தமிழறிஞர்கள் பலரும் இந்த வாரம் தி இந்து தமிழ் நாளிதழ் (நவம்பர் 4, 2013 அன்று) வெளியிட்ட எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் "ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?" என்ற கட்டுரையைப் பற்றியத் தீவிர விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்கட்டுரையில் அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரோமன் (அவர் ஆங்கில எழுத்துரு என்று பிழையாகக் குறிப்பிடுகிறார்) எழுத்துருவில் தமிழை எழுதிப் பழகப் பரிந்துரை செய்கிறார். அதாவது 'அம்மா' என்பதை 'amma' என்று எழுதுவது தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் என்பது அவர் கருத்து. அது தவறு என்று பற்பல மொழியியலார்களும், தமிழறிஞர்களும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். தமிழை அழிக்க நினைக்கும் நடவடிக்கை என்று அவரை ஏசுவதும் நடக்கிறது.

மொழிச் சீரழிவு விவாதம் ஒருபுறமிருக்க, அவர் இக்கருத்தை முன்னிறுத்திய விதம் அறிவியல் ஆதரமற்றதாகவும் இருக்கிறது. திரு. ஜெயமோகன் அவர்கள் குழந்தைகள் கற்பதற்கு இருமொழிப் பயன்பாடு தடைக்கல்லாக இருக்கிறது என்ற கவலை தொனிக்கும் விதத்தில், "இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது" கவலை தெரிவித்து இருக்கிறார். அதற்கு ஏற்றார் போன்று சோகம் ததும்பிய முகத்துடன் உள்ள மழலையர் பள்ளி மாணவர்களின் படமும் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இக்கருத்து, அதாவது இருமொழிக் கொள்கை கற்றலுக்கு இடையூறாக விளங்கும் என்னும் கருத்து, உண்மையல்ல என்பதை நரம்பியல் ஆராய்ச்சி வல்லுனர்கள் பலமுறை ஆதாரத்துடன் நிறுவியுள்ளனர். இந்த ஆராய்சிகளில் முடிவின்படி, திரு. ஜெயமோகனின் கவலைக்கு மாறாக, இருமொழி பயிலும் இந்திய மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்கவே வாய்ப்புள்ளது. திரு. ஜெயமோகனின் கட்டுரை வெளியான இருநாட்களில் நியூராலாஜி ஆராய்ச்சி சஞ்சிகையில் ஒரு ஆராய்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. ஒருவருக்குள்ள இருமொழித்திறன் அவருக்கு முதுமை மறதி தோன்றுவதை ஐந்தாண்டுகள் தாமதப்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளது இந்த ஆராய்ச்சி. எழுதப் படிக்கத் தெரியாது, வெறும் இருமொழிகளை மட்டும் பேசும் திறனே இந்த முதுமை மறதியை தள்ளிப்போடுவதும் தெரிய வந்திருக்கிறது. அத்துடன் அக்கட்டுரை குறிப்பிடும் ஆராய்ச்சி நிகழ்ந்த இடமும் நம் இந்தியாவே, ஹைதராபாத் மக்களிடம் நடத்தப் பெற்ற ஆய்வு இது.

ஆய்வுக்கு இந்த நகரைத் தேர்ந்தெடுப்பதற்கு அங்கு மக்களில் பெரும்பாலோர் இருமொழிகளையோ, அல்லது அதற்கும் மேலாகவோ தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் நிலை இருப்பதே காரணம். தெலுங்கு, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகளை வீட்டிலும், அலுவலகத்திலும், பள்ளியிலும் என ஒரே நாளில் பலமுறை மாற்றி மாற்றி பேசும் வகையில் அமைந்துள்ளது அந்நகர மக்கள் பெரும்பாலோரின் தினசரி வாழ்க்கை. அவ்வாறு ஒருமொழியில் இருந்து மறுமொழிக்கு மாற்றி மாற்றிப் பேசுவது மூளைக்குச் சிறந்த பயிற்சியாக அமைகிறது. இவ்வாறு செய்யும் பொழுது, மொழிகளின் ஒலி வடிவம், இலக்கணக் கட்டமைப்பு, கலாச்சாரப் பின்னணிக்கு ஏற்ப மொழியைப் பயன்படுத்தும் முறை எனப் பலவற்றையும் மூளை கவனிக்க வேண்டியிருக்கிறது. இத்தொடர் பயிற்சி முதுமை மறதியில் இருந்து மூளையைப் பாதுகாக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான தாமஸ் பாக், இவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் (Thomas Bak, a neurologist at the University of Edinburgh, Scotland). இந்த ஆராய்ச்சியில் உடன் ஈடுபட்ட மற்றொரு ஆராய்ச்சியாளர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவ நிலையத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் சுவர்ணா ஆலடி என்பவர் (Suvarna Alladi, a neurologist at Nizam's Institute of Medical Sciences, Hyderabad). இவர் அனைத்துத்தரப்பு இந்திய மக்கள் வாழ்விலும் இருமொழி பயன்பாடு இயல்பாக பரவி இருப்பது இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள உதவியாக இருந்தது என்கிறார்.

