தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - சூலை – 2013 இதழில், கட்சியின் தலைவரும், இதழின் ஆசிரியருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள், “முதலாளிய சனநாயகமும் கம்யூனிஸ்ட்களின் சர்வாதிகாரமும்” என்றொரு கட்டுரை எழுதினார்.

“பிரிட்டன், கனடா உள்ளிட்ட முதலாளிய நாடுகள் தேசிய இன சிக்கல்களுக்கு சனநாயக வழியில் பொது வாக்கெடுப்பு நடத்த முன்வந்தன. ஆனால், லெனினுக்குப் பின்வந்த பொதுவுடைமைத் தலைவர்களான ஸ்டாலின், மா-சே-துங் ஆகியோர் தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க சனநாயக வழிப்பட்ட அணுகுமுறைகளை மேற்கொள்ளவில்லையே ஏன்?” எனக் கேள்வி எழுப்புவதே அக்கட்டுரையின் நோக்கம்.

இக்கட்டுரைக்கு எதிர்வினையாக தோழர் திருப்பூர் குணா அவர்கள், “தோழர் பெ.மணியரசன் கட்டி எழுப்பும் முதலாளித்துவ மாயை” என்றொரு கட்டுரையை கீற்று இணையத்தில் எழுதியுள்ளார். தோழர் குணாவின் எதிர்வினைக் கட்டுரையைப் படிக்கும் போது, அவர் தான் ‘மாயை’யில் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

தோழர் பெ.ம. அவர்களது கட்டுரையின் மைய விவாதப் பொருளையே தோழர் குணா முதலில் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அவரது பதிலைப் படிக்கும் போது உணர முடிகின்றது.

தோழர் பெ.ம.வின் கட்டுரை, ‘மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்தது முதலாளியமா? கம்யூனிசமா?’ என்ற பொருள் குறித்து விவாதிக்கவில்லை.

தோழர் பெ.ம. அவர்கள் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே, “கம்யூனிசம் என்பது மனித நேயத்தின் சிகரம்! அதை நோக்கியப் பயணத்தின் முதல் கட்டம் சனநாயகம், அடுத்த கட்டம் நிகரமை, நிகரமையின் முதிர்வே கம்யூனிசம்” எனப் பொதுவுடைமைக் கொள்கையை மதிப்பிடுகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கட்சித் திட்டம், தமது இலக்கான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிகரமையை நோக்கி முன்னேறிச் செல்லும் அரசாக அது அமையும் எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இவ்வளவிற்குப் பிறகும், தோழர் பெ.ம. முதலாளியத்திற்கு ஆதரவளிக்கிறார் என தோழர் குணா தானே கற்பிதம் செய்து கொண்டு எழுதுகிறார்.

தோழர் பெ.ம. அவர்களது கட்டுரையில், உலகின் அனைத்து முதலாளிய நாடுகளும், தேசிய இன சிக்கல்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஒத்துக் கொள்கின்ற மனித நேய அரசுகள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், தோழர் குணா அவ்வாறு கூறியதாக, அதையும் தானே கற்பிதம் செய்து கொள்கிறார்.

பிரிட்டன், கனடா போன்ற ஒரு சில முதலாளிய அரசுகளே சனநாயக வழிப்பட்ட முறையில் தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க முன்வந்துள்ள நிலையில், புரட்சியாளர் லெனினுக்குப் பின் வந்த, பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட எந்தவொரு நாடும் இவ்வாறு சனநாயக வழியில் தேசிய இனச் சிக்கல்களை தீர்க்க முனையவில்லையே ஏன்? என்றே தோழர் பெ.ம. அவர்கள் அக்கட்டுரை மூலம் வினா எழுப்புகிறார்.

இவ்வினாவுக்கு ஞாயமாக பதில் அளிக்க வேண்டிய தோழர் குணாவோ, “தோழர் பெ.ம. முதலாளித்துவப் பாதையை முன்னிறுத்த முயற்சிக்கிறார்” என்று தொடர்பே இல்லாமல் எழுதுகிறார்.

