கவிஞர் தமிழ்ஒளி கம்யூனிஸ்ட் கட்சியில் காலூன்றும் முன்னரே சோவியத்தை நேசித்தவர்.  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த நாட்களில் பாரதிதாசன் இல்லத்தில் குவிந்து கிடந்த ‘குடியரசு’ ஏடுகள் ‘குடியரசு பதிப்பக’ வெளியீடுகள் ஆகியவற்றை மிகுந்த ஈடுபாட்டுடன் படித்தவர்.

பெரியார் ருஷ்யா சென்று திரும்பிய பின்னர் ‘குடியரசு’ ஏட்டில் எழுதிவந்த கட்டுரைகள் அறிஞர் சிங்காரவேலர், தோழர் ஜீவானந்தம் போன்றவர்களின் பொதுவுடைமை கொள்கைப் பிரச்சாரங்கள் அவருக்கு விருந்தாய் விளங்கின.  மேலும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் சுருக்கப் பதிப்பையும் அங்கேதான் படித்தார்.

பொதுவுடைமைக் கொள்கை ருஷ்ய பூமியில் விளைந்து பயிராகி பெரும் பயன் நல்கியதை பல கட்டுரைகள் வாயிலாகத் தெரிந்து கொண்டார்.  ‘ருஷ்யா’ சோவியத் யூனியனாக மாறிய நிலையில் அங்கே தனியுடைமை முற்றாக ஒழிக்கப்பட்டதும் கூட்டுப்பண்ணை விவசாயம் செழித்ததும் தொழிற் சாலைகள் அனைத்தும் தொழிலாளர் கூட்டு நிறுவனமாக மாற்றப்பட்டதும், மக்கள் ஆண்-பெண் பேதமின்றி அனைவரும் சரிசமமாக சுதந்திர மாக வாழ்ந்து வருவதும், ஆண்டான்- அடிமை முறை பழங்கனவாக மாறியதையும் அறிந்து அவர் மகிழ்ச்சியுற்றார்.

தாம் வாழ்ந்து வரும் புதுவை மண்ணில், உழைக்கும் மக்கள் எப்படியெல்லாம் துன்புற்று வாழ்ந்து வருவதை அவர் உணர்வுபூர்வமாக எண்ணினார்.  அந்தக் காலகட்டத்தில் அவர் வாழ்ந்த பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவரை அதிரவைத்தது.

சாதீய மேலாதிக்கம் பொருளாதார ஒடுக்கு முறை போன்ற தீமைகளே இதற்கு அடிப்படை என்பதும் அவருக்குத் தெளிவாயிற்று.  அவற்றை அடிப்படையாக வைத்து ஒரு காவியம் படைக்கவும் முடிவு செய்தார்.  அதுவே ‘நிலைபெற்ற சிலை’ என்ற தலைப்பில் காவியமாக உருப்பெற்றது.

அந்தக் காவியத்தில், கதைத்தலைவன் மருத வாணன் மறுமலர்ச்சிக் கழக மேடையில் முழங்கும் எழுச்சி உரையைக் கேளுங்கள்:

“சிலருக்கே செல்வமெலாம் சொந்தம்” என்றார்

சீறித்தான் கேட்டுவிடில் கெட்ட தென்பார்

மலரயனின் படைப்பினிலே பேதமுண்டு!

‘மகராசன்’ ‘ஏழையெனும்’ பிரிவும் உண்டு

‘தலைவிதி’ போல் நடந்திடும்நாம் முயன்றிட் டாலும்

தழைத்ததொரு செல்வத்தை அடைய மாட்டோம்!

பலகாலம் வறுமையினைப் பொறுத்திருந்தால்

பரமனருள் கிடைக்கும்” எனச் சொல்லுவார்கள்!”

“பலசாதி இருப்பதுவும் நன்றே’ யென்பார்!

பழையமுறை மீறுவது பாவம்’ என்பார்

நிலமீதில் தொழிலாளர் துன்பம் நீக்க

நியாயந்தான் கிடைத்திடுமோ? ‘முன்பி றப்பில்

குலமுறைதான் மீறியதால் ஏழை வாழ்க்கைக்

கொண்டான் இப்பிறவியிலே என்பார் - இந்தக்

கதைசொல்வார் இதைக்கேட்டுந் தொழிலா ளர்க்குக்

கருத்தினிலே புரட்சியுமே எழுதல் உண்டோ?”

