என் அன்புக்குரிய நண்பா!

 நான் இன்னும் இருக்கின்றேன். உன் நலத்தை அறிந்து கொள்ள முடியாமல் செய்து விட்டாய். என்னை விட்டுப் பிரிய எப்படி மனம் ஒப்பினாய்! கடந்த மாத இறுதியில் (ஜுலை2013) ஒருநாள் “சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வந்து போயேம்பா” என்றாய். நானும் “கண்டிப்பா வருவேம்பா” என்றேன். இப்போது எண்ணிப் பார்க்கின்றேன், நீ என்னை அழைத்தது நோயுடன் போராடிக் கொண்டிருந்த போது என்று! எப்போதும் போல் என்னை அழைக்கின்றாய் என்று ஏமாந்து போன பாவியாகி விட்டேன்!

 1970களில் சோலையார்பேட்டை, பெரியார் தத்துவத் தொண்டனாக உன்னை வரவேற்றது. முதல்முதல் உனக்காக இங்குதான் மேடைகள் முளைத்துக் கொண்டன! நீ ஒரு பேராசிரியர், பட்டணத்துவாசி என்பதையெல்லாம் மறந்து எங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பழகினாய்!

 நீ பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களுக்குத் தத்துவப் பேராசிரியராகப் பாடம் கற்பித்தபோதும், பாமரர்களுக்கும் எவ்வாறு தன்மானம், பகுத்தறிவுக் கருத்துக்களைக் கற்பிப்பது என்ற பேச்சு நுட்பத்தை அறிந்து வைத்திருந்தாய்! பேச்சும் பாட்டுமாக இரண்டு மூன்றுமணி நேரம் தொடர்ந்து பொழியும் மழையாக உன் சொற்பொழிவு தொடரும்! உன்முகத்திலும் உடலிலும் வியர்வை நீர்வீழ்ச்சியாக சொரியும்! சிரித்துச் சிரித்து தங்கள் உள்ளத்தில் பகுத்தறிவை நடவு செய்து கொண்டவர்கள் ஏராளம்!

 ஒருமுறை எம்மூருக்குப் பக்கத்திலுள்ள நாட்டறம்பள்ளியில், பள்ளி ஆசிரியர்கள் உன் அறிவுரையைக் கேட்பதற்காகவே ஆசிரியர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று உன் உரை, பேராசிரியர் மாணவர்களுக்கு நடத்தும் தத்துவப் பாடமாகவே இருந்தது! பெரியார் தத்துவத்தின் விதை, - ‘உலகில் உள்ள அனைத்தும், மனிதனுக்கு நன்மை தரும் வகையில் பயன்பட வேண்டும். அவ்வாறு அவை பயன்படாமல் மனிதத்தன்மை, மானம், பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றைக் கெடுப்பவைகளாக - அவை கடவுளாக மதமாக, சாதியாக, சாத்திரமாக, எவையே யாயினும் அவை ஒழியவேண்டும். அவற்றைக் கற்பித்துப் பாதுகாப்பது பார்ப்பானாக, காந்தியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும்.’ இவைதான் பெரியாரின் ‘பயன்பாட்டு விதி”என்று விளக்கினாய். இது என் சிந்தையில் கல்மேல் எழுத்துபோல் பதிந்துவிட்து.

நண்பா,

 1991 இல் என் மகன் பேரறிவாளன் தளைபடுத்தப் பட்டபோது, எவரும் எம்மை அண்டவே அஞ்சியபோது, நீ ஊடகச் செய்திவழி அறிந்ததும் அர‌க்கோணத்தில் இருந்து ஒரு பழைய ஈருருளை ஊர்தியிலேயே சோலையார்பேட்டை வந்து ஆறுதல் கூறிச்சென்றாயே.! அந்தத் துணிவையும் நட்பையும் மறக்க முடியுமா?

