15.6.2013 - சனக்கிழமை அன்று செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தருமபுரியில் கடகத்தூரில் துரைசிங்கவேல், பாரதி (எ) ராகினி என்ற இரண்டு நக்சலைட்டுகள் கைது என்ற செய்தி பரப்பரப்பாக வெளியிடப்பட்டது. இவர்கள் இருவரும் ஊத்தங்கரை நிகழ்வை ஒட்டி போடப்பட்ட பொடா வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என்றும், இவர்களிடம் மாவோயிஸ்டு ஆவணங்கள், துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் செய்திகள் வந்தன. தொலைக்காட்சியில் அதுவும், சன் நியூஸ் தொலைகாட்சியில் காட்டுக்குள் சிறப்பு காவல் படையினர் வலைவீசி தேடி, மேற்கூறிய இரு தோழர்களைக் கைது செய்தது போல், திரைக்கதை அமைத்து காட்சிகளைக் காண்பித்துள்ளனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

அரசு பயங்கரவாதமும் துணை போகும் ஊடகங்களும்

தோழர் துரைசிங்கவேல் மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் தலைவர், தோழர் ராகினி மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் தலைமையில் செயல்படும் மக்கள் சனநாயக பெண்கள் முன்னணியின் அமைப்பாளர். தோழர் ராகினி தோழர் துரைசிங்கவேலின் துணைவி ஆவார். இவர்கள் இருவரும் சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் எண். 12, கே.எம்.கே.வில்லேஜ், திருநாகேஸ்வரம் காலனி என்ற முகவரியில் வசித்து வருகின்றனர்.

கடந்த 13.6.2013 அன்று நள்ளிரவு 11 மணிக்கு இவர்கள் வீட்டிற்கு வந்த Q-பிரிவு போலீசாரும் தருமபுரி மாவட்ட நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசாரும் சட்டவிரோதமாக இவர்களைக் கைது செய்து தருமபுரியில் சட்டவிரோத காவலில் வைத்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியும், தோழர்களை அவமானமாக பேசியும் சித்ரவதை செய்துள்ளனர். குறிப்பாக தருமபுரி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத் தோழர்களைக் தரக்குறைவாக பேசியுள்ளார்.

உண்மை சம்பவம் மேற்கூறியவாறு இருக்க, அப்பட்டமாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், தோழர்களை கடகத்தூரில் கைது செய்ததாக கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றனர். அதற்கு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன.

தோழர் துரைசிங்கவேல் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து வருபவர். ஊத்தங்கரை நிகழ்வை ஒட்டி போடப்பட்ட பொடா வழக்கில் இவர் உள்ளார். சென்ற வாய்தா வரை தொடர்ந்து (1.6.2013 அன்று பொடா நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக நேரடியாக ஆஜரானார்) நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

இவரைத்தான் நீண்டகாலமாக பொடா வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று ஊடகங்கள் அனைத்தும் உளவு பிரிவின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை வாந்தி எடுக்கின்றன. இதுதான் உண்மையை நடுநிலையாக உலகிற்கு சொல்லும் லட்சணமா? ஒரு வழக்கில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் ஒருவரை அதே வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்ற உளவுத்துறையும் ஊடகமும் பிரச்சாரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? அவர் மீதான அவமதிப்பு ஆகாதா? இதற்கு சனநாயக சக்திகளின், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவோம் என்போரின் பதில் என்ன?

மேற்கூறிய பொடா வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பாரதி என்பவர் உள்ளார். தோழர் துரைசிங்கவேல் பொடா வழக்கில் உள்ளார் என்பதைக் காரணம் காட்டி, அவர் துணைவியார் ராகினியை, பாரதி என்ற பெயரில் பொடா வழக்கில் பொய்யாக இணைக்கவே, தோழர் ராகினியை 13.6.2011 அன்று நள்ளிரவில் சட்டவிரோதமாக கைது செய்தனர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு 9.11.2011 அன்று தோழர் ராகினி உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன் கணவர் துரைசிங்கவேல் பொடா வழக்கில் இருப்பதை காரணமாக்கி தன்னையும் பொடா வழக்கில் இணைக்க Q-பிரிவு போலீசார் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்காக தன்னைத் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையொட்டி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் (16.4.2012-Crl-Of-No. 9141 of 2012) காவல்துறை சந்தேகத்தின் பேரில் இவரை விசாரிக்க எண்ணினால், அது முழுமையாக சட்டப்படிதான் செய்யவேண்டும் என்றும், எந்தவித துன்புறுத்தலும் செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஆஜரான Q பிரிவு அதிகாரி 2012 வரை ராகினி மேல் எந்த வழக்கும் இல்லை என்று பதிவு செய்தார்.

