சிறுவர்களின் கோடை விடுமுறையைக் கோலாகலமாய்த் தின்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் பெரும்புயலுடன் ஓய்ந்திருக்கின்றன. சூது கவ்விய போட்டிகளின் பின்னணித் தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி விட்டிருக்கின்றன. இறுதிப் போட்டியில் மற்ற அணிகளையெல்லாம் விரட்டிவிட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான தொழில் அதிபர் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்த இறுதிப் போட்டியின்போது மட்டுமே இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளது. சூதாட்டப் புகார்களில் சென்னை அணியின் முதலாளி சீனிவாசன் முதல் ரெய்னா, தோனி வரை பலருடைய பெயர்களும் அடி மேல் அடி வாங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்களை விட அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும்தான் அதிகமாக விளையாடியிருக்கிறார்கள்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு என்பது முழுக்க முழுக்க பணமும் பணம் சார்ந்த ஒன்றாக மட்டுமே இருந்துள்ளது. வீரர்களின் ஆடைகளைப் போன்றே கிரிக்கெட்டின் நிறமும் நிறையவே மாறியிருக்கிறது. எந்த நாட்டு வீரராயிருந்தாலும் வெள்ளை ஆடையணிந்து விளையாடும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே 'உண்மையான கிரிக்கெட்' என்று தற்போது பலரும் புலம்புகிறார்கள். ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு இருந்த செல்வாக்கு ஒருநாள் போட்டிகள் வந்த போது குறைந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஐந்து நாட்கள் பொறுமையாக வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்களுக்குப் பொறுமையில்லை. எப்போதாவது விழும் விக்கெட்டுகளையும் ஒன்றிரண்டு முறை மட்டுமே காணக்கிடைக்கும் சிக்ஸர்களையும் பார்க்க நிறைய நேரம் செலவிட வேண்டியிருந்த கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகள் விடுதலை தந்தன. ஒவ்வொரு நாட்டு அணிக்கும் தனித்தனி வண்ண ஆடைகள், ஒரே நாளில் முடிவு தெரிந்து விடுவது, பரபரப்பான ஆட்டம் என ஒருநாள் போட்டிகள் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கிரிக்கெட்டுக்குப் பெற்றுத் தந்தன. இதனால் நூறு கோடிக்கும் மேல் மக்கள் கொண்ட இந்தியாவில் கிரிக்கெட்டைச் சுற்றி மிகப்பெரும் உள் மற்றும் பன்னாட்டுச் சந்தைகள் உருவாயின.

பணம் கொழிக்கும் எந்தத் துறையிலும் அரசியலும் அதன் பின்விளைவாக ஊழல், முறைகேடுகளும் நுழைவது இயல்பானது. இந்திய கிரிக்கெட் வாரியம் பெரும் தொழிலதிபர்களின் ஆதிக்கத்தில் இருப்பதைப் போன்றே அரசியல்வாதிகளின் ஆதிக்கமும் அதில் உண்டு. இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்களும் ஆளுங்கட்சியின் பிடியில்தான் இருந்து வருகின்றன. விளையாட்டுக்குத் தொடர்பேயில்லாத அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களுமான ஒரு கூட்டணிதான் கிரிக்கெட்டைச் சுற்றிய பணச் சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

இந்திய கிரிக்கெட் விளையாட்டு முழுங்க முழுக்க இந்தச் சந்தையின் ஆதிக்கத்திற்குள்தான் உள்ளது. கிரிக்கெட்டை சந்தைப் படுத்தும் ஒரு வணிக அமைப்பாக பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் வளர்ந்தது. இந்திய அணி வெற்றி பெரும் போதெல்லாம் நாட்டுக்காக அவ்வீரர்கள் விளையாடி வென்றதைப் போல ரசிகர்கள் தலை மேல் வைத்துக் கொண்டாடினார்கள். உண்மையில் அவர்கள் விளையாடியது பி.சி.சி.ஐ. எனும் தனியார் அமைப்புக்காக எனும் விஷயம் ஊடகங்களில் மறைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் அரசுக்குச் சொந்தமானதல்ல. கிரிக்கெட் வீரர்கள் அரசிடமிருந்து சம்பளம் பெறுவதில்லை; வாரியத்திடமிருந்தே பெறுகிறார்கள். 'கிரிக்கெட் வாரியம் அரசு அமைப்பல்ல; தனியார் அமைப்பு' என்று வாரியத் தலைவர் சீனிவாசனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 'கிரிக்கெட் வாரியம் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வராது' என்று விளையாட்டுத் துறை அமைச்சகமும் சொல்லியுள்ளது. ஆனால் முக்கியப் போட்டிகளில் வெற்றி பெறும் போது மத்திய அரசும், சில மாநில அரசுகளும் வீரர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் ரொக்கப் பணமாகவும் சொகுசு மாளிகைகளாகவும் வெகுமதியளிப்பார்கள். கிரிக்கெட் வழியான சந்தையில் மட்டுமின்றி நேரடியான சந்தையிலும் சச்சின், டிராவிட், தோனி, சேவக், போன்ற புகழ் பெற்ற வீரர்கள் விளம்பரங்களின் மூலமாகக் கோடிகளைச் சுருட்டுகிறார்கள். (அதென்னவோ விளம்பர உலகில் பேட்ஸ்மேன்களுக்கு இருக்கும் சந்தை மதிப்பு பவுலர்களுக்கு இருப்பதில்லை.) ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கரின் ஓராண்டு வருமானம் நூற்றி இருபத்தைந்து கோடி. இந்தச் சாதனையை இந்நேரம் தோனி முறியடித்திருப்பார்.