தேசிய இன சிக்கல்களைத் தீர்ப்பதில், உழைக்கும் மக்களை சுரண்டுகின்ற முதலாளிய அரசுகளிடம் கூட தென்படுகின்ற சனநாயக வழிப்பட்ட அணுகுமுறை, மனித நேயத்தின் சிகரமான பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டத் தலைவர்களிடம் ஏன் தென்படவில்லை என்பதே நாம் முன் வைக்கும் முதன்மையான, தெளிவானக் ikaகேள்வி.

இக்கேள்வியின் நோக்கம் கம்யூனிசத்தின் மீது அவதூறு பரப்புவது அல்ல. கம்யூனிசமே ஏற்றுக் கொண்டத் தன்னாய்வு விமர்சன முறையிலேயே நாம் இக்கேள்வியை எழுப்புகிறோம். பொதுவுடைமைக் கொள்கை மரபில் வந்ததாகக் காட்டிக் கொள்ளும் தோழர் குணா, சுயவிமர்சனக் கருத்துகளைக் கூட, முதலாளிய அவதூறுகளாகக் கருதுவது எவ்வகையில் ஞாயம்?

தோழர் பெ.மணியரசன் அவர்கள், முதலாளிய நாடுகளின் தேசிய இனச் சிக்கல் மீதான அணுகுமுறைகளுக்கு சான்றாக, பிரிட்டன் ஏற்றுக் கொண்ட ஸ்காட்லாந்து நாடு பிரிந்து போவதற்கான பொது வாக்கெடுப்பையும், கனடா ஏற்றுக் கொண்ட கியூபெக் தனி நாட்டிற்கான பொது வாக்கெடுப்பையும் முன்வைத்துள்ளார்.

முதலாளிய சனநாயகம் போலியானது எனக் கூறும் தோழர் குணா, அக்கட்டமைப்பில் நடைபெறும் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று நம்மை எச்சரிக்கிறார். நல்லது. இங்கு சிக்கல் தேர்தல் முறையாக நடைபெறுமா நடைபெறாதா என்பதல்ல. உழைக்கும் மக்களைச் சுரண்டுகின்ற முதலாளிய அரசுகள் கூட வாக்கெடுப்பு என்ற சனநாயக வடிவத்தை முன்வைக்கின்றனவே, உழைக்கும் மக்களின் பாதுகாவலன் எனச் சொல்கின்ற பொதுவுடைமை நாடுகள் ஏன் அவ்வாறு முன்வைக்கவில்லை என்பதே இங்கு கேள்வி.

பொது வாக்கெடுப்பை கேள்விக் குள்ளாக்கும் தோழர் குணா, அடுத்ததாக, “எழுந்து நிற்கும் இம்முதலாளிய நாடுகளின் கால்களின் கீழ் குவிந்து கிடக்கும் பிணங்கள் செவ்விந்தியர்களுடையது” என ஒரு பெரும் பட்டியலையேத் தருகிறார். இது இங்கு விவாதப் பொருளே அல்ல என்பதைக் கூட அவர் உணரவில்லை.

முதலாளிய நாடுகள் பழங்குடிகளை அழித்ததையும், இன்றைக்கும் தேசிய இனங்களை சிதைத்தழிக்கும் முயற்சியில் இருப்பதையும் நாம் என்றைக்கும் மறுத்ததில்லை. த.தே.பொ.க.வின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், முதலாளியத்தின் இப்போக்கைத் தொடர்ந்து துகிலுரித்து வருவதை அனைவரும் அறிவர்.

ஆனால், அதை ஏதோ புதிய செய்தியாகக் கருதி, செவ்வியந்தியர்களை கனடா வேட்டையாடியது குறித்து விக்கிப்பீடியாவிலிருந்து எடுத்து ஒரு பட்டியலையே தருகிறார். முதலாளிய நாடு என்றாலே அப்படித்தானே இருக்கும்? அவ்வாறெல்லாம் நடக்கவில்லை, தேசிய இனங்களை முதலாளியம் தான் காக்கிறது என்று நாங்கள் எங்காவது சொல்லியிருக்கிறோமா?

