2009க்குப் பின்பான தமிழீழ அரசியலை தன் வழிக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதமாக வடக்கு மாகாணத் தேர்தல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் ஈழத்தமிழர்களை பகடைக் காயாக பயன்படுத்துவதன் மூலம் சிங்கள அரசினை தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்கு இந்தியா பயன்படுத்திய முக்கியமான நிகழ்வாக இது பார்க்கப்பட வேண்டும். 80களின் இறுதியில் இம்மாதிரியான போலித்தேர்தலை நிகழ்த்தி தமிழர்களுக்கு உரிமைகள் பெற்றுத் தந்துவிட்டதாக பிம்பத்தினை உருவாக்க முயன்றதுபோல் இப்போது நடந்துள்ளது. தமிழர்கள் குறைந்தபட்ச அதிகாரத்தோடு, தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொழுது மட்டுமே இந்தியா தனது சாணக்கியத்தனத்தினை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும்.

தமிழர்களை இனரீதியாக தனது பகைவனாகவே இந்தியப் பேரரசு கருதுவதற்குரிய அனைத்து வரலாற்று ஆதாரங்களோடு அதன் வெளியுறவுக்கொள்கை நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது. தனது புவிசார் அரசியல் நலன்சார்ந்தே இதை வகுத்ததாக சொன்னாலும், தனது வரலாற்றிலேயே முதன்முதலாக இனப்படுகொலையை தனது அண்டை நாட்டில், தமக்கு சார்பான நிலைப்பாட்டில் இருந்த மக்கள் மீது இந்திய அரசு நிகழ்த்தியதன் அடிப்படை காரணத்தில் நிச்சயம் ராஜதந்திரம் இருப்பதாக சொல்ல ஆதாரம் ஏதுமில்லை. இது இனரீதியான மோதலாக மட்டும் குறுகி நிற்கவில்லை, இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்களின் பிராந்திய சந்தை, கனிம-பெட்ரோலிய வளங்கள் மீதான ஆர்வம் என பல்வேறு உட்கூறுகளை பெற்று இருக்கிறது.

தனது புவிசார் ராணுவ பாதுகாப்பிற்காகவே இலங்கையை ஆதரித்ததாக இந்தியா சொல்லுமெனில் திரிகோணமலையில் அமெரிக்காவின் கப்பற்படை தளத்தினையும், போக்குவரத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் ACSA( acquisition and cross servicing agreement) என்கிற ஒப்பந்தத்தினை 2007 மார்ச்5 ஆம் தேதி அமெரிக்கா-இலங்கை கையெழுத்திட்டபொழுது இந்தியா அமைதிகாத்தது. இதே ஒப்பந்தத்தினை 1970களின் இறுதியில் கையெழுத்திட அமெரிக்காவும், இலங்கையும் முயற்சித்த பொழுது இந்திராகாந்தியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆயுத போராட்டத்திற்கு உதவி செய்ய கொள்கை ரீதியாக இந்தியா முடிவு செய்தது. ஆனால் 2007இல் அவ்வாறு ஏதும் நிகழவில்லை. மாறாக இந்திய அரசு அமெரிக்காவின் முப்பரிமாண ரேடார் கருவிகளை இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதியில் நிறுவ அனுமதித்தது. இந்த ரேடார் மிக ஆற்றல் வாய்ந்த ஒன்று. இது ஒட்டுமொத்த வங்காளவிரிகுடா பகுதியையும், இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியையும் கண்காணிக்க முடியுமென்றால், இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியும் அமெரிக்காவின் கண்காணிப்பில் வரும் என்றுதான் அர்த்தம்.

