CEPA(Comprehensive Enhancement Partnership Agreement) என்பது இந்தியாவின் தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இலங்கையில் நேரடியாக தொடங்குவதற்கான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டால் இலங்கையில் உள்நாட்டு தொழிலபதிர்களின் வர்த்தகம் அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தாலும், இந்தியக் கார்பரேட்டுகள் இலங்கையை விழுங்கிவிடும் என்பதாலும் பல ஆண்டுகளாக அந்த ஒப்பந்தத்தை கையொப்பமிடாமல் இலங்கை மறுத்து வருகிறது. இலங்கையில் இந்த ஒப்பந்ததிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ச்சியாக இந்தியா, இலங்கையை கையொப்பமிடவைக்க முயற்சித்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தால் பயனடையப் போகும் நிறுவனங்களில் சிதம்பரம் மற்றும் திமுக தலைவரின் குடும்பத்தினர் மறைமுக பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களும் அடக்கம்.
 
இப்போது ஈழம் சார்ந்த போராட்டத்திற்கு வருவோம். 2009லும் அதற்கு பின்னரும் திமுக அரசு, தமிழீழமே தீர்வு என போராடியவர்களை கடுமையாக ஒடுக்கியதும், ஈழம் என்ற வார்த்தையைக் கூட அச்சடிக்கக் கூடாது என அச்சகங்களை மிரட்டியதும் நாம் அனைவரும் அறிந்ததே. 2011 சட்ட மன்றத் தேர்தலில் திமுக பெருந்தோல்வியை சந்திக்கிறது. 2012 மார்ச்ல் தமிழீழத்திற்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் இந்திய-அமெரிக்க கூட்டுச் சதியின் பின்னணியில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட போதும், இந்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் தமிழீழமே தீர்வு என்பதை சொல்லாமல் அமைதி காக்கிறார். இந்நிலையில் ஏப்ரல் 10,2012 முதல் மீண்டும் 1980களுக்குப் போகிறார். ஈழத்தமிழர் கொல்லப்பட்ட வீடியோக்களைப் பார்த்து கண்ணீர் விட்டதாக கூறுகிறார். தமிழீழமே என் கனவு என்று அறிவிக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 12 ல் டெசோ அமைப்பு மீண்டும் தொடங்கப்படுகிறது.

2012 ஆகஸ்டு 3லிருந்து 5வரை இந்தியாவின் 108 தொழில் நிறுவனங்களின்(டிவிஎஸ்,அசோக் லேலண்ட் உள்ளிட்ட) கூட்டம் இலங்கையில் நடக்கிறது. தானியங்கி எந்திர தொழிற் நிறுவனங்கள், மருந்துப்பொருள் தொழிற் நிறுவனங்கள், ஆடைகள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு நிறுவனங்கள், தொழில்நுட்பம், கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலாளிகள் பங்கேற்கின்றனர். அதில், ஆகஸ்டு 5ம் தேதி இந்திய அமைச்சர் ஆனந் சர்மா CEPA ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை இலங்கை அரசுடன் நடத்த நாள் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் இலங்கையை பணிய வைப்பதற்கான யுத்தி இந்திய அரசிற்கும், அதன் பங்குதாரர்களாக உள்ளவர்களுக்கும் தேவைப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மறைந்து போன தனது தமிழினக் காப்பாளர் பெயரை மீண்டும் உயிர்ப்பிக்க கருணாநிதி ஆரம்பித்த டெசோவின் மூலம் காய்கள் நகர்த்தப்படுகின்றன. CEPA ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளைத் தளர்த்தாவிட்டால் இந்தியாவிலிருந்து தமிழீழத்திற்கான குரலை டெசோவின் மூலம் முடுக்கி விடுவோம் என்று இலங்கை அரசிற்கு திறந்த மிரட்டலாக (வர்த்தகக் கூட்டம் நடக்கிற அதே) ஆகஸ்டு 5ம் நாள் டெசோ மாநாடு நடைபெறும் என ஜீன் மாத தொடக்கத்தில் தேதி அறிவிக்கப்படுகிறது. தமிழீழமே தீர்வு என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஜூன் மாத இறுதியில் சிவசங்கர் மேனனின் இலங்கைப் பயணத்தில் நல்லிணக்கம், வாழ்வுரிமை, 13 வது சட்டத்திருத்தம், இந்திய-இலங்கை நல்லுறவு குறித்தும் பேசப்படுகிறது. பின்னர் ஜூலை 11-13 வரையில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் இலங்கைப் பயணம் நடைபெறுகிறது. அந்த பயணத்தில் இந்திய வர்த்தகம் குறித்தும், செபா ஒப்பந்தம் குறித்தும் மீண்டும் பேசப்படுகிறது. ஆனால் இலங்கை அரசு முழுதுமாக செபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்வராவிட்டாலும், சில முக்கியமான வணிக ஒப்பந்தங்களை ஏற்க முன்வருகிறது.