முதுமை மறதி தாக்கப்பட்டு சிகிச்சை பெரும் முதியவர்கள் 648 பேரில், பலமொழித் திறன் கொண்ட பிரிவினருக்கு 65 வயதில் தோன்றத் தொடங்கிய முதுமை மறதி, அத்திறன் இல்லாதவர்களை 61 வயதிலேயே ஆட்கொண்டிருப்பது இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தள்ளது. அத்துடன் இருமொழி பேசும் திறன் உள்ளவர்களிடம் மூவகையான முதுமை மறதி நோய் வகைகளும் (அல்சைமர், மூளைக்கு இரத்த ஓட்டக் குறைவதால் வரும் மறதி, மூளையின் முன்கதுப்புகள் வளர்ச்சி குறைவதால் வரும் மறதி — Alzheimer's disease, vascular dementia, frontotemporal dementia) தோன்றுவது தாமதப் பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கும் முன்னர் கனடாவில் புலம் பெயர்ந்து வந்த இருமொழி பேசும் திறன் உள்ளவர்களை அந்நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட பொழுதும் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் புலம் பெயர்ந்தவர்களின் கலாச்சாரப் பின்னணி ஏதும் காரணமாக இருக்குமோ என்று தோன்றிய ஐயம் இந்தியாவில் ஒரே நகரில் வசிக்கும் மக்களிடம் நடத்திய ஆய்வின் மூலம் நீங்கியுள்ளது. 

இத்துடன் இது போன்ற ஆராய்ச்சிகள் பலவும் முன்பு வெளி வந்துள்ளன. அவற்றில் இருமொழி பேசுபவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும் விளங்குவது கண்டறியப் பட்டுள்ளது. இருமொழி பேசுபவர்கள் புதிர்களை விடுவிப்பதில் விரைவாகச் செயல்படுவதை மழலையர் பள்ளி சிறார்களைக் கொண்டு கண்டறிந்துள்ளார்கள் எல்லென் பியாலிச்டோக், மிச்சேல் மார்டின்ரீ என்ற உளவியல் நிபுணர்கள் (Psychologists Ellen Bialystok and Michelle Martin-Rhee). மழலையர்கள் கணினித் திரையில் உள்ள நீல நிற வளையங்களும், சிவப்பு நிற சதுரங்களையும் தனித்தனியாகப் பிரிக்குமாறு சொல்லப்பட்டர்கள். அவற்றைப் பிரித்து போடப்படவேண்டிய பெட்டியிலோ நீல நிற சதுரமும், சிவப்பு நிற வளையமும் என மாற்றிப் படம் எழுதியிருக்கும். நிறங்களை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கும் செயலை சிறார்கள் சுலபமாகச் செய்து முடித்தனர். பின்னர், மீண்டும் விளையாட்டை மாற்றி வடிவங்களைக் கொண்டு அவற்றைப் பிரித்து வளையம் மற்றும் சதுரம் வரைந்த பெட்டியிலே போடவேண்டும், ஆனால் நிறத்தைப் பற்றி கண்டு கொள்ளக்கூடாது என்ற விதிமுறை கொடுத்தனர். இது சவால் நிறைந்தது, வடிவங்களின் நிறம் கவனச் சிதறலைக் கொடுக்கும். ஆனால், இம்முறையில் வடிவங்களைப் பிரிப்பதில் இருமொழி பேசும் திறன் உள்ள மாணவர்கள் விரைவில் செய்து முடித்துவிட்டனர்.

இது போன்று இருமொழித் திறன் அடிப்படையில் நிகழ்த்தப் பட்ட பல ஆராய்ச்சிகளிலும் இது போன்ற முடிவே கிடைத்துள்ளது. இதனால் இருமொழி பேசும் திறன் உள்ளவர்களின் மூளை கட்டளைகளை நிறைவேற்றி செயல்களை முடிப்பதில் விரைந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. ஒரு மொழியில் இருந்து அடுத்த மொழிக்கு மாறும் செய்கை, நாளடைவில் கவனச் சிதறல்களைக் குறைத்து விரைவில் செயல்பட உதவுவது ஆராய்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் திட்டமிடுதல், புதிர்களை விடுவித்தல் போன்ற சவால் நிறைந்த செயல்களை விரைவில் முடிப்பது இருமொழித் திறன் உள்ளவர்களுக்கு எளிதாக வசப்படுகிறது.