இது மட்டுமல்லாமல் இலங்கையின் வடக்கு பகுதியில் வெகு சமீபத்தில் அமெரிக்காவின் கடற்படையும், இலங்கையின் கடற்படையும் போர் பயிற்சி எடுத்தார்கள் என்கிற தகவல் இந்தியாவில் வெளியாகவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்பாக இலங்கையின் தெற்குப் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க கடற்படையும்-இலங்கையின் கடற்படையும் சேர்ந்து நிகழ்த்திய போர்ப்பயிற்சியே இப்பிராந்தியத்தியத்தின் மிகப்பெரும் போர்ப் பயிற்சி எனப்படுகிறது. மேலும் கோத்தபய ராஜபக்சேவின் கடந்த மாதப் பேட்டியில் அமெரிக்காவே புலிகளின் மிதக்கும் ஆயுதக் கிடங்குகளை, கப்பல்களை கண்டறிந்து அழிக்க உதவியது என சொல்லி இருக்கிறார். ஆக, ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பினையும் கிடைத்த விலைக்கு விற்றுவிட்ட இந்தியாவின் பாதுகாப்பு-வெளியுறவுக்கொள்கை மீதான ஆய்வு இதுவரை நடத்தப்படாமலேயே இருக்கிறது. இந்திய ஊடகங்களின் சாபக்கேடாகவே இதை பார்க்கமுடிகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கை மீதான இந்தியாவின் கொள்கை என்பது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் நிகழும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் காணமுடியும்.

இந்தியாவின் கொள்கையானது இலங்கை-அமெரிக்கா-மேற்குலக நலன்களை கணக்கில் எடுத்து அவர்களுக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய ஆபத்தான கொள்கைப் பரப்பில் வாழும் அதிகாரமற்ற தமிழர்கள் முழுமையான நிச்சயமற்ற வாழ்வியலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் அல்லது நிதானமாகவும், உறுதியாகவும், கொடூரமாகவும் நிகழும் ஒரு இனப்படுகொலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். கொல்லப்படும் ஆட்டிற்கு கிடைக்கும் மரியாதையாக இந்த மாகாணத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஓர் இனப்படுகொலைக்கு சர்வதேசத்தில் நிகழும் விசாரணை நடைமுறைகள் முற்று முழுதாக ஈழத்தமிழர் விடயத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குற்றத்திற்கு, பொதுவாக நிகழும் ‘குற்றவாளிகளைக் கண்டறிதல், விசாரணை, தண்டித்தல்’ என்கிற செயல்பாடும், பாதிக்கப்பட்டவர்களின் நீதி, கோரிக்கை, நிவாரணம், பாதுகாப்பு ஆகியவையும் மிக நுணுக்கமாக தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இதனை தந்திரத்துடன் அமெரிக்காவும், இந்தியாவும் ஐ.நா.வின் துணை கொண்டு செய்து முடித்திருக்கின்றன. குற்றவாளிகளுக்கான விசாரணை என்பது ஐ.நாவின் விதி எண் 99ன் கீழ் சர்வதேச விசாரணையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறையை ஐ.நாவின் உயர்மட்ட சட்டவல்லுனர் குழு 2009 மே-ஜூலை மாத இறுதியில் பரிந்துரை செய்தது. இதே நிலைப்பாட்டினை ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் கேட்டது. இதை பான்–கி-மூன் மறுத்து உள்ளக விசாரணையே போதுமானது, இதை இலங்கை அரசே நிகழ்த்தும் என்றார். இதன்படி அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணையக்குழுவின் விசாரணைகளே குற்றத்தினை விசாரிக்க போதுமானது என்று சர்வதேசம் பிரச்சாரம் செய்தது. சர்வதேச விதிமுறைகளை சற்றும் பின்பற்றாத, சர்வதேச நீதிமான்களால் நிராகரிக்கப்பட்ட இந்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளே பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு கிடைக்கும் நிவாரணம் என்று ஐ.நா.வின் மனித உரிமைக்கூட்டத்தில் மேற்குலகினால் பரிந்துரை செய்யப்பட்டது. இதுவே அமெரிக்காவின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதாவது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே அமெரிக்கத் தீர்மானம்.

