உலகம் முழுவதும் முதலாளிகளின் தங்குதடையற்ற லாப வேட்டைக்கு இலகுவான வழிகளை அமைத்தும், அவ்வப்போது அதிருப்தியின் விளைவில் வெடிக்கும் இயக்கங்களை இரும்புக் கரம்கொண்டும், ஜனநாயக முகமூடி அணிந்தும், அழிக்கும் தனது இயற்கையான வேலையைத்தான் அனைத்து அரசுகளும் செவ்வனே செய்துகொண்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் நமது அரசியல் அமைப்பும் அதை பேணிப் பாதுகாக்கும் அரசும் அமைத்துள்ளது என்பதை மிக எளிதில் நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த முதலாளித்துவ சேவகர்கள் அரசு இயந்திரத்தை கைப்பற்றும் போக்கில் விதவிதமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நம் முன்னிறுத்தி, போலி வாக்குறுதிகளில் குளித்து பின் அரியணை அமர்ந்து வாலையாட்டிக் கொண்டு தனது எஜமானர்களின் தேவைக்கிணங்க இயந்திரத்தை இயக்குபவர்களாகவே இருக்கிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.க, ஏன் போலி பாராளுமன்ற ஜனநாயக சகதியில் மூழ்கித் தவிக்கும் நமது கம்யூனிஸ்ட்களாக இருக்கட்டும், இவர்களின் கட்சி கோட்பாடுகள் வெவ்வேறு விதமானாலும் அவர்களின் நோக்கம் ஒரே உறுதியான நோக்கம், அது முதலாளித்துவ சேவை மட்டுமே.

முற்போக்கு ஜனநாயக விதைகளை, தனது சுயநல தேவைக்கிணைங்க நிலப்பிரபுத்துவ உறவுகளை உடைத்து சுதந்திர அடிமைகளை வென்றெடுக்க பயன்படுத்திக்கொண்ட முதலாளித்துவ சக்திகள் இன்று வெறும் ஜனநாயக முகமூடி அணிந்த பாசிஸ சக்திகளாக நிற்பது தெள்ளத் தெளிவான ஒன்றே. உலகம் எங்கும் இவர்களின் கோர லாபவேட்டையினால் பூதாகரமாக எழுந்து நிற்கும் நெருக்கடி, வளர்த்த மற்றும் வளரும் நாடுகளை பாரபட்சமின்றி பந்தாடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த அமைப்பின் இயலாமையின் விளைவில் எதிரொலிக்கும் மக்கள் எழுச்சிகளை, தொழிலாளர் வர்க்க போராட்டங்களை ஒடுக்கவும்,  காலாவதியான இந்த முதலாளித்துவ அமைப்பின் அழிவைத் தடுக்கவும் பாசிஸ முறைகளை கையாளுவதைத் தவிர இவர்களுக்கு எந்த ஆயுதமும் இல்லை. இதனடிப்படையில்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை இயக்க இவர்களுக்கு மோடி போன்ற பாசிஸ ஆட்சியாளர்கள் தேவை.
 
முற்றிலும் அடிப்படைவாத சக்திகளின் அரசியல் அங்கமான பா.ஜ.க.வினிலும் மோடியை வேட்பாளராக அறிவிப்பதில் இருந்த சலசலப்பும், வேறுவழியின்றி மோடியை முன்னிறுத்தியதும் இதையே குறிக்கிறது. மோடியின் கொடூரமான பாசிஸ வழியின் நிழலில் இந்திய முதலாளிகள் தங்களது இரக்கமற்ற லாபவேட்டையை தொடர நினைக்கின்றனர். ஒருபுறம் மோடி மற்றும் பா.ஜ.க.வினரின் மக்கள் ஒற்றுமையைத் துண்டாடும் அடிப்படைவாத அசிங்கத்தை அகற்றும் போர்க்குரல் ஒலித்துக்கொண்டிருக்க, மறுபுறம் கணிசமான நடுத்தர வர்க்கத்தினரிடம் மோடியின் மீதான ஈர்ப்பு வளர்ந்து வருகிறது (ஊடகங்களிலும் இதன் சான்றே எதிரொலித்த வண்ணம் உள்ளது).
 
பல்லாயிரக்கணக்கான மக்களின் இரத்தக்கறை அவன் முகத்தில் இருந்து மறைவதற்குள், வளர்ச்சி நாயகன், இந்தியாவின் நம்பிக்கை (இந்திய முதலாளிகளின் நம்பிக்கை என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்) என்றெல்லாம் பெயர். சச்சரவுகளுக்குப் பெயர்போன மோடிக்கு அயல்நாடுகள் விசா வழங்க மறுத்தும், பின்பு வழங்கியது, விசா ஒரு விஷயமல்ல மோடியுடன் கைகோர்த்து வேலை பார்ப்பதில் எங்களுக்கு எந்த அய்யமுமில்லை என்று அமெரிக்கா அறிவிப்பதும், ஏழை விவாசாய நிலங்களில் கார்ப்பரேட்டுக்கு வரவேற்பு கம்பளம் விரிக்கும் சேவை திறமையாக இருக்கட்டும், இன்னும் எத்தனை எத்தனை............

மோடியின் அடிப்படைவாத அசிங்கத்துடன் சேர்ந்து நிற்கும் பாசிஸ அபாயத்தையும், அதில் குளிர்காய நினைக்கும் இந்திய முதலாளிகளையும் அறுத்தெறிவது உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர கடமையாக இன்று நம்முன் உயர்ந்து நிற்கிறது. நமது பாதையில் முளைத்து நிற்கும் முட்களை களைந்திட..... அனைவரும் ஒன்று கூடுவோம்.

Pin It