கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

       தமிழக முதல்வர் ஜெயலலிதா சூலை 28, 2011அன்று விடுத்த விரிவான அறிக்கையொன்றை – "தினமணி', "தினமலர்', "தினத்தந்தி', "தி இந்து' ஆகியன உள்ளிட்ட முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகள் 29, 30. 2011ஆம் நாள் இதழ்களில் முக்கியத்துவம் தந்து வெளியிட்டன. "தினத்தந்தி' 30. 7. 2011ஆம் நாள் இதழில் அதைத் தலைப்புச் செய்தியாக, ஏறக்குறைய முழுப்பக்க அளவுக்கு வெளியிட்டது. ஜெயலலிதா ஆங்கிலத்தில் வெளியிட்ட அந்த அறிக்கையில், கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்ட சட்ட முன்வடிவை "வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவு' என்று "தினத்தந்தி' யும், "மதக்கலவரம் மற்றும் திட்டமிட்ட வன்முறைத் தடுப்பு மசோதா' என்று "தினமலரு'ம், "வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதா' என்று "தினமணி' யும் குறிப்பிட்டுள்ளன.

மேலும், 22.10.2011 அன்று டெல்லியில் தேசிய வளர்ச்சிக் குழு சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர்கள் மாநாட்டிலும் கூடக் கலந்து கொள்ளாத ஜெயலலிதா,மன்மோகன் சிங் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் தனது அறிக்கையை அந்த மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தைப் படிக்கச் செய்தார். அந்த அறிக்கையிலும் "வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்புச் சட்டமுன்வடிவை' அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்: “கடந்த சில மாதங்களாக மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள், பாசிச மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளன. மதக் கலவரத்தை தடுப்பதற்காக வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு சட்ட மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாநில அரசுகளை மீறி, மத்திய அரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படுகிறது.இந்த மசோதா செயல்படுத்தப்பட்டால், மாநில அரசுகள் முற்றிலும் அதிகாரம் இல்லாததாகவும், முழுவதும் மத்திய அரசின் தயவை நாடி இருக்க வேண்டிய நிலையும் ஏற்படும்'' ("தினத்தந்தி' தலைப்புச் செய்தி), கோவைப் பதிப்பு, 23.10.2011.

மேற்சொன்ன சட்ட முன்வடிவு குறித்த எந்தத் தகவலும் தமிழக மக்களுக்கு எந்த ஊடகங்களாலும் தெரிவிக்கப்பட்டிருந்திராத, அது குறித்து அரசியல் கட்சிகளாலோ, கட்சி சார்பற்ற அமைப்புகளாலோ எந்த விவாதமும் தமிழகத்தில் நடந்திராத சூழலில் ஜெயலலிதா மேற்சொன்ன கண்டனத்தையும், வேண்டுகோளையும் விடுத்திருந்ததால், அவற்றுக்கு எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை என்று எந்தக் கட்சியும், எந்த அமைப்பும் சமாதானம் சொல்ல முடியாது.

உள்ளாட்சித் தேர்தலிலும் "கூட்டணி தர்மம்' தொடரும் என்று அப்போது எதிர்பார்த்துக் கொண்டிருந்த கட்சிகள் (இவற்றில் இடது சாரி, தலித், சிறுபான்மைச் சமுதாயக் கட்சிகள்) மட்டுமல்லாது, தேர்தல் அரசியலில் பங்கேற்காத வேறு எந்தக் கட்சியும் அமைப்பும் இதுவரை மேற்சொன்ன அறிக்கை குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை. மேற்சொன்ன சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முன்வடிவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நொடியிலிருந்தே, அந்த முன்வடிவு கருநிலையில் இருந்த நொடி தொட்டே அதைக் கடுமையாக எதிர்த்து வந்தவை பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரங்கள்தான்.