“ஒரு அரசு நடத்திய விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து” என்று சர்வதேசம் கோருவதே இலங்கைக்கு எதிரானது என்று இந்தியா-இலங்கை-சீனா வாதிட்டது. இந்தத் தீர்மானம் இலங்கைக்கு எதிரானது என்று அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகம் வாதிட்டது. இந்த நாடகம் நிறைவேறிய பின்னர், தமிழர்களுக்கு குறைந்த பட்ச அதிகாரம் இருக்கும் பட்சத்திலேயே தம்மால் பேரம் பேசமுடியும் என்றுணர்ந்த இந்தியா 13வது சட்ட திருத்தத்தினைக் கோரியது. மாகாணசபைத் தேர்தலை நடத்தி தமிழர்களுக்கு முதலமைச்சர் பதவி தரவேண்டுமென்ற கோரிக்கையை 2009 போர் முடிந்தவுடன் எம்.கே நாராயணனால் தமிழர் பிரதிநிதிகளை மிரட்டி ஏற்றுக் கொள்ளச் செய்ய முன்வைக்கப்பட்டதை திரும்ப முன்வைத்தது. சர்வதேசமும் தமிழர்களை அமைதிப்படுத்த இதுவே சிறந்தவழி என்கிற முறையில் ஏற்றுக்கொண்டது. இதனடிப்படையில் மேற்குலகம், இந்தியா, இலங்கை மற்றும் பெருவணிக நிறுவனங்களின் உதவியோடு இயங்கும் மிக வலிமைவாய்ந்த சர்வதேச அரசியல் தரகு நிறுவனமாகிய இன்டர்னேசனல் க்ரைசிஸ் க்ரூப் - 2002 முதலே தமிழீழ கோரிக்கையை மறுத்த இந்த நிறுவனம் - 2009க்கு பின்னர் மிகவலிமையுடன் செயலாற்றி இலங்கை தொடர்பான அரசியல் போக்குகளை கட்டுப்படுத்த முயற்சித்தது. 2009க்கு 3 ஆண்டுகள் பின்னர், சற்று வெற்றி பெற்ற இந்த நிறுவனம் பல அடுக்கு பரிந்துரைகளை இலங்கைக்கும், தமிழக-தமிழீழ தமிழர்களுக்கும், இந்தியாவிற்கும், மேற்குலகிற்கும் முன்வைத்தது.

அதில் இலங்கைக்கு வைத்த முக்கிய நான்கு பரிந்துரைகள்,

  • 2013 அக்டோபர் மாதத்திற்குள் ஐ.நாவின் உயர் அதிகாரிகளை இலங்கையின் தமிழர் பகுதிக்கு அனுமதிக்க வேண்டும்.
  • தமிழர் பகுதிகளில் மீள்குடியேற்றம் நல்லிணக்க ஆணைத்தின்படி நடைமுறை படுத்தப்பட வேண்டும்.
  • போரின் போது காணாமல் போனவர்கள் குறித்தான விசாரணை கமிசனை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும்.
  • வடக்கு பகுதியில் மாகாணத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.

மேற்கூறிய நிகழ்ச்சி நிரலை இலங்கை அரசாங்கம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது. நவநீதம் அம்மையாருக்கு இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக இலங்கை அரசே காணாமல் போனவர் பற்றி விசாரிக்கும் என்கிற கண்துடைப்பு விசாரணைக் கமிசன் உருவாக்கப்பட்டது. ’சிங்கள உள்நாட்டு அகதிகள்’ என்று சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் குடியேற்றியது. (இதன் ஆவணத்தினை மே17 இயக்கம் வெளியிட்டது.)

இதை இலங்கை செய்யும் பட்சத்தில் மேற்குலகம் இலங்கையில் நவம்பர் 2013 இல் காமன்வெல்த் மாநாட்டினை நடத்த அனுமதிக்கலாம்.

