தருமபுரி, இளவரசன் - திவ்யா திருமணம் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வு தமிழர்கள் இன்னும் ‘பகுத்தறிவற்ற’ மனிதர்களாகவே வாழ்கிறார்கள் என்பதை நிருபித்துவிட்டது. தமிழக ஊடகங்கள் இத்திருமணத்திற்கும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாதிக்கலவரங்களுக்கும், திருமண முறிவுக்கும், ஏன் இளவரசன் படுகொலை செய்யப்பட்டதற்கும் அதிக பக்கங்கள் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. இயற்கையான மனித உணர்வுடன் காதல் வயப்பட்டு, தனக்குத் துணையாக அவள்/அவன் தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து, திருமணமும் செய்து கொண்ட அந்த இளையோரின் பிரிவும், துயரமான முடிவும், இந்த தமிழ் சமூகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் இதயத்திலும் வலியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை வேதனையோடு தன்னுடைய கவிதையில் அறிவுமதி பதிவு செய்திருந்தார்.

சாதிகள் கூட்டி
கொள்ளி
வை!
அதுவரை
தமிழெனச்
சொல்லுதல்
தள்ளி
 வை!  
- (17.07.2013 ஆனந்த விகடன்).

சாதிமறுப்பு திருமணங்கள் செய்வோர் காலம்காலமாக நம்முடைய சமூகத்தில் இதுபோல் படுகொலை செய்யப்படுவது ஒரு கலாச்சாரமாகவே இருந்துள்ளது. அதனை “கௌரவக் கொலை” என்றும் பெயரிட்டு புனிதப்படுத்தி வருகின்றார்கள்.

 இன்றைய இளையோரிடம் “காதல் செய்யாதே” என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. காரணம் காதல் என்பது காலம் காலமாக நம் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் இரண்டறக் கலந்த ஒன்று. தமிழர்களின் பொதுமறையாம் திருக்குறளில் ‘காமத்துப்பால்’ பற்றி பேசியதுபோல் வேறெதிலும் அறியோம். இலக்கியம் தொட்டு இன்றுவரை காதல் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் இயல்பான ஒன்று. காதல் வயப்பட்டவர்களுக்கு சாதி ஒரு தடையாக இருக்க முடியாது. ஆணும் பெண்ணும்தான் காதல் வயப்பட முடியும். மாறாக, சாதிக்குள்ளேதான் காதல்வயப்பட வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்க முடியாது. இது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது.

‘எங்கள் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட சாதி ஆண்கள் திட்டமிட்டு காதல் திருமணம் செய்கிறார்கள்’ என்பது வன்னியர்கள் அதிகம் உறுப்பினராக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் ஆதங்கம். வன்னியசாதி பெண்களுக்காக பரிந்து பேச இவர் யார்? திருமணம் என்பது இரண்டு நபர்கள் முடிவு செய்வதுதான். இதற்கு அந்த இரண்டு நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் போது அவர்களின் திருமணம் சமூக கொண்டாட்டமாக மாறும். இளவரசன், திவ்யா திருமணத்தையும் காதலையும் நாடகக் காதல் என்கிறார்கள் சாதி வெறியர்கள். ஆனால் 22.11.12 அன்று திவ்யா காவல்துறையிடமும், நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்தில் ‘நான் விரும்பித்தான் இளவரசனைக் காதலித்தேன், திருமணம் செய்துகொண்டேன்’ என்று கூறியுள்ளார். தங்கள் சாதி பெண்களுக்காக பரிந்துபேச வந்தவர்கள் முகத்தில் கரியை பூசினார் திவ்யா. இருப்பினும் சாதியம் அவளை விடாது துரத்தியது.

சாதிய வெறியர்கள் பெண்களை

 முடிவெடுக்க அனுமதிக்கவில்லை,

 வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்திருக்கிறார்கள்.

 பெண்களை சாதியை உற்பத்தி செய்யும், உற்பத்திப் பொருளாக பார்க்கிறார்கள்.

 ‘சாதியம்’ என்று நிலைபாடு எடுத்துவிட்டால் பார்ப்பணியம், மறுதர்மம், பெண் அடிமைத்தனம் என்று அனைத்தும் இதில் உள்ளடக்கமாகிவிடுகிறது.

திவ்யாவை நாம் ஒட்டுமொத்த ஒடு;க்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும், காலம்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு குமுறிக்கிடக்கும் பெண்களின் முகவரியாகவும், முன்னிலைப்படுத்த வேண்டும். அப்போதுதான் சாதியை மறுக்கும் போராட்டத்தில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு ஏற்கமுடியும்.