எனினும், அந்த சட்ட முன்வடிவுக்கு வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு வந்தது குறித்த செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன (Opposition, TMC flays Communal Violence Bill, Znews Bureau, Sunday 11th Sep 2011):

(1) 10. 09. 2011 அன்று நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் (National Integration Council) பதினைந்தாவது கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவின் நட்புச் சக்திகளான பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பஞ்சாப் மாநில அகாலிதள முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரும், ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், உத்திரப் பிரதேச முதலமைச்சர் மாயாவதி, மேற்கு வங்க முதலமைச்சரின் பிரதிநிதியாக வந்திருந்த அமித்மித்ர ஆகியோரும் எதிர்ப்புத் தெரித்தனர்.

சங் பரிவாரத்தைப் போலவே, நிதிஷ் குமாரும், "பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் எப்போதும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்' என்னும் எண்னத்தை அந்த சட்ட முன்வடிவு உருவாக்குவதாகக் கூறினார். "தவிர்க்கப்படக்கூடிய மோதல்களை' உருவாக்குவதற்கு அந்த முன்வடிவு வழிகோலுவதாக பிரகாஷ் சிங் பாதல் கூறினார். இந்த சட்ட முன்வடிவை சுற்றுக்கு அனுப்பாமலேயே அதன் மீதான கருத்துகள் கேட்கப்படுவதாக மாயாவதி குற்றம் சாட்டினார். நவீன் பட்நாயக், இந்த சட்ட முன்வடிவு மாநில அதிகாரங்கள் மீது கைவைப்பதாகக் கூறினார்.

(2) தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு அனுப்பிய அறிக்கையில், பா.ஜ.க.வின் தலைவர் நிதின் கட்காரி, அந்த சட்ட முன்வடிவு மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்துக் கொள்வதாகவும், தனி நபர் உரிமையின் மீது கைவைத்து, சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பின்வருமாறு கூறினார்: "இந்த சட்ட முன்வடிவு யாரையும் குடிமகனா(ளா)கக் கருதுவதில்லை; மாறாக, ஒவ்வொரு நபரையும் அவர் பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்தவரா, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவரா என்றே பார்க்கிறது. . . பெரும்பான்மை சமுதாயம்தான் அநீதியானது, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அந்த அநீதிக்குப் பலியாகிறவர்கள் என்று அனுமானித்துக் கொள்கிறது. ஆனால் நம் நாட்டில், பல்வேறு சமுதாயங்கள் ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையினராகவும், வேறொரு மாநிலத்தில் சிறுபான்மையினராகவும் இருக்கின்றனர். இந்த சட்ட முன்வடிவில் உள்ள பிரிவுகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையினருக்கு எதிராகவே செயல்படும்'. மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெய்ட்லியும் ஏறத்தாழ இதே கருத்தைக் கூறினார்.

(3) மேற்சொன்ன சட்ட முன்வடிவுக்கு மட்டுமல்லாது, குஜராத் மாநில ஆளுநராக திருமதி. கமலா பெனிவால் நியமனம் செய்யப்பட்டதற்கும் தனது ஆட்சேபனையைத் தெரிவிக்கும் வகையில், நரேந்திர மோடி அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

(4) இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக சி.பி.எம். விடுத்த அறிக்கை, வகுப்புவாத வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு சட்டம் தேவைப்படுகிறது என்றும், அதே வேளை சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதைப் பொருத்தவரை, மாநில அரசாங்கங்களுக்கு முதன்மைப் பொறுப்பு இருப்பதால், கூட்டாட்சி முறைக்கு ஊறு இல்லாத வகையில் அந்த சட்டம் இருக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டம் வெவ்வேறு வகை மோதல்கள், வன்முறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் வகுப்புவாத வன்முறையின் மீது மட்டுமே கவனம் குவிக்க வேண்டும் என்றும் கூறியது.