தோழர் பெ.ம. அவர்கள் தனது கட்டுரையில், பிரிட்டன், கனடா நாடுகளை மனித குலம் நன்கு வளர்ச்சியுற்றுத் தழைத்தோங்கும் நாடுகளென எங்கும் குறிப்பிடவில்லை. இந்நாடுகளை வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகள் என்றே அடையாளப்படுத்துகிறார். இதன் பொருள், முதலாளியத்திற்கே உரித்தான உழைக்கும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், தேசிய இன அடையாள அழிப்புகள், வன்கொடுமைகள், உரிமைப் பறிப்புகள் அந்நாடுகளில் இன்றும் தொடர்வதும், அங்கு முதலாளிகளின் ஆட்சியே நீடிக்கிறது என்பதுமே ஆகும்.

உண்மை இதுவாக இருக்க, தோழர் பெ.ம. முதலாளியத்தை ஏற்றிப் போற்றுகிறார் என தோழர் குணா அவசரமாக அவதூறு செய்வது ஏன்?

தமிழீழச் சிக்கலில், ‘ஐ.நா.வே தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்து!’ என்ற கோரிக்கையை முன்வைத்து நாம் போராடுகிறோம். இது சரியா தவறா என்று தோழர் குணாவிடம் கேட்டால், முதலாளிய நாடுகளின் கைப்பாவை அமைப்பான ஐ.நா. சபையின் கீழ் கிடக்கும் பிணங்கள் யாருடையவை என அவர் பதில் அளிப்பார் போலும். இப்படித்தான் இருக்கிறது தோழர் குணாவின் பதில்!

“பொதுவுடைமைப் புரட்சியாளர் லெனின் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே, ஜே.வி.ஸ்டாலின் தலைமையிலான செம்படையினர், சோவியத் இரசியாவின் ஜார்ஜியப் பகுதியில் 1922ஆம் ஆண்டு ஜார்ஜிய தேசியவாதம் பேசியவர்கள் மீது கடுமையானத் தாக்குதல் நடத்தி ஒடுக்கினார். மா-சே-துங் தலைமையிலான மக்கள் சீனம் – திபெத், உய்கூர் தேசிய இனத் தாயகங்களை இன்றுவரை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. கம்யூனிச இரசியாவோ, செசன்யா விடுதலைப் போராட்டத்தை பலவந்தமாக ஒடுக்கியது” என தோழர் பெ.ம. கம்யூனிஸ்ட் நாடுகளின் தேசிய இன சிக்கல் மீதான அணுகுமுறைகளுக்கு சில எடுத்துக்காட்டுகளை முன் வைத்துள்ளார்.

மேலுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோழர் குணா, “லெனின் தேசிய சிக்கலை சரியாக கையாண்டார் என்பதும்; தோழர்கள் - ஸ்டாலின், மாவோ ஆகியோர் தேசிய உரிமைகளுக்கு எதிராக இருந்தார்கள் என்பதும் கம்யூனிசத்தை இழிவுப்படுத்தும் நோக்கிலானதாகும்’ என்று தனது எதிர்வினையைப் பதிவு செய்கிறார். ‘கம்யூனிசத்தின் மீதான பற்றுறுதி’ என்ற பெயரில் தன்னாய்வு (சுயவிமர்சனம்) செய்து கொள்வதைக் கூட அவதூறு என அவர் கருதினால், அதற்கு நாம் பொறுப்பாக முடியாதல்லவா?

மார்க்சியப் பகுப்பாய்வு முறைப்படி இதற்கெல்லாம் அவர் ஆதாரங்களுடன் பதில் அளிக்கவில்லை. மாறாக சம்பந்தமில்லாத பல செய்திகளையே அவர் எழுதியுள்ளார்.

தோழர் பெ.ம. அவர்கள் தனது கட்டுரையில், அவரது கூற்றுக்கான வரலாற்று ஆதாரங்களை ஒவ்வொன்றாகக் கொடுத்துள்ளார். தோழர் குணா நேர்மையானவராக இருந்தால், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ”தோழர் பெ.ம. கூறுவது தந்திரமானது” என பசப்புவது ஏன்? தோழர் ஸ்டாலின், மா சே துங் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களாக விளங்கியவர்கள் என்பதால், அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதா? தோழர் குணாவுக்கு ஏன் இந்த மயக்கம்?

ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகள்

தோழர் பெ.ம. அவர்கள் தனது கட்டுரையில், தேசிய இனச் சிக்கல்களை அணுகுவதில் லெனினுக்கும் ஸ்டாலினுக்கும் மாறுபாடுகள் உண்டு, ஸ்டாலின் இரசியப் பெருந்தேசிய இனத்தைக் கட்டமைக்க முயற்சித்தவர் என குற்றம் சாட்டுகிறார். அதற்கு பதிலளிக்க வேண்டிய தோழர் குணா, “தோழர் ஸ்டாலின் ஒரு போதும் மற்ற தேசிய இனங்களை இரசியமயமாக்கும் வேலையைச் செய்யவில்லை“ என்று அவரே சான்றளித்து அடித்துக் கூறுகிறார். தோழர் பெ.ம.வின் கூற்றை ஆதாரங்களுடன் அவர் மறுக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஜார்ஜியாவில் பிறந்த ஜார்ஜிய இனத்தவரான ஸ்டாலின், ரசியாவைப் பெருந்தேசிய இனக் குடியரசாக கட்டமைக்க வேண்டுமென நினைத்தார். ஆனால், ஜார்ஜியாவில் ஜார்ஜிய தேசியவாதம் குறித்து ‘தேசிய சோசலிஸ்ட்டுகள்’ எனப்படுபவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

1922 பிப்ரவரியில் ஜார்ஜியாவில் சோவியத் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட பின்னர், ‘தேசிய சோசலிஸ்ட்டுகள்’ மீது, அப்பொழுது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஸ்டாலின் மற்றும் செம்படைத் தளபதியான ஓர்சுநோகிட்ஸ்(Ordzhonikidze) ஆகியோர் தலைமையிலான செம்படையினர் கடுமையான தாக்குதலை ஏவி அவர்களை ஒடுக்கினர். தோழர் ஸ்டாலினின் இச்செயலைக் கண்டித்து, 30.12.1922, 31.12.1922 ஆகிய இரு நாட்களில் தோழர் லெனின் சில குறிப்பானக் கடிதங்களை எழுதுகிறார். (அவற்றை முழுமையாகப் படிக்க: http://www.marxists.org/archive/lenin/works/1922/dec/testamnt/autonomy.htm).

அக்கடிதத்தில், ஜார்ஜிய தேசியவாதம் பேசியவர்களை ஸ்டாலின் ஒடுக்கியதையும், அதை மறைக்க முயற்சித்ததையும் லெனின் கடுமையாகச் சாடுகிறார். இதனையே தோழர் பெ.ம. தனது கட்டுரையில் ஆதரமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

தோழர் ஜே.வி.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் மீது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு மாற்றுக் கருத்துகள் உண்டெனினும், அவர் மார்க்சியத்திற்கு செய்த பங்களிப்பை நாம் மனமுவந்து ஏற்கிறோம். அவரைப் போற்றுகிறோம். இன்றுவரை தேசிய இனத்திற்கு அவர் கொடுத்த வரையறுப்பே, அடிப்படையில் மிகச்சரியானது என்கிறோம். அதே நேரத்தில, அவரது தவறான அணுகுமுறைகளையும் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். இதில், எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

ஆனால், வரலாற்று நிகழ்வுகளை மறுத்து “தோழர் ஸ்டாலின் ஒரு போதும் மற்ற தேசிய இனங்களை இரசியமயமாக்கும் வேலையைச் செய்யவில்லை“ என்று எழுதும் தோழர் குணா, சோவியத் இரசியாவின் காலத்தில் தொடங்கி, இன்றைய முதலாளித்துவ இரசியா காலம் வரையிலும் நீடிக்கும் செசன்யா ஆக்கிரமிப்பு குறித்து எதுவும் எழுதவில்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, இட்லரின் நாஜிப்படைகள் செசன்யாவின் எல்லை வரைக்கூட வராத நிலையில், செசன்யா மக்கள் நாஜிப்படைகளுக்கு உதவுகிறார்கள் எனக் குற்றம்சாட்டி சற்றொப்ப 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட செசன்ய மக்களை, அவர்களது சொந்தத் தாயகத்திலிருந்து அப்புறப்படுத்தியவது ஸ்டாலின். அதில், சற்றொப்ப 1 இலட்சம் பேர் இறந்து போனார்கள்.

