1731 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் நாடு ஸ்பெயின் நாட்டிற்கு அடிமைப்பட்டு, ஸ்பெயினுக்கு ஆண்டு தோறும் தேவையான அடிமைகளையும் 500 டன் உணவுப் பொருட்களையும் அனுப்ப வேண்டும் என்ற ஒப்பந்தம் அமுலில் இருந்த காலம் - ஜமைக்காவிலிருந்து பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று ராபர்ட் ஜென்க்கின்ஸ் என்ற மாலுமியின் தலைமையில் இங்கிலாந்தை நோக்கி பயணம் செய்கிறது.

கப்பலை வழிமறித்த ஸ்பெயின் நாட்டுக் கப்பல் பிரிட்டன் கப்பலை சோதனை என்ற பெயரில் துன்பப்படுத்துகிறது. மனம் பொறுக்காத மாலுமி கோபத்தில் முணுமுணுக்க ஆத்திரமடைந்த ஸ்பெயின் நாட்டு வீரர்கள் ராபர்ட் ஜென்க்கின்ஸின் ஒரு காதினை அறுத்து எறிந்து விட்டுக்குத் திரும்பினர்.

பிரிட்டன் நாட்டுக் கப்பல் கேப்டன் தனது அறுபட்ட காதினை தேடி எடுத்து ஒரு கண்ணாடி சீசாவிற்குள் அடைத்துக்கொண்டு நாடு திரும்புகிறார். தனது நாட்டு மாலுமி காது அறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட செய்தி பரவ, நாட்டு மக்கள் கொந்தளிக்கிறார்கள், வெகுண்டெழுகிறது பிரிட்டன். பிரிட்டன் நாட்டின் காமன்ஸ் அவை கூடுகிறது. ஜென்க்கின்ஸின் ஒரு காதை அறுத்தது மட்டுமில்லாமல் “இதுதான் உங்கள் நாட்டு மன்னர் ஜார்ஜ்க்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்பதையும் போய் சொல்” என்று சொல்லி விரட்டிய கதையினையும் "இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதியாக இல்லை. இந்த நாட்டின் மக்களை, இந்த நாட்டின் காமன்ஸ் அவையை, பிரிட்டன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் இழிவுபடுத்தியதாக கருதுகிறேன்" என்று தான் அத்தனை காலம் பாதுகாத்து கண்ணாடி சீசாவில் அடைத்து வைத்து கொண்டு வந்திருந்த தனது அறுபட்ட காதுடன் சொல்லி முடிக்கிறார் ஜென்க்கின்ஸ்.

வெகுண்டெழுந்த பிரிட்டன் அரசாங்கம் மிகச்சரியாக 1739ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம்தேதி தனது ஒற்றை குடிமகனின் காதுக்காக ஸ்பெயின் நாட்டின் மீது துவங்கிய யுத்தம் “WAR OF JENKINS EAR” என்ற பெயரில் ஒன்பது ஆண்டு காலம் நடந்தது.

இன்றைக்கு, பொலிவிய நாட்டின் அதிபர் விமானத்தில் அமெரிக்காவின் தேசீய பாதுகாப்புப் படையின் முன்னாள் தொழில் நுட்ப உதவியாளர் எட்வர்டு ஜோசப் ஸ்னோடன் பயணம் செய்வதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியில் பறக்கத் தடை விதித்தனர். போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்ட பொலிவிய அதிபரின் விமானத்திற்கு பெட்ரோல் நிரப்ப மறுக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் கட்டாயமாக தரையிறக்கப்பட்டு 10 மணி நேரம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த அர்ஜென்டைனா, வெனிசூலா, பெரு, சூரினாம் ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகள், தாங்கள் ஒன்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் காலனி நாடுகள் இல்லை எனவும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் சில அமெரிக்காவின் காலனியாக செயல்படுகின்றன என்று தமது கடும் கண்டணத்தைத் தெரிவித்தன. மேலும் அந்நாட்டின் தூதரகங்களை மூடப்போவதாக அறிவித்தன கியூபா உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி நாடுகளும் தமது கண்டனத்தினை தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையில் புகார் செய்த பின்னர் லத்தின் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமையினைக் கண்டு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தமது வருத்தத்தினை தெரிவித்துக் கொண்டுள்ளன.

ஆனால், “இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்று” பாரதிதாசன் வரிகளை பெருமையாக சொல்லிக் கொள்கின்ற நாம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்க நாட்டின் விருந்தாளியாக அரசு முறைப் பயணமாக சென்ற நமது முன்னாள் குடியரசுத் தலைவரை - நாட்டின் முதல் குடிமகனை - அரை நிர்வாணமாக்கி சோதனை செய்த அமெரிக்க அரசிடம் மான ரோசம் இழந்து இன்றைக்கும் அடிவருடிகளாய் அவர்களின் ஏகாதிபத்திய பணிகளுக்கு ஏவல் ஆளாய்

'மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்' என்று பாடப் புத்தகங்களில் மட்டும் படித்துக்கொண்டு அடங்கிக் கிடக்கிறோம். 

Pin It