சாதி சமுதாயம், அதன் ஆட்சியாளர்கள், சாதிக் கட்சிகள், சாதியை பயன்படுத்தும் கட்சிகளின் படுகொலையே!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

                தருமபுரி மாவட்டம், நாயக்கன் கொட்டாய் பகுதியை சேர்ந்த நத்தம், செல்லன் கொட்டாய் கிராமங்களில் கடந்த 9 மாதங்களுக்குள், சாதிக்கொடுமை இளவரசன், நாகராசன் ஆகியோரை தற்கொலைக்குத்தள்ளியுள்ளது. (இரண்டும் தற்கொலையா? கொலையா? என்ற விவாதமும் ஒருசிலர் மத்தியில் தொடர்கின்றது.) இந்தியாவில் இச்சாதிவெறி மோதல்களும், கொலைகளும், தற்கொலைகளும் பலநூறு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதற்கான காரணத்தையும், அதன் இன்றைய நிலையையும் கண்டுணர்ந்து அகற்றுவது நமது கடமையாகும்.

                இன்று கிராமப்புறங்களிலும், சிறுநகரங்களிலும், பெறுநகரங்களில் ஓரளவும் சாதி ஒடுக்குமுறை, ஆதிக்கம் போன்றவை பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலையில் இருந்து பெரும்பாலும் நடைபெறுவதில்லை(நான்கு வர்ண அடிப்படையில்). மாறாக எண்ணிக்கையில் பெரிய சாதியாக உள்ள ஆதிக்ககாரர்கள்தான் பெரும்பாலும் பிறசாதி உழைக்கும் மக்களை நிலப்பபுரபுத்துவ முறையில் ஒடுக்கி, சுரண்டி கொள்ளையடிக்கின்றனர், ஆதிக்கம் செலுத்துகின்றனர். சிறிய எண்ணிக்கையில் உள்ள மேல்சாதி வசதியானவர்கள் கூட இவர்களால் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்:-

                பின்தங்கிய உற்பத்திமுறை நிலவிய ஆரம்ப காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மீதான ஒடுக்குமுறையானது, அவர்களின் இலவச உழைப்பு, அல்லது மிகக்குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுவதற்காகவே நடத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்கே சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து போராட வேண்டியிருந்தது. வெண்மணி தியாகிகளின் போராட்டம் கூட அத்தகையதாகவே இருந்தது. ஆனால் இத்தகைய நிலை இன்று கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம்.

                இங்கு ஏற்பட்டுள்ள, உற்பத்தியில் நவீனமயமாக்கல், ஒரு தேசிய முதலாளித்துவ தலைமையில் ஏற்பட்டிருக்குமானால் அது தனது அதிகாரத்தை பயன்படுத்தி , உடைமை முறையை மாற்றி சாதிமுறையை ஒழித்து முதலாளி, தொழிலாளி என்ற இரு எதிர், எதிர் வர்க்கங்களாக சமுதாயத்தை மாற்றியிருக்கும்.

                மாறாக அந்நிய ஏகபோக முதலாளிகளின் (ஏகாதிபத்திய) நலனில் இருந்தும், அவர்களின் உள்நாட்டு கூட்டாளி துரோகக் கும்பல்களான டாட்டா,பிர்லா கும்பலின் நலன்களிலிருந்தும், ஆட்சியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அந்நியனைச் சார்ந்த நவீனமயமாக்கல் சமுதாயத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை உருவாக்காது. அனைத்திலும் அராஜகத்தைத்தான் உருவாக்கும். அதுதான் சாதி விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.

இன்று சாதி, தீண்டாமையை எதிர்த்த போராட்டத்தில் மூன்று அம்சங்களை கானமுடிகிறது.

(1.) தாழ்த்தப்பட்ட சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் இடங்களிலும், உழைக்கும் இடங்களிலும் தங்களின் மீதான அன்றாட சாதி கொடுமைகளையும், ஒடுக்குமுறைகளையும், இழிவுபடுத்தலையும் எதிர்த்த பல்வேறு வகை போராட்டம். இது மிகவும் நியாயமான குடியுரிமைக்கான, ஜனநாயக உரிமைக்கான போராட்டம் என்பதால் இதை நிச்சயம் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரித்து, அஞ்சாமல் துணை நிற்க வேண்டும்.