ஆக, தோழர் ஸ்டாலின் செய்த தவறுகளை மறைக்க முயல்வதின் மூலம், தோழர் குணா யாரைக் காப்பாற்ற முயல்கிறார்? உள்ளதை உள்ளபடிச் சொல்வதில் என்னத் தயக்கம்?

சீனா மீதான குற்றச்சாட்டுகள்

சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பு குறித்து தோழர் பெ.ம. பின்வருமாறு தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்: “1949-ல் சீனப் புரட்சி வெற்றி பெற்றதும், 1950-ல் முதல் வேலையாக சீனப் புரட்சிப்படை சிறுபான்மை தேசிய நாடான திபெத்தை ஆக்கிரமித்து கைப்பற்றியது. தொடர்ந்து திபெத்திய மக்கள் தங்கள் விடுதலையைக் கோரி வந்தனர். அதனால் அவர்களின் மத ஆட்சித் தலைவரான தலாய்லாமாவை சிறை பிடிக்க சீனக் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பாடு செய்தது. இதை அறிந்த தலாய்லாமா 1959 மார்ச் 30ஆம் நாள் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்” என தோழர் பெ.ம. கூறியுள்ளார்.

இப்பத்தியை தோழர் குணா எப்படி திறனாய்வு செய்கிறார் தெரியுமா?

“ஒரு சுதந்திரமான சுய அதிகார திபெத்தில் தலாய்லாமா நல்லாட்சி செய்ததாகவும், அங்கு திபெத்தியர்கள் மகிழ்வோடு வாழ்ந்ததாகவும், அதை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கெடுத்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது தோழர் பெ.ம. வின் வரிகள்” என்று எழுதுகிறார் குணா.

தோழர் பெ.ம.வின் வரிகளில், ‘சுதந்திரமான சுய அதிகார திபெத்தில் தலாய்லாமா நல்லாட்சி செய்த’து குறித்து எந்த வார்த்தைகளும் இல்லை. ஆனால், இல்லாத வார்த்தைகளை, அப்பட்டமாகத் தானே புனைந்து கொண்டு கூறிக்கொள்வதற்கு பெயர் அவதூறா? திறனாய்வா? இது தான் குணா மார்க்சியம் கற்ற இலட்சணமா?

தோழர் பெ.ம. அவர்கள் எழுதாத ஒன்றை எழுதியதாகச் சொல்லும் தோழர் குணா அவர்கள், திபெத் குறித்த தனது பதில்களின் மூலம் திபெத் மீதான மக்கள் சீனத்தின் ஆக்கிரமிப்பிற்கு ஞாயம் கற்பிக்கவே முற்படுகிறார்.

திபெத்தில் புத்தமத அடிப்படையிலான அடிமை முறை நிலவியது என்றும், அதை ஒழிக்கவே மக்கள் சீனத்தின் புரட்சிப்படை திபெத்திற்குள் நுழைந்தது என்றும் கூறி, அதன் பிறகுதான், திபெத்தில் மக்கள் மகிழ்வோடு வாழ்வதாகப் பல புள்ளி விவரங்களையும் தானே முன்வந்து அளித்தது தோழர் குணா தான். ஆனால், மற்றொரு இடத்தில், திபெத்தில் தேசிய ஒடுக்குமுறை இல்லை என்று தாம் கூறவில்லை என்றும் கூறி தோழர் குணாவே பின்வாங்குகிறார். ஏன் இந்த தடுமாற்றம்?

ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாதிகளான தாலிபன்களின் ஆட்சி நிலவியது, அதை ஒழிக்கவே நாங்கள் அங்கு நுழைந்தோம் என்கிறது வட அமெரிக்கா. ஈரான், சிரியாவில் இரசாயண ஆயுதங்கள் இருக்கின்றன எனக்கூறியும் அங்கு ஆக்கிரமிப்புப் போர் நடத்தியது வட அமெரிக்கா. இதற்கும், மக்கள் சீனத்தின் திபெத் ஆக்கிரமிப்பிற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா? என்றே நாங்கள் உரக்கக் கேட்கிறோம். தாயக ஆக்கிரமிப்பை யார் செய்தாலும் தவறு என ‘வெட்டொன்று துண்டு இரண்டாக’ப் பேசலாமே? எது உங்களைத் தடுக்கிறது?