“குடிசையிலே வாழுவதும் கூழ்கு டித்துக்

கும்பிட்டுக் கிடப்பதுவும் விதியால் என்றால்

படியினிலே முன்னேற்றங் கொள்ளு தற்குப்

பாட்டாளி ஏழைகளும் எண்ணுவாரோ?

துடுக்குடையார் விதிசொல்வார் விரிவு சொல்வார்

சொல்கின்றேன் உமக்குநான் பிறப்பால் பேதம்

அடுக்காது பொருள்ஏற்றத் தாழ்வு கொள்ளல்

அநியாயம் ஆம்! இந்தப் புதுமை கேளீர்!”

‘உருசியர்கள்’ வாழ்நாட்டில் யாவ ருந்தான்

ஒன்றென்று கூறுகிறார் எல்லோ ருக்கும்

பெருகுதொழில் ‘கட்டாயக் கல்வி’ உண்டு

‘பெருஞ்செல்வர், வறியர்’ எனும் பேச்சே இல்லை

திருடர்தான் அங்குண்டா? பிச்சைக் காரர்

தேடினுமே அங்குண்டா? இல்லை - இல்லை!

உரைக்கின்றா ரேவிதியும் உயர்வு தாழ்வும்

ஒன்றவில்லை ஏனிவைகள் அந்த நாட்டில்?”

“மாதர்எலாம் உரிமையுடன் வாழ்வார் அங்கே

மாண்புடையீர் அந்நாளில் தமிழ்நாட் டின்கண்

தீதேதும் இன்றியுமே மாதர் வாழ்ந்தார்!

சிறிதேனும் அவர் அடிமை உறவே யில்லை

பாதியிலே இந்நிலைதான் வந்த திந்தப்

பாழ்நிலையை வீழ்த்திநாம் ‘உருசியா’ போல்

நீதிசெய் தேவாழ்வோம் நிமிர்ந்து நிற்பீர்!

நிகர் என்போம் யாவருமே இந்த நாட்டில்!”

“இன்றேஇக் கழகத்தில் சேர்வீர், தொண்டில்

இசைந்திடுவீர் தமிழர்இனம் தழைக்கச் செய்வீர்!

ஒன்றேஇந் நாட்டிலுள்ள தமிழ ரெல்லாம்

ஒன்பதுகோ டிப்பிரிவை ஒப்பிடாதீர்

புன்மைநிறைச் சமுதாயம் சீர்தி ருத்திப்

பொதுவுடைமை அமைத்தின்ப வாழ்வு கொள்வோம்!

வன்மைநிறை இளைஞர்கள் சேர்ந்து வாரீர்!

வணக்கம்; என்சிற்றுரையை முடிக்கிறேன் நான்”.

மேற்கண்ட கவிதை வரிகள், ருஷ்ய நாடு, சோவியத் நாடாக மாற்றங்கண்ட நிலையில் அங்கே உருவான பொதுவுடைமைக் கொள்கை வழி உருவான பொதுவுடைமைச் சமுதாயத்தை எடுத்துரைத்து, தமிழகத்திலும் அத்தகைய ஒரு மகத்தான மாற்றத்தை தோற்றுவிப்போம் வாருங்கள் என தமிழ் மக்களை அழைக்கிறார் தமிழ்ஒளி.

இந்தக் காவியம் 1945ல் எழுதப்பட்டது.  தமிழ் ஒளி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பின்னர் 1947ல் தோழர் ஊ. கோவிந்தன் அவர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.  அட்டைப் படத்தில் சுத்தி அரிவாள் சின்னம் இடம் பெற்றது ஒரு புதுமை.

அடுத்து கவிஞர் தமிழ்ஒளி 1949-இல் ‘முன்னணி’ ஏட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியபோது ‘நீண்டதூரப் பயணம்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையில் சோவியத் பூமியில் கற்பனையாக உலாவந்து தாம் கண்ட காட்சிகளை  கவிதையாய் வடித்துள்ளதைப் படியுங்கள்-

தலைப்பைப் போன்றே கவிதையும் நீண்டது தான், நூற்றிருபது வரிகளைக் கொண்டது.  உள்ள மெனும் பறவை சோவியத் பூமியைச் சுற்றிவந்து அங்கு விளைந்துள்ள சமூகமாற்றங்களை விரிவாகக் கூறுகிறது.  கவிஞர் வினா எழுப்புகிறார்.  மனப்பறவை கூறும் விடை கவிதையாக வடிவம் பெறுகிறது.