நரேந்திர மோடியைத் தனது உற்ற நண்பராகவும், குஜராத் மாநிலத்தை பொருளாதார வளர்ச்சிக்கான முன்னுதாரணமாகவும் கருதும் ஜெயலலிதாவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அந்த சட்ட முன்வடிவுக்கு எதிராக 28. 7. 2011 அன்று தனது அறிக்கையில் நெருப்பைக் கக்கிய ஜெயலலிதா, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தால், அவர் யாருடன் அணி சேர்ந்துள்ளார் என்பது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அதனால்தான் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், தனது அறிக்கையை மட்டும் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கை அங்கு படிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் யாரும் மேற்சொன்ன விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவில்லை. அந்த சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன், சம்பந்தப்பட்ட முதலமைச்சர்களின் விமர்சனங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும், இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

எனினும், தமிழக மக்களுக்குப் பரவலாகத் தெரிய வராத செய்தி என்னவென்றால், ஜெயலலிதாவின் அறிக்கை ஆர்.எஸ். எஸ். வெளியிட்டுள்ள புத்தகத்தில் முழுமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்பதுதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராம் மாதவ் என்பவரால் எழுதப்பட்டுள்ள அந்தச் சிறுவெளியீடு,அந்த அமைப்பு கூறும் வழக்கமான பச்சைப் பொய்கள் நிரம்பியதாகும்.அந்த வெளியீட்டின் விவரம் கீழ்வருமாறு: "’Communal Violence Bill: Threat to National Integration,Social Harmony And Constitutional Federalism,VSY Document No.8,September 2011, Published by Vishesh Sampak Yojana (VSY),RSS)

அந்த சட்டமுன்வடிவின் மீதான ஜெயலலிதாவின் தாக்குதலை வலுப்படுத்தும் வகையில், சங் பரிவாரம், தனது தமிழக ஆதரவாளர்களிலொருவரும் "தர்ம ரக்ஷ சமிதி' என்னும் அமைப்பின் துணைத் தலைவருமான எஸ். குருமூர்த்தியின் முன்முயற்சியைக் கொண்டு, சென்னையில் "தர்மத்தின் ஆதரவாளர்கள்' (Advocates for Dharma) சார்பில், 24. 10. 2011 அன்று ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அதில் எஸ். குருமூர்த்தியோடு சேர்ந்து வேறு சில சங் பரிவார ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, சிறப்புச் சொற்பொழிவாளர்களாக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் (ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த ஆயத்தில் இருந்தவர்), சி.பி.அய். முன்னாள் இயக்குநர் ஜோகிந்தர் சிங் ஆகியோரும் அந்த சட்ட முன்வடிவை விமர்சித்துப் பேசினர்.

நீதிபதி தாமஸ், நாடாளுமன்றத்தால் அந்த சட்ட முன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்பட்டால், உச்ச நீதிமன்றம் அந்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சொல்லிவிடும் என்று கூறினார். அது "முழுமுற்றான முட்டாள்தனமான' சட்டம் என்று ஜோகிந்தர் சிங் கூறினார். "இந்திய சமுதாயம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறது' என்றும், "அந்த நல்லிணக்கத்தில் இந்தச் சட்ட முன்வடிவு குறுக்கிடுகிறது' என்றும், "ஒரு தீய மனமே இந்த சட்ட முன்வடிவை உருவாக்கியிருக்கிறது' என்றும் எஸ். குருமூர்த்தி பேசினார் (Communal Violence Bill ' not needed', The Hindu, Coimbatore Edition, October 24, 2011).