பா.ம.காவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்-

 “இளவரசனை ஒரு தியாகியாகவோ, ஹீரோவாகவோ சித்தரிக்க வேண்டாம். உத்தரகாண்ட் மீட்பு பணிக்குச் சென்று இளவரசன் இறந்துவிடவில்லை. படிக்கும் வயதில் காதல் என்று திரிந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். இளைய சமுதாயத்திற்கு அவர் ஓர் தவறான முன்னுதாரணம். படிக்கும் வயதில் வாழ்க்கைக்குத் தேவையான வேலையைத் தேடாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்து இன்று தன்னையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்” (ஜூனியர் விகடன்: 14.7.13)

 திரு. செந்தில் அவர்களே, இளவரசன் ஹீரோ அல்ல, இந்த நாடகத்தின் ஹீரோ பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தான். இளவரசன் உத்தரகாண்ட் மீட்பு பணிக்குச் சென்று இறக்கவில்லை, உண்மைதான், ஆனால் சாதிக்கு எதிராக திருமணம் செய்வோர் இப்படித்தான் சமூகத்தில் படுகொலை செய்யப்படுவார்கள் என்பதன் குறியீடு அவன். உங்களைப் போன்ற சாதிவெறியர்கள் இப்படித்தான் சாதிமறுப்பாளர்களை கொலை செய்வீர்கள் என்பதன் வெளிப்பாடு அவன். காதல் எந்த வயதில் செய்ய வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார்?

காதலுக்கு ஏற்ற பருவம் கல்லூரிப் பருவம்தான். அப்பொழுதுதான் காதல் வரும். அவர்கள் பொறுப்போடு வீட்டில் கூறினால் உங்களைகப் போன்ற சாதிவெறியர்கள் எப்படி அனுமதிப்பீர்கள்? அதை அவர்கள் முறையாக வீட்டில் கூறினார்கள். இந்த சாதியச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை, படுகொலை செய்துவிட்டது. பெண்ணின் வாழ்வை அழித்தவர்கள் யார் என்பதை இன்று நாடே அறியும். சாதிவெறியர்கள்தான் திவ்யா என்ற இளம்பெண்ணின் வாழ்வை சீரழித்தவர்கள், அவள் கணவனைக் கொன்றவர்கள் இன்னும் சொல்லப்போனால் விசாரணைக் கமிஷ்னர் அழைத்து உண்மையாக விசாரணை நடக்கும் என்றால் நிச்சயம் நீங்களும் அதில் சிக்க வாய்ப்புள்ளது.

இடைசாதியாளர்களின் பார்ப்பனியம்:

 “சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது” என்பார் தந்தை பெரியார். திவ்யாவும் இளவரசனும் அறிந்தோ அறியாமலோ சாதியை ஒழிக்க புறப்படப் போய் தன் வாழ்வையே துயரத்துக்குள் ஆழ்த்தியிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாதோர் என்ற எதிர்ப்பு நிலை வலுபெற்றபோது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் உரிமைக்காகவும், பொருளாதார சமூக முன்னேற்றத்திற்காகவும் தலைவர்கள் போராடியவர்கள் பிற்படுத்தப்பட்ட இடைசாதியினர் தற்பொழுது தங்களுக்கு கீழ் தங்களுக்கு மேல் என்ற ஒப்பீட்டு அளவையை சமூகதளத்தில் ஏற்படுத்த விளைகின்றனர். அதாவது சூத்திர சாதிகள் தங்களுக்கான ஒரு புதிய பண்பாட்டை பெற விரும்புகிறார்கள், அது சாதியைக் கடந்ததாக இல்லை மாறாக பார்ப்பனியப் பண்பாடகவே இருக்கிறது.

 “பார்பனியம் தொடர்ந்து நீடிப்பதற்கு சூத்திர சாதிகளே காரணம், தீண்டாமை என்பது ஏணிப்படி மரம் போல் இந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பிடித்திருக்கின்றது. மேல் சாதியினரோடு சமமாக இருக்க நினைக்கும் சாதிகள் கீழ் உள்ள சாதியாருக்கு நீங்கள் சமத்துவம் அளிக்க வேண்டும்” என்றார் பெரியார். சாதியம் எப்படி பார்பனியர்களிடமிருந்து இடைசாதியினரிடம் புகுந்துள்ளது என்பதையும் விளக்குகின்றார். இங்கு சாதியிலிருந்து விடுதலை என்பது அனைத்து சாதியினருக்கும் பொருந்தும், சாதி என்பதே பார்பனியப் பண்பாடுதானே, இது தமிழர்களுக்கானது அல்ல.