“காலையிலே துயர்வந்து கதவைத் தட்டும்;

கார் இருளை எதிபார்த்து ஜீவன் ஏங்கும்

பாலைவனக் கொடுமையுண்டோ அங்கே? என்றேன்,

பரிகாசமாய்ச் சிரித்து நெஞ்சு சொல்லும்;”

“காலையெலாம் மதுவாக இனிக்கு மையா,

கவியெழுதத் தோணுமையா மகிழ்ச்சி யாலே

சோலைமலர்க் கூட்டம்போல் மக்கள் கூட்டம்

ஜோதிநிறக் குழந்தைகளாய்த் தோன்று மையா!”

“கடும்வெய்யில், வசந்தமெனக் குளிர்ச்சி வீசும்;

கவினார்ந்த கலைகளெலாம் வீடு வீடாய்க்

குடும்பங்கள் நடத்துகின்ற காட்சி கண்டேன்

குருவியைப்போல் ஊரூராய்ப் பறந்து சென்றேன்!”

“வயற்புறத்தே செல்லுங்கால் உழவன் என்போன்

வாகான தோளுடையான் நிமிர்ந்து நின்று

நயமான கவிபொழிந்தான்; பழைய நாளில்

நடந்திட்ட கொடுமைகளைப் பாட்டாய்ச் சொன்னான்.”

“ஆளுக்குப் பாதியெனத் தானியத்தை

அள்ளிப் போய் நிலப்பிரபு வைத்துக் கொண்டு

வாளுக்குப் பலியிட்டான் என்றன் வாழ்வை!

வறுமையதன் நிழல்கூட இப்போதில்லை!”

“நிலமெலாம் என்னுடைமை: இல்லை, யில்லை!

நேயமிகும் என்நாட்டார் உடைமை; மக்கள்

குலமெல்லாம் வாழ்ந்திடவே நான் வாழ்கின்றேன்

குருவியே உன்னைப்போல் என்று சொன்னான்!”

“அவன்பட்ட கொடுமையெலாம் மடிந்து மக்கி

அங்குள்ள வயற்பக்கம் செத்து வீழ்ந்து

சவமாகிக் கிடந்ததனைக் கண்டேன்; வெற்றி

சரசநடை நடந்திட்டான் உழவன் அங்கே!”

உழவன் மகிழ்ச்சியில் துள்ளுவதைக் கண்ட கவிஞர் உள்ளம் காற்றிலே பறந்தது.  அடடா அந்தக் காற்றுக்கும் அடங்காத மகிழ்ச்சி வெள்ளம்.  சோற்றிற்கு வாடாத மனிதர் வாழும் சுதந்திர நன் நாடுலவும் காற்றேயன்றோ? நகருக்குள் நுழைந்தார்; ஆலைகளைக் கண்டார்; சகத்தோழர் தலைவர், புது மனிதர் ஆகித் தருமத்தைத் தொழிலாளர் உடையாய் நெய்தார்.

“விழிகளிலே புரட்சியொளி; சமுதாயத்தை

வீழ்த்துதற்குச் சதி செய்யும் சழக்கர் தம்மைக்

குழிதோண்டிப் புதைத்தற்குத் திரண்ட தோளில்

குவலயத்துப் பெருமையெலாம் கண்டு கொண்டேன்!”

“காதல், கலை, அறம்வளரும் தியாக பூமி

கவிபொழியும் மழைபொழியும் போக பூமி

சாதல்இல்லை; அதுவந்தால் கவலையில்லை

தனிமனிதன், மனிதகுலத் தாயாய் விட்டான்!”

சொல்லிவிட்டேன் சுருக்கத்தை” என்று சொல்லித்

துணையாக மீண்டுமெனைத் தொட்ட நெஞ்சாம்

மெல்லியளை மார்போடும் அணைத்துக் கொண்டேன்

மேதினியில் தலையாய இன்பம் பெற்றேன்!”

சோவியத் பூமியில் கவிஞரின் மனப்பறவை வலம் வந்து பாடிய கவிதையிது.  தொடர்ந்து 1959 ஜனவரியில், ‘ஜனசக்தி’ ஏட்டில் வெளி வந்த கவிதையை நினைவு கூர்வோம்

“நிலவைப் பிடித்து விட்டார் - அதன்

நெற்றியில் வெற்றிக் கொடியை நட்டார்!

