அறிமுகம்

 சமூகவியல் என்பது சமூகம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் பற்றிக் கலந்துரையாடுகின்ற ஒரு கற்கைப் புலமாகும். சமூகமானது ஒரு முன்னேற்றத்தினை நோக்கிச் செல்வதற்கு அபிவிருத்தி என்பது இன்றியமையாததாகும். அபிவிருத்தி என்பது இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சமூகவியலில் முக்கியமானதாகவும், தனித்துவமானதாகவும் காணப்படுகின்றது. சமூகவியலில் அபிவிருத்தியானது முன்னேற்றம், வளர்ச்சி, படிமலர்ச்சி எனும் எண்ணக்கருக்களுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. சமூகவியலில் அபிவிருத்தியானது 1960 வரையில் வளர்ச்சி (புசழரவா) என்று பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையை அவதானிக்கலாம். சமூகங்களும், கலாசாரங்களும் எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்து செல்லலாம். எனவே மாற்றம் என்பது இயல்பானது. சமூக, கலாசார துறைகளில் ஏற்படுகின்ற அபிவிருத்தி என்பது வெறும் வளர்ச்சியை மாத்திரம் குறிப்பதன்று. அது உள்ளார்ந்த, நேர்நிலையான, நிலைபேறான விருத்தி நிலைகளை உள்ளடக்குவதாகக் காணப்படுகின்றது. தனிமனித அபிவிருத்தியானது சூழலில் காணப்படகின்ற பொருளாதாரம்(உணவு, வருமானம், செத்து), பாதுகாப்பு, அரசியல் உரிமைகள், கௌரவம் மற்றும் கல்வி முதலான அம்சங்கள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளதாகவும், இவற்றின் மூலமாகவே அபிவிருத்தி அடையப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சமூகவியவில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளை முன்வைத்தவர்களில் கொவ்லேற், குன்னர் மிர்டால், ஹேஸ்மன், ஐஸ்டின் டயஸ், பாஸ்டர் முதலானவர்கள் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

வரைவிலக்கணங்கள்.

 கொவ்லேற் (1931-2006) என்பவர் அபிவிருத்தியை திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல் எனும் அடிப்படையிலேயே முன்வைக்கின்றார். அபிவிருத்தியானது “சமூகத்தின் தேவைகளையும், விடுதலையையும் பூரணமாக நிறைவு செய்வது ஆகும்” என்கின்றார். அபிவிருத்தியின் இலக்கானது மூன்று கூறுகளில் தங்கியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். அதாவது வாழ்தலுக்கான வாழ்வாதாரம், சுயமரியாதை, சுதந்திரம் என்பனவேயாகும். இவ்வடிப்படையில் தான் அபிவிருத்தி என்பதனை வரையறை செய்கின்றார்.

 குன்னர் மிர்டால் (1898-1987) பல்துறை சார்ந்த அறிவியலாளராவார். பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் அபிவிருத்தி என்பது “முழுச்சமுதாய அமைப்புக்களும் முன்னேற்றத்தினை நோக்கிச் செல்வதும், சமூகத் தேவைகள் பூரணமாக நிறைவு செய்தலும், வளர்ச்சியடைதலுமாகும்” எனக் குறிப்பிடுகின்றார்.

 ஹேஸ்மன் என்பவர் அபிவிருத்தி என்பது “பொருளாதாரத் துறையில் மாத்திரமன்று, பொருளாதாரத் துறையுடன் இணைந்து அந்நாட்டினுடைய அரசியல், சமூக, கலாசார துறைகளிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்துதலே ஆகும்” எனக் குறிப்பிடுகின்றார்.

 ஐஸ்டின் டயஸ் என்பவர் “பொருளாதார வளர்ச்சியும், மனித நலவுரிமைகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற போதே அபிவிருத்தி ஏற்படும்” என்கின்றார். இவ்வாறான அறிஞர்களைத் தவிர சமூக நிறுவனங்களும் அபிவிருத்தி தொடர்பாக தமது பிரகடனங்களை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமானது அபிவிருத்தி தொடர்பாகக் குறிப்பிடுகின்ற போது “ பொருளாதார, சமூக இணைப்புக்களின் கூட்டு மற்றும் உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுதல், உற்பத்தியினை வினைத்திறனடையச் செய்தல், சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்துவதற்காக செல்வம், வருவாய்களைச் சமமாக பகிரப்படுதல் முதலானவற்றை உள்ளடக்கியதே ஆகும்” என வலியுறுத்துகின்றது.