இந்த நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தேசிய இனவிடுதலையை பேசக்கூடாது; ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என முன்வைக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வைக்கப்பட்ட நிபந்தனை. இதன் அடிப்படையிலேயே உள்நாட்டுப் பிரச்சனை என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் த.தே.கூ வேட்பாளார் விக்னேசுவரன் பேசினார். இந்தியா-இலங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த வேட்பாளர் அமெரிக்க ஆதரவினையும் பெற்றுள்ளார் என்பதே குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சர்வதேச நிகழ்ச்சி நிரலை இலங்கை அரசும் - த.தே.கூட்டமைப்பும் செய்து முடிக்கின்றன. இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் தீர்வுகிடைத்து விட்டதாக இந்தியாவின் அதிசிறந்த அறிவுஜீவி பத்திரிக்கையான எகனாமிக்-பொலிடிக்கல் வீக்லி முதல் அனைவரும் பேசுகின்றனர்.

இதன் ‘சர்வதேச நிகழ்ச்சி நிரலாக ஐ.நாவின் விதி எண் 99னையும், அதனூடாக முன்வைக்கப் படவேண்டிய சர்வதேச பொதுவாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்த சில முக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனென்றால், சர்வதேச விசாரணை என்கிற கோரிக்கை வலுத்துவரும் பட்சத்தில், இலங்கையில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை தேவைப்படும். அவ்வாறு நிகழும் விசாரணையில், இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என நிறுவப்படும் பட்சத்தில் பொதுவாக்கெடுப்பு கட்டாயமாக நிகழ்த்தப்படவேண்டிய அவசியம் ஏற்படும். ஆகவே, மேற்குலகின் அதிகாரமையத்தினால் ஐ.நாவினுல் கொண்டுவரப்பட்ட R2P(responsibility to protect), அஃதாவது பாதுகாக்கப் படுவதற்கான பொறுப்பு என்கிற வரையறையும், விதிமுறையும் தோல்வி அடைந்தது என்பது நிரூபணமாகிறது. ஏனெனில் இந்த விதிமுறையானது இனப்படுகொலையை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த விதி கொண்டு வரப்பட்டபிறகு நிகழ்ந்த முதல் இனப்படுகொலையாக ஈழவிடுதலை இருக்கிறது. எனவே சர்வதேச விசாரணையில் இது ஒரு இனப்படுகொலை என நிரூபிக்கப்பட்டால் R2P தோல்வியாகவே கருதப்படும். இதனை காக்கவும், ஒன்றுபட்ட இலங்கையை காக்கவும் சர்வதேசம் வழிமுறைகளைத் தேடுகிறது. இதனடிப்படையில் விடுதலைப்புலிகளும் தமிழர்களை கொலை செய்தார்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார்கள் என நிரூபிக்க முடியுமென்றால் ‘இனப்படுகொலை’ என்கிற வரையறையை தமிழீழ படுகொலைக்கு அளிக்கமுடியாது என மறுத்துவிட முடியும். இதன்மூலம் பல்வேறு லாபங்களை அடைய முடியும்.

இந்தப்பணியை மேற்சொன்ன ’இன்டர்னேசனல் க்ரைசிஸ் க்ரூப்’ சுறுசுறுப்பாக செயல்படுத்தத் துவங்கியது. இதனடிப்படையிலேயே புலிகளும் தமிழர்களை கொலைசெய்தார்கள்; எனவே அவர்கள் மீதும் விசாரணை தேவை என்பது முன்வைக்கப்பட்டது. இது ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை முதல் பேசப்படுகிறது. இதுவே இனப்படுகொலை என்று பேசாமல் போர்க்குற்றம் என்கிற சொல்லாடல் மூலமாக விவாதிக்கப்படுகிறது. புலிகளின் மீது குற்றச்சாட்டினை நிரூபிக்க முடியாமல் போனாலும் அதை கதையாடல் மூலமாக பலப்படுத்துவது மேற்குலகிற்கு தேவைப்படுகிறது.