இந்நிலையில் தான் ஜூலை 15ம் தேதி கருணாநிதியை ப.சிதம்பரம் நேரில் சந்திக்கிறார். அந்த சந்திப்பு முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த கலைஞர், தமிழீழம் கோரி டெசோ மாநாட்டில் தீர்மானம் போட மாட்டோம் என இலங்கை அரசிற்கான செய்தியை இங்கிருந்து அறிவிக்கிறார். இதை மாநாட்டுக்கு முன்பே வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அது அவர் இலங்கை அரசிற்கு கொடுத்த செய்தி. பின்னர் ஆகஸ்டு 5ம் தேதி நடைபெற இருந்த மாநாடு ஆகஸ்டு 12ம் தேதிக்கு மாற்றப்படுகிறது.

தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு என்பது ’ஈழத்தமிழர் வாழ்வுரிமை’ மாநாடாக மாற்றம் பெறுகிறது. இந்நிலையில்தான் லண்டனில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தோழர் சிவந்தனுக்கு ஆதரவாகவும், இலங்கையில் மறுகுடியேற்றங்கள் மிகவும் நன்றாக நடப்பதாக கூறிய ஐ.நா அதிகாரி ஜான் ஜிங்கை கண்டித்தும், டெசோவின் இந்த அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தியும், வாழ்வுரிமை என்ற கோரிக்கை மோசடி என்றும் தமிழீழமே தீர்வு என வலியுறுத்தி டெசோ மாநாட்டிற்கு முந்தைய நாள் மே17 இயக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பிறகு டெசோ மாநாட்டில் இயற்றப்பட்ட மொக்கை தீர்மானங்களை எடுத்துக் கொண்டு சர்வதேச நாடுகளிடம் அளிக்கிறோம் என்று கையளித்துவிட்டு வந்தனர். (இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பாதியைத்தான் கொடுத்தார்கள் என்பது தனிசெய்தி) இலங்கை அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்த விஜய் நம்பியாருடன் சென்று ஐ.நாவிலும் அளித்து விட்டு வந்தனர். பிறகு சில காலம் டெசோ கிடப்பில் போடப்பட்டது.

2013, மார்ச் மாதத்தில் ஐ.நாவில் கொண்டு வரப்படும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென கலைஞர் டெசோ வாயிலாக முன்மொழிகிறார். அமெரிக்கத் தீர்மானம் என்பது இலங்கைக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் சார்ந்தது, தமிழருக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை, LLRC யும், நல்லிணக்கமும் கோரும் தீர்மானம் தமிழருக்கு எதிரானது என்று மாணவர் போராட்டம் அதை கிழித்தெறிகிறது.

2013 ஏப்ரல் 8 முதல் 12 வரை இந்தியப் பாராளுமன்றக் குழு இலங்கைக்கு பயணித்து போர்ப் பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்யப்படுகிறது. அந்த குழுவிற்கு தலைமையாக FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) அமைப்பின் ஜோதி மல்கோத்ரா செல்கிறார். இந்த அமைப்புதான் இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்தி, அதனூடாக பல்வேறு சர்வதேச வர்த்தக ஒப்ப்ந்தங்களை இலங்கைக்கு பெற்றுத் தர முயற்சித்தவர்கள். CEPA ஒப்பந்தத்தின் பேச்சாளர்களாகவும் செயல்பட்டவர்கள். இந்த அமைப்பின் எண்டர்டெயின்மெண்ட் பிரிவுக்கு தலைவராக இருப்பவர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 8-12 வரையிலான இந்த பயணத்தின் போதும் CEPA ஒப்பந்தத்தில் இலங்கையை கையொப்பமிட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நேரத்தில்தான் டெசோவின் ஆட்டம் மீண்டும் தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும், லண்டனில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் கலந்து கொண்டு காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகளிடம், காமன்வெல்த் மாநாட்டின் இடத்தை இலங்கையிலிருந்து மாற்றக் கோருவோம் என்ற செய்தியை இலங்கைக்கு அளிக்கிறார் கலைஞர்.

