ஈழ ஆதரவுக்கான மாணவர் போராட்டம் தமிழ்நாட்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புதிதாய் களத்திற்கு வந்த ஆண் - பெண் மாணவச் செல்வங்கள் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினர். அதே நேரத்தில் இம்மாணவர்களை புகைப்படங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் தவறான முறையில் அடையாளப்படுத்துகிற க்யூ பிரான்ச் வேலையை சில இயக்கத்தவர் மேற்கொண்டனர். குறிப்பிட்ட மாணவர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தியும், அவர்கள் சார்ந்த இயக்கங்களை தீவிரவாத அமைப்புகள் என்று இழிவுபடுத்தியும் செய்திகளைப்  பரப்பினர். ஒரு மூன்றாம் தர, அரசுக்கு அடியாள் வேலை செய்கிற இந்நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் யார்?

மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் இறங்கும்போதுதான் சமூக விஞ்ஞானம் செல்வாக்கு பெறும். சமூக நிலைமைகள், நட்பு சக்திகள் - எதிரிகள், போராட்ட வடிவம் என செயல்களில் மறுமலர்ச்சி உருவாகும். தற்போதைய ஈழ ஆதரவு மாணவர் போராட்டமும் இதன் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

                மாணவர்களின் முழக்கம் எதிரியை (இந்தியாவை) சரியாக அடையாளப்படுத்தியது. தி.மு.க. அரசியல் நெருக்கடியை சந்தித்து மைய அரசில் இருந்து விலகியது.

                மாணவர்கள் எதிரியை அடையாளம் கண்டதுபோல் நண்பர்களையும் அடையாளம் கண்டிருக்க வேண்டும். ஈழ விடுதலையை, அதன் சிக்கலை மாணவர்கள் மட்டுமே தீர்த்துவிட முடியாது. ஆதரவான அனைத்து சக்திகளோடும் ஒருங்கிணைய வேண்டும். ஒருங்கிணைவதற்கான வாய்ப்பும் இருந்தது. இப்படியொரு ஒற்றுமை உருவாகி விடக் கூடாதென தீர்மானகரமாக இருந்தவர்கள் கிளப்பிய பீதிதான் கம்யூனிஸ எதிர்ப்பு.

                ஆரம்பத்தில் லயோலா கல்லூரி மாணவர்களிடையே பற்ற வைக்கப்பட்ட‌ இந்த கம்யூனிச எதிர்ப்புத் தீ, இன்று தமிழகம் முழுவதற்கும் பரவலாக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையை மேற்கொண்ட அனைவருக்கும் ஒரே நோக்கம் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இக்கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கியமான சிலரின் நோக்கம் போராட்டத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும்.

                இவர்களின் சமூக அக்கறை எத்தகையது என்பதற்கு ஒரு உண்மையை முன் வைக்கிறோம். இவர்கள் அனைவரும் டிசம்பர் 23 அன்று சில இடங்களில் ஒருங்கிணைவார்கள். அப்படி கூடுகிற இடம் விழாக்கோலம் கொண்டிருக்கும். உணவு – உபசரிப்பு – உற்சாகம் - ஆட்டம், பாட்டமென கூட்டம் களை கட்டும். இவர்கள் அனைவரும் ஒருவரின் பெயரை சொல்லி சபிப்பர். அப்பெயருக்குரியவர் கொல்லப்பட்டதை கூறி மகிழ்ச்சி கூத்தாடுவர். அம்மனிதர் செத்த பிறகுதான் இவ்வுலகம் சுபிட்சமடைந்தது போல் ஆனந்த தாண்டவமாடுவர்.