 கடந்த-2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் மரண தண்டனைக்கு எதிராகப் பரப்புரை செய்ய, மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் திட்டமிட்டது. முதல் கட்டமாக 15-2-2012 முதல் 22-2-2012 முடிய எட்டுநாட்கள், சோலையார்பேட்டையில் தொடங்கி ஆம்பூர் முடிய பல்வேறு சிற்றூர் நகரமெங்கும் பரப்புரை நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் கௌதமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர் தமிழேந்தி முதலான பலர் பங்கேற்று ஆறு நாட்களும் உரையாற்றினார்கள். இறுதிநாள் பரப்புரையை நிறைவு செய்திட உன்னை அழைத்தேன். நான் தொடர்பு கொண்டபோது நீ நெல்லையிலிருந்து சென்னையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகக் கூறினாய். ‘சென்னைக்கு ஆம்பூர் வழியாகவும் செல்லலாம் வா’ என்றேன். வருவதாகச் சொன்னாய். உடனே ஆம்பூர் நகரமெங்கும் ஒலிபெருக்கியில் ‘பெரியார்தாசன் உரையாற்றுவார்; பெரியார்தாசன் உரையாற்ற வருகிறார்.’ என்று இளைஞர்கள் பரப்புரை மேற்கொண்டனர். நீ வந்ததும் எனக்கு மகழ்ச்சி கொள்ளவில்லை! அந்த வேகாத வெய்யலில் சந்து பொந்தெல்லாம் சென்று உனக்கே உரிய பேச்சாற்றலால் மூன்று தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முழங்கினாய். நீ ஊருக்குச் சென்றபின் வருந்தினேன். ஓய்வே இல்லாமல் இப்படி அலையவிட்டோமே என்று.

 நீ வெளிநாட்டிற்குச் செல்வதாகவும் பேரறிவாளன் எழுதிய புத்தகங்களைக் கொடுத்தால் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதாகவும் கூறினாய். அப்போது என்னால் எடுத்து வந்து கொடுக்க இயலாத சூழலில் நான் இருந்ததால் அடுத்த முறை செல்லும்போது கொடுப்பதாகச் சொன்னேன். ஆனால் கொடுத்தனுப்ப இயலாமலே போனது. 

 நீ கருத்தம்மாவில் நடித்தாய்தான். ஆனால் நான் துன்பம் தாங்காமல் அழுதுவிட்டேனே ! தனக்கு வேண்டியவர்கள் துயரம் கொள்ளும்போது தானாகவே மனிதமனம் அவர்களோடு ஒட்டிக் கொள்கிறதோ.! சிலம்பில் இளங்கோவடிகள் ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்’ என்று அந்தக் காலத்துத் தமிழர்தம் கற்பொழுக்கத்தை எடுத்துரைத்தார். அடிகளார் காலத்தில் அந்த நாகரீகம் இருந்தது. ஆனால் இப்போது கணவனை இழந்தவள் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால், நண்பா! இக்காலத்தில் நல்ல, சமுதாயத்திற்குப் பயன்படும் நண்பனை அல்லது தோழியை இழந்தால் காட்டுவது இல் என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

 சமுதாயத் தொண்டர்கள் உதவும் உள்ளம் கொண்டோர் சிலர். அவர்களில் இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் மரண தண்டனைக்கு எதிராகப் போராடினார். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் பேரறிவாளனுக்கு உதவியாக இருந்தனர். அவர்கள் பிரிந்தபோது மிக வேதனை அடைந்தோம். அவர்கள் வரிசையில் நீயும் சேர்ந்து கொண்டாயே!

 ஒருநாள் உன் மகனுக்குப் பெண் பார்க்க வந்திருப்பதாகச் சோலையார்பேட்டையிலிருந்து பேசினாய். அப்போது நான் கருமலையில் (கிருஷ்ணகிரி) இருந்தேன். என் துணைவி உனக்கு நிறைவாக விருந்தோம்பவில்லை என்று என்னிடம் சொல்லி வருந்தினாள். இதுதான் சோலையார்பேட்டைக்கு உனது இறுதி வருகையானது.

 முதுமையின் பருவமில்லையே உனக்கு! ஓயாத தொண்டு உன்னைத் தின்று விட்டதா? கவிஞனாக, எழுத்தாளனாக, நடிகனாக, மக்களால் வேண்டப்படும் பேச்சாளனாக என, ஒரு செடியில் மலரும் பல மலர்களாக நீ பரிணமித்தாய்! தத்துவப் பேராசிரியர் என்பதால் மதம், கட்சி முதலான அனைத்தையும் அதன் உள்ளேயே சென்று ஆய்ந்தாய். ஆனால் பெரியார் என்னும் ஆயுதத்தை மட்டும் கைத்தவற விடாமல் பிடித்திருந்தாய்! உன் முழக்கங்கள் அடங்கிய ஒலிப்பதிவு வட்டுகள், உன் சிந்தையின் சிற்பங்களாக உள்ள நூல்கள் உள்ளன. காலமெல்லாம் நீ பயன்படுவாய். நீ பெரியாரின் பயன்பாட்டு விதியைப் பரப்பியதுபோல் நான் பெரியாரின் மனித நேயத்தைப் பரப்புவேன். வாழ்க வாழ்க! என்று வாழ்த்தி வீரவணக்கத்தைப் படைக்கின்றேன்.

உன்னை என்றும் மறவாத

குயில்தாசன்

Pin It