், ஓடைகள், கழிமுகப்பகுதிகளில் மழை நீர் ஓடிச் சென்று கடலில் கலப்பதைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களை இப்போதே வகுக்க வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்வழிப் பகுதிகளில் ஒவ்வொரு இருபது கி.மீ.க்கு ஓரிடத்தில் தடுப்பணை கட்டி நீரைச் சேமிப்பதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு வழியேற்படுத்த முடியும்.

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் தமிழகத்தின் தற்போதைய தேவையாகும். சமரசத்திற்கு இடமின்றி, பொது மக்களின் நலன் கருதிச் செயலாற்றக்கூடிய, நீரியல் வல்லுநர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அதிகாரம் மிக்க ஓர் அமைப்பினை தமிழக அரசு தோற்றுவிப்பது அவசியம். கண்மாய், குளம், ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்துவதற்காக தூர்வாருதலும், சீரமைத்தலும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். நீர்நிலைகளைப் பயன்படுத்தும் பயனாளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களைக் கொண்ட மக்கள் அமைப்புகளின் வாயிலாக, அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் உரிமையை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். நீர்நிலை வன்கைப்பற்றல்கள் எந்த நிலையில், எவர் செய்தாலும் கடுமையான தண்டனைக்கு அவர்களை உள்ளாக்குதல் மிகவும் அவசியம். நீர்நிலைகளுக்கு தண்ணீர் வருகின்ற மற்றும் வெளியேறுகின்ற கால்வாய்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக செம்மை செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொழியும் மழை நீர், சேமிக்கப்படும் நில மேற்புற நீர், நிலத்தடியில் சென்று சேரும் தண்ணீர் என தனித்தனியே துல்லியமான புள்ளிவிபரம் தயாரிக்கப்படுதல் வேண்டும். இருக்கின்ற தண்ணீரில் எந்தவிதமான பயிர்களைக் கொண்டு வேளாண்மையைச் செய்ய முடியும் என்பதைக் கணித்து, அதனை ஊக்குவித்தலே சிறப்பு. மண்ணையும், நீரையும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தி, அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை மீறுகின்ற நிறுவனங்களின் இசைவு ஆணையை உடனடியாக இரத்து செய்துவிடுதல் வேண்டும். அத்தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகளில் உள்ள மக்கள் அமைப்புகளுக்கு கண்காணித்தல் மற்றும் ஒப்புதலின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற அதிகாரத்தை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அதற்கும் மேலாக, தமிழக அரசு கடந்த 2003ஆம் ஆண்டு இயற்றிய நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மைச் சட்டத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்தி, மழைநீர் சேமிப்பையும், மழைநீர் அறுவடையையும் ஊக்குவிக்க வேண்டும்.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு

தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விபரக்குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வில், 3 ஆயிரத்து 238 பகுதிகளில் உள்ள திறந்தவெளிக் கிணறுகளும், ஆயிரத்து 480 ஆழ்துளைக் கிணறுகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் அக்டோபர் மாதக் கணக்கீட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது எனவும், 17 மாவட்டங்களில் குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இது ஆச்சரியத்திற்குரிய தகவல் என்றாலும், அந்தப் பகுதியில் பொழிந்த மழையளவின் காரணமாக கூடியிருக்கலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அறிக்கை அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள பகுதிகளில், தண்ணீரின் அளவை அதிகரிக்கச் செய்யவும், அதிகளவு உறிஞ்சப்படுவதைக் கண்காணித்து அதனைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்த அறிக்கையை மிகவும் தாமதமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே பொதுப்பணித்துறை வழங்கி வருவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனுக்குடன் இவ்வறிக்கை கிடைத்தால்தான் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளை விரைவுபடுத்த முடியும். ஆனால், பொதுப்பணித்துறை இதில் மெத்தனம் காட்டினால், தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு வாய்ப்பாகிவிடும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. இத்தவறைச் சரி செய்வது தமிழக பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாகும்.