 யுனஸ்கோ அபிவிருத்தி தொடர்பாகக் குறிப்பிடுகையில் “ பொருளாதாரமும், சனத்தொகையும் மட்டுமின்றி சமூகம், கலாசாரம் முதலானவற்றினை இணைத்துக் கொண்டதும், அதன் மாறுதல்களையும், வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய செயற்பாடுகள்தான்” ஆகும். இவ்வாறாக சமூகவியலில் அபிவிருத்தியானது சமூகத்தினுடைய முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டே வரையறை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகவியலில் அபிவிருத்தி பற்றிய கோட்பாடுகள்.

கோட்பாடு என்பது தோற்றப்பாடு தொடர்பான பொதுமையாக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பாகும். கோட்பாடுகள் பல்துறை சார்ந்து காணப்படுகின்றன. சமூகவியவிலும் பல்வேறு கோட்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் அபிவிருத்தி தொடர்பான கோட்பாடுகள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் தங்கியிருத்தல் கோட்பாடு (Dependency theory), நவீனத்துவக் கோட்பாடு, மார்க்சிய கோட்பாடு, பரவற்கோட்பாடு (Diffusion theory) முதலானவை குறிப்பிடத்தக்க கோட்பாடுகளாகக் காணப்படுகின்றன.

தங்கியிருத்தல் கோட்பாடானது கைத்தொழிலில் விருத்தியுறாத நாடுகள் கைத்தொழிலில் விருத்தியுற்ற நாடுகளில் தங்கியிருத்தலை முதலாளித்துவமானது ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றது. அதாவது குறைவிருத்தி நாடுகள் வறுமையுடையதாகக் காணப்படுவதற்கு காலனியாதிக்கம் காரணமாக அமைந்ததாகவும் இதனால் இந்நாடுகள் விருத்தியுற்ற நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலையில் காணப்படுவதாகவும் இக்கோட்பாடு வலியுறுத்துகின்றது. அத்துடன் ஒரு பிராந்தியத்தின் அபிவிருத்தியானது மற்றைய பிராந்தியத்தின் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுவதாக இக்கோட்பாடு குறிப்பிடுகின்றது. மைய நாடுகள்(ஐரோப்பிய) எல்லை நாடுகளின் (கீழைத்தேய) சமூகங்களின் மீது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார அம்சங்களின் மீது தாக்கத்தினைச் செலுத்துவதன் மூலமாக எல்லை நாடுகளைச் சார்ந்திருக்கச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான விடயங்களை இக்கோட்பாடு கொண்டிருந்தாலும் இவை பற்றிய விமர்சனங்களும் காணப்படுகின்றன. அதாவது சில மைய நாடுகள் விருத்தியடைவதில் பின்தங்கிக் காணப்படுவதுடன் சில கீழைத்தேய நாடுகள் விருத்தியடைந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஐப்பான், சீனா, சிங்கப்பூர் முதலானவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் இக்கோட்பாடானது குறைவிருத்தியின் உள்நிலைக் காரணிகளை ஆராயாது, சமூகத்திற்கு அப்பாலுள்ள வெளிநிலைக் காரணிகளைக் கருத்தில் கொள்கின்றமை பற்றிய விமர்சனங்களையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது.