ஐ.நாவின் இலங்கை தொடர்பான செயல்பாட்டினைப் பற்றிய உள்ளக விசாரணைக்குழு சார்லஸ் பெட்ரி அறிக்கையாக 2012 நவம்பரில் சமர்பிக்கப்பட்டது.(ஐ.நாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடுகள், மனித உரிமை மீறலை பதிவு செய்வதை தடுக்கும் திட்டமிட்ட நகர்வுகள் ஆகியவற்றினை இந்த அறிக்கை, மற்றும் ஐ.நாவின் தினசரி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆவணங்கள் ஊடாக அறிந்து கொள்ளமுடியும். இந்த ஆவணத்தின் முக்கிய பகுதிகள் கருப்பு மையினால் அழிக்கப்பட்டு /மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மறைக்கப்பட்ட பகுதிகளை மே17 இயக்கம் டிசம்பர்2012இல் வெளியிட்டது.) இதில் புலிகளின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டுமென்ற ஆதாரமில்லா கோரிக்கை ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியாரால் முன்வைக்கப்பட்டது. இதனை ஐ.நாவின் இலங்கைக்கான சர்வதேசப் பணியாட்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இந்தத் தகவல்களை ஐ.நாவானது பெட்ரி அறிக்கையின் முக்கியமான பகுதியாக மறைத்திருந்ததை உடைத்து அம்பலப்படுத்தியிருந்தோம். எனவே புலிகளின் மீது குற்றச்சாட்டினை ஆதாரப்பூர்வமாக சர்வதேச நிறுவனங்களின் ஊடாக நிறுவ முடியாது என்பதை உணர்ந்ததால், கார்டன் வீஸ், பிரான்சிஸ் ஹாரிஸன் புத்தகங்கள் ஊடாக கருத்தியல் கட்டமைக்கப்படுகிறது.

பிரான்சிஸ் ஹாரிசன் புத்தகத்தில் சொல்லப்பட்ட/ பேட்டியெடுக்கப்பட்ட பத்திரிக்கையாளரை நான் நேரிலேயே நார்வேயில் சந்தித்த பொழுது எவ்வாறு அவர்கள் கூறிய தகவல்கள் திரிக்கப்பட்டிருந்தன என்பதை உணரமுடிந்தது. அவருக்கு நிகழ்ந்த அதே அநீதி போரின் பகுதியில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கும் நிகழ்ந்திருக்கிறது. இவர்களது ஆங்கிலமொழி புரிதல்குறைபாட்டினை பயன்படுத்திக்கொண்டு ஆசிரியர் தமது நோக்கத்தினை நிறைவேற்றி இருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களுக்குப் பின்புலமாக ஆஸ்திரேலியாவின் அறிவுசீவித்தளம் பின்னாலிருந்தது என்பது மறுக்க இயலாத ஒன்று. காரணம் மேற்சொன்ன நிறுவனத்தின் முன்னால் தலைவர் ஆஸ்திரேலிய அமைச்சர் கரத் இவான்ஸ் என்பவர் ஆவார். இவருக்கு வேறொரு முகமும் உண்டு, அதாவது இவர்தான் R2Pயினை வடிவமைத்த முக்கியமான இருவரில் ஒருவர். எனவே தனது கொள்கை தோற்றுப் போவதை விரும்பாதவராகவும், இலங்கை உடைபடுவதை தடுக்கும் தனது முன்னாள் நிறுவனத்தின் கோரிக்கை மற்றும் மேற்குலகம்-பெரு நிருவனத்தின் கொள்கைக்கு ஏதுவாக பின்னாலிருந்து செயலாற்றுகிறார். இவர் சர்வதேச விசாரணையை இலங்கை மீது கோருகிறார். அதேசமயம் புலிகளும் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைக்கிறார். ஆனால் இதுவரை இவர்கள் ஆதாரங்களை முன்வைக்கவில்லை. இவருக்குத் துணையாகவே இலங்கைக்கான ஐ.நாவின் அதிகாரி கார்டன்வைஸ் ஆஸ்திரேலியராக செயல்படுவதை காணமுடியும். இந்த இரு புத்தகத்தினைப் போலவே மேலும் ஒரு புத்தகத்தினை கொண்டுவருகிறார்கள்.