இத்தீர்ப்பிற்கு பின் அமைதியாக இருந்த Q-பிரிவு மற்றும் நக்சல் ஒழிப்பு பிரிவு போலிசார், தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தனது பூட்ஸ் கால்களால் மிதித்து, உயர்நீதிமன்ற ஆணையைக் காப்பாற்றும் கடமை தனக்கிருப்பதை அதிகார திமிருடன் மறுத்து, தோழர் ராகினியை சட்டவிரோதமாக (ஒரு பெண்ணை மாலை 6மணிக்கு மேல் கைது செய்யக் கூடாது என்ற சட்டத்தை அவமதித்து) நள்ளிரவு 11 மணிக்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை, அதுவும் நைட்டியுடன் இருந்த தோழர் ராகினியை ஆடையை மாற்றுவதற்கு கூட அவகாசம் அளிக்காமல் அராஜகமாக கைது செய்து சென்றனர். அவருக்கு மாற்றுத் துணி அணிய வாய்ப்பளிக்காமல் நைட்டியுடனே அவரை 13-ம் தேதி இரவு முழுவதும் மற்றும் 14-ம் தேதி பகல் இரவு முழுக்க சட்ட விரோதமாக வைத்து விசாரித்து (24-மணி நேரத்திற்குள் கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி) 15.6.2013 சனிக்கிழமை அதிகாலை 2-30 மணிக்கு தருமபுரி J.M(1) நடுவர் முன் ஆஜர்படுத்தினர். தோழர்கள் நீதிபதியிடம் நடந்த உண்மை அனைத்தையும் பதிவு செய்தனர். பின்பு தோழர்களை சேலம் சிறையில் அடைத்துள்ளனர். கடைசியாக இவர்கள் மீது 17(1) A (C.L.A) 124A, 353 சட்டப்பிரிவின் கீழ் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

ராகினியை சட்டவிரோத காவலில் வைத்திருக்கும்போதும் சிறையில் அடைத்த பிறகும் நீதான் பாரதி என்றும், பாரதி என்று கையெழுத்திடவேண்டும் என்றும் தொடர்ந்து சித்தரவதை செய்து வருகின்றனர்.

மேற்கூறிய உண்மைக்கு மாறாக பெரும்பாலான ஊடகங்கள் உளவுத்துறையின் கருத்தை அப்படியே வெளியிடுகின்றனர். குறைந்தபட்சம் காவல் துறையின் செய்தி என்ற கூட சொல்லாமல் தாங்களே போய் நேரில் பார்த்தது போல் கண்ணும், காதும் வைத்து பொய்யை, அதுவும் அரசு பயங்கரவாதத்தை அரங்கேற்ற துணை போகின்றனர்.

அரசு பயங்கரவாதத்திற்கான அடிப்படை

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை, உழைக்கும் மக்களின் வாழ்க்கை அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, குறைந்த கூலி, வேலை உத்தரவாதமின்மை, நிரந்தர வேலையின்மை, ஒப்பந்த தொழிலாளர் சிக்கல், கல்வி, மருத்துவம் தனியார் மயமாக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இவை கிட்டாமல் போகும் நிலை, பழங்குடிகள், உழவர்கள், மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் நிலை போன்றவற்றால் உழைக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதனால் உழைக்கும் மக்களின் அரசுக்கெதிரான கோபமும், போராட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாய் அரசானது மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தும் இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் ஏன்? போராடும் மக்கள் அனைவரையும் ஒடுக்க, பல்வேறு கருப்பு சட்டங்களைக் கொண்டு வருவதோடு, அரசு பயங்கரவாதத்தை நாளுக்கு நாள் கட்டவிழ்த்து விடுகிறது.