ஒருநாள் போட்டிகள் பொன் முட்டையிடும் வாத்தாக மாறிய பின்னர் சூதாட்டப் புகார்களும் எழத்தொடங்கின. டெஸ்ட் போட்டிகளைப் போலல்லாமல் ஒரே நாளில் முடிந்து விடுவதால் ஏதேனும் ஒன்றிரண்டு வீரர்களைக் காசு கொடுத்து வளைத்து விட்டால் போதும். ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட முடியும். முன்னாள் கேப்டன் அசாருதீன், அஜய் ஜடேஜா, நயன் மோங்கியா போன்ற வீரர்கள் சூதாட்டப் புகாருக்கு ஆளாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்திய அணிக்கு (!) முதன் முதலாக உலகக் கோப்பை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் மீதும் சூதாட்டப் புகார் எழுந்தது. ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தன் மீதான புகாரை மறுத்து கண்ணீர் விட்டு அழுதார் கபில்தேவ். ஒருநாள் போட்டிகள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டன. வீரர்கள் ஒவ்வொருவரும் அவுட் ஆகும்போது 'காசு வாங்கிருப்பாரோ' என்று ரசிகர்கள் சந்தேகிக்கத் தொடங்கினர்.

நாளுக்கு நாள் விரைவுபட்டுக் கொண்டிருக்கும் உலகமயச் சூழலில் ஒருநாள் முழுவதும் மைதானத்திலோ அல்லது தொலைக்காட்சியின் முன்போ நேரத்தை ரசிகர்களால் செலவிட முடியாத நிலையில் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வமும் குறையத் தொடங்கியது. அள்ள அள்ளப் பணம் தரும் கிரிக்கெட்டை மேலும் கவர்ச்சிப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக மாற்றுவதற்கான உத்தியாக டுவென்டி டுவென்டி எனப்படும் இருபது ஓவர் போட்டிகள் அறிமுகமாயின. அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துப் பார்க்க வேண்டிய தேவையில்லாமல் மாலை நேரப் பொழுது போக்காக மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடும் இப்போட்டிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்தன. இதை உணர்ந்த ஜீ டிவி நிறுவனம் மேலை நாடுகளில் நடக்கும் கிளப் கால்பந்தாட்டப் போட்டிகளை முன் மாதிரியாகக் கொண்டு கபில்தேவுடன் இணைந்து 2007ஆம் ஆண்டு 'இந்தியன் கிரிக்கெட் லீக்' (ஐ.சி.எல்.) எனும் அமைப்பைத் தொடங்கியது. ஒரே அணியில் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்று விளையாடும் வித்தியாசமான கிரிக்கெட் அனுபவத்தை அப்போட்டிகள் மக்களிடம் அறிமுகப்படுத்தின.

வெறும் கிரிக்கெட் போட்டியாக மட்டுமில்லாமல் ஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தை அளிக்கும் விதமாக பலப்பல மசாலாத்தனங்களும் ஐ.சி.எல். போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. பவுண்டரிகள், விக்கெட்டுகள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களின் கண்கவரும் வகையில் கொண்டாட சியர் லீடர்ஸ் எனப்படும் இளம் பெண்களின் கவர்ச்சி ஆட்டங்கள், இன்னிங்ஸ் இடைவேளையின் போது பாலிவுட் நடிகைகளின் குத்தாட்டங்கள் என வணிகக் கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லாமல் நடந்த இப்போட்டிகளுக்கு விளம்பர வருமானம் பெருகியது. இதனைக் கண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவ்வருமானங்களைத் தாமே ஏகபோகமாகச் சுருட்டும் முயற்சியில் இயங்கியது.

