இனப்படுகொலை நாடான இலங்கையை பொதுநலநாடுகள் மன்றத்திலிருந்து (காமன் வெல்த்திலிருந்து) நீக்க வேண்டும் என்றும், கொழும்பில் பொ.நா. மன்றக் கூட்டம் நடந்தால் அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் ஈழம் தொடர்பான இன்னபிறக் கோரிக்கைகள் வைத்தும் கடந்த 01.10.2013லிருந்து காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்களை 14.10.2013 மாலை சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நேரில் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

இன்றுடன் 15 நாட்களாக உண்ணாப் போராட்டம் நடத்திவரும் தோழர் தியாகு, ஏற்கெனவே காவல்துறையினரால் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மருத்துவமனையிலும் விடுவிக்கப்பட்டப்பிறகும் அவர் உண்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

புரசைவாக்கம் உழைக்கும் மக்கள் மாமன்ற அலுவலகத்தில் உண்ணாப் போராட்டம் இருந்த தோழர் தியாகு அவர்களை காவல்துறையினரும் மருத்துவர்களும் அரசுப் பொது மருத்துவமனையில் 14.10.2013 மாலை சேர்த்தனர். அங்கும் அவர் சிகிச்சை ஏற்க மறுத்து உண்ணாப் போராட்டம் தொடர்கிறார்.

அவரிடம் நலம் விசாரித்த தோழர் பெ.மணியரசன் அவர்கள், “14 நாட்கள் ஆகிவிட்டன. உங்களுக்கு சர்க்கரை நோயும் இருக்கிறது. இனியும் தொடர்ந்தால், உயிருக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஆபத்து ஏற்படும். இலங்கையில் நடைபெறும் பொதுநலநாடுகளின் மன்றக் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் உங்கள் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கடந்த 11.10.2013 அன்று தமிழகமெங்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் நாட்களிலும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் அறிவித்துள்ளன. அங்கங்கே மாணவர் போராட்டங்களும் நடந்து கொண்டுள்ளன. உங்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. மேலும், தமிழின உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நீங்கள் அறிவுத் தளத்திலும் போராட்டக் களத்திலும் பங்காற்ற வேண்டிய கடமை இருக்கிறது. நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எங்களது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் முன்வைத்துப் போராடுகின்றன. எனவே, நீங்கள் உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டு, மாற்றுவகைப் போராட்டங்களில் ஈடுபடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தோழர் தியாகு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Pin It