இந்த பயணம் முடிந்து சில காலம் கழித்து ஜூன் மாதம் தொடக்கத்தில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையை மாற்றி அறிவிக்கிறார். இந்த நேரங்களில் தொடர்ச்சியாக செபா ஒப்பந்தம் குறித்த கட்டுரைகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் பசில் ராஜபக்சே இந்தியா வருகிறான். சல்மான் குர்ஷித்துடன் பேச்சு நடக்கிறது. உடனே சிவ சங்கர் மேனனின் இலங்கை பயணம் நடைபெறுகிறது. அங்கு மறு குடியமர்த்தல், இந்தியாவின் வீடு கட்டும் திட்டம் குறித்து பேசப்படுவதோடு 13 வது சட்டத்திருத்ததை அமல்படுத்த கூறப்படுகிறது.

ஜூலை 16 ம் தேதி நடைபெற்ற டெசோ கூட்டத்தில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக் கோரி தமிழகம் முழுதும் ஆகஸ்டு 8ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆட்சியில் இருக்கும்போது மீனவர்கள் பேராசைப்பட்டு செல்கிறார்கள் என்று சொன்ன கலைஞர், மீனவர்கள் தாக்கப்படுவதை இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்கிறார். 13 வது சட்டத் திருத்த்தை ஒரு காலத்தில் எதிர்த்த கலைஞரின் தலைமையில், வாழ்வுரிமை வாதத்தை வலுப்படுத்த ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தமான 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதைப் போலவே இலங்கைக்கு வலிப்பது போலவும் இருக்க வேண்டும், வலிக்கவும் கூடாது என்பது போலவும் முயற்சிகள் நகர்த்தப்படுகின்றன.

ஆனால் ஜூலை 19 ம் தேதி CEPA ஒப்பந்தம் எங்களுக்கு தேவையில்லை என்று பசில் ராஜபக்சே வெளிப்படையாக அறிவிக்கின்றான். இதன் தொடர்ச்சியாக டெசோ போராட்டம் நடத்துகின்ற அதே நாள் G.L பீரிசின் இந்தியப் பயணமும், சல்மான் குர்சித்தின் இலங்கைப் பயணமும் நடக்கின்றன. இப்படிப் பலகட்ட பேச்சுகளும், பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற வாதங்களும் சேர்ந்தே நடக்கின்றன.

நேரடி முதலீட்டுக்கு வழிவகுக்கும் செபா ஒப்பந்த்தை ஏற்க மறுக்கும் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமரின் புறக்கணிப்பும்,அதே நேரம் மற்ற வணிக உறவுகளை பலப்படுத்த, சல்மான் குர்சித்தின் இலங்கைப் பயணமும் ஒருங்கே நடைபெறுகின்றன. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் புறக்கணித்தது ஆறுதலாக இருப்பதாக கலைஞர் கூறுகிறார். சல்மான் குர்சித்தின் பயணம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று முடித்துக் கொள்கிறார். இதை வெற்றியாக ஓதும் ஊடகங்கள் ஒரு புறமும், வெளியுறவுக் கொள்கை வெளியுறவுக் கொள்கை என கூவும் ஊடகங்கள் மறுபுறமும் என தமிழர்களைச் சுற்றி ஓலமிடுகின்றன.

இப்படிப்பட்ட துரோகங்களையெல்லாம் கடந்துதான் தமிழீழ விடுதலைக் கோரிக்கை தமிழர்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது. துரோகங்களின் முகத்திரை ஒரு நாள் கிழியும். தமிழர்களின் எழுச்சி எதிரிகளை விரட்டியடிக்கும். நமது போராட்டங்கள் கோரிக்கைகளில் சமரசமின்றி தொடரட்டும். இலங்கை, இந்திய அரசுடன் இணைந்து இனப்படுகொலை குற்றத்திற்காக கூண்டிலேற்றப்படும் நாளை உருவாக்குவோம். மாவீரர்களின் கனவான தமிழீழ விடுதலை பிறக்கும். நாம் வெல்வோம்.

- விவேக், மே17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It