மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனப்படுகொலைகள் புரிந்த இலங்கை அரசு நடத்தும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையே தமிழகத்தின் ஒரே குரலாக ஒலித்து வருகிறது; தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஆதரித்துள்ளனர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கூட இதே கருத்தையே முன்வைத்து வருகிறது.

இந்தச் சூழலில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து விட்டது; இதனால் மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக திராவிடர் விடுதலைக் கழக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தமிழகக் காவல்துறை ஓராண்டு காலம் சிறையில் அடைக்கக்கூடிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டிருக்கிறது.

சேலம் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் சாக்குத்துணியை கிரசினில் நனைத்து வீசிதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; சம்பவம் நடந்த அன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெரியார் கொள்கைகளுக்காக - பெரியார் வழியில் செயல்படும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்முறைப் போராட்ட முறைகளை ஏற்காத அமைப்பாகும். எனவே போராட்டத்தின் நோக்கம் உடன்பாடு என்றாலும் போராட்ட முறை நமக்கு உடன்பாடானது அல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்; உணர்ச்சி உந்துதலால் தவறான வழிமுறையைப் பின்பற்றியவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும்.

ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடந்துள்ளது. போருக்குப் பிறகும் நிலம், வாழ்க்கை, குடும்பங்களைத் தொலைத்துவிட்டு இராணுவத்தின் பிடியில் - தமிழர்கள் உரிமையற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கறார்கள்; போரில் உதவிய இந்தியா போருக்குப் பிறகும் இலங்கையைத் தட்டிக் கேட்கவில்லை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன் மகன் பாலசந்திரன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட காட்சியை "சேனல் 4' வெளியிட்டபோது தமிழர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்; இப்போது இசைப்பிரியா என்ற ஈழத்துப் இளம் பெண் ஊடகவியலாளர் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட காட்சியை "சேனல் 4' வெளியிட்டுள்ளது நெஞ்சை உலுக்குகிறது; இவ்வளவு கொடுமைகளையும் செய்த ஒரு அரசை நட்பு நாடு என்று இந்திய அரசு உறவாடுவதையும் உதவுவதையும் சகித்துக் கொள்ள முடியாத இளைஞர்கள் தான் இத்தகைய போராட்ட வழிமுறைகளை கையில் எடுத்துவருகிறார்கள்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை தமிழக அரசு பயன்படுத்துவதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்காக தமிழக அரசை எதிர்த்து போராடுவது இந்தச் சுழலில் பிரச்சனையின் நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை வலியுருத்தி மத்திய அரசுக்கு எதிராகவே திராவிடர் விடுதலைக் கழகம் குரல் கொடுக்கும்.

- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It