இந்தியாவிலுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டைச் சேர்ந்த கே.டி. தாமஸ், ஜோகிந்தர் சிங் ஆகியோரையே இந்தச் சட்டமுன்வடிவுக்கு எதிரான கருத்துகளைச் சொல்ல வைத்ததன் மூலம், அது இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எதிரானது என்னும் ஜெயலலிதாவின் கருத்துக்கு வலுசேர்க்க முயன்றிருக்கிறது, அந்தக் கருத்தரங்கம். முஸ்லிம்கள் சார்பிலோ, தலித்துகள் சார்பிலோ இந்தக் கருத்தரங்கத்தில் யாரும் சொற்பொழிவாற்ற அழைக்கப்படவில்லை என்பதிலிருந்தே குருமூர்த்தி கூறும் "நல்லிணக்கம்' எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதை உறுதியாக ஆதரிக்கும் "உன்னதக்' கொள்கையைக் கடைப்பிடிக்கும் "தினத்தந்தி', ஜெயலலிதாவின் அறிக்கை கிட்டத்தட்ட முழுவதையும் தமிழாக்கம் செய்துள்ளது. அந்தத் தமிழாக்கத்தில் உள்ள "வகுப்புவாரி' என்னும் சொல் குழப்பத்தைத் தருவதால், இந்தக் கட்டுரையில் அது "வகுப்புவாத' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அத்தமிழாக்க வடிவில் உள்ள அந்த அறிக்கையை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில், தேவைப்பட்ட இடங்களில் அடைப்புக் குறிகளில் ஆங்கிலச் சொற்கள் தரப்பட்டுள்ளன.

இந்த ஆங்கிலச் சொற்கள், "தி இந்து' நாளேடு தமிழக முதல்வரின் அறிக்கை குறித்து 29. 7. 2011 அன்று வெளியிட்ட செய்தி, (அவரால் திரித்துக் கூறப்படும்) சட்டமுன்வடிவு ஆகியவற்றில் உள்ளவை; "வெளிப்பொருள்களை மய்யமாகக் கொண்டு' எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளவை 'based on the objective factors' என்னும் ஆங்கிலச் சொற்களை மூலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்னும் ஊகத்தின் அடிப்படையில் அடைப்புக் குறிகளுக்குள் கட்டுரையாசிரியரால் இடப்பட்டவை.

“அ, தி. மு. க. சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் இதற்கான என்னுடைய உறுதியான எதிர்ப்பை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நலனுக்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதான எண்ணத்தைத் தோற்றுவிக்க முயன்றாலும், இந்தச் சட்ட முன்வடிவின் நோக்கம் தெளிவில்லாமலும், ஊகங்களுக்கு இடம் அளிக்கும் வகையிலும் உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போதே, இதில் எழுத்தில் உள்ளதைவிட அதிக பொருள் பொதிந்து உள்ளது தெரியவரும். சுருங்கக்கூறின், வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையைத் (Communal and targeted violence) தடுக்க உள்ள இந்த மருந்து நோயைக் காட்டிலும் மோசமானதாகும்'' என இந்த அறிக்கையின் தொடக்கத்தில் கூறும் ஜெயலலிதா, "அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, கட்சி வித்தியாசமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாயத் தலைவர்களும், சுதந்திரமான ஊடகங்களும் மற்றும் இந்த நாட்டின் குடிமக்களும் இந்தச் சட்ட முன்வடிவில் ஒளிந்து கொண்டிருக்கும் ஆபத்தினை உணர்ந்து, இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று முடிக்கிறார்.

மத்திய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டத்திற்கான சட்டமுன்வடிவை ஆதரித்தோ, விமர்சித்தோ கருத்துக் கூற இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், நேர்மையான விவாதங்களை முடக்கும் வகையில் ஜெயலலிதா, அந்த சட்ட முன்வடிவிலுள்ள விடயங்களை அப்பட்டமாகத் திரித்துக் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அமைக்கப்பட்ட "தேசிய ஆலோசனைக் குழு' வால் (National Advisory Council) நியமிக்கப்பட்ட சட்ட முன்வடிவு வரைவுக் குழுவால் (இதில் கட்சி சாராத, முற்போக்கு எண்ணம் கொண்ட சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரும் உள்ளனர்; இவர்களை "ஜோல்னா பை மத்தியதரவர்க்க இடதுசாரி தாராளவாதிகள், என்றும், தன்னார்வக் குழுவினர் என்றும் சங் பரிவார இணைய தளங்கள் அவதூறு செய்கின்றன) 21. 07. 2011 அன்று இறுதி செய்யப்பட்ட "வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு (நியாயமும் இழப்பீடும் பெறுவதற்கான வழிவகை) சட்ட முன்வடிவின் [Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill 2011] இணைய தளத்தில் ஏற்றப்பட்டது. அய்ம்பத்தி அய்ந்து பக்கங்கலுள்ள அந்த சட்ட முன்வடிவு கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது:

1. விளக்கக் குறிப்பு (Explanatory Note); 2. எட்டு அதிகாரங்கள் (Chapters) ; இவற்றில் 133 பிரிவுகள் (Sections) உள்ளன; 3. நான்கு பட்டியல்கள் (Schedules).