இந்த நிலைப்பாட்டினை மனதில் வைத்துக்கொண்டு நவநீதம் பிள்ளையின் அறிக்கையினையும், பேட்டியினையும் கணக்கில் எடுக்க வேண்டும். இவர் இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். அதன் அதிகாரவர்க்கம் தோற்றுப்போனதாக குறிப்பிடுகிறார். ஆனால் அவர் இலங்கை தோல்வியுற்ற ஜனநாயக நாடாக குறிப்பு சொல்ல மறுக்கிறார், அதாவது இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்க மறுக்கிறார். ஐ.நாவின் மனித உரிமை செயல்பாட்டில் இனப்படுகொலை அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரியும் நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை. இதுவே R2P செயல்திட்டத்திலும் முன்வைக்கப்பட்டது. இதை செயல்முறைப் படுத்தும் அதிகாரமுள்ள நவநீதம்பிள்ளை அடக்கி வாசிக்கிறார், அல்லது இலங்கை அரசின் நிலைபாட்டுடன் ஒத்துப்போவது என்கிற ஐ.நாவின் நிலைப்பாடினை முன்னெடுக்கிறார். மேலும் இவர், மாகாணத்தேர்தல் தமிழர்களுக்கு தீர்வினை அளிக்கும் முதல்படி என்கிறார். இவர் எந்த அதிகாரத்தின் அடிப்படியில் அல்லது கருதுகோள்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவனுக்கான நீதியை, நிவாரணத்தினை வரையறுக்கிறார் என்பது கவலைக்குரியதாக அமைகிறது.

இலங்கை அரசின் நிர்வாகத்தினை குறைகூறுவதோடு நிறுத்திக்கொண்டு அதன்மீது எந்த ஒரு மதிப்பீட்டினையும் முன்வைக்காத அவர், புலிகள் ஒரு கொலைகார அமைப்பு என்றும், அது தமிழர்களை அழித்தது என்றும் அதனை தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்றும் மதிப்பீட்டினை முன்வைக்கிறார். இதன் மூலமாக தனது நிலைப்பாட்டினை மிக நாசூக்காக வெளிப்படுத்தி இருக்கிறார். புலிகளின் மீது குற்றச்சாட்டு வைப்பதன் மூலமாகவே தமது பொறுப்புகளையும், தமது தவறுகளையும் மறைக்கிறது சர்வதேசம். புலிகள் மீதான விமர்சனத்திற்கு இதுவரை ஆதாரங்களை வெளியிடாமல் தடுமாறும் சர்வதேசத்தினை எதிர்கொள்ளும் வலிமையான அறிவுசீவி செயல்பாடு தமிழர் தரப்பில் இதுவரை நிகழவில்லை.

இவ்வாறாக தமிழர்களுக்கான நீதி மிக நுணுக்கமாக மறுக்கப்படுகிறது. கொலைசெய்தவர்கள் மீதான விசாரணை மறுக்கப்படுகிறது. இதை தமிழ் அறிவுச்சமூகம் மெளனமாக கடக்கிறது.