நீர்நிலைகள் காக்க நம்பிக்கையூட்டும் நல்ல முயற்சிகள்

sivakumar_Salem-Mookkaneri

பொதுமக்களால் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள சேலம் மூக்கனேரி

நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளைக் காக்கும் முன்னோடியான முயற்சி ஒன்று மதுரையில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. மதுரையிலுள்ள கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் சமூக வலைத்தள நண்பர்கள் ஒருங்கிணைந்து இதனைச் சாதித்துக் காட்டியுள்ளனர். மதுரை நகரின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகத் திகழும் வண்டியூர் கண்மாய் மற்றும் செல்லூர் கண்மாயின் சீரமைப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி, அத் தொடக்க முயற்சியில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர் இந்த இளைஞர்கள். 'விழித்தெழு மதுரை' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இம்முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் தங்களது உழைப்பையும், நேரத்தையும் வழங்குவதற்கு முன் வந்துள்ளனர். வண்டியூர் கண்மாய்ச் சீரமைப்புப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்ட இந்த மாணவர்களோடு, பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டது பண்டைய 'குடிமராத்து' முறையை நினைவுபடுத்தியது. நவம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மதுரை செல்லூர் கண்மாயின் சிறப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக 'தண்ணீர் நடை' ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர்களும், பல்துறை சார்ந்த வல்லுநர்களும் பங்கேற்றனர். மதுரை காவல் துறை ஆணையர் சஞ்சய்மாத்தூர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இளைஞர்களின் முயற்சியை வெகுவாகப் பாராட்டிப் பேசினர். ஐ லீட் இந்தியா மற்றும் யூத் லீட் இந்தியா எனும் இளைஞர் அமைப்புகளும் இம் முயற்சியில் ஒன்றாக இணைந்து செயல்பட்டன.

இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிந்து வரும் பிரசாந்த் என்ற இளைஞர் நம்மிடம் பேசும்போது, 'நீர்நிலை புனரமைப்பு என்பது நமது வாழ்வியல் கடமையாக மாற வேண்டும். அதனை பொதுமக்களிடம், குறிப்பாக எதிர்கால தலைமுறையினரான மாணவ-மாணவியரிடம் உணர்வுரீதியாகவும், அறிவின்பாற்பட்டும் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தின் தண்ணீர்ச்சிக்கல் மிக் கடுமையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், நமது நீராதாரங்களே ஒற்றை வாய்ப்பாகத் திகழ்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் உயிர்ப்புடன் செல்லக்கூடிய ஆறுகள் எதுவும் இல்லாத நிலையில், நம் முன்னோர்களால் அமைக்கப்பட்ட நீர்நிலைகளை உள்ளபடியே பாதுகாக்க முயற்சி செய்தேமோயானால், தண்ணீர்ச்சிக்கலை முழுவதுமாக தீர்த்துவிட முடியும். இதற்கு அரசை மட்டுமே நம்பியிராமல், பொதுமக்கள் தாங்களே முன்வந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். மதுரையிலுள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நீர்நிலைகளைக் காப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மதுரை மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் பல தன்னார்வ அமைப்புகளின் ஆதரவோடு பொதுமக்களின் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதனை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்' என்றார்.

தற்போது தமிழகம் முழுவதும் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளை பொதுமக்களே செய்து வருவது மிகுந்த பாராட்டிற்குரிய மாற்றமாகும். கோவையில் 'குளம் காப்போம், குலம் காப்போம்' என்ற அமைப்பின் மூலமாக அந்நகரிலுள்ள பெரியகுளத்தில் தூர் வாரி சீரமைப்பு செய்துள்ளனர். அதேபோன்று சேலத்திலுள்ள மூக்கனேரியிலும் மக்களே இணைந்து தூர்வாரி அக்குளத்தின் நடுவே மண்திட்டுக்கள் அமைத்து தீவுத்தோற்றத்தில் உருவாக்கியுள்ளனர். காஞ்சிபுரத்திலுள்ள அய்யங்கார்குளம் சீரமைக்கப்பட்டு, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 'வாருங்கள் காடு வளர்ப்போம்' எனும் முழக்கத்தோடு மரங்கள் நட்டு பொதுமக்களே பேணி வருகின்றனர். சென்னையின் மிகப் பெரும் நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றி நிறைந்திருந்த ஞெகிழிக் குப்பைகளை பொதுமக்களே முன்னின்று அகற்றி சமூகத்தின் மீதான தங்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் வரவேற்கத்தகுந்த மாற்றங்களாகும். இந்த உணர்வு அலை தமிழகம் முழுவதும் பற்றிப் படர்ந்தால், பழந் தமிழகத்தின் தண்ணீர்ச் செழுமையை மீட்டெடுப்பது சாத்தியமுள்ள செயலே.