(2.) தாழ்த்தப்பட்ட சாதியில், சில ஜனநாயக விரோத சக்திகள், குறுக்கு வழியில் பணம் சேர்த்த புது பணக்கார ஆதிக்கக் கும்பல்களாக தோன்றியுள்ளதும், அவர்கள் மக்கள் விரோத மற்றும் ஒழிக்கப்பட வேண்டிய மேல் சாதி ஆதிக்க கும்பலோடு போட்டி போட்டுக் கொண்டு, ரௌடிக் கும்பலை வைத்துக் கொண்டு, அனைத்து சாதி உழைக்கும் மக்களின் மீதும், ஜனநாயக விரோத ஒடுக்குமுறைகளை, பணம் பறித்தலை தொடர்ந்து நடத்த முயற்சிக்கின்ற தகவல்கள் வந்து கொண்டுள்ளன. இது உண்மையாயின் இந்த போக்கை ஜனநாயக சக்திகள் ஆதரிக்க முடியாதது மட்டுமல்ல, எதிர்த்தும் போராட வேண்டும். இல்லையெனில் சாதி கடந்து உழைக்கும் மக்களை ஒன்று திரட்டுவது இயலாது.

(3.) சாதி சமூகத்தையே அகற்றி ஒரு புதிய உயர்ந்த கட்ட வர்க்க சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும், அனைத்து மக்களின் மீதான அனைத்து சுரண்டல் ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்டுவதற்காக அனைத்து உழைக்கும் மக்களும் கைகோர்த்து முன்னேறும் போராட்டம்.

                இது அனைத்து ஜனநாயக சக்திகளாலும் உலக பாட்டாளி வர்க்கத்தாலும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒரு உயர்ந்த இலட்சியப் போராட்டம்.

இச்சாதிமுறை இந்தியாவில் தோன்றி தொடர காரணம் என்ன?

                இந்தியாவில், ஐரோப்பாவைப் போன்று அரசர்கள் காலத்தில், நிலங்கள் வில்லங்கம் இல்லாத பட்டா நிலங்களாக நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இல்லை. அதாவது, நிலத்தில் நிலப்பிரபுத்துவ நில உடைமைமுறை தோன்றவில்லை. அவ்வாறு தோன்றியிருந்தால், ஐரோப்பாவை போன்று இங்கும் நிலப்பிரபு - பண்ணையடிமை என்ற இரு எதிர் எதிர் வர்க்கங்களே தோன்றியிருக்கும். சாதிமுறை தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு இந்தியாவின் தனித்தன்மைக்கு ஏற்ப சிக்கலான தேங்கிய சமூக நில உடைமை முறை நீண்ட காலம் தொடர்ந்தது. இதன் விளைவாய்

1. சுயதேவைக் கிராமங்கள்

2. குலத்தொழில் (இதன் தேவையில் இருந்து)

3. அகமண முறை

4. சாதி முறை

5. சாதி குடியிருப்புகள்

6. சாதி பண்பாடு உளவியல்

ஆகியவைகள் தோன்றின. இவைகளும் ஒன்றாக சேர்ந்து, குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும், ஒரு மொழி பேசுவோர், ஒரு தேசிய இனஉணர்வைப் பெறுவதில், இனமாக உருவாவதிலும் ஒரு தடைக்கல்லாக இருந்து வருகின்றது.

                ஒவ்வொரு வர்க்க சமுதாயமும் (ஆண்டான் - அடிமை: நிலப்பிரபு - பண்ணையடிமை முறை: முதலாளி - தொழிலாளி: தனியுடைமையற்ற சோசலிச சமுதாயம்) ஒரு குறிப்பிட்ட பொருளியல் உற்பத்தி முறையின் வெளிப்பாடேயாகும்.