                இவர்களின் வெறுப்புக்குரியவர் திரு. பெரியா; இரசியாவைச் சார்ந்தவர். தோழர் ஸ்டாலின் காலம் வரைக்கும் NKVD (Narodnyy Komissariat Vnutrennikh Del - இரசிய மொழி) எனும் உள்துறைக்கான மக்கள் அமைச்சகத்தின் (Peoples Commissariat For internal affairs) அதிகாரியாக இருந்தவர். ஸ்டாலின் இறப்புக்குப் பிறகு பதவிக்கு வந்த குருச்சேவ் இவரை சதி மூலம் கைது செய்தார். வீண் பழிகள் சுமத்தி 1953 டிசம்பர் 23ல் சுட்டுக் கொன்றார். திரு. பெரியா கொல்லப்பட்டதைத்தான் இவர்கள் இப்படி கொண்டாடுகின்றார்கள். இவரை ஒரு கொடுங்கோலனாக சித்தரித்து அந்நாளை இவர்கள் கொண்டாடும்போது நம் எல்லோருக்கும் இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. இவர்கள் ஏன் ஆயிரக்கணக்கான பஞ்சாப் மக்களை கொலை செய்த மிருகம் ஜெனரல் டயரைக் கொன்ற நாளைக் கொண்டாடவில்லை? இரசிய மக்களை வதைத்ததாக சொல்லிக் கொண்டு பெரியாவின் சாவைக் கொண்டாடுகிறவர்கள், ஏன் தமிழ்மக்களை, பஞ்சாப் முதலான நம் சகோதர தேசிய இன மக்களை வதைத்தவர்களின் சாவைக் கொண்டாடவில்லை?

                ஏனென்றால், இவர்களின் உணர்வு மக்களின் மீதான பாசத்தில் விளைந்ததல்ல. மாறாக, கம்யூனிஸ்டுகளின் மீதான வெறுப்பில் விளைந்தது. இவர்களுக்கு பெரியாவின் சாவு ஒரு குறியீடு. நாயை வேட்டைக்கு பயிற்றுவிப்பதற்கு, இறந்த கோழி முதலான உணவுகளை கட்டி வைத்து ஏவுவது போல், கம்யூனிச எதிர்ப்புக்காக திரு.பெரியாவின் சாவை கொண்டாட பழக்கியுள்ளனர். இது ஒரு வகை மூளைச் சலவை.

                ஏன் இவர்கள் கம்யூனிச எதிர்ப்புக்கு லெனினையோ, ஸ்டாலினையோ பயன்படுத்தவில்லை? நமது மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தலைவர்களை இவர்கள் இதுபோல் தவறாகப் பயன்படுத்தினால் மக்கள் சரியான பாடம் கற்பிப்பர். அதேபோல் இவர்கள் திரு. பெரியாவின் சாவை வெளிப்படையாகவும் கொண்டாடுவதில்லை. இவர்கள் சரியென நம்புவதை ஏன் வெளிப்படையாக்கி மக்கள் மயமாக்குவதில்லை?

                உண்மையல்லாத ஒன்றை தாங்களே உண்மையென ஏற்றுக் கொள்வதற்காக தங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஒருவகையான மனப்பயிற்சிதான் திரு. பெரியாவின் சாவைக் கொண்டாடுவது. அதாவது கம்யூனிச எதிர்ப்பு பணிக்கு தங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் ஒரு வகையான மன நோயாளிகள்தாம் இவர்கள். இவர்கள்தான் தமிழகத்தில் இருபெரும் ஈழ ஆதரவு இயக்கங்களை உருவாக்குவதில் முன்னின்றவர்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம்தான் தற்போது மாணவர்களிடையே கம்யூனிச பீதியைக் கிளப்பியுள்ளது.

                இவர்களின் கம்யூனிச எதிர்ப்பையும், அதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலையும் நாம் இன்னொரு இடத்தில் பார்ப்போம். இப்போது இவர்களால் ஈழப் போராட்டம் எதிர்கொள்ளும் சிக்கலைப் பார்ப்போம். இவர்கள் ஈழப் பிரச்சினையில் இரண்டு, மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளனர். ஆரம்பத்தில் சீனஎதிர்ப்பு, அடுத்து அய்-நா எதிர்ப்பு, தற்போது அமெரிக்க எதிர்ப்பு என தொடர்ச்சியாக குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.