இனி, ஜெயலலிதாவின் அறிக்கையிலுள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்:

 (1) “உத்தேச சட்ட முன்வடிவின் பிரிவு3இல், "ஒரு குழுவுக்கு எதிரான விரோதமான சூழ்நிலை' என்பதைப் பற்றி விளக்கும் போது, "ஒருவரது அடிப்படை உரிமையைப் பறித்துக் கொள்வதாக மிரட்டுவது' என்று விளக்கி உள்ளது. இதுவன்றி "வேறு எந்த நடவடிக்கை, இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக்கூடியவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அச்சுறுத்திப் பணியவைத்தல், விரோதமான அல்லது எதிரான சூழ்நிலையை உருவாக்கும் எண்ணம் அல்லது அதனை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகவோ, விளைவாகவோ இருப்பவையும் இதன் கீழ் கொண்டு வந்துள்ளது'.

உண்மையில் இந்த சட்ட முன்வரைவு பிரிவு 3 (g) கூறுவது இதுதான்:

"hostile environment against a group' means an intimidating or coercive environment that is created when a person belonging to any group as defined under this Act, by virtue of his or her membership of that group, is subjected to any of the following acts:

 (i) boycott of the trade or business of such person or making it otherwise difficult for him or her to earn a living; or

 (ii) publicly humiliate such person through exclusion from public services, including education, health and transportation or any act of indignity; or

 (iii) deprive or threaten to deprive such person of his or her fundamental rights; or

 (iv) force such person to leave have his or her home or place of ordinary residence or livelihood without his or her express consent; or

 (v) any other act, whether or not it amounts to an offence under this Act, that has the purpose or effect of creating an intimidating, hostile or offensive environment.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தச் சட்டத்தின்படி "குழு' என்று வரையறுக்கப்பட்டுள்ள குழுவைச் சேர்ந்த ஒருவரது வர்த்தகத்தையோ, தொழிலையோ புறக்கணித்தல் அல்லது அவர் பிழைப்பு நடத்துவதை வேறுவகையில் கடினமானதாக்குதல், கல்வி, மருத்துவம், போக்குவரத்து வசதி ஆகியன உள்ளிட்ட பொது சேவைகளிலிருந்து அவரை ஒதுக்கிவைப்பதன் மூலம் அவரை பகிரங்கமாக அவமானப்படுத்துதல், அல்லது வேறு வகையான கண்ணியக்குறைவை அவருக்கு ஏற்படுத்துதல், அவரது அடிப்படை உரிமைகளைப் பறிப்பதோ, பறிக்கப் போவதாக அச்சுறுத்துவதோ, அவரது திட்டவட்டமான ஒப்புதல் மூலமாக அன்றி அவரை அவரது வீட்டிலிருந்தோ, இயல்பான வாழ்விடத்திலிருந்தோ, வாழ்வாதாரத்திலிருந்தோ போகும்படி செய்தல், இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் எனச் சொல்லப்படாததாக இல்லாவிட்டாலும், அவருக்கு அச்சுறுத்தக்கூடிய, பகையான, ஊறுவிளைவிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் வேறு செயல்களைச் செய்தல் ஆகியன அவரைப் பொருத்தவரை பயம் உண்டாக்கும், நிர்பந்தம் ஏற்படுத்தும் சூழ்நிலை ஆகும்.