                 எனவே அந்த குறிப்பிட்ட உற்பத்தியின் வளர்ச்சி முறையில் அல்லது தேங்கிய நிலையில், ஏற்படும் எந்த ஒரு தனித்தன்மையும், சமுதாய வாழ்க்கை முறையிலும் (உற்பத்தி உறவுகளிலும்) தனித்தன்மையை உருவாக்கவே செய்யும்.

                சாதியின் தோற்றத்திற்கும், நிலைப்புக்குமான மேற்கண்ட ஆறு காரணங்களில், ஆட்சியாளர்களின் (அந்நிய ஏகாதிபத்தியம், அவர்களின் உள்நாட்டு தரகர்கள், மற்றும் கிராமப்புற நிலப்பிரபுத்துவ ஆதிக்க சக்திகள்) சுரண்டல் ஆதிக்க நலனில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட மூலதனம், தொழில்நுட்பம், இயந்திரங்கள் மூலம் உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாய்,

1. சுய தேவை கிராமங்கள்.

2. குலத் தொழில்    ஆகியவை மட்டும் மங்கி மறைந்துள்ளன.

                ஆனால், அந்நிய சுரண்டல்காரர்களுக்கும் அவர்களின் உள்நாட்டு தரகர்களுக்கும், கிராமப்புற ஆதிக்கக்காரர்களுக்கும், சாதியின் தோற்றத்திற்கும், நிலைப்புக்குமான மேற்கண்ட ஆறு காரணங்களில் மீதி நான்கு காரணங்களையும் ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சமுதாயத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இதனால் இன்றும் சாதியின் நிலைப்புக்கான கீழ்காணும் நான்கு சமூகக் காரணங்கள் :-

1. சாதி முறை

2. சாதிக் குடியிருப்புகள்

3. அகமண முறை

4. சாதியப் பண்பாடு, உளவியல்

தொடர்கின்றன. அழிந்துவிட்ட சுயதேவை கிராமங்கள், குலத்தொழில் ஆகியவற்றின் இடத்தை பல்வேறு வழிகளில் சாதிக்கட்சிகள் நிரப்பிக்கொண்டன. கூடவே சாதியை பயன்படுத்தும் கட்சிகளாலும், ஆட்சியாளர்களாலும் இவைகள் பாதுகாக்கப்படுகின்றன.

                மேற்கண்ட தொடரும் இந்த நான்கு சமூகக் காரணங்களும் எவ்வாறு மேல் சாதி , கீழ் சாதிகளுக்குள் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு தடையாக உள்ளதோ, அதே போல் கீழ்சாதிகளுக்கிடையிலும் இதே காரணங்கள் சாதி மறுப்பு திருமணங்களுக்கு தடையாக உள்ளது. ஏன் கீழ்சாதிக்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதில்லை? என்று கேள்வி கேட்பவர்கள் மேற்கண்ட அனைத்து சாதி, சமூகங்களுக்கான காரணங்களை புரிந்து கொள்ளாதவர்களேயாவர்.

                எனவே சாதிக்கும், சாதிமோதலுக்குமான சமூகக் காரணங்களில் பெரும்பான்மையானவை தொடர்வதால், ஒரு அடிப்படை சமூக மாற்றமின்றி, சாதிக்கு முடிவுகட்டுவது என்பது ஒரு பகற்கனவே.

                மேற்கண்ட காரணங்களாலும், தனித்தன்மையான சிறுவீத விவசாய உற்பத்தி முறையாலும், கீழ்கண்ட குடியுரிமைக்கான நான்கு அம்சங்களும் கூட மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன.

1. விரும்பிய இடத்தில் வாழும் உரிமை

2. விரும்பிய தொழிலை செய்யும் உரிமை

3. விரும்பியவர்களை மணக்கும் உரிமை

4. அனைத்து பொது நடவடிக்கைகளிலும் சம உரிமை

இவைகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமல்ல, அனைத்து சாதி ஏழை மக்களுக்கும், பெண்களுக்கும் சேர்ந்தே மறுக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து மக்களுக்குமான அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.

சாதி ஒழிப்பிற்கான சரியான வழிமுறை எது?

