வஹ்ஹாபியம் என்ற இஸ்லாத்தின் தீவிர தூய்மைவாதப் பிரிவு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நான் இணையதளங்களில் விமர்சித்து எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் பல நண்பர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் போன்றோர் என்னிடம் வஹ்ஹாபியம் குறித்தும், அதன் தோற்றம் குறித்தும் தாங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், அதன் வரலாற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய பரிணாமம் ஆகியவை குறித்தும் நீங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். காலச்சூழல், என் தொடர்ச்சியான எழுத்தின் போக்கு, பல்வேறு வேலைகள் மற்றும் தரவுகளை திரட்டல் போன்றவை காரணமாக இது தாமதப்பட்டது. ஒருவகையில் தாமதம் கூட ஒரு விஷயம் பற்றிய சிறந்த அவதானமாகும். இப்போதைய தேவையில் அடிப்படையில் கீற்று வாசகர்களுக்காகவும், என்னை எழுத கேட்டுக்கொண்ட அனைவருக்காகவும் வஹ்ஹாபியம் பற்றிய இந்த நீண்ட தொடரை எழுதுகிறேன். ஆக உங்கள் எல்லோரின் ஆதரவையும், தொடர்ந்த ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.

நவீன உலகில் வஹ்ஹாபியம் என்ற சொல்லாடல் மேற்கத்திய ஊடகங்களாலும், இந்தியாவின் முன்னணி ஊடகங்களாலும் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. நடப்பு இஸ்லாமிய உலகில் வஹ்ஹாபியம் ஒரு பெரும் சவாலாக - ஆன்மீகம் என்பதைத் தாண்டி - ஓர் அரசியல் இஸ்லாமாக இது பரிணமித்திருக்கிறது. இஸ்லாம் உலக அளவில் பரவிய நிலையில் அது வரலாற்றில் எப்போதுமே ஆன்மீகம் தவிர பிராந்திய வடிவத்தை தாங்கியே வளர்ந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் பரிணாம வளர்ச்சி என்பதே உருவாகி இருக்காது. இந்நிலையில் 19 ஆம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் ஒரு நெருக்கடியான, பிரிட்டன் காலனியாதிக்கத்தின் அவசியமான தருணத்தில் உருவான வஹ்ஹாபியத்தின் வருகைக்குப் பின்னர் தான் இது மாறத் தொடங்கியது. காலத்தொடர்ச்சியின் போக்கில் வரலாற்றை நேர்மையாக அணுகும்போது இது பற்றிய உண்மை புலப்படத் தொடங்குகிறது.

உலகளாவிய நிலையில் கிறிஸ்தவமும், இஸ்லாமும் பாரம்பரிய இனத்தின் அடிப்படையில் உருவானதல்ல. இந்த இரு மதங்களிலும் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தன்னை இணைத்துக்கொள்ள முடியும். இங்கு உடல் என்பதைத் தாண்டி தனி மனித மனமே முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதன் மதங்களை மாற்றிக்கொள்ளும் போது மனங்கள் மட்டுமே சிதைவுறும் நிலையில் (Decondition) உடல் எப்போதும் சிதைவதில்லை. அவ்வாறு சிதைவது என்பது சாத்தியமில்லை. இந்த உண்மையை மேம்போக்கான நிலையில் முகலாய மன்னர்கள் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். அதனால் தான் அவர்கள் பெரும்பாலும் பிராந்தியங்களை உள்வாங்கத் தொடங்கினர். இதன் நீட்சியில் சவூதி அரேபிய வகைப்பட்ட உலக இஸ்லாத்தை முன்வைக்கும் வஹ்ஹாபிய கோட்பாடு பற்றியும், அதன் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றியும் விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது. அதன் ஆன்மீகம் என்பதைத் தாண்டி அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களை குறித்தே நாம் அதிகமும் உள்செல்ல வேண்டியதிருக்கிறது. காரணம் நவீன உலகில் ஆன்மீகம் என்பதைத் தாண்டி அரசியல் என்பதைத் தான் வஹ்ஹாபியம் அதிகமும் முன்வைக்கிறது.