உலகின் சர்வதேச விதிமுறைகளின் படி இம்மாதிரியான படுகொலையின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகளான சர்வதேச விசாரணை, பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் அரசியல் தீர்விற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்துவது என்ற நடவடிக்கைகள் மூலமே சர்வதேசம் நேர்மையாக நடந்து கொள்கிறது என்று அறிவதற்கான ஆதாரமாகும். இதை வென்றெடுக்க தமிழ்ச் சமூகம் தமது வரலாற்றுக் கடமையை செய்து முடிக்க வேண்டும். இதைத் தவிர்த்து சொந்த காழ்ப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடிய நடவடிக்கைகளை மட்டுமே நாம் காண நேருமானால் தமிழ்ச் சமூகத்தினை விட பரிதாபமான இனம் வரலாற்றில் வேறெதுவுமாக இருக்க முடியாது. ஒருவேளை சிங்களப் பேரினவாதம் தோற்கடிக்கப்படாமல் போகுமானால், தெற்காசிய பிராந்தியத்தினை கடுமையான அரசியல் சிக்கலுக்குள்ளான பகுதியாக மாற்றும் பணியை செய்து முடிப்பதற்கு இணையாகும் தமிழ்ச் சமூகத்தின் அமைதி. பாசிசம் படர்ந்து வளர்ந்து இந்தியப் பெருங்கடலில் பல மனிதகுல விரோத செயல்களை செய்துமுடிக்கும் என்பது நிதர்சனம்.

தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான இக்காலத்தில், சர்வதேச விவாதம் நடைபெரும் சமயத்தில், எந்த ஒரு ஆழமான அறிவுசீவி வேலைகளோ, பண்பாட்டு-கலை நிகழ்வுகளோ இதனை எதிர்கொள்ளுமளவு நிகழாமல், தமது சொந்த காழ்ப்புணர்ச்சியினை மையப்படுத்தி இயங்கும் தனிநபர்கள், சிந்தனையாளர்கள், இயக்கங்கள் ஒரு பெரும் இழப்பினை தமிழர் தரப்பில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேசம், இந்தியம் இரண்டும் இனப்படுகொலை மற்றும் இன அழிப்பினை மறுப்பது என்பது வரலாற்றியல் பூர்வமாக பார்க்க மறுக்கும் ஒரு செயல். அது அரசியல் விஞ்ஞானத்திற்கு எதிரானதாகவே இருக்கிறது. அது கட்டமைக்கும் அரசியல் தத்துவமானது அமெரிக்காவின் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லில் நிற்கிறது. அதுவே இந்தியாவினுடைய அனைத்து தரப்பினருடைய அரசியல் உளவியல் வெளிப்பாடாக ஈழவிடயத்தில் 2009க்குப் பிறகும், 2009க்கும் முன்பும் நடந்து வருகிறது. பல்வேறு ஆதாரங்கள் இனப்படுகொலை சார்ந்தும், ஐ.நாவின் தோல்வி சார்ந்தும், ஏகாதிபத்தியங்களின் அரசியல் செயல்பாடு சார்ந்தும் வெளியானபின்பும், அதை பார்க்க மறுப்பதும், புறக்கணிப்பதுவும் எந்த வகையான அரசியல்? இவர்கள் வாயிலாகவே சொல்கின்ற 9/11 இரட்டை கோபுரத் தக்குதலுக்குப் பிறகு கட்டமைக்கப்பட்ட வார்த்தையை ஈழவிடயத்தில் நிறுவ முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இவர்கள் ஏகாதிபத்தியத்தின் செயல்திட்டத்திற்குள் வந்துவிடுகிறார்கள்.

விடுதலைப்போராட்டம் என்கிற சொல் அங்கு நிகழ்ந்ததாகவோ, எந்த வரலாற்றுக் குறிப்பையும் திட்டமிட்டே தவிர்த்து வருகிறார்கள். விடுதலைப் போராட்டம் என்கிற அரசியல் சொல்லாடலை முன்வைக்கிற பொழுது எவ்வளவு அரசியல் தவறுகள் நிகழ்ந்த போதிலும் விடுதலையின் அரசியலை அங்கு மறுப்பதற்கில்லை. இதன்மூலம் நமது அன்பான அறிவுசீவிகள் விடுதலை என்கிற வார்த்தையை அவர்கள் அகராதியிலிருந்து எடுத்துவிட்டு குறிப்பான நுண்ணரசியல் பேசுகிறோம் என்கிற பெயரில் ஏகாதிபத்தியத்தின் அரசியல்-உளவியல் செயல்திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

(நன்றி – தீராநதி)

- திருமுருகன் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It