                சாதி ஒழிப்பிற்கு நிற்போரும், இன ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் நிற்போரும், செயல் வீரர்களும், அனைத்து மக்களுக்குமான கீழ்கண்ட அடிப்படை பொருளாதார அரசியல் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் சாதி ஒழிப்பை சாதிக்க முடியாது.

1.விவசாயிகளுக்கு நட்டத்தையும், அறியாமையையும், மூடநம்பிக்கையையும், தன்னாணவத்தையும், காட்டுமிராண்டித் தனத்தையும் உருவாக்கும் சிறுவீத விவசாய உற்பத்தியை அகற்றி, இலாபத்தை உத்திரவாதப்படுத்தும், அறிவு வளர்ச்சியை கொடுக்கும் விவசாயிகளின் பெரும் கூட்டுறவு பண்னைகளாக்குவது. (நிர்பந்தம் இல்லாமல்)

2. ஒரு முறையான அடிப்படை சமூக மாற்றத்திற்கு, வளர்ச்சிக்கு எதிரான, அந்நிய பொருளாதார, அரசியல் ஆதிக்கமும், அவர்களின் கூட்டாளிகளான தரகு முதலாளித்துவ பொருளாதார அரசியல் ஆதிக்கமும், நிலப்பிரபுத்துவ பொருளாதார (சிறுவீத விவசாயம்) அரசியல் அதிக்கமும் அகற்றப்பட்டு, பாட்டாளிவர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக உற்பத்தி முறையும், ஆட்சி முறையும் உருவாக்கப்பட வேண்டும்.

3. இதற்கு இன ரீதியான, ஒரு இறையான்மை பெற்ற அரசு அல்லது பாட்டாளி வர்க்கத் தலைமையில், சமத்துவ அடிப்படையில் எப்பொழுதும் ஒரு தேர்தல் மூலம் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய பல்வேறு இனங்கள் இணைந்த ஒரு அரசுமுறை உருவாக்கப்பட வேண்டும்.

4. ஒரு அடிப்படை சமூக மாற்றத்தின் மூலம், உழைக்கும் மக்கள் அனைவரும் சுதந்திர தொழிலாளி வர்க்கமாக மாற்றப்பட்டு, சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்.

                இத்துடன் கூடவே மொழிவளர்ச்சி, பண்பாட்டு கலாச்சார வளர்ச்சி, வர்க்க, இன ரீதியிலான ஒத்த மன இயல்பு ஆகியவை திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும்.

                இவ்வாறு சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை, தன்னானவ காட்டுமிராண்டித்தனம் போன்றவற்றை ஒழிப்பது என்பது அனைத்து மக்களுக்குமான அடிப்படை சமூக மாற்றத்தின் மூலமே சாதிக்கமுடியும். ஏனெனில் இந்த “சமூக உறவுகள், அரசியல் உறவுகள் யாவும் பொருளியல் சூல்நிலையால் தீர்மானிக்கப்படுகின்றன”.     - எங்கல்ஸ்

                ஆனால், சில பகுத்தறிவு இயக்கங்களும், முற்போக்கு இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு பின்புதான் அடிப்படை சமூக மாற்றம் வரும் என, தலைகீழாக பேசுகின்றனர். இது அடிப்படை சமூக மாற்றத்தைத் தடுத்து நிறுத்தும் ஆளும் வர்க்கங்களுக்கே பயன்படும்.

                இவ்வாறு கூறுவதன் பொருள், அடிப்படை மாற்றம் நிகழும் வரை அன்றாட கொடுமைகளின் கொடூரத்தை குறைக்க (ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக) போராடக் கூடாது என்பதல்ல. அடிப்படை மாற்றத்திற்கான போராட்டத்திற்கு துணை செய்யும் விதத்தில், அது நடத்தப்பட வேண்டும் என்பதேயாகும். அதற்கான தத்துவ, அரசியல், திட்டம், அமைப்பு ஆகியவைகளைக் கொண்ட பாட்டாளி வர்ககக் கட்சியின் தலைமையில் இது நடத்தப்படவேண்டும் எனபதே.