 நவீனத்துவக் கோட்பாடு தொடர்பாக நோக்குகின்ற போது இக்கோட்பாடானது இரு பெரும் போர்களைத் தொடர்ந்து மனித குலத்தின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை நிறைந்த எண்ணங்களைக் கொண்டமைந்ததாகக் காணப்படுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டு (1950-1980) காலப்பகுதியில் வளர்ச்சியடைந்ததாகும். இக்கோட்பாடானது சமூக உறுப்பினர்களது நவீன விழுமியங்களை மையப்படுத்தியதாகக் காணப்படுகின்றது. அத்துடன் அபிவிருத்தியில் ஏற்படுகின்ற முன்னேற்றங்களையும் மறுமதிப்பீடு செய்கின்றது. புரட்சிகர சிந்தனைகளை உள்ளடக்கியது. ஏன் எனில் பாரம்பரிய சமூகம் மிகத் துரிதமாக நவீனமடைந்தமையை வெளிப்படுத்துகின்றது. w.w.Rostow என்பவர் நவீன அபிவிருத்தியானது நான்கு கட்டங்களில் வளர்ச்சியடைவதாகக் குறிப்பிடுகின்றார். அதாவது மூலவளம், சனத்தொகை, தொழில்நுட்பம், மூலதனம் முதலானவை ஒன்றிணையும் போது அபிவிருத்தி ஏற்படுவதாகக் குறிப்பிடுகின்றார். இது தொடர்பான கோட்பாட்டாளர்களில் Emile Durkhem முக்கியமானவராவார். இவர் ஆரம்ப கால புராதன சமூகம் இன்றைய சிக்கலான சமூகமாக மாற்றம் பெறுவதற்கு அபிவிருத்தி நிலைமையே காரணமாக அமைந்தது என்கின்றார். இவற்றுடன் உயிரியல் கூட்டொருமைப்பாடு (Organical Solidarity), இயந்திரவியல் கூட்டொருமைப்பாடு (Mechanical Solidarity) எனுமடிப்படையில் சமூகத்தினுடைய கூட்டொருமைப்பாடு வளர்ச்சியடைந்ததாவும் இது அபிவிருத்திக்கு இட்டுச் சென்றதாகவும் குறிப்பிடுகின்றார். இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக இக்கோட்பாடு காணப்படுகின்றது.

 மார்க்சியக் கோட்பாடானது கால் மார்க்ஸ்சினால் முன்வைக்கப்பட்டதாகும். இவரது சிந்தனையானது வரலாற்றுப் பொருள்முதல் வாத அணுகுமுறையிலிருந்தே வெளிப்படுத்ப்பட்டது. இது சமூக மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகின்றது. உற்பத்தி உறவுதான் சமூக உறவு எனவும், சமூகத்தில் அபிவிருத்தி என்பது சிக்கலான வழிமுறை என்றும் குறிப்பிடுகின்றார். இவர் ஐந்து வகையான சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதாவது பூர்வீக பொதுவுடமைச் சமூகம், ஆண்டான் அடிமைச் சமூகம், நிலபிரபுத்துவச் சமூகம், முதலாளித்துவச் சமூகம், சமத்துவச் சமூகம் என சமூகமானது அபிவிருத்தியடைந்ததாகவும்; குறிப்பிடுகின்றார். பொருளாதார சக்தியே சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றார். பொருளாதாரத்தின் உட்கட்டமைப்பு தான் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தவது என்கின்றார். இவ்வாறான சிந்தனைகளை முன்வைத்தாலும் சில விமர்சனங்களும் காணப்படுகின்றது. அதாவது சுரண்டலினால் மாத்திரம் குறைவிருத்தி ஏற்படும் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என விமர்சிக்கப்படுகின்றது.