                முதலில் ஈழத்துக்கும் மேற்கூறிய நாடுகளுக்குமான உறவைப் பார்ப்போம்.

இலங்கைக்காக இந்தியா, அமெரிக்கா, சீனா சண்டையிட்டுக் கொள்கின்றனவா?

                வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளை (சந்தைகளை) பிடிப்பதற்காக ஆரம்பத்தில் போரிட்டுக் கொண்டன. அதன் விளைவாகவே இரண்டு உலகப் போர்கள் நடந்தன. இரண்டு போர்களில் இருந்தும் வளர்ச்சியடைந்த நாடுகள் பாடம் கற்றுக் கொண்டுள்ளன. சந்தைகளுக்காக போரிட்டுக் கொள்வதற்கு மாறாக சந்தையை தங்களுக்கிடையில் பங்கிட்டுக் கொள்ள பழகியுள்ளன.

                வளர்ச்சியடைந்த நாடுகள் ஒரு பின்தங்கிய நாட்டை பங்கிட்டுக் கொள்வதற்கு ஒருமுறையைப் பின்பற்றுகின்றன. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின்தங்கிய நாடுகளின் மீது ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியடைந்த (விரிவாதிக்க) நாட்டுக்கு கூடுதலான முதன்மை அதிகாரமுண்டு என்பதே வல்லாதிக்க நாடுகள் பின்பற்றும் முறையாகும். அதாவது இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றின் மீது இந்தியாவுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற இன்னபிற நாடுகள் மீது சீனாவுக்கும் இருப்பது போலானதாகும். இவ்வாறு முன்னுரிமை உள்ள நாடுகள் தங்களின் முதன்மை பாத்திரத்துக்கு பங்கம் வராமல் பிற நாடுகளின் (அமெரிக்கா, இரசியா, இங்கிலாந்து முதலான) தலையீட்டை ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறான முறைப்படுத்தல்களை ஜி-8 நாடுகள், ப்ரிக்ஸ் நாடுகள், சார்க் நாடுகள், தெற்காசிய கூட்டமைப்பு, காமன்வெல்த் நாடுகள் என பல அமைப்பு வடிவங்களில் செய்து கொள்கின்றன.

                ஆக விரிவாதிக்க – ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே நாடு (சந்தை) பிடிப்பதில் போட்டிகள் இருந்தாலும், அவை மோதல்களாக இல்லை. இலங்கையை பங்கிட்டுக் கொள்வதிலும் இந்தியா, சீனா, அமெரிக்கா முதலான நாடுகளுக்கு இடையே போட்டிகள் உண்டு; ஆனால் மோதல்கள் இல்லை. எனவே இலங்கைக்குள் சீனா புகுந்துவிட்டது, அமெரிக்கா காலூன்றிவிட்டது, இந்தியா ஏமாந்து விட்டது என்பதெல்லாம் பிரச்சினையை திசைத் திருப்புகிற செயல்கள் ஆகும். இதைத்தான் நமது கம்யூனிச எதிர்ப்பாளர்களும், கம்ப்யூட்டர் புள்ளிவிபர சோதிடர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் நிலைமையும் - இந்தியாவின் மேலாதிக்கமும்

                இலங்கையின் மீது இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உட்பட இன்னபிற நாடுகள் அரசியல் - பொருளாதார ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனாலும் இந்தியாதான் இலங்கையின் மீது மேலாண்மை அதிகாரம் பெற்றுள்ளது. அதற்கான விபரத்தைப் பார்ப்போம்.