உலகே விழித்தெழுவாய் - திறன்

உன்கையில் இருக்கையில் ஏன் அழுவாய்!”

“எட்ட இருந்துகொண்டே - புவி

எட்டி எட்டிப் பார்த்த வெண்மதியைத்

தொட்டது செங்கொடியே - ஆ!

தூரம் எலாம்இனி பொடிப் பொடியே!”

“நேற்றுப் பிறந்ததடா- எனில்

நீதியின் ஆற்றல் சிறந்ததடா?

போற்றும் பொதுவுடைமை - அவை

பொங்கிக் கிளர்ந்தது சோவியத்தில்!”

மேலும், மலை பிளந்தும், கடல் அலை பிளந்தும் பல பல அற்புதங்களை நிகழ்த்தினர். அதே வேகத்தில் பாலை நிலத்தை பக்குவப்படுத்தி சோலை வனமாக்கியதும் எண்ணெய் வயல் பெருக்கி ஏழ்மையைப் போக்கியதும், வளரும் பொதுவுடைமைக் கொள்கை பலத்தால் இவ்வுலகை புதுவுலகாய் மாற்றி கீர்த்தி படைத்தனர்.  அவர் களே இன்று ‘ஸ்புட்னிக்’ என்ற விண்கலத்தை கண்டறிந்து (இது விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு மைல்கள்) அதன்வழி விண்ணில் தவழும் நிலாவில் செங்கொடியை ஏற்றிவைத்து விந்தை படைத் துள்ளனர்.  அதனால்

“மண்ணவர் கைகளிலே - ஒரு

மாய விளக்கென மாற்றமுறப்

பண்ணினர் உருசியரே - இப்

பாரில் அவர்க்கினி யார்நிகரே!”

எனப் பெருமித உணர்வுடன் செம்பதாகையை உயர்த்திப் பிடிக்கிறார் கவிஞர்.

தமிழ்ஒளியின் உயர் தனிச் சிறப்புடன் விளங்கும் கவிதைகளில் ஒன்றாய்த் திகழ்வது “நவம்பர் புரட்சிக்கு நல்வாழ்த்துக்கள்!”

இனி கவிதையைப் படியுங்கள்:

“நோயெனும் தனியுடைமை நுகத்தடி அது முறியப்

பேயெனும் ஜார்அரசன் பெருந்துயர் போய் ஒழியத்

தீயெனும் சுடருடனே திசைகளின் இடர்கெடவே

தாயெனும் பொதுவுடைமை ஜனித்தது நவம்பரிலே!”

“பண்டைய ஞானியரின் பண்புறு கனவுகளைக்

கொண்டொரு கொடியுடனே கொடுமைகள் இடிபடவே

மிண்டிய பொதுவுடைமை மேற்றிசை கீழ்த்திசையில்

மண்டிய உருசியர்தம் மண்மிசை பூத்ததடா!”

(வேறு)

“அன்று தொட்டிருள் வீழ்ந்து விட்டதும்

அகில நங்கைதன் துன்பம் கெட்டதும்

தொன்று தொட்டுறை நோய்கள் பட்டதும்

தோன்று செங்கொடி எங்கும் நட்டதும்”

“இன்று திங்களைச் சென்று தொட்டதும்,

இசைபெறும் இலெனின் கண்எனச் சுடர்

நின்றெறிந் திடும் நீள் விளக்கமாம்

நிகர்அரும் பொது வுடைமை ஆற்றலால்!”

(வேறு)

“எதுவுடைமை? எதுவுலகம்? என்று காணா

ஏழைகளும் அவர் இனத்தின் எளியோர் தாமும்

பொதுவுடைமை வந்தவுடன் அண்ட கோளப்

புதல்வர்களாய் அமரர்களாய் பொலிந்து தோன்ற”

‘அதுவுடைமை’, ‘அறிவுடைமை’ சோவியத்தின்

‘அன்புடைமை’ எனக்கொண்டார் அஃதே யன்றிப்

‘புதுவுடைமை விஞ்ஞானம்’ என நவம்பர்

புரட்சித்தாய் கூறினாள் புவியோர்க் கெல்லாம்!”

“தொடைபுணர இன்பத்தேன் துளிகள் சிந்தத்

‘தொல்லுலகின் சுடரொளியே! வாழ்க!’ என்ற

நடைபுணர நாளெல்லாம் புரட்சித் தாயே!