 இங்கு அரசியல் ரீதியாக ஆட்சியையும் அதிகாரத்தையும் கைபற்ற விரும்புவார்கள். தங்களின் வலிமையை நிரூபிக்க விழைகின்றனர். சாதி எண்ணிக்கையை, வலிமையை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதாலே பா.ம.க சாதியை தற்சமயம் மகுடியாகப் பயன்படுத்துகிறது. 1862-ம் ஆண்டு பிருசிய மக்கள் மத்தியில் பேசிய லசால் என்ற அறிஞர் கூறுவார் “அரசியல் சாசனம் பற்றிய பிரச்சனை, முதலாவதாக உரிமை பற்றிய பிரச்சனை அல்ல, மாறாக வலிமை பற்றிய பிரச்சனையே ஆகும். ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் நிலைத்த தன்மை அந்த நாட்டில் இருக்கின்ற சமூக சக்திகளின் இருப்பைச் சார்ந்தே நிற்கும்”. சாதியமும் பொருளாதாரப் பலம், படைபலம் ஆள்பலம் என்று வலிமையை நம்பியே ஆதிக்கம் செலுத்த விழைகின்றது. இன்று இடைசாதிகளாக இருப்பவர்கள் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளை மிகவும் கேவலமாக பார்க்கும் பார்வை வளர்ந்து வருகின்றது. தலித் மற்றும் தலித் அல்லாதோர் என்ற பிரிவினைகள் நம்மிடையே வளர்ந்து வருவதை நாம் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். “பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய ச+த்திரப் பட்டம் போய்விடும் என்று நீங்கள் கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்” இப்படி பெரியார் கூறியது சாதியை சுமந்திருக்கும் எல்லாருமே இழிவானவர்கள் என்பதைக் குறிக்கிறது.

 1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல சக்தியை மாநாட்டில் பெரியார் இவ்வாறு பேசினார்.....

 “நீங்கள் (வன்னியர்கள்) சில ஜாதிக்கு பெரியவர்கள் ஆக வேண்டும் என்னும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு சாதியைவிட நீங்கள் கீழ்சாதியென்று நீங்களாகவே ஒப்புகொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்சாதி பட்டம் நிலைத்து விடுவதோடு நீங்கள் மேல்சாதி என்கிற தத்துவம் தகராறில் இருந்து வருகின்றது. உதாரணமாக இப்போது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியறென்றும் சொல்லிக் கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட சாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதம் இல்லாமல் ஒப்புக்கொண்டவர்களாகிவிட்டீர்கள். ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வு பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ்சாதி அல்ல என்கிற தன்மை அடைவது எப்படி? நமக்கு கீழும் நமது நாட்டில் எந்தச் சாதியும் இல்லை, நாம் எல்லோரும் சமமே என்கின்ற சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது போன்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” (குடியரசு. 01.06.1930).

 சமூகத்தில் தங்களை உயர்த்திக் கொள்ளத் துடிக்கும் இடைசாதிகள் அனைத்துமே தாழ்த்தப்பட்ட சாதிகளை எதிரிகளாக பார்க்கும் போக்கு நம்மிடையே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திவ்யா-இளவரசன் திருமண முறிவு என்பது வன்னியர்களுக்கும்-தாழ்த்தப்பட்டவர்களுக்குமானப் பிரச்சனை மட்டுமல்ல. மாறாக எல்லா இடைசாதிகளும் இம்மாதிரியான சாதி மறுப்பு திருமணங்களை ஏற்றுக்கொள்வதில்லை. நம் நாட்டில் கௌரவக் கொலைகளின் பட்டியலை தேடினால் எழுத பக்கங்கள் போதாது. சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிமறுப்புத் திருமணங்கள்தான். இம்மாதிரியான திருமணங்கள் அதிகரிக்கும்போது சாதியம் அழியும். எனவேதான் சாதிவெறி பிடித்தவர்கள் எதிர்க்கிறார்கள், கௌரவக் கொலை செய்யத் துணிகின்றார்கள்.