மத, மொழி சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் ஆகியோர் மட்டுமே மேற்சொன்ன சூழ்நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியுமா? எனவே, ஜெயலலிதா எதற்காக இந்த சட்டப் பிரிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்? யாருடைய "அடிப்படை உரிமைகள்' பற்றிக் கவலைப்படுகிறார்?

(2) “இந்த உத்தேச சட்ட முன்வடிவின் பிரிவு 18இல் "கடமை தவறுதல்' என்பதன் மூலக் கூறு என்ன என்பதை வரையறை செய்யும்போது, வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையை தடுக்கும் வகையில் பொது அமைதியை பராமரிப்பதும் பொது ஊழியரின் (அரசாங்க ஊழியர்/அதிகாரி) கடமை என்றும் இலக்கு வன்முறையைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தகவல்களைப் பெற்று, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காததும் கடமையிலிருந்து தவறுவதுதான் என்று பிரிவு 18இல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைத் தொடர்புபடுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், களப்பணியாற்றும் அதிகாரிகள் இந்தப் பிரிவின் கீழ் குற்றம் புரியவில்லை என்றாலும், உயர் அதிகாரிகள் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மீது இந்தப் பிரிவின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம். இதுபோன்ற நெகிழும் தன்மையுள்ள விளக்கத்தின் அடிப்படையில் வகுப்புவாத இணக்கம், நியாயம் மற்றும் இழப்பீட்டுக்கான தேசிய அதிகார அமைப்பு (National Authority for Communal Harmony, Justice and Reparation) தானாகவே நடவடிக்கை எடுக்கலாம் என்கிறபோது இதனுடைய ஆபத்து இரட்டிப்பாகிறது''

இந்த சட்ட முன்வடிவின் பிரிவு 18 "கடமை தவறுதல்' என்பதைப் பற்றியதல்ல. மாறாக, "வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையைத் தடுக்கும் கடமை' பற்றியது ஆகும். அந்தப் பிரிவு கூறுகிறது:

18. Duty to prevent communal and targeted violence: (1) Every public servant charged with the duty of maintenance of  public order and tranquility including duties under sections 129 to 144A of the Code of Criminal Procedure, 1973 shall take all  responsible steps to prevent any act of communal and targeted violence including its build-up, incitement, outbreak and its spread; and to that end:-

(i) made all possible efforts to identify patterns of violence in the State or any part thereof, that indicate occurrence of  communal or targeted violence, including the creation or existence of hostile environment against a group;

(ii) obtain information regarding the likelihood of occurrence of communal or targeted violence; and

(iii) act in furtherance of the duty to prevent communal and targeted violence in accordance with the powers vested in them;

(2) Every police officer shall take action, to the best of his or her ability, to prevent the commission of all offences under this Act.

 (3) Every public servant exercising powers under this Act in discharge of his or her duties shall act without any delay in a fair, impartial and non-discriminatory manner.

சுருக்கமாகச் சொன்னால், 1973ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 129 முதல் 144(அ) வரையிலான பிரிவுகளில் கூறப்பட்டுள்ள கடமைகள் உட்பட பொது ஒழுங்கு, அமைதி ஆகியவற்றைப் பராமரிக்கும் கடமை ஒப்படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அரசாங்க ஊழியரும், வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை மெல்ல மெல்ல உருவாகி, தூண்டிவிடப்பட்டு, வெடித்துப் பரவுதல் உள்ளிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை செயல் எந்தவொன்றையும் தடுக்க, அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் குறிக்கோளின் பொருட்டு அவர்கள் (அ) மாநிலத்திலோ, மாநிலத்தின் ஒரு பகுதியிலோ ஒரு குழுவிற்கு எதிராக பகைச் சூழல் உருவாக்கப்படுதல் அல்லது நிலவுதல் உட்பட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வதைச் சுட்டிக்காட்டும் வன்முறை பாணிகளை அடையாளம் கண்டறிய இயன்ற முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்; (ஆ) வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை நடப்பதற்கான சாத்தியப்பாடு குறித்த தகவலை திரட்ட வேண்டும்; (இ) தங்களது கடமையின் மேம்பாடாக, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உகந்த வகையில் வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையைத் தடுக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் மேற்சொன்ன விமர்சனம், கட்டளையிடும் அதிகாரிகளின் கீழ் பணியாற்றும் (களப்பணியாற்றும்) கீழ்நிலை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் மீது, அவர்கள் இந்தச் சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ள குற்றம் செய்யாமலிருந்தாலும்கூட, கட்டளையிடும் அதிகாரிகளால் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இந்த சட்ட முன்வடிவு வழிவகுப்பதாகக் கூறுகிறது. அப்படி ஏனோ தானோவென்று கீழ் நிலை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கான சாத்தியப்பாட்டை இந்த சட்ட முன்வடிவு உருவாக்குவதில்லை. எந்த ஒரு முதல் தகவல் அறிக்கையும் முறையான புகாரின் அடிப்படையில்தான் பதிவு செய்யப்பட முடியும். தவறான புகார்கள் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க, ஏற்கனவே உள்ள சட்டங்களைப் பயன்படுத்த முடியும்.