மற்றொரு ஆராய்ச்சி ஆக்னெஸ் கோவக்ஸ் (Agnes Kovacs) என்பவரால் குழந்தைகளை வைத்து இத்தாலியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் பிறந்ததில் இருந்து இருமொழிகள் புழங்கும் சூழ்நிலையில் வளரும் ஏழு மாதக் குழந்தைகளை ஒரு மொழி மட்டுமே பேசும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிட்டனர். இரு பிரிவுக் குழந்தைகளுக்கும் ஒலி எழுப்பிய பின்னர், திரை ஒன்றில் ஒரு பக்கத்தில் இருந்து பொம்மை வருவதைக் காண்பித்தனர். சிலமுறை செய்த பிறகு ஒலி எழுப்பிய பின்னர் குழந்தைகள் பொம்மை வரும் திசையை நோக்கத் துவங்கின. பின்னர் ஒலி எழுப்பிய பின்னர் பொம்மையை எதிர் புறத்தில் இருந்து வரும்படி செய்தனர். இருமொழி சூழ்நிலைக் குழந்தைகள் உடனே மறு திசையைப் பார்க்கக் கற்றுக் கொண்டன. ஆனால் ஒரு மொழிச் சூழலில் வளர்ந்த குழந்தைகளுக்கு இந்த மாற்றம் புரியாது பழையபடியே முதலில் கற்ற திசையையே நோக்கின.

கவுஷன்ஸ்காயா மற்றும் மாரியன் (Kaushanskaya & Marian) மேற்கொண்ட ஆராய்ச்சியும் ஐந்து முதல் பத்தாண்டுகள் இருமொழிகளில் பயின்றவர்கள் ஒரு மொழியில் பயின்றவர்களைவிட அறிவுப் போட்டிகளிலும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருமொழித் திறன் உள்ளோரின் முன்மூளை சிறந்த முறையில் செயல்படுவதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்று இருமொழி அறியும் வாய்ப்புகளற்ற பிற நாடுகளில், புலம் பெயர்ந்து வரும்பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் தாய்மொழியில் பேசும் வழக்கத்தை கைவிட வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும் உளவியல் மருத்துவர் ஜூடி வில்லிஸ் (Judy Willis) குறிப்பிடுகிறார். அதிக உடற்பயிற்சியின் மூலம் தசை வலுவடைவது போல, இருமொழித்திறன் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுத்து சிறப்பாகச் செயல் படவைப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, இருமொழிகளில் பயிலும் வாய்ப்புள்ள இந்தியாவின் கல்விமுறை மாணவர்களின் மூளைக்கு சிறந்த பயிற்சியே அன்றி அவர்களுக்கு அது பெரிய சுமை என்று கருதுவது தவறு.

பெற்றோர்களை தங்களது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு கல்வியில் சிறந்து விளங்க செறிவூட்டப்பட்ட பானங்களை வழங்க விளம்பரங்கள் அறிவுறுத்துவது போல, இருமொழிப் பயிற்சியும் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்று விளங்க வைக்கவேண்டும். சிறுவயது மூளையின் பண்பான எதையும் உள்வாங்கும் திறனை 'இளமையில் கல்' என்ற வழக்கின் மூலமாகக் காலம் காலமாக அறிந்தவர்கள் நாம் என்பதை மறக்கத் தேவையில்லை.

ஆதாரங்கள்:

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர், தி இந்து, நவம்பர் 4, 2013 (http://tamil.thehindu.com/opinion/columns/article5311674.ece)

Speaking more than one language may delay dementia - Kim Painter, USA TODAY, November 7, 2013 (http://www.usatoday.com/story/tech/2013/11/06/language-bilingual-dementia/3452549/)

Why Bilinguals Are Smarter - Yudhijit Bhattacharjee,The New York Times, March 17, 2012 (http://www.nytimes.com/2012/03/18/opinion/sunday/the-benefits-of-bilingualism.html?_r=0)

Bilingual Brains – Smarter & Faster
Better attention and cognition in children who grow up in bilingual settings.

Dr. Judy Willis, M.D., M.Ed. in Radical Teaching, Psychology Today, November 22, 2012 (http://www.psychologytoday.com/blog/radical-teaching/201211/bilingual-brains-smarter-faster)

Pin It