நவம்பர் 7, 2012 அன்று நடந்த சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதலில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தாழ்த்தப்பட்ட கிராமங்கள் கொளுத்தப்பட்டு, உடைமைகள் சூறையாடப்பட்ட சம்பவம் ஒரு வருடத்தை கடந்துள்ளது.

ஓராண்டு முடிந்தும் வன்முறை நடத்தியோரை தண்டிக்காத நிலையில், தாழ்த்தப்பட்ட கிராம மக்கள் நவம்பர் 7 ’‘சாதி ஆதிக்க எதிர்ப்புநாளாக” கடைபிடித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றி தமிழக அரசிற்கு 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்திட முடிவு செய்தனர்.

குறிப்பாக, “பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து கிராமங்கள் எரிப்பு, நாகராசன் இறப்பு, இளவரசன் படுகொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய். மறுவாழ்வுப் பணிகளை உடனடியாக செய், பாதிக்கப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்கை வாபஸ் வாங்கு, ஊர்க்கட்டுப்பாடுகளை விதித்துவரும் சாதிவெறி சக்திகளை உடனடியாக கைதுசெய், சாதிய கட்டப்பஞ்சாயத்துகள் மீது நடவடிக்கை எடு” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.  

இதனையறிந்து மாவட்ட ஆட்சியர், நத்தம் கிராம பிரதிநிதிகளை வரவழைத்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். நவம்பர் 7 நாளை நினைவுபடுத்த தேவையில்லை என்றும், அதனை மறக்க வேண்டும் என்றும் கூறினர். ஊர் பிரிதிநிதிகள் இதை ஏற்க மறுத்ததால் அன்றிரவே ஆர்டிஓ, தாசில்தார், ஏஎஸ்பி ஆகியோர் கிராமத்திற்கு வந்து மக்களை கைது செய்வோம் என்று மிரட்டியும் சட்டம், ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்றும் பயமுறுத்தினர். 6-ந்தேதி அன்று 144 தடை உத்தரவை அமல்படுத்தி உண்ணாவிரதத்திற்கு தடையும் விதித்தனர். போஸ்டர் ஒட்டிய ம.ஜ.இ.க அமைப்பைச் சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளது காவல்துறை. மேலும் விவசாய விடுதலை முன்னணி தோழர்கள் இருவர் கைதுசெய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி 3 கிராம மக்களும், பள்ளி மாணவர்கள் உட்பட உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். சாதிவெறித் தாக்குதலில் இறந்த மங்கம்மாள், இளவரசனுக்கு மரியாதை செலுத்தினர்.

 நத்தம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்களும், அண்ணாநகரில் 100 மக்களும், கொண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட மக்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஊரைச் சுற்றிலும் காவல்துறையும் உளவுத்துறையும் குவித்து வேவு பார்க்கப்பட்டது. நத்தம் கிராமத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்தனர். இப்போராட்டத்தில் (மா .லெ) மக்கள் விடுதலை, ம.க.இ.க., ம.ஜ.இ.க, தமிழ்நாடு மக்கள் கட்சி, மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல அமைப்பினர் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

காவல்துறையோ தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததற்கு 3 கிராம மக்கள் மீதும் 144 தடையை மீறி ஒன்று கூடுதல், சட்ட விரோதமாக கூடுதல்’ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. நத்தம் கிராமத்தில் துரை, பொடா பழனி, மாதையன், ஆகிய முன்னணியாளர்கள் உள்ளிட்ட 37 பொதுமக்கள் மீதும், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களில் முன்னணி நபர்கள் உட்பட 27 பொதுமக்கள் மீதும், மா.லெ மக்கள் விடுதலை கட்சியைச் சார்ந்த ரமணி, பாலன் ஆகியோர் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிந்தனைச்செல்வன், நந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி ஒடுக்குமுறையை ஏவும் அதேவேளையில், சில வன்னிய ஆதிக்க சக்திகள் நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் 7-ந்தேதி அன்று இரவு பட்டாசு வெடித்து ஊரைக் கொளுத்திய நாளைக்  கொண்டாடினர். ஒருபுறம் ஆதிக்க சக்திகள் தருமபுரி மாவட்டம் முழுவதும் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தாழ்த்தப்பட்ட மக்களை சமூக புறக்கணிப்பு செய்துவருகின்றனர். பா.ம.க அன்புமணியை நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி வேட்பாளராக அறிவித்து கிராமம் கிராமமாக திண்ணை பிரச்சாரம் நடத்துகிறார்கள். அ.தி.மு.க தி.மு.க தே.மு.தி.க என்று அனைத்துக் கட்சியில் உள்ள வன்னிய மக்களை வன்னியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னொறுபுறம் தமிழக அரசு ஓராண்டாக பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்துவதும், ஒடுக்குவதும் என ஆதிக்க கும்பலுக்கு துணை செய்யும் விதமாகவே செயல்பட்டுவருகிறது.

144 தடை உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒடுக்கும்விதமாகவும், சாதி ஆதிக்க சக்திகள் தங்களை பலப்படுத்திக்கொள்ள மட்டுமே உதவிவந்துள்ளது. பரமக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் 6 தாழ்த்தப்பட்ட மக்களை கொன்ற சம்பவத்திற்கு தமிழக அரசு அமைத்த நீதிபதி சம்பத் ஆணையம் முத்துராமலிங்கம் நினைவுநாளில் வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தியும், தாழ்த்தப்பட்ட மக்களை கலவரக்காரர்களாக சித்தரித்து, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அநீதியை   நிலைநாட்டியுள்ளது. இவ்வறிக்கையின் மூலம் முக்குலத்தோர் சமூகத்தை குளிரவைத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசு சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்தியிருக்கிறது.

இம்மானுவேல் சேகரனை நினைவுபடுத்த வேண்டாம் என்றும், செப் 11 நாள் ஒருபோதும் தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி நாளாக அடையாளம் பெற்றுவிடக்கூடாது என்பதுமே அதன் நோக்கம். இதையே தருமபுரி நவம்பர் 7 தாக்குதல் நாளை மறைக்கவும், மறக்கவும் மாவட்டம் நிர்வாகம் முயற்சிக்கிறது. இளவரசன் படுகொலையை விசாரிக்க அமைத்த நீதிபதி சிங்காரவேலுவின் அறிக்கை என்னாயிற்று என்று தெரியவில்லை. பரமக்குடி அறிக்கை போல சாதி ஆதிக்க வெறியர்களை காப்பாற்றி, தாழ்த்தப்பட்டோர் மீது பழி சுமத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே கூறலாம். 

தலித் எதிர்ப்பு சாதிய அரசியல் என்பது பா.ம.கவின் “அனைத்து சமுதாய கூட்டணி” மட்டுமின்றி தமிழக அரசின் கொள்கையாகவே உருபெற்றிருக்கிறது. 2014 தேர்தலை நோக்கி  பா.ம.க உள்ளிட்ட அனைத்து சாதி கட்சிகளும் தங்கள் தலித் எதிர்ப்பு வன்மத்தை தீவிரப்படுத்தி, வன்னிய மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைப் பெறுவதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழலானது தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொண்டிருக்கும் அபாயத்தை உணர்த்துகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் என்ன செய்ய போகிறோம் என்பது ஒன்றே நம் முன் உள்ள கேள்வி. 

- ரமணி, கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..

Pin It