சாதி மறுப்புத் திருமணங்களே சாதியை அழிக்கும்

 “தாழ்த்தப்பட்ட மக்களின் முழுவிடுதலை சாதியும், தீண்டாமையும் ஒழிவதிலேதான் சாத்தியமாகும். அதற்கு பலசாதியினரும் ஒன்றாய் அமர்ந்து உண்பதும், சாதிக்கு வெளியே திருமணம் செய்வதும் பெரிதும் உதவும்” என்று அதையே சாதி ஒழிப்புக்கு அடிப்படையான வழிமுறையாக அறிவித்தவர் ஜோதிராவ் பூலே. கிராமங்களில் தான் சாதியம் வேரூன்றியுள்ளது. எனவே நகர்மயமாதலால் சாதியத்தை ஒழிக்க முடியும் என்பார் பெரியார். ஏனெனில் அங்கே அனைத்து சாதியினரும் இணைந்து வாழ வழியுள்ளது என்கிறார். ஆனால் இன்று அது பொய்த்துபோனது. காஞ்சா அய்லய்யா கூறுவார் “சாதி அமைப்பின் விளைவாக பல்வேறு கலாச்சாரங்களை உடையவர்கள் இங்கே அருகருகே இருந்து வந்தாலும் தனித்தனியாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள். பார்ப்பீனியம், மனித சிந்தனையை, வருணசிரம அடிப்படையில் மேல்கீழாக பிரித்தது. மனித அனுபவம் சிதைவுற வழிவகுத்தது@ சிந்தனை பரிமாற்றத்திற்க வழியில்லாமல் செய்தது”.

 சாதியத்திற்கு சாவுமணி அடிக்க சரியான வழி சுயமரியாதைத் திருமணம்தான் என்று எண்ணிய பெரியார் தாம் சென்ற இடங்களில் எல்லாம் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார். “திருமணச் சடங்கை பார்பனர்கள் செய்தாலும் சரி பார்பனர்கள் அல்லாதவர்கள் செய்தாலும் சரி அவை சாதிக் கட்டுப்பாட்டைப் பாதுகாக்கின்றன” என்று கூறி புரோகித திருமணமுறையை எதிர்த்தார் பெரியார் “சுயமரியாதைத் திருமணம் என்பதைக் கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்தவித வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ இல்லை என்றும் சகல துறைகளிலும் சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். சாதி, வகுப்பு, குலம், கோத்திரம் என்பவைகள் கவனிக்கப்படாமல் மணமக்களுடைய யோக்கியாம்சங்களே (நல்ல பண்புகளே) கவனித்துப் பார்க்கப்பட வேண்டும்” என்று புரட்சிகரச் சிந்தனைகளை செயல்படுத்த விழைந்தார் பெரியார்.

 திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான பரஸ்பர விருப்பம் அன்பு, மரியாதை, தோழமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் சாதி கௌரவத்தைக் காத்தல் என்னும் மரபிலிருந்து பெண்களை விடுவிக்க முடியும். “சாதியை நாங்கள் ஒன்றாக்குகின்றோம். ஆம், ஆக்க முயற்சிக்கின்றோம். ஆனால் சீக்கிரத்தில் முடியுமா என்பது சந்தேகம். மனித சாதி ஒன்றாகித்தான் தீர வேண்டும். அதற்கு தடை செய்கின்றவர்கள் அயோக்கியர்கள்-மடையர்கள் என்று தைரியமாகச் சொல்லுகின்றோம். எங்கள் பெண்ணை பறையனுக்கு கொடுப்போமா என்று கேட்கப்படுகின்றது. இது ஒரு அறிவீனமான கேள்வி@ அல்லது அயோக்கியத்தனமான கேள்வி என்றே சொல்லுவேன். ஏனெனில், எங்கள் பெண்களை நாங்கள் அவர்களுக்கு இஷ்டமானவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைக் கொண்டாடுகின்றவர்கள் அல்லர். பெண்களை ஒரு சாமானாகக் கருதி ‘ஒருவருக்கு கொடுப்பது’ என்கிற முறையை ஒழிக்க முயற்சிக்கின்றோம்” என்ற பெரியாரின் முயற்சி, இலக்கு, கனவு திவ்யா இளவரசன் திருமணம் வரை செயல்படுத்த முடியாத அளவுக்கு சாதியக் கட்டுமானத்தால் நம் சமூகம் புறையோடுக்கிடக்கின்றது.

கவிஞர் பாலபாரதி (திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர்) இப்படி எழுதியிருந்தார்……

இன்னும் இளவரசன்கள்
உயிரோடு இருகக்கிறார்கள்
இரயில்கள் தாமதமவதால்

 சாதியால் எத்தனை திவ்யாக்கள், இளவரசன்களை இழந்து தினம் தினம் அழுதுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைக்க சாதி மறுப்புத் திருமணத்தை நடைமுறைப்படுத்த வீதிதோரும் இயக்கம் வளர்ப்போம். நம் ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் சாதி மறுப்புத் திருமணத்தைத் தொடர்வோம். சாதியம் மறுப்போம் மானுடம் காப்போம்.

- ரா.பி.சகேஷ் சந்தியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It