                மக்களின் அன்றாட வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவுமான போராட்டங்களே போதும், என்ற கொள்கையுடைய அமைப்புகள், சாதிமுறையை பாதுகாக்கின்றவர்களேயாவர். அனைவருக்குமான அடிப்படை சமூக மாற்றத்தை விரும்பாதவர்களேயாவர். இத்தகையவர்கள் இறுதியில் தங்களின் சொந்த நிலைப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் மட்டுமே கட்சியை பயன்படுத்துபவர்களாக மாறுவது தான் நடக்கும்.

                மறுபுறம், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடாமல், வர்க்க அமைப்புகளில் பரந்துபட்ட மக்களை திரட்டி பாட்டாளிவர்க்க தலைமையில் மக்கள் அதிகாரத்தை நிறுவும் நோக்கமின்றியும், அதைப்பாதுகாக்க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அடிப்படை மாற்றத்தை உருவாக்குவதற்கான நோக்கமின்றியும் வெறுமனே நடத்தும் ஆயுதப்போராட்டத்திற்கு தங்களை அற்பணிக்க மக்கள் முன்வர மாட்டார்கள். அன்றாடபோராட்டமும் இன்றி, அடிப்படை மாற்றத்திற்கான போராட்டமும் இன்றி, வெறும் பிரச்சாரத்துடன் கட்டுப்படுத்திக் கொள்வது, மக்களின் போராடும் ஆற்றலைப் பறிக்கும் கலைப்புவாதமாகும்.

சாதிப்பிரச்சினைக்கு தனியாக தீர்வு காண முடியுமா?

                தொழில்துறைப் பிரச்சினை, விவசாயப் பிரச்சினை, இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை போன்றவற்றில் எந்த ஒன்றையும் தனியாக (சுதந்திர உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் இருந்து) பிரித்து தீர்வு காண முடியாது. வரலாற்றில் அது போன்று நிகழ்ந்ததும் கிடையாது. வரலாற்று வளர்ச்சி விதி அதை ஏற்பதும் கிடையாது.

                எனவே, அனைத்து மக்களுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய, அடிப்படை சமூக மாற்றத்திற்கான கொள்கைகள், நடைமுறைகள், அமைப்புகளைக் கொண்ட இயக்கங்களோடு இணைந்து போராடும் போதுதான்; போராடித்தான்

1.            சாதி குடியிருப்புகளுக்கும்

2.            அகமணமுறைக்கும் (சாதிக்குள் திருமணம்)

3.            சாதி, உளவியல் பண்பாட்டிற்கும்

4.            சாதிமுறைக்கும்

                முடிவுகட்ட முடியும். சாதி ஒழிப்பிற்கு வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது.

                பாட்டாளி வர்க்க தலைமையிலான ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் மட்டுமே சாதிமுறைக்கு தீர்வு காண்பதுடன், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கும், சமுதாயத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கும் உள்ள தடைகள் அனைத்தையும் உடைத்தெறிய வேண்டும். இது ஒரு வரலாற்று வகைப்பட்ட சமூக விஞ்ஞான கோட்பாடு ஆகும்.

                ஆனால், இன்று தருமபுரி சாதிப்பிரச்சினையை பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகளும், தாழ்த்தப்பட்ட (தலித்) சாதிக் கட்சிகளும், சாதி ஒழிப்பிற்கான, அடிப்படை சமூக மாற்றத்திற்கான கொள்கைகளோடு, திட்டத்தோடு இணைத்து நடத்த தயாரில்லை.

                மாறாக சாதிய சமுதாயத்தை ஒரு வர்க்க சமுதாயமாக மாற்றியமைக்க, அடுத்தகட்ட சமூக வளர்ச்சியை உருவாக்க, நாட்டை சுதந்திர தொழில் மயமாக்கி, விவசாயத்தை நவீன பண்ணைகளாக மாற்றி, அனைத்து உழைக்கும் மக்களையும் தொழிலாளி வர்க்கமாக உயர்த்தி, சாதி சமூகத்திற்கு முடிவுகட்ட போராடும், பாட்டாளி வர்க்க கட்சியை நிராகரிக்கவும், தனிமைப்படுத்தவுமே நயவஞ்சகமாக சாதிக்கட்சிகள் முயற்சிக்கின்றன.