 பரவற் கோட்பாட்டினை மக்ஸ் வேபர் மற்றும் எமில் டர்கைம் முதலானவர்கள் முன்வைத்தனர். வேபர் அபிவிருத்தியினை மதத்தின் பால் கொண்ட இருப்பின் காரணமாகவே சமூக அபிவிருத்தி ஏற்படும் என்கின்றார். இக்கருத்தினை முதலாளித்தவத்தின் உயிர்ப்பும் புரட்டஸ்தாந்து வாதமும் எனும் நூலின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார். அதாவது இந்நூலிலுள்ள கல்வினிசம் எனும் கொள்கையில் கடின உழைப்பு மூலமாகவே அதிக இலாபம் பெறலாம் எனவும், அற வழியில் ஈட்டும் செல்வமே நீடித்து காணப்படும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது. மேற்குலக நாடுகளில் முதலாளித்துவம் வளர்ச்சியடைய மதநம்பிக்கையே காரணம் எனவும் இதன் மூலமாகவே அபிவிருத்தி ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். புரட்டஸ்தாந்து மதம் கடைப்பிடித்த இறுக்கமான கொள்கைகளினால் மூலதனம் பரவலடைந்ததாகவும் அது அபிவிருத்திக்குக் காரணமானதாகவும் குறிப்பிடப் படுகின்றது. மரபான சமூகத்தில் வாழ்ந்தவர்கள் வாழ்வதற்காக மாத்திரமே உழைத்தனர். ஆனால் நவீன சமூகத்தில் மேலதிக வருமானம் பெறுதல் முக்கியமானதாகக் காணப்படுவதாக இவர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பொருளாதாரப் பரவல் ஏற்பட்டு சமூகமானது அபிவிருத்தியடைந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான விடயங்களைக் கொண்டதாக இக்கோட்பாடு காணப்படுகின்றது.

 முடிவுரை:-

ஆகவே சமூகவியலில் அபிவிருத்தியானது முக்கியமான எண்ணக்கருவாகக் காணப்படுவதுடன், சமூக மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவும் நோக்கப்படுகின்றது. சமூகத்தில் அபிவிருத்தியானது பொருளாதாரம் என்பதில் மாத்திரம் தங்கியில்லாமல் அனைத்துத் துறைகளுடனும் சார்ந்து காணப்படுகின்றது. எடுத்தக்காட்டாக கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தியானது முழுச் சமூகத்திலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்துகின்றது. எனவே அபிவிருத்தியானது பொருளாதார வளர்ச்சியையும், மனிதநல உரிமைகளும் ஒன்றினைகின்ற போது ஏற்படுவதாகவும், இது தொடர்பாக கொவ்லேற், குன்னர் மிர்டால், ஹேஸ்மன், ஐஸ்டின் டயஸ், பாஸ்டர் முதலானவர்கள் தமது வரையறைகளை முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளாக தங்கியிருத்தல் கோட்பாடு, நவீனத்துவக் கோட்பாடு, மார்க்சிய கோட்பாடு, பரவற்கோட்பாடு முதலானவை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்கால நடைமுறையில் சமூகவியலில் அபிவிருத்தி என்பது ஒற்றைப் பரிணாமமுடையதாக அன்றி உலகமயமாதல், பின்நவீனத்துவம், பெண்ணியம், பின் காலனித்துவம் சார்ந்த புதிய பார்வை வீச்சுக்களினால் ஒரு பல்பரிணாமப் பார்வையில் விமர்சிக்கப்படுவதனையும், வியாக்கியானிக்கப்படுவதனையும், மற்றும் பல்வேறு மறுவாசிப்புக்கள் நடைபெறுவதனையும் கவனத்தில் கொள்ளவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

 உசாத்துணை நூல்கள்

1. Mitchell A . seligson & John t passé smith,(1998), “development & under development”, Lynne rinner publishers of U S A.
2. Jennifer.a,Elliott, (2006), “An introduction to sustainable development”, Rout lodge Taylor & Francis group London.
3. சந்திரசேகரன்.சோ,(1996), “அபிவிருத்தியும் கல்வியும்”, தர்சனா பதிப்பகம்,பக்கம்(01-39)
4. விக்னரானி.பா,(1997), “மானுடம்”,யாழ்பல்கலைக் கழம், பக்கம்(05-11).
5. பாலகிருஸ்ணன்.நா,(2008),”பொருளாதார அபிவிருத்திச் செல்வழி”, பாலகிருஸ்ணன் சேவை நலப் பாராட்டுக்குழு,பக்கம்(497-538).
6. Pant.s,k. (2006), “ Human development”, Prem rowat for rawat publication,page(92-93).
 
- பிருந்தா.யோகராசா, சமூகவியல் சிறப்புக் கற்கை, கிழக்குப் பல்கலைக் கழகம்.

Pin It