                இலங்கையில் இன முரண்பாடு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. ஆனால் அதை இனப்பகையாக மாற்றி அதன் மூலம் மேலாண்மை செலுத்தும் வேலையை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தது. பிரிட்டிஷாரின் காலத்தில்தான் சிங்கள இன உணர்வு, பேரினவாதமாக - இனவெறியாக மாறுவதற்கான அடித்தளம் நிறுவப்பட்டது. அதற்காக பாலி மொழியில் இருந்த பவுத்த நூல்களை சிங்களத்தில் மொழி பெயர்ப்பதும், அந்நூல்களில் தமிழர் விரோத கருத்துக்களை புகுத்துவதும் திட்டமிட்டு செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறும் போது இருவேறு தேசிய இனங்களிடமும் தனித்தனியாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்காமல் தங்களால் பேரினவாதிகளாக வளர்க்கப்பட்ட சிங்களவர்களிடமே அதிகாரத்தை ஒப்படைத்தனர். அதன் மூலம் இனப்பகை நீடிக்கும்படி பார்த்துக் கொண்டனர்.

                பிரிட்டிஷார் போன பிறகு அதே வேலையை இந்தியா செய்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே டாடா உட்பட இந்தியப் பெருமுதலாளிகளின் செல்வாக்கு இலங்கையில் இருந்துவந்தது; பின்னர் இது அதிகரித்தது. இப்படி செல்வாக்கை அதிகரித்து ஆதிக்கம் செய்வதற்கான உரிமையை இந்தியாவின் முதல் பிரதமர் நேரு வெளிப்படையாகவே அறிவித்தார். “இலங்கை, நேபாளம் உட்பட இந்தியாவின் அருகாமையில் இருக்கும் சிறிய நாடுகள் பெயரளவுக்கு சுதந்திரமானதாக இருக்கலாம். ஆனால் அவை எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே (இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்களைப் போல) இருக்க முடியும்” என்பதுதான் நேருவின் கொள்கையும், இந்தியாவின் கொள்கையுமாகும்.

                இலங்கையில் இந்தியா மேலாதிக்கம் செய்வதென்பது இந்தியப் பெருமுதலாளிகளின் பணத்தினால் மட்டுமல்ல. பணமும், தொழில்நுட்பமும்தான் பலமென்றால், அமெரிக்காவோ அல்லது சீனாவோ இந்தியாவை எப்போதோ வெளியேற்றியிருக்கும். இலங்கை விஷயத்தில் இந்தியாவுக்கு மற்ற நாடுகளுக்கு இல்லாத ஒரு சமூக வாய்ப்பு உள்ளது.

                இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழ்ச் சமூகங்கள் உள்ளன. புவியியல் அடிப்படையில் இரண்டும் வேறு வேறு நாடுகளாக இருந்தாலும், இவ்விரு சமூகங்களுக்கு இடையில் நீண்ட பாரம்பரிய உறவு உள்ளது. அதன் மூலம் ஒன்று மற்ற ஒன்றின் மீது தாக்கம் செலுத்துகிறது.

                இந்த வாய்ப்புதான் இந்தியாவின் துருப்புச்சீட்டு. இதேபோல் ஒரு வாய்ப்பு இந்தியாவுக்கு வங்கதேச உருவாக்கத்திலும் பயனளித்ததை பார்க்கலாம். சரி இந்தியா தனது துருப்புச்சீட்டை எப்படி பயன்படுத்துகிறது எனப் பார்ப்போம். நமது தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் மற்றும் இயக்கங்களிடையே இந்திய அரசு ஊடுருவுகிறது. இந்திய அரசு தனக்கான ஈழ அரசியல் பிரதிநிதிகளை உருவாக்கிக் கொள்கிறது. (நமது கம்யூனிச எதிர்ப்பாளர்களில் இத்தகையவரும் உள்ளனர்). இவர்கள் மூலம் ஈழத்தில் உள்ள இயக்கங்களுக்குள்ளும், அதன் தலைவர்கள் மத்தியிலும் இந்திய அரசு ஊடுருவுகிறது. இவ்வாறு ஈழ விசயத்தில் இந்திய அரசு தனக்கான ஒரு லாபியை உருவாக்கி தொடர்ந்து பராமரிக்கிறது. இந்த லாபியின் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்ற இறக்கங்களை இந்திய அரசும் உருவாக்குகிறது.