வரலாற்றில் காலனியாதிக்கம் என்பது ஓர் அகோன்னத தருணம். உலகில் ஜனநாயக, மத சார்பற்ற அரசுகள் தோன்றாத காலம். இன்றைய உலகில் அரசு (State)என்ற சொல்லாடல் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நடைமுறை இல்லாத காலம் அது. படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு வல்லாதிக்கத்தின் அடிப்படை கூறுகளாக இருந்தது. அவ்வகையில் பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுக்கல், இத்தாலி ஆகிய நாடுகள் கீழைநாடுகளான ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் பெரும் பகுதிகளை காலனிகளாக வைத்திருந்தன. உலகில் மூன்றில் ஒரு பங்கு பிரதேசம் அப்போது மேற்குலகின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் பிரிட்டனின் பங்கு மகத்தானது. 17 ஆம் நூற்றாண்டு முதல் மூன்று நூற்றாண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த பிரிட்டன் மத்திய கிழக்கையும் விட்டுவைக்கவில்லை.

முகலாயர்களிடத்திலிருந்து இந்தியாவை கைப்பற்றிய பிரிட்டன் மத்திய கிழக்கு பிராந்தியத்தை குறிவைத்தது. அப்போது மத்திய கிழக்கில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் நெடிய நாகரீக வரலாற்று பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை கைப்பற்றுவதற்காக அல்லது அறிந்து கொள்வதற்காக, மற்றும் அதன் புவி அரசியல் நலனுக்காக அந்த பெருந்தீவு அதற்கு தேவைப்பட்டது. ஆனால் இதற்கு மிகப்பெரும் நெருக்கடியாக, சவாலாக துருக்கிய உதுமானிய பேரரசு இருந்தது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து சுமார் 700 வருடங்கள் மத்திய கிழக்கை ஆட்டிப்படைத்த உதுமானிய பேரரசை அசைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை பிரிட்டன் நன்றாக உணர்ந்திருந்தது. நேரடி படையெடுப்பு என்பதை விட மிக சாதுரியமான, செயல்தந்திர ரீதியான விஷயங்களே இங்கு அதன் இலக்கை அடைய உதவும் என்பதை மிக நன்றாக அறிந்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தன் பிரதிநிதி ஒருவரை Sleeper cell ஆக அங்கு அனுப்பி வைத்து நிலவரங்களை கண்காணிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தது. அதற்காக தன் காலனியாதிக்க அமைச்சக உளவாளியான ஹெம்பரை அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது.

ஹெம்பர் அடிப்படையில் ஒரு அறிவுஜீவி. கிறிஸ்தவம், யூதம் மற்றும் இஸ்லாம் குறித்து அறிந்தவர். இவரின் வாக்குமூலம் பின்னர் ஆவணமாக உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவந்தது. வஹ்ஹாபியம் குறித்து நாம் விரிவாக அறிந்து கொள்வதற்கு முன் அவரின் சுய சரித, அனுபவ வாக்குமூல ஆவணத்தை அறிந்து கொள்வது அவசியமானது. அதன் மொழியாக்கத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

எங்கள் பிரிட்டன் மிக பரந்தது. சூரியன் அதன் கடல் மேல் உதிக்கும். பின்னர் அதன் அடியில் திரும்பவும் மறையும். எங்கள் காலனிகள் இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கில் இருந்தாலும் இப்போதும் பலவீனமாகவே இருக்கிறது. மேற்கண்ட நாடுகள் எல்லாம் எங்களின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் வரவில்லை. எனினும் நாங்கள் மிக செயலூக்கமுள்ள, வெற்றிகரமான கொள்கைகளை மேற்கண்ட இடங்களில் வைத்திருக்கிறோம். நாங்கள் அவற்றை விரைவில் எங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம். இதில் இரு விஷயங்கள் முக்கியமானவை.

1. நாங்கள் ஏற்கனவே கைப்பற்றிய இடங்களை தக்க வைக்க முயற்சிப்பது

2. நாங்கள் இன்னும் கைப்பற்றாத இடங்களை கைப்பற்றுவது

காலனிய அமைச்சகம் மேற்கண்ட இரு வேலைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு குழுவை நியமித்திருக்கிறது. நான் காலனிய அமைச்சகத்திற்கு நுழைந்த உடன், அமைச்சர் என் மீது நம்பிக்கை கொண்டு, என்னை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகியாக நியமித்தார். வெளிப்படையான நோக்கில், இது ஒரு கம்பெனி வர்த்தகம். ஆனால் இதன் உண்மையான நோக்கம் இந்தியாவின் பரந்த நிலங்களை எங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான வழிகளை தேடுவது தான்.

- இன்னும் வரும்.....

- எச்.பீர்முஹம்மது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 2

Pin It