திபெத் குறித்து இவ்வளவு கூறும் தோழர் குணா, தோழர் பெ.ம. அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மக்கள் சீனத்தின் உய்கூர் தாயக ஆக்கிரமிப்பு குறித்து ஒரு வரி கூட எழுதவில்லை. மா சே துங் தலைமையிலான மக்கள் சீனப் பொதுவுடைமை அரசு, புரட்சி வென்றதும் சீனாவின் மேற்கு மூலையில் அமைந்துள்ள எண்ணெய் வளமிக்க உய்கூர் மக்களின் தாயகத்தை ஆக்கிரமித்தது. அம்மக்கள் விடுதலை கோரி இன்றும் போராடுகின்றனர். (இது குறித்த விரிவான செய்திக்கு காண்க: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=311:2009-08-27-06-39-18&catid=912:09&Itemid=149 , http://en.wikipedia.org/wiki/East_Turkestan_independence_movement)

சோவியத் இரசியா, மக்கள் சீனப் பொதுவுடைமை அரசுகள் செய்த மேற்கண்ட வரலாற்றுத் தவறுகளை எவ்விதக் கேள்விமுறையும் இன்றி நடைமுறைப்படுத்த, மார்க்சியம் வலியுறுத்திய பாட்டாளி வர்க்க சர்வதிகாரக் கோட்பாடும் ஒரு காரணமாகும். இதுவே இதன் மூலம் நாம் பெறுகின்ற படிப்பினையாகும்.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட கருத்துரிமை குறித்த பன்முகப்பட்ட சனநாயகப் பார்வைகள் விரிவடைந்து வருகின்ற இன்றைய உலகச் சூழலில், எவ்வளவு தான் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாடு’, முதலாளியத்தின் மீட்சிக்கே வழிகோலும்.

எனவே தான், 1992ஆம் ஆண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாடு இனி வரும் காலங்களில் காலவதியாகும் என தனது அமைப்பு மாநாட்டில் முடிவெடுத்தது. அப்பொழுது, தோழர் குணாவைப் போல் பலரும் த.தே.பொ.க. முதலாளித்துவப் பாதைக்கு சென்றுவிட்டதாகத் தூற்றினார்கள்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரியில், நேப்பாளத்தில் செங்கொடியை ஏற்றிய மாவோயிஸ்ட் தலைவர் பசந்தா, 21ஆம் நூற்றாண்டில் சனநாயகத்தை வளர்த்தெடுக்க பல கட்சிகள் பங்குபெறும் புதியவகை சனநாயகமே தேவை என தமது கட்சிக்குள்ளேயே முடிவெடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். (அவரது முழுமையான பேட்டிக்கு காண்க: http://www.hindu.com/thehindu/nic/maoist.htm).

“தவறுகளிலிருந்தும் பின்னடைவுகளிலிருந்துமே நாம் மேலும் கற்றுக் கொள்கிறோம். நமது நடவடிக்கைகளை மேலும் செழுமைப்படுத்திக் கொள்கிறோம். எந்தவொரு கட்சியும், தனி மனிதரும் தவறுகள் செய்யாமல் இருப்பது கடினமானது. அதை முடிந்தளவிற்கு நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். தவறு நேர்ந்துவிட்டால், அதை முழுமையாகத் திருத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார் தோழர் மா-சே-துங். (காண்க: "On the People's Democratic Dictatorship" (June 30, 1949), Selected Works, Vol. IV, p. 422)

இவ்வாறு, வரலாற்றைப் பகுத்தாய்ந்து பார்க்கும் ஆய்வு முறையையே மார்க்சியம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. எனவே தான், மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திய தலைவர்கள் செய்த தவறுகள் உட்பட பலவற்றையும் நாம் சுட்டிக் காட்டி, அதிலிருந்து படிப்பினை பெறவும், நிறைகளை செழுமைப்படுத்தி முன்னேறவும் தான் நாம் முனைய வேண்டும். எனவே தான், இத்திறனாய்வுகளை நாம் மேற்கொள்கிறோம். இனியும் மேற்கொள்வோம். இதைச் செய்தால் நாங்கள் கம்யூனித்தின் எதிரிகள் என்றால், இதை இன்றுவரைச் செய்யாத நீங்கள் யார்?

- க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்

Pin It