ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை அந்நாட்டின் மைய அரசிடமே இருக்கும். மாநில அரசுக்கு என்று தனியே ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்காது. மைய அரசின் வெளியுறவுக் கொள்கையே மாநில அரசின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கும். அதற்கென்று தனியே வெளியுறவுக் கொள்கை கிடையாது. இதை தமிழ் நாட்டின் முதலமைச்சராக டாக்டர் கலைஞர் இருந்த போது சட்டமன்றப் பேரவையில் உறுப்பினரால் எழுப்பப் பட்ட வினாவுக்கு விடையாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை, ஒரு மாநிலத்தில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளைக் காயப் படுத்துவதாக இருந்தால் அவர்களில் கனிசமானவர்கள் அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கி விடுவர். இதனை களையும் பொறுப்பு மைய அரசுக்கு உண்டு. மைய அரசு தன் வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் போது, இந்தியாவில் வாழும் எந்த தேசிய இன மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிராக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எதனால் தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானதாக உள்ளதாக குற்றம் சாட்டுகிறோம்? கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி என்பதை ஆவணச்சான்றுடன் பலர் நிரூபித்தும், நீதிமன்றத்தில் அந்த ஆவணங்களைத் தாக்கல் செய்தும் மைய அரசு கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்று தவறான தகவலை நீதிமன்றத்திலேயே அளிக்கிறது. இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது செய்யப்படும் போது, அவர்கள் திருப்பியனுப்பப் படுகிறார்கள். தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கானோர் இலங்கை அரசால் சுடப் படுவது தொடர்கதையாக உள்ளது. அவர்கள் எல்லை தாண்டியிருந்தாலும், அவர்களைக் கைது செய்ய வேண்டுமே தவிர அவர்களைச் சுட சிங்கள இராணுவத்துக்கு எந்த உரிமையும் இல்லை. மைய அரசு இந்த உணர்வு பூர்வமானப் பிரச்சினையில் ஆக்கப் பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இலங்கையில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் இனப் படுகொலை செய்யப் பட்டதை நம்மால் தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இன்றளவும் இருக்கிறது. அதனை நினைக்கும் போதெல்லாம் உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. தங்கள் கையறு நிலையை நினைத்து அவமாணமும், அழுகையும் அவர்களுக்கு இன்றளவும் மாறவில்லை. அப்படியிருக்கும், போது, தமிழ் நாட்டின் சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக ஒருமனதாக நிறைவேற்றப் படும் தீர்மாணங்களை இந்திய அரசு மதிக்காதது ஒட்டு மொத்த தமிழர்களை அவமதிப்பதாகவே கருதுகிறோம்.

இந்தியாவில் இருந்து பணிக்கு வெளி நாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினகளைத் தீர்க்க, இந்திய தூதரகங்கள் உரிய உதவி செய்வதில்லை. அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களின் தலையீட்டிலும், அங்குள்ள தமிழக அமைப்புளின் ஆதரவாளர்களின் நேரடி நடவடிக்கையிலுமே தீர்வு கிடைத்திருக்கிறது.

இனி நாம் என்ன செய்யலாம்? தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் தமிழர் நலனுக்கு தேவையான மாற்றங்களைக் குறிப்பிட வேண்டும். இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் தமிழர் நலனுக்கு எதிரானப் போக்கை அம்பலப்படுத்தி தமிழக அரசு ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இக்கூட்டத்தில் பங்கேற்பவர்களின் கருத்துகளுடன் தொடர் நடவடிக்கையாக, ஒரு குழு அமைத்து அவர்களின் அறிக்கையையும் பெற வேண்டும். இக்குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் வெளி நாடுகளில் தூதராகப் பணியாற்றிய அனுபவம் பெற்ற தமிழர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், வெளிநாட்டுத் தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் இடம் பெறலாம். இக்குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு தமிழக அரசு ஒரு மாநாடு நடத்தி மைய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மைய அரசின் உறக்கத்தை ஓயாது கதவைத் தட்டியும், உரத்து குரலெழுப்பியும் கலைக்க வேண்டியிருக்கிறது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

- ந.அப்துல் ரஹ்மான், ஹாங்காங் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It