ஆக, ஜெயலலிதா ஆட்சேபிக்கும் அம்சங்கள் இதில் என்ன உள்ளன?

இதில் வேடிக்கை என்னவென்றால், களப்பணியாற்றும் கீழ் நிலை அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் மீது பொய்யான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கண்ணீர் வடிக்கும் ஜெயலலிதா அதே மூச்சில், கட்டளை இடும், உயரதிகாரிகளும் இந்த சட்ட முன்வடிவால் பாதிக்கப்படுவர் என்று கூறுவதைப் பின்னர் பார்ப்போம். அதாவது, காவல் துறையைச் சேர்ந்தவர்கள், கடமை தவறினாலோ, குற்றங்கள் இழைத்தாலோ அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்பதுதான் ஜெயலலிதாவின் விருப்பம்.

(3) “இந்த உத்தேச சட்ட முன்வடிவின் 14ஆவது பிரிவு, கட்டளை இடக்கூடிய, கட்டுப்பாடு அல்லது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொது ஊழியர்கள், (public servants in command, control or supervision of the armed forces or security forces) தங்களுக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் இந்தச் சட்டம் அல்லது அமுலில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழும் செய்ததாகக் கூறப்படும் தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆணையிடக்கூடிய பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றாலும், வெளிப் பொருள்களை மய்யமாகக் கொண்டு (based on the objective factors), தெளிவாக குறிப்பிடப்படாத பட்சத்தில், உயரதிகாரியை குற்றம் சாட்டுவது பொருத்தமாக இருக்காது''

சட்ட முன்வடிவு பிரிவு 14 கூறுகிறது:

14. Offences by public servants for breach of command responsibility. (1) Whoever, being a public servant in command, control or supervision of the armed forces or security forces as defined under clause (a) of section 3 of this Act or assuming command whether lawfully or otherwise, fails to exercise control over persons under his or her command, control, or supervision and as a result of such failure offences under this Act are committed, by persons under his or her command, control or supervision, or as a result of such failure the said persons fail to discharge their duties under this Act or any other law for the time being in force, shall be guilty of the offence of breach of
command responsibility, where:-

 (a) such public servant either knew or ought to have known having regard to the circumstances at the time that the persons under his or her command, control or supervision would commit or be likely to commit such offences; and,

 (b) such public servant failed to take necessary and reasonable measures within his or her power to prevent or repress the commission of said offences or failed to submit the matter to the competent authorities for investigation and prosecution.