                1980-களில் போராளிகளுக்கு உதவி ஈழப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதே இந்தியா, பின்னர் போராளிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து விடுதலைப்போரை மட்டுப்படுத்தியது. இதே போல்தான் 2002-ல் யாழ்க்கோட்டையை புலிகள் முற்றுகையிட்டு 30 ஆயிரத்துக்கும் மேலான சிங்களப் படையினரைச் சிறைப்படுத்தியபோது இந்திய அரசு தலையிட்டது. சிங்களவர்களை மீட்டு பத்திரமாக திருப்பி அனுப்பியது.

                இப்படி ஈழ விடுதலைப் போராட்டத்திலும், அதற்காக தமிழ்நாட்டில் நடக்கும் ஆதரவுப் போராட்டத்திலும் இந்திய அரசு தனது கையை வைத்துக் கொண்டு சிங்கள அரசை மிரட்டி பணிய வைக்கின்றது. “ஈழ மக்களின் நிலை கண்டு இந்தியாவில் தமிழ்நாடு கொந்தளிக்கிறது; எங்களது (இந்தியாவின்) உள்நாட்டு அமைதி கேள்விக்குள்ளாகிறது; இந்தியாவுக்குள்ளும், வெளியிலும் நிலவும் இக்கொந்தளிப்பான நிலைமைகளை நாங்கள் (இந்தியா) அனுமதிக்க முடியாது” என சிங்கள அரசை கட்டுப்படுத்துகிற வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.

                இதை வைத்துக் கொண்டுதான் இந்தியா இலங்கையின் மீது முதன்மையான அதிகாரத்தை செலுத்துகிறது; அதன் மூலம் பலன் பெறுகிறது. இப்போதும் இலங்கையில் இந்தியாவின் பொருளாதார அரசியல் ஆதிக்கமே முதன்மையானது. புள்ளி விபரங்கள் என்ற பேரில் நமது கம்ப்யூட்டர் சோதிடர்கள் சொல்வது உண்மையல்ல.

இலங்கையின் அரசியல் உரிமையும் - இந்தியா நடத்திய இன அழிப்பு போரும்

                இலங்கைக்கு தனி அரசியலமைப்புச் சட்டம் உள்ளது; அதனடிப்படையிலான நீதி – நிருவாகம் உள்ளது; நாடாளுமன்ற ஆட்சி வடிவம் உள்ளது; இவற்றைப் பாதுகாப்பதற்கான இராணுவம் மற்றும் படை அமைப்புகள் உள்ளன. அந்நாட்டுக்குள் மற்றவர்கள் கடவுச் சீட்டுப் பெற்றுக்கொண்டுதான் உள்ளே செல்லமுடியும். இவையெல்லாம் இலங்கை ஒரு தனி நாடு என்பதை ஒப்புக் கொள்வதற்கான ஆதாரங்கள்.

                ஆனால் இவை மட்டுமே இலங்கையை முழுச் சுதந்திரம் உடைய நாடாக கருதுவதற்கான ஆதாரங்கள் ஆகிவிடாது. இலங்கை முழுமையான அரசியல் இறையாண்மை உடைய நாடும் அல்ல.

                ஒரு நாடு தான் உயிர் வாழ்வதற்கான உரிமையை (அரசியல் - பொருளாதார உரிமையை) தானே தீர்மானித்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தால் அது போர் நடத்தவும், மற்ற எந்த துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கவும் கூட முடியாது. அதே நேரத்தில் இந்த வகை நாட்டுக்கு முழு அரசியல் - இறையாண்மை இல்லாதிருந்தாலும் அந்நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு சிறப்பான உரிமை ஒன்று உள்ளது. அதாவது, தம் நாட்டின் மீது செல்வாக்கு செலுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிடையே பேரம் பேசுகிற உரிமை உள்ளது. இதனால், இவ்வகை நாடு சில நேரங்களில் தம்மீது செல்வாக்கு செலுத்துகிற ஏதேனும் ஒரு நாட்டோடு அதிகமான சார்பு தன்மை கொண்டிருக்கும். அதேநேரத்தில், இச்சார்பு தன்மையால் அதிகார மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாது.

                இலங்கையின் பொருளாதாரம் என்பது இந்தியா உட்பட பிற நாடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்தியா உட்பட பிறநாடுகளின் பொருளாதார நலனுக்கு குந்தகம் விளைவிக்கிற எந்த முடிவுகளையும் இலங்கை சுயேட்சையாக எடுக்க முடியாது. அதே நேரத்தில், இலங்கையின் பேரம் பேசுகிற உரிமையை யாரும் தடுக்கவும் முடியாது. ஆக, இலங்கையின் அரசியல் - இறையாண்மை என்பது பெயரளவிலானதாகும். பெயரளவிலான அரசியல் உரிமையுடைய இலங்கை எப்படி அரை நூற்றாண்டுக்கும் மேலான உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள முடியும்? அதை எப்படி அந்நாட்டில் செல்வாக்கு செலுத்துகிற வளர்ச்சியடைந்த நாடுகள் அனுமதிக்கும்? பிறகெப்படி அங்கு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது?

                இலங்கையில் நீடிக்கும் உள்நாட்டுப் போர் என்பது இருவேறு இனங்களை மோதவிட்டு நாட்டாமை செய்வதற்காக பிரிட்டிஷாரால் அடித்தளமிடப்பட்டது. அதையே இந்தியாவும் வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.

                இலங்கை ஈழநாடாகவும், சிங்கள நாடாகவும் தனித்தனியாக ஆகுமேயானால் அவை இரண்டும் இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. சிங்கள அரசு அமெரிக்காவோடோ அல்லது சீனாவோடோ தனி உறவைப் பேண முடியும். அதுபோல, ஈழ நாடும் தனது புலம்பெயர் மக்களின் நிலையில் இருந்து அமெரிக்காவோடோ அல்லது அய்ரோப்பிய நாடுகளோடோ முதன்மை உறவைப் பேண முடியும். இது இந்தியாவுக்கு மட்டுமேயான இழப்பாகும். ஆகவேதான் இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டுமென்று இந்தியா நிர்பந்திக்கின்றது.

                அதே நேரத்தில் ஒன்றுபட்ட இலங்கையாக இருக்கும்போதும், அங்கு உள்நாட்டுப் போரும் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாகும். இலங்கையில் உள்நாட்டுப் போர் இல்லையென்றால், தமிழ்நாட்டிலும் சிங்கள எதிர்ப்பு போராட்டங்கள் இருக்காது. இதனால் சிங்கள அரசை தனது பிடிக்குள் வைத்திருக்கவும் முடியாது. ஆகவே இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டுப்போர் நடக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.

                இந்தியாவின் இந்த அரசியல் விளையாட்டை இலங்கையும் உணர்ந்தே இருக்கிறது. பலவீனமான, பொருளாதாரத்தில் பின்தங்கிய, சிறிய நாடுகளால் வேறு எதுவும் செய்ய முடியாது. ஆனால் இலங்கை தனது பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொண்டுள்ளது. அதாவது போரில் ஏற்படும் கடுமையான நிலைமைகளையும், திருப்பங்களையும் சமாளிக்க வேண்டிய வேலையை இலங்கை எப்போதோ இந்திய அரசின் தலையில் கட்டிவிட்டது.

                அதனால்தான் போரில் முக்கியமான நெருக்கடிகள் நிகழும் போதெல்லாம் இந்தியாவே தலையிட்டு தீர்க்க வேண்டி வந்தது. விடுதலைப் புலிகளின் தலைமையில் விடுதலைப் போர் மேலெழுந்து வரும்போதெல்லாம் இந்தியா அநீதியாக தலையிட்டு அதை பின்னுக்குத் தள்ளியதும், அமைதிப்படையை அனுப்பியதும், ஆயுதங்களைப் பறித்ததும், 2002ல் மாட்டிக் கொண்ட 30 ஆயிரம் சிங்களப் படையினரை மீட்டதும் என இந்தியாவே தொடர்ந்து போரை நடத்தி வந்தது.

                ஆனால் எல்லா நெருக்கடிகளையும் தாண்டி புலிகள் தமிழீழ அரசை அமைத்தனர். இதைத்தான் இந்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் மூலதனங்களை இலங்கையில் இருந்து விரைவில் மூட்டை கட்ட வேண்டிய நிலை உருவாகி விட்டதை எண்ணித்தான் இந்தியா பதறியது. கூடவே தமிழீழ அரசு நிலைப்பெற்று விட்டால், தமிழ்நாட்டு மக்களின் சுதந்திர உணர்வு மேலோங்கும் என்பதும், அதனால் இந்தியாவின் இருத்தல் கேள்விக்குள்ளாகும் என்பதும் நன்றாகவே தெரிந்த இந்திய அதிகார வர்க்கம் அலறித் துடித்தது.

                மிக தேர்ந்தெடுத்த தேசிய ஒடுக்குமுறையை அரசியலாகக் கொண்ட இந்திய அதிகார வர்க்கம்தான் ஈழ விடுதலையை ஈவு இரக்கமின்றி நசுக்கி, அழிக்க முடிவு செய்தது. இதற்கு அதிகாரத்தில் இருக்கிற எந்த ஒரு தனிநபர் விருப்பு, வெறுப்புகளும் காரணமல்ல. அது முழுக்க முழுக்க இந்தியப் பெருமுதலாளிகளின் இலங்கை சந்தையின் லாபத்துக்காகவும், தமிழ் நாட்டில் விடுதலை உணர்வை மேலோங்க செய்துவிடக் கூடாதென்ற அச்சத்தினாலும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்திய விரிவாதிக்கத்தின் நலனில் இருந்தே ஈழ இன அழிப்புப் போர் நடத்தப்பட்டது.

                இதைத்தான் இலங்கையின் அதிகார வர்க்கமும், அரசப்பிரதிநிதிகளும் 'இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம்' என வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்தியா மாபெரும் இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் போதுதான் இங்கிருக்கிற கம்யூனிச எதிர்ப்பாளர்கள், இந்தியா ஏதோ ஆபத்தில் இருப்பதுபோல் கூச்சல் போட்டார்கள். இந்தியாவை சீனா முற்றுகையிட்டு அழிக்கத் தொடங்கிவிட்டதென பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். ஈழத்தை அழித்த இந்தியாவின் மீது நம் கோபம் பாய்ந்துவிடாதபடி நம்மை திசைதிருப்பினார்கள். அதேவேலைதான் அமெரிக்க எதிர்ப்பு என்கிற பெயரில் தற்போது நடக்கிறது.

இந்திய விரிவாதிக்கத்தை முறியடிக்காமல் ஈழ விடுதலை இல்லை

                இலங்கை சொந்தமாக அரசியல் முடிவெடுக்க முடியாத ஒரு வகை அடிமை நாடு. அதன் மீது பல நாடுகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. அதில் இந்திய அரசின் மேலாதிக்கமே முதன்மையானது. இந்திய விரிவாதிக்க அரசு தனது நலனில் இருந்தே ஈழ விடுதலையை நசுக்கி, இனப்படுகொலையையும் நடத்தியுள்ளது.

                இன்னமும் கூட இந்திய அரசுதான் இலங்கையில் செல்வாக்கு செலுத்துகிறது. இது இனியும் நீடிக்கும். பலமான இந்திய அரசு மறைமுகமாக ஆட்சி செய்யும் இலங்கையில் ஈழ விடுதலைக்கு என்ன வழி? முதலில் இலங்கையில் இருந்து இந்திய அரசின் பிடியை தளர்த்தாமல் ஈழ விடுதலையை எப்படி சாதிக்க முடியும்?

                இந்தியாவின் பிடியை ஈழ மக்கள் மட்டுமே தனித்து விடுவிக்க முடியாது. ஒருவேளை ஈழ மக்களோடு சிங்கள மக்களும் சேர்ந்து நின்றால் அதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆனால் சிங்கள மக்கள் பேரினவாத வெறியில் மூழ்கியுள்ளனர். தமிழர்களை ஒடுக்குவதன் மூலம் சிங்களவர்களுக்கு நிலம், கல்வி, வேலையில் தனிச் சலுகை என பாதகம் செய்வதற்கான கூலி வழங்கப்படுகிறது. சிங்களவர்கள் சிறப்பு சலுகை பெற்ற இனமாக உள்ளனர். ஆகவே இரு இனங்களும் ஒன்றுசேர்ந்து இந்திய ஆதிக்கத்தை விரட்டியடிக்கும் நிலை இப்போது இல்லை. ஈழ மக்களால் தனியாகவும் விரட்ட முடியாது.

                அதை செய்வதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டு தமிழருக்கே உள்ளது. தமிழ்நாட்டு தமிழர் கூட தனியாக இதை செய்துவிட முடியாது. ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் அடக்குமுறையை கட்டவிழ்த்தோ அல்லது வேறு ஒரு பிரச்சினையை தூண்டி விட்டோ அரசு அதைத் தடுக்கும். தேவைப்பட்டால் இந்திய அதிகார வர்க்கம் இன்னுமொரு இராஜீவ்காந்தியை பலி கொடுக்கும். அதன்மூலம் தமிழ்நாட்டில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட பிற தேசிய இனங்களை தயார்படுத்தும்.

                ஆக இந்திய விரிவாக்கத்தை முறியடிக்க இத்துணைக் கண்டத்திலுள்ள அனைத்து தேசிய – பழங்குடி மக்களிடமும் பணியாற்ற வேண்டும்.

                இந்த பரந்த அவசியமான அரசியல் பணியை இனவெறியர்களோ, சீர்திருத்தவாதிகளோ செய்ய முடியாது. அனைத்து மக்களின் விடுதலையின் நியாயத்தை உணர்ந்த கம்யூனிஸ்டுகளால் மட்டும்தான் முடியும். கம்யூனிஸ்டுகள் இன்று பலவீனமான நிலையிலேயே உள்ளனர். ஆனால் அனைத்தையும் ஆய்ந்தறியும் மாணவர்கள் கம்யூனிஸ்டுகளாக ஆகிவிட்டால், நிலைமையே தலைகீழாக மாறிவிடும். அதிகார வர்க்கங்களின் நாட்கள் எண்ணப்படும். ஈழம் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழரும் விடுதலையை சுவாசிப்பர்.

                இது நடந்துவிடக் கூடாதென்பதாலேயே மாணவர்களிடம் கம்யூனிச பூச்சாண்டி காட்டப்பட்டது. இதை பரப்பியவர்களுக்குப் பின்னால் திரு. பெரியாவின் சாவைக் கொண்டாடும் மன நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட ஈழ ஆதரவு போலி இயக்கங்களும் உள்ளன. ஏற்கனவே 1990களில் அமெரிக்க மற்றும் இந்திய கைக்கூலிகளான பின்நவீனத்துவவாதிகள் 'கம்யூனிச எதிர்ப்பு' என்ற பெயரில் இளைஞர்களைக் காயடித்தனர். அப்போது அது குறித்து கம்யூனிஸ்டுகள் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர். அந்த தைரியத்தில்தான் பின்நவீனத்துவவாதிகளின் வாரிசுகள் இப்போது களமிறங்கியுள்ளனர். ஆனால், இன்று கம்யூனிஸ்டுகள் ஏமாற மாட்டார்கள் என்பதை உடனடி நடைமுறைகள் உணர்த்துகின்றன. இந்நடைமுறைகள் இன்னமும் தெளிவாகவும், தீவிரமாகவும் முன்னெடுக்கப்படவேண்டும். கூடவே, மாணவர்களும், கம்யூனிஸ்டுகளோடு கைகோர்க்க வேண்டும்.

                மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதிலேயே ஈழ ஆதரவுப் போராட்டத்தின் வெற்றி உள்ளது.        

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It