நவம்பர் நாள் வந்தவளே! நல்வாழ்த் துக்கள்!”

1960 மே திங்கள் முதல் நாளில் ஒரு சோதனை நிகழ்ந்தது.  பாகிஸ்தான் பெஷாவர் விமானத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட அமெரிக்காவின் ராக்கெட்- யூ2 விமானம் வேவு பார்க்க சோவியத் பூமியைத் தொட்டதும் சுட்டு வீழ்த்தப்பட்டது.  இந்நிகழ்வு குறித்து ஏடுகளில் செய்தி வந்ததைக் கண்டு கவிஞர் உள்ளம் கொதித்தது; கவிதை பிறந்தது படியுங்கள்.

“நிலம், இன்பம், நித்திய அமைதி நீடும் வான்வெளியில்,

கோலம், புகழ்மை, நட்பாம் விண்மீன் கூடும்

                                                    வான் வெளியில்,

சீலம் இழந்தே போர்வெறி கொண்டு சென்ற

                                                     விமானம் நீ

காலம் வெறுக்க வீழ்ந்தாய்!

                              மாந்தர் கண்டு நகைத்திடவே!”

“வாழ்வோ அன்பால்’ என்றே

                       மின்னல் வரையும் வான்வெளியில்

‘சூழ்வோம் நட்பால்’ என்றே

                       விண்மீன் சுடரும் வான்வெளியில்

பாழ்வாய் கொண்டே சென்றாய்!

                          ஏற்றிப் பறக்கும் விமானம் நீ

வீழ்ந்தாய் வீரர் காலில் நீயே!

                          வேறென செய்வாயே?”

போரே உன்றன் விருப்பம்

                          ஆயின் போவாய் நரகிற்கே!

நேரே இன்று கண்டாய் அன்றோ

                                      நேர்மை வீரர்தமை?

வேரே சாய்ந்து வீழ்தல் உண்மை!

                                      வெறியர் சூதெல்லாம்

யாரே வெல்வார் சோவியத் மண்ணை?

                              அஃதோர் விண்ணன்றோ?”

இறுதியாக, இந்திய சோவியத் நட்புறவு குறித்து கவிஞர் படைத்த கவிதை ‘சோவியத் அன்னை’ என்ற தலைப்பில் ‘சோவியத் நாடு’ இதழில் வெளி வந்துள்ளது.  கவிஞர் உள்ளத்தில் சோவியத் பூமி எந்த அளவுக்கு ஆழமாகப் பதிவாகியுள்ளது என்பதற்கு சான்றாகும் இக்கவிதை.  இத்தகைய பேருள்ளம் படைத்த கவிஞர் தமிழ்ஒளி சோவியத் பூமியைக் காணும் வாய்ப்பைப் பெறவில்லை.  தமிழ் ஒளியின் ‘சோவியத் அன்னை’ கவிதை எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.  இது உறுதி! கவிதையில் தமிழ்ஒளி குரலைக் கேட்கலாம்.

“சுமந்து பெறாமல்என் இதயந் தனிற்பால்

சுரந்தவள் சோவியத் அன்னை!

அமைந்தான் வாழ்க்கையில்

உணர்ச்சிப் பெரும்பொருள்

ஆக இலங்கிய அன்னை!

எந்நிற மாயினும் தந்நிற மாகவே

ஏற்றுக்கொள் கின்றதோர் உள்ளம்!

ஏழையின் இன்னலை வேருடன் வீழ்த்தவே

எழுந்த பெருங்கடல் வெள்ளம்!

செந்நிற மாகிப் பறக்கின்ற கொடியைச்

சேர்த்தொரு வையகம் செய்தாள்!

செல்வ மெலாம்பொது வுடைமையொன்றாக்கிய

தெய்விக வாழ்வினைப் பெய்தான்!

மேற்குக் கிழக்கெனும் கைகள் இணைத்தவள்

மேதினி மேற்புகழ் பெற்றாள்!

மேவிய தெற்கும் வடக்கும்தன் கண்ணொளி

மின்னிடப் புன்னகை யுற்றாள்!

நாற்றிசை யும்அவள் நல்லருள் பாய்ந்திடும்

நற்சுட ராகியே சூழ்வோம்!

நாடுகள் யாவும்நல் வீடுகளாகிடும்

நாமவள் மக்களாய் வாழ்வோம்!”

Pin It