                எனவே உழைக்கும் மக்கள் சாதிக்கட்சிகளை நிராகரித்து,அடிப்படை சமூக மாற்றத்திற்கான, அனைத்து உழைக்கும் மக்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான, முன்னேற்றத்திற்கான, சாதி சமூக ஒழிப்பிற்கான பாட்டாளி வர்க்க கட்சியில் அதன் தலைமையிலான, விவசாய சங்கம், தொழிற்சங்கம் ஆகியவற்றில் இணைந்து, ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், கிராமப்புற நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும், அவர்களைப் பாதுகாக்கும் மத்திய, மாநில அரசுகளையும் தூக்கியெறிந்து, ஒரு அடிப்படை சமூக மாற்றத்தின் மூலம், அனைத்து மக்களின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், இனங்களின் விடுதலைக்கும், சாதி சமூகத்திற்கும் முடிவுகட்டும் படி பரந்துபட்ட உழைக்கும் மக்களை அறைகூவி அழைக்கின்றோம்.

முழக்கங்கள்

«             இளவரசன், நாகராசன் ஆகியோரின் தற்கொலைக்கு சாதி கட்சிகளும், சாதி, சமூக அமைப்பும் அதைப் பாதுகாக்கும் ஆட்சியாளர்களுமே காரணம்!

«             சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிப்போம் ! பாதுகாப்போம் ! அதை தடுக்கின்ற , பிரிக்கின்ற அதை வைத்து பேரம் பேசி பணம் பறிக்கின்ற சாதி கட்சிகளை , சாதி ஆதிக்கக் கும்பலை முறியடிப்போம் !

«             சாதி மறுப்புத் திருமணங்களால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியாது. அனைத்து மக்களுக்குமான அடிப்படை சமூக மாற்றமே சாதி முறைக்கு முடிவு கட்ட ஒரே வழி!

«             விவசாயத்தை விவசாயிகளின் பெரும் கூட்டுறவு பண்ணைகளாக்குவது, நாட்டை தொழில் மயமாக்குவது , அனைத்து சாதிக் குடியிருப்புகளையும் அகற்றி அனைவருக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய பொது குடியிருப்புகளை (தொழிற்சாலை குடியிருப்புகள், பண்ணைக் குடியிருப்புகள்) உருவாக்குவது, சாதி பண்பாடு, கலாச்சாரம் , உளவியலை ஒழித்து ஒரு ஜனநாயக பண்பாட்டை உருவாக்க போராடுவது!

«             அனைவருக்குமான அடிப்படை சமூக மாற்றத்திற்கான திட்டமில்லாத, செயல் இல்லாத சாதிக்கட்சிகள், சாதியின் பாதுகாவலர்களே! அனைத்து உழைக்கும் மக்களின் எதிரிகளே!

«             சாதி முறை , சாதி சமுதாய முறை மாறக்கூடாது என நினைப்பவர்களும் , சாதிக்கட்சிகளும் சமுதாயத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்ப்பவர்களே! அரை காட்டுமிராண்டிகளாய் வாழ நினைப்பவர்களே!

«             அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்புக்கான திட்டம் மூலம் சாதி முறைக்கும், சாதி சலுகைகளுக்கும் முடிவு கட்டுவோம்!

«             ஒரு அடிப்படை சமூக மாற்றத்தின் மூலம் (ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம் , நிலப்பிரபுத்துவ பொருளாதாரம், அரசியலுக்கு முடிவு கட்டி) சாதி பிரிவினையை ஒழித்து, உழைக்கும் மக்களை வர்க்கங்களாக மாற்றியமைக்க மறுக்கும் மத்திய , மாநில அரசுகளை தூக்கியெறிவோம்!

-    விவசாய சங்க உருவாக்க குழு, தமிழ்நாடு

தொடர்புக்கு : 9788531556, 7639421063, 9003640771, 9345161861      email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It