ஐ.சி.எல். போட்டிகள் அங்கீகாரமற்றவை என்று அறிவித்தது. தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவியிலிருந்து கபில்தேவை நீக்கியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து முக்கிய வீரர்கள் யாரும் ஐ.சி.எல். போட்டிகளில் விளையாட முன்வரவில்லை. நட்சத்திர வீரர்கள் கிடைக்காமல் போனதால் ஐ.சி.எல். ரசிகர்களின் ஆதரவை இழந்தது. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் 'இந்தியன் பிரீமியர் லீக்' எனும் பிரம்மாண்ட கிரிக்கெட் வர்த்தக அமைப்பை லலித் மோடியின் தலைமையில் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. கிரிக்கெட் விளையாட்டின் இன்னொரு கோர முகம் வெளியானது இதன் பின்னர்தான். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான வீரர்களுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுடன் போட்டி போட முடியாமல் ஐ.சி.எல். தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மூட்டையைக் கட்டியது.

தேசியவாதப் போர்வையில் நாட்டுக்காக விளையாடுவதாக நம்பப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் காசுக்காகக் ஏலம் விடப்பட்டனர். தங்களுடைய நாட்டுக்காக விளையாடிச் சம்பாதிப்பதை விட ஐ.பி.எல். போட்டிகளில் பல மடங்கு வருமானம் ஈட்ட முடிவதால் பல நாட்டு வீரர்களும் சொந்த நாட்டு அணிகளை விட்டு ஐ.பி.எல்.லில் ஆர்வம் காட்டினர். இப்போட்டிகளுக்காகத் தங்கள் தேசிய அணிகள் விளையாடும் சர்வதேசப் போட்டிகளைக் கூடப் புறக்கணித்தனர். அந்த வகையில் பார்த்தால் பல வீரர்களின் வெளுத்துப் போன தேசியவாத முகத்தை ஐ.பி.எல். இனங்காட்டியது. இலங்கை வீரர் மலிங்கா ஒரு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி கலந்து கொண்ட சர்வதேசத் தொடரைப் புறக்கணித்தார். பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால் ஐ.பி.எல். வருமானத்தை அந்நாட்டு வீரர்கள் இழந்தனர். அசார் மெகமூத் எனும் பாகிஸ்தான் வீரர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காகப் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இங்கிலாந்து குடியுரிமை பெற்று ஐ.பி.எல். அணியில் இடம்பிடித்தார்.

ஐ.பி.எல். போட்டிகளும் ஒரு சினிமாவுக்குரிய வணிக உத்திகள் அனைத்தையும் கொண்டே வடிவமைக்கப்பட்டன. பரபரப்பான கடைசி ஓவர்கள், சியர் லீடர்ஸ் பெண்களின் களியாட்டங்கள், எல்லாமே கொண்டவையாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் கூடுதலாக காமெடியும் இணைக்கப்பட்டுள்ளது. நவ்ஜோத் சித்து, கபில்தேவ், அஜய் ஜடேஜா போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் கூட அரைகுறை ஆடையணிந்த பெண் வர்ணனையாளர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்த முயன்றனர்.

என்னதான் ஐ.பி.எல். போட்டிகளின் கவர்ச்சித் தன்மைகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அதன் ஆறாண்டு வரலாற்றை தொகுத்துப் பார்த்தால் இப்போட்டிகளின் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது தெரியவரும். உண்மையில் கிரிக்கெட் விளையாட்டை ஐ.பி.எல். போட்டிகள் மலினப்படுத்தியுள்ளன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர் அடிக்கப்படும்போது உண்டாகும் பரவச உணர்வு இருபது ஓவர் போட்டிகளில் உண்டாவதில்லை. விக்கெட் விழும்போது ஏற்படும் அதிர்ச்சி அல்லது மகிழ்ச்சியும் அது போலத்தான். போட்டியின் போது தாம் விரும்பும் அணி (பெரும்பாலும் தன்னுடைய நாட்டு அணி) வெல்லும் போது மகிழ்ச்சியும், தோற்கும் போது அதிர்ச்சி கலந்த சோகமும் கொள்வது ஐ.பி.எல். ரசிகர்களிடம் இல்லை. அந்த நேர அதிர்ச்சியுடன் மறந்து கலைந்து சொல்கிறார்கள். சினிமாவில் விஜய் எதிரிகளை அடித்து வீழ்த்துவதற்கும், கிறிஸ் கெய்ல் அடிக்கும்  சிக்ஸர்களுக்கும் ரசிப்பு நிலையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. விளையாட்டுப் போட்டி வெறும் மூன்று மணி நