தொழில்நுட்பம், முதலீடு என்ற காரணங்களால் தொழில்துறை தனியார்வசம் இருப்பதைவிட அவைகள் பொதுத்துறையாக இருப்பதே சரியானது. உற்பத்திப் பொருட்களின் விலை நிர்ணயம், முதலீடு செய்வதில் கட்டுப்பாடு போன்றவைகளுக்கு சமூகத்தின் கண்காணிப்பும், மேற்பார்வையும், நிர்பந்தமும் தேவை. இவைகள் பொதுத்துறையில் மட்டுமே சாத்தியம். இதுவே தனியார் துறையாக இருந்தால் லாப வேட்டையின் காரணமாக உற்பத்திப் பொருட்களின் விலை நிர்ணயம் கட்டுப்பாட்டிற்குள் இருக்காது. முதலீடு செய்வதை வெட்டிக் குறைக்கும், முடிவில் தொழில் ஆபத்துக்குள்ளாகும் அபாயமும் உண்டு.

                மூலதனத்தைக் குவிப்பதும் அதை மையப்படுத்துவம் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படையாகும். பன்னாட்டு நிறுவனங்கள் குறைவான காலத்தில் விற்பனைப் பொருட்கள், விலை மற்றும் தொழில்நுட்பத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கை மேலோங்கும்போது ஒரு நாட்டின் அரசியலில் தலையிட்டு தனக்கு சாதகமான அரசை உருவாக்கவும் அல்லது கவிழ்க்கவும் செய்கிறார்கள். உதாரணமாக சிலநாட்டின் அரசியலில் தலையிட்டு சனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனாதிபதியையே கொலை செய்து இருக்கிறார்கள்.

நாட்டில் பொருளாதாரம், வருமானம், மூலாதாரங்கள், அரசியல் அதிகாரங்கள் ஆகியவைகள் சமச்சீரில்லாமல் அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளதோ அங்கு நாட்டின் வளர்ச்சிக்கானப் பணிகளை தனியாருக்கு விட்டுவிடக் கூடாது.

நாட்டின் தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சி அரசின் தலையீடில்லாமல் அடையமுடியாது. அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை.  நாட்டின் வளர்ச்சிக்கு, முக்கியத் தேவைகளுக்கான மூலாதாரங்கள் அனைத்தும் அரசின் கையில் இருக்க வேண்டிய அவசியத் தேவை இருக்கிறது.  நாட்டின் வளமும், சொத்தும், அரசியல் அதிகாரமும் ஒரு சாராரிடம் குவிவது சமுதாயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

வர்த்தகத்தில் தனியார் முதலாளிகளுடைய ஏகபோகத்திற்கு இணையாக பொதுத்துறைகள் அவசியமானது.  வளர்முக நாட்டில் அரசு உதவியுடன் கூடிய கனரகத் தொழில்கள் இல்லாமல் எதிர்கொள்ள முடியாது.  சில தொழில்களில் நமது தொழில் நிறுவனங்கள் தொன்றுதொட்டு சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

பொதுத்துறைகள் சமூக அக்கறை கொண்டதாகவும், பொது நலன்களுக்கான திட்டங்களை உருவாக்கக்கூடியதாகவும் செயல்படும். அரசின் திட்டங்களுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே வழங்க முடியும்.

காங்கிரஸ் அரசு அறிவிப்பு

                இந்தியாவில் இரண்டாவது அய்ந்தாண்டு திட்டக்காலத்தில் பொதுத்துறைக்கான கொள்கைகள், திட்டங்கள் உருவாக்கப்பட்டன. குனரகத் தொழில்கள், சேவைத்துறைகள், கனிம வளங்கள், ரயில்வே போக்குவரத்து, நீர்வழித்தடங்கள், கப்பல் மற்றும் இதுபோன்ற போக்குவரத்துத் துறைகளை அரசே ஏற்று நடத்தும் என முடிவு செய்யப்பட்டன. இன்று அம்மாதிரி உருவாக்கப்பட்ட திட்டங்களையும், அவற்றை உருவாக்கிய நேருவையும், காந்தியவாதிகளையும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டார்கள். இப்பொழுது உலக வங்கிக்கும், சர்வதேச நிதி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

                எங்கெல்லாம் தனியார்த்துறையில் அதிகமான முதலீட்டை திரட்ட முடியவில்லையோ, எந்தத்துறையில் மூலதனம், தொழில்நுட்பம் உற்பத்தி ஆகியவற்றில் காலதாமதம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சில துறைகளை தேசியமயமாக்க அரசு விரும்பாவிட்டாலும், சமூக நலன் கருதி சில தொழில்களை பொதுத்துறையின் கீழ் கொண்டுவந்தது. (உ.ம்) இந்திய உணவு கழகம்-தானிய பொது விநியோகத்திற்கும், கொள்முதலுக்கும் செயல்பட்டு வருகிறது.

                எங்கெல்லாம் தேச நலனுக்கு பன்னாட்டு நிறுவனங்களால் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. (உ.ம்) எண்ணெய் வளம், மின்சார உற்பத்தி போதிய திறமையின்மை, வளர்ச்சியின்மையால் நலிவடைந்த தொழில் நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது. வேலையிழப்பை தவிர்ப்பது.

                தொழில் முன்னேற்றம் என்ற அடிப்படை கொள்கை என்பது தனிப்பட்டவர்களின் நலன் அல்ல. மாறாக சமூகத்தின் நலன் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். வளர்ச்சி முன்னேற்றம், சமூகப் பொருளாதார உறவுகள் எல்லாம் தேசிய வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் உயர்த்துவது மட்டுமல்லாமல் மக்களிடையே காணப்படும் வருமானம் மற்றும் சொத்தின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு, முதலீடு மற்றும் தொழில் உறவுகள் எல்லாம் சமூகத்தின் அக்கறையோடு இருக்க வேண்டும். இந்தக் கருதூதை அன்று இந்திய மக்களவை ஏற்றுக் கொண்டது.

                அரசு பொதுத் துறைகளில் செய்திருக்கும் முதலீடு ரூ.1,13,234 கோடிகள். இன்றைக்கு இதனுடைய மதிப்பு பலநூறு மடங்குகள் அதிகரித்திருக்கிறது. இந்த பொதுத்துறை மூலதனத்தை 110 கோடி மக்களுக்கும் பங்கிட்டால் ஒவ்வொருவருக்கும் ரூ.1.00 இலட்சம் வரும் என்று கூறப்படுகிறது.

                இந்தியாவில் பாதி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இவர்களும்கூட லட்சம் ரூபாயை பொதுத்துறையில் மூலதனமாக வைத்திருக்கிறார்கள்.

                மக்களுக்குச் சொந்தமான பணமும், பொதுத்துறைகளும் பன்னாட்டு பகாசூர நிறுவனங்களுக்கும், கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் முதலாளிகளுக்கும் அடிமாட்டு விலைக்கு விற்பனையாக்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது ஒவ்வொரு இந்தியன் பணமும் சூரையாடப்படுகிறது.

                சந்தைப் பொருளாதாரம் உருவாக்கும் தாறுமாறான வளர்ச்சியானது வாங்கும் சக்தியை ஒரு சாதாரரிடம் சென்று குவிவதற்கு வழி வகுக்கிறது. சந்தைப் பொருளாதாரம் அடித்தட்டு மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வராது. ஒரு நாட்டு அரசின் தலையீடு இல்லாமல் அந்த நாடு தொழில் துறையில் துறையில் வளர்ச்சி அடைய முடியாது. அந்த நாட்டின் உள்நாட்டு சந்தை மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது அந்த நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

                இந்திய அரசின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளால் இறக்குமதி அதிகரித்து நமது நாட்டு தொழில்கள் நலிவடைந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையினால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்துகொண்டே இந்தியாவை அடிமை நாடாக்க முயற்சி செய்துவருகின்றன. இதை நாம் வலுவாக எதிர்க்க வேண்டும்.

                நாட்டிற்கு அத்தியாவசியமாகப் தேவைப்படும் பல்வேறு துறைகளாகிய உருக்குத்தொழில், நிலக்கரி, மற்றும் உலோக உற்பத்தி, குரூட் ஆயில் (கச்சா எண்ணெய்) உற்பத்தியும் சுத்திகரிப்பும், கனரக இயந்திரத் தயாரிப்பு, இயந்திரத் தயாரிப்பு, இயந்திர பாகங்கள் தயாரிக்கும் கருவிகள், அனல் மற்றும் புனல் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்கள், மின்சாரம் வழஙூகுவதற்கான கருவிகள், போக்குவரத்துச் சாதனங்கள், யுத்த தளவாடத்துறை, போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தயாரிப்பு, மருந்து உற்பத்தி, பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பு, காலணி, ஆணுறை தயாரிப்பு, ஆகாய, தரை, கடல்வழி போக்குவரத்து, தேசிய, சர்வதேசிய ஏற்றுமதி, இறக்குமதி, கட்டுமானத் தொழில்கள், உணவு விடுதிகள், உள்நாட்டு வெளிநாடு தொலைத் தொடர்பு மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பல்வேறு துறைகள் இந்தியாவில் பொதுத்துறைகளாக இருந்து வருகின்றன.

                இதைத் தவிர சேவைத்துறைகளான இன்சூரன்ஸ், வங்கிகள் போன்ற பலதுறைகளும் அரசின் கட்டுபாட்டில் இருந்து வருகின்றன.

வங்கிகள் தனியார்மயம்

                இந்திய பொருளாதாரத்தில் அசைக்க முடியாத பங்கினை அரசுடைமை வங்கிகள் ஆற்றிவருகின்றன. ஆலமரமாய் பல்கிப்பெருகி வளர்ந்துவரும் அரசுடமை வங்கிகளை அந்நியருக்கு, தனியாருக்கு தாரைவார்க்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது நாடாளுமன்றத்தில் வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், பொதுத்துறை வங்கிச் சேவையை ஒழித்து தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்பு இயக்கங்கள் வளர்ந்ததால் கிடப்பில் போடப்பட்டது. வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான அனைத்து வகையான பொய்களையும் பரப்பினார்கள். தனியார் வங்கிகள் செயல்திறனுடன், தரமான சேவையை அளிக்கும் என்று கூறினார்கள். ஆனால், நாடு சுதந்தரமடைந்த பிறகு 200-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் மூடப்பட்டுவிட்டன. மேலும், நலிவடைந்துவிட்டதாகக்கூறி 11,588 தனியார் வங்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று க்ஷ.ஐ.கு.சு அறிக்கை கூறுகிறது.

                பொதுத்துறை வங்கிகள் நலிவடைவதற்கு மிக முக்கியமான காரணம் நடுவண் அரசின் கொள்கைகள்தான் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கு, அரசின் நிதியாதாரங்கள் வரம்பிற்கு உட்பட்டதாக இருப்பதும், அரசின் முன்னுரிமைப் பணிகளுக்கு நிதித் தேவைப்படுவதும் காரணமாக கூறப்படுகிறது. ஆனால், பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிய பெரிய தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் பலகோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. வாராக்கடன் ரூ.1.50 இலட்சம் கோடிகள் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. வாராக்கடனை வசூல் செய்ய நடுவண் அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. வாராக்கடனை வசூல் செய்துவிட்டால் பொதுத்துறை வங்கிகள் நலிவடைகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.

                இன்சூரன்ஸ் தனியார்மயமாக்கம் செய்வதற்கு உலக வங்கி நடுவண் அரசை தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. ஆனால், 1970 முதல் 1990 வரையில் சுமார் 420 அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதில் 370 நிறுவனங்கள் திவாலாகியதாகவே அறிவிக்கப்பட்டது. பல நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் திவாலாகும்போது அதன் இயக்குநர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதும், திறமையற்றவர்கள் நிறுவனங்கள் திவாலுக்கு காரணமாக இருப்பதோடு மொத்தத் தொழிலையே அழித்துவிடுகிறார்கள். விதிகள் தூக்கியெறியப்படுகின்றன. தங்களை வளப்படுத்திக்கொள்ளவே அவர்கள் திட்டமிடுகிறார்கள். இறுதியில் எல்லாம் அழியும்போது இவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தனியார் இன்சூரன்ஸ் துறை மோசடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

                இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களான SAIL, NLC போன்ற நவரத்னா தகுதிபெற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களை வெளியேற்றுவது, பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது ஆகியவற்றுக்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

                இந்தியாவில் மின் உற்பத்தியின் அளவு தேவையைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ழுல தொழிற்சாலைகள் மின்சக்தி பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ளன அல்லது உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளன. பெரிய நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை செய்துகொள்கின்றன. சிறிய தொழிற்சாலைகள் பல நல்ல திட்டங்கள் இருந்தும் நடுவண் அரசு அதை ஊக்கப்படுத்துவதில்லை. இதனால் மின்சார வாரியத்திற்கு பலகோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. ஆனால், நடுவண் அரசு மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு தனியார்மயமாக்கமே மிகச் சிறந்த தீர்வு என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

                பிரான்ஸ், அய்ரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும்பாலான மின் உற்பத்தி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அதேபோல், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் அரசு நிறுவனங்கள் மட்டுமே ஊக்குவிக்கப்படுகின்றன.

                மின்துறையை பொறுத்தமட்டில் தனியார்மயமாக்கவும் தேவையில்லாதது. அது பணவீக்கத்தை அதிகரித்து, பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்துவதோடல்லாமல், பொதுத் துறையை சீர்குலைக்கும். தனியார் நிறுவனங்கள் தங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட லாபம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பணி செய்யத் துவங்குகிறார்கள். உலக வங்கியின் கட்டளைக்கேற்ப, மின் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி லாபம் சம்பாதிப்பதிலும் முனைப்புடன் செயல்படுகிறது. அன்னிய நாட்டு தனியார் நிறுவனங்களை அனுமதித்தால் சேவை மேம்படும் என்றெல்லாம் தாராளமையவாதிகளால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டாலும், லாபம் இல்லையென்றால் சேவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.

                பொதுத்துறை நிறுவனங்கள் நலிந்த பிரிவனருக்கான சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. குறைவான விலையில் நிறைவான சேவை அளித்த வருகிறது. அது மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இடஒதுக்கீடும் சாத்தியமாகும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் எதிராகவும், தனியார் முதலாளிகளுக்குச் சாதகமாகவும் தான் அமையும்.

                சந்தை பொருளாதாரம் அமலில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளில் கூட சிறுதொழில்களைப் பாதுகாக்கவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வரவு செலவுத் திட்டத்திலேயே நிதி ஒதுக்கப்படுகிறது. அரசின் தேவைகளுக்கு, சிறு தொழில் நிறுவனங்களிடம் தான் பொருட்களை வாங்க வேண்டும். இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மீறுவோர் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா வளர்முக நாடுகளின் சிறுதொழில்களை அழித்து வருகிறது.

                தமது தேவைகளுக்கு நடுவண் அரசு, மாநில அரசுகளின் நிறுவனங்களின் தேவைகளுக்கு சிறுதொழில்கள், கைத் தொழில்கள், குறுந்தொழில்களிடமிருந்து தான் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் நமது நாட்டில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும். அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கும். மேலும் சிறுதொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் மூலப் பொருட்களை வாங்கும் பொழுது கொள்முதல் வரி விதிக்கப்படுகிறது. உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பொழுது விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. அரசுக்கு சிறுதொழில்கள் மூலம் 10 விழுக்காடு வரி வருமானமாக கிடைக்கிறது.

                தென் கிழக்கு ஆசியாவில் 1997-ல் ஆரம்பித்த பொருளாதார சீர் குலைவு உலகில் வேலையில்லாத் திண்டாட்டத்தை தீவிரமாக்கி விட்டதாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. தாராளமயம் மற்றும் உலக மயமாக்கக் கொள்கைகளால் பல நாடுகளில் ஏற்கனவே இருந்த வேலைகள் பறிபோயின. சமூக பொருளாதாரக் கொள்கைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோபன்ஹெகன் உச்சிமாநாட்டில் உலக நாடுகள் பிரகடனம் செய்திருந்தன. ஆனால், உச்சிமாநாட்டின் பிரகடனங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன. பல்வேறு நாடுகளில் வேலையின்மை இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்பதை சர்வதேச தொழிலாளர் நிறுவனம் அறிக்கை கூறுகிறது.

                மொத்தத்தில் தாராளமய, உலகமயமாக்கல் தனியார்மயக் கொள்கைகளினால் உலகின் பல நாடுகளிலும் பெரும்பான்மையான மக்களுக்குப் பாதகமாகவே உள்ளன என்பதை நடைமுறையில் காண முடிகிறது.

                மூலதனத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அந்நிய முதலாளிகள் தயாராக இல்லை. தாங்கள் போடும் மூலதனத்தைப் போல மூன்று மடங்கு பணம் கடனாகவும், பங்கு விற்பனை மூலமாகவும் நமது நாட்டில் கிடைக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். உலகமயமாக்களின் பலன் இலாபத்திற்கே அன்றி மக்கள் நலனுக்கில்லை இவ்வாறு நாம் கூறவில்லை ………… கூறுவது ருசூனுஞ மனிதவள மேம்பாடு அறிக்கை.

                தனது குடிமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய இயலாத பொருளாதார அமைப்புகளினால் யாருக்கு என்ன பயன்?

                பன்னாட்டு நிறுவனங்களின் வருகை காரணமாக உள்நாட்டுத் தொழில்கள் நலிவடைந்து உள்ளன. வறுமையும், வேலையின்மையும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தை பாதிப்படைந்து உள்ளது. ஏழை, எளிய மக்கள் சுரண்டப்படுகின்றனர். நாட்டின் இறையாண்மை கேள்விக் குறியாக்கப்படுகிறது.

                ஆலை மூடல் அதிகரித்துள்ளது, கடன் சுமை கூடியுள்ளது, தொழிற்சங்க உரிமைகள் பரிக்கப்படுகிறது.

                பொருளாதார சீரமைப்பு எனும் உலகமயமாக்கத் திட்டம் உண்மையில், ஏகாதிபத்திய முதலாளிகள் தங்களை நெருக்கடியிலிருந்து வெளிக் கொண்டுவருவதற்கான ஒரு தகவமைப்புத் திட்டமே. காரல்மார்ஸ் குறிப்பிட்டது போல, “முதலாளியம் மீண்டும், மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளுகிறது”. உலக முதலாளியப் பொருளாதாரம் தனது சமீபகால நெருக்கடியிலிருந்தும் உற்பத்தித் தேக்கத்திலிருந்தும் தன்னை மீட்டெடுப்பதற்காகக் கண்டுபிடித்துள்ள உத்தியே உலகமயமாக்கல் ஆகும். முதலாளியப் பொருளாதாரம் தனது நெருக்கடிகளின் சுமையை தொழிலாளர்களின் மீது சுமத்துவதற்கான திட்டமே உலகமயமாக்கம்.

                பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களும், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களும் உலகம் எங்கும் நாளுக்கு நாள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன மேலும் தங்கள் நாடுகளில் மக்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் ஊதிய உயர்வுக்காகவும், பணிபாதுகாப்புக்காகவும், ஆலைகள் மூடப்படுவதற்கு எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும் நடத்தப்படும் போராட்டங்கள் யாவும் உலகமயமாக்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியோ ஆகும்.

                வாஷிங்டன் நகரில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கை இப்படி எழுதியுள்ளது. “இப்போதும் உலகில் இரண்டு மிகப்பெரிய சக்திகள் இருக்கவே செய்கின்றன. ஒன்று அமெரிக்கா. மற்றொன்று உலக மக்கள்!” மேலும், “உலகமயமாக்கலை வேறுவார்த்தைகளில் கூறுவதனால், அது அமெரிக்க மேலாதிக்கமே.”

                தனியார் துறைகளை வளர்ப்பது, பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது, பொருளாதார நிர்வாகத்தில் அரசின் பாத்திரத்தைக் குறைப்பது, உடல் நலம், கல்வி மற்றும் சமூகத்துறைகளில் அரசு செலவுகளை குறைப்பது. பொருளாதரத் திட்டமிடலைக் குலைப்பது ஆகியவைகளுடன், அரசியல்ரீதியாக குடிமைச் சமூகத்தின் மீது தாக்குதல் தொடுப்பது, சனநாயக அரசியலுக்கு முடிவு கட்டுவது உலகமயமாக்கலின் முதன்மையான நோக்கங்களாக உள்ளன.

                எனவே, இந்திய மக்களுக்கு விரோதமான உலகமயமாக்கக் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டியது இந்திய மக்களின் சமூகக் கடமையாகும்.

Pin It