முஸ்லீம் தீவிராவாதம், மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட் வேட்டை என்று பூச்சாண்டி காட்டி அனைத்து மக்கள் இயக்கங்கள், சனநாயக இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அதனடிப்படையில்தான் குன்றத்தூரில் கைது செய்த தோழர்களை தருமபுரி கடகத்தூரில் கைது செய்ததாக கயிறு திரித்துள்ளதோடு மாவோயிஸ்டு அரசியல் வழியிலிருந்து வேறுபட்டு மக்கள் திரள் வழியை முன்னிறுத்தி மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கும் ம.ச.கு.கட்சியின் தலைவர் துரைசிங்கவேலிடமும் அவர் துணைவியார் ராகினியிடமும் மாவோயிஸ்டு ஆவணத்தை, துண்டு பிரசுரத்தைக் கைப்பற்றியதாக அண்ட புளுகு, ஆகாசப் புளுகு அள்ளி விட்டுள்ளனர். இவையெல்லாம் நக்சல் பூச்சாண்டி காட்டி மக்கள் இயக்கங்களை ஒடுக்குவதற்குத்தான்.

உழைக்கும் மக்கள் விடுதலைக்காக (தொழிலாளர், உழவர், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெண்கள், மீனவர்கள், மத சிறுபான்மையினர், பழங்குடிகள், தலித்துகள்) அவர்களுக்கான அதிகாரம் படைக்க, சட்டமன்றம், பாராளுமன்றம் தேர்தல் உள்ளிட்ட அனைத்து சட்ட வாய்ப்புகளை ம.ச.கு. கட்சி பயன்படுத்தி மக்கள் போராட்டங்களை கட்டியமைத்து, ஓட்டும், வேட்டும் ஆயுதமல்ல, மக்களே ஆயுதம் என்று மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்து, மக்கள் விடுதலைக்காக, சனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் ம.ச.கு. கட்சியை மாவோயிஸ்டு, நக்சலைட்டு பூச்சாண்டி காட்டி அழித்து விட முடியாது.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்!

அனைத்து ஊடகங்களும் அரசின், காவல் துறையின் செய்திகளை அப்படியே உண்மையை போல் காட்டுவதை கைவிட்டு, அரசின், காவல் துறையின் கருத்துக்கு செவி சாய்ப்பது போல், எங்களைப் போன்ற மக்களுக்காகப் போராடும் மக்கள் இயக்கங்களின் கருத்துகளுக்கும் செவி சாய்க்க வேண்டும். இல்லையெனில், நம் நாட்டில் சனநாயகம் என்பதே இல்லாமல் போய்விடும். உண்மையை மக்கள் முன் வைப்பதுதான் பத்திரிகை தர்மம். அத்தகைய பத்திரிகை தர்மத்தைக் காக்கும்படி அனைத்து ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம். அதுவும் ஒரு பெண்ணின் (ஜெயலலிதா) ஆட்சியில் ராகினி என்ற பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கெதிராக பத்திரிகைகள் குரல் கொடுக்க வேண்டுமென்றும் வெளிப்படையான வேண்டுகோள் விடுக்கிறோம்.

பெண்ணின் (ராகினியின்) மீதான அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்

ராகினி என்பவரை பாரதி என்று ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்யும் நக்சலைட் ஒழிப்பு பிரிவு, Q-பிரிவுக்கெதிராய் அனைத்து சனநாயக சக்திகளும் பெண்கள் இயக்கங்களும், பெண் உரிமைக்காக போராடுபவர்களும் உடனடியாக ஒன்று திரளும்படி மக்கள் சனநாயக பெண்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழக மக்களே! பெண்கள் இயக்கங்களே! சனநாயக சக்திகளே!

¨ தோழர் ராகினி மீது பாரதி என்ற பெயரில் பொடா வழக்கைப் போடும் முயற்சியை முறியடிப்போம்!

¨ அரசு பயங்கர வாதத்திற்கெதிராய் ஓரணியில் திரள்வோம்! சனநாயக உரிமைக்காக போராடுவோம்!

ஜெயலலிதா அரசே!

¨ பெண்ணின் ஆட்சியில் பெண்ணின் (ராகினியின்) மீதே அடக்குமுறையா!

¨ தோழர் ராகினி மீது பாரதி என்ற பெயரில் பொடா வழக்கை போடும் முயற்சியை உடனே கைவிடு!

¨ தோழர் ராகினி, துரைசிங்கவேல் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் வாங்கு!

***

மக்கள் சனநாயக பெண்கள் முன்னணி

மக்கள் சனநாயக குடியரசு கட்சி

தொடர்புக்கு

ஆனந்தி : 9003207032

பழனி : 91762 64717

Pin It