அதாவது, இந்த சட்டத்தின் பிரிவு 3 (a)வில் கூறப்பட்டுள்ள ஆயுதப் படைகள் அல்லது பாதுகாப்புப் படைகளுக்குக் கட்டளையிடும், கட்டுப்படுத்தும் அல்லது மேற்பார்வையிடும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அல்லது சட்டபூர்வமாகவோ, வேறு வகையிலோ கட்டளை இடும் பொறுப்பை மேற்கொள்ளும் அரசாங்க ஊழியர், தனது கட்டளைக்கு, கட்டுப்பாட்டுக்கு, மேற்பார்வைக்கு உட்பட்டவர்கள் மீது கட்டளை இடவோ, கட்டுப்பாடு, மேற்பார்வை செலுத்தவோ தவறி, அந்த தவறின் காரணமாக அவரது கட்டளை, கட்டுப்பாடு, மேற்பார்வை ஆகியவற்றுக்கு உட்பட்டவர்கள் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களைச் செய்வார்களேயானால் அல்லது அவர்கள் இந்தச் சட்டத்திலோ அல்லது, அமுலில் உள்ள வேறு சட்டங்களிலோ கூறப்படும் கடமைகளைச் செய்யத் தவறுவார்களேயானால் கீழ்க்காணும் காரணங்களின்படி, அவர் கட்டளை இடும் பொறுப்பைச் செய்யத் தவறும் குற்றம் இழைத்தவராவார்:

(அ) அந்தச் சமயத்தில் உள்ள சூழ்நிலையில் தனது கட்டளை, கட்டுப்பாடு, மேற்பார்வை ஆகியவற்றுக்கு உட்பட்டவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்வார்கள் அல்லது அவற்றை அவர்கள் செய்யும் சாத்தியப்பாடு இருக்கிறது என்பதை அவர் ஒன்று ஏற்கனவே அறிந்திருந்தாலோ, அறிந்திருந்தே ஆக வேண்டும் என்றாலோ (ஆ) அத்தகைய குற்றங்கள் இழைக்கப்படுவதைத் தடுக்கவோ அல்லது ஒடுக்கவோ தனது அதிகாரங்களுக்கு உட்பட்ட அவசியமான மற்றும் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினாலோ.

கடந்த காலத்தில் சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் ஆகிய சிறுபான்மை மதச் சமூகத்தினர் மீதும், சில மாநிலங்களில் மொழிச்சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள், பீகாரிகள் போன்றோர் மீதும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மீதும் நடந்த திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்களின் போது, அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்த, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அதிகாரிகள், அந்த வன்முறைத் தாக்குதலில் தங்களது கீழ் அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்றதைக் கண்டும் காணாமல் இருந்த நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டுதான், இந்த சட்ட முன்வடிவைத் தயாரித்தவர்கள் – உயர் அதிகாரிகளையும் (கட்டளை இடும், கட்டுப்பாடு, மேற்பார்வை செலுத்தும் அதிகாரிகள்) குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதற்காக இந்தப் பிரிவைச் சேர்த்துள்ளனர்.

அப்படியிருக்க இந்த உயரதிகாரிகள் பற்றி ஜெயலலிதா கவலைப்படுவது ஏன்? “ஆணையிடக்கூடிய பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றாலும், வெளிப் பொருள்களை மய்யமாகக் கொண்டு, தெளிவாகக் குறிப்பிடப்படாத பட்சத்தில், உயரதிகாரியை குற்றம் சாட்டுவது பொருத்தமாக இருக்காது'' என்று கூறுகிறார் ஜெயலலிதா.

இந்த உயரதிகாரிகள் மீதோ, அவர்களது கீழ் அதிகாரிகள், ஊழியர்கள் மீதோ குற்றம் சாட்டப்படுவது, அவர்கள் புலன் விசாரணைக்குட்படுத்தப்படுவது, அவர்கள் மீதான வழக்குகள் விசாரணை செய்யப்படுவது அனைத்தும் இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியேதான் மேற்கொள்ளப்படும் என இந்த சட்ட முன்வடிவு கூறுகிறது. எனவே புறஅம்சங்களை, புற உண்மைகளை, தக்க சாட்சிகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும். எனவே, ஜெயலலிதாவின் ஆட்சேபனைக்கு அடிப்படை இல்லை.

– அடுத்த இதழில் தொடரும்