நிகமானந்தாக்கள் தமிழகத்தின் தேவை!

கங்கை ஆற்றைக் காப்பதற்காக உயிர் துறந்த துறவியே நிகமானந்தா. ரிஷிகேசத்திலிருந்து பிரயாகை வரை கங்கையின் நீர்வழியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும், நகரங்களின் சாக்கடை நீரும் கலந்து மாசுபடுத்தியதை தடுத்து நிறுத்தியவர். இதற்காகவே 1998ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தியவர். கங்கையின் கரையோரத்தில் நடைபெற்ற சட்டத்திற்குப் புறம்பான கல்குவாரிகளை அகற்றவும், அரசின் ஆதரவோடு நடைபெற்ற சுரங்கப்பணிகளை தடை செய்யவும் வலியுறுத்தி கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கி, அதே ஆண்டு சூன் 13ஆம் நாள் மரணமடைந்தார். நீர்ப்போராளியாக உயிர் நீத்த நிகமானந்தாவின் தன்னலமற்ற ஈகம் போற்றுதலுக்குரியது. போர்க்குணம் மிக்க நிகமானந்தாக்கள் தமிழகத்தின் இன்றைய தேவையாகும்.

தண்ணீருக்காக சரணடைந்த ஷாஜகான்!

sivakumar-Kalvettu-on-Shajah

தனது மனைவி மும்தாஜ் நினைவாக உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகான், தனது மகன் ஒளரங்கசீப்பிடம் சரணடைந்த வரலாறு நமக்கு மறந்திருக்காது. அவன் சரணடைந்ததற்கு பெரிதும் காரணமாக இருந்தது தண்ணீர். ஆம்... ஆடம்பர மிக்க ஆக்ரா கோட்டையில் சீரும் செழிப்புமாக வாழ்ந்த ஷாஜகான், இறுதிக் காலத்தில் தனது மகன் ஒளரங்கசீப்பால் அதே அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார். அந்த அரண்மனையின் கோட்டைச் சுவர்களை ஒட்டி ஷாஜகான் அமைத்திருந்த அகழியும், அங்கிருந்து கோட்டையின் உள்ளே தண்ணீர் சென்று அழகழகாய் அமைக்கப்பட்ட செயற்கை நீருற்றுகளும் இன்றைக்கும் உலகம் புகழும் தொழில்நுட்ப வியப்பாகும். யமுனை ஆற்றிலிருந்து பெறப்பட்ட இந்த நீரையே ஷாஜகானும் குடிநீருக்காகப் பருகினார். தனது தந்தையை சிறை வைத்த ஒளரங்கசீப், ஷாஜகானை வழிக்குக் கொண்டு வருவதற்காக, யமுனையிலிருந்து கோட்டைக்கு வரும் நீர் வழியை மறித்தான். இதனால் தண்ணீரின்றி பல நாட்கள் துன்பப்பட்ட ஷாஜகான் இறுதியாக 1658ஆம் ஆண்டு சூன் 8ஆம் நாள் தனது மகன் ஒளரஙகசீப்பிடம் சரணடைந்தான். பேரரசனாய்த் திகழ்ந்த ஷாஜகானின் வரலாறு கடைசியில் தண்ணீரில் முடிவடைந்தது மிகுந்த வியப்பிற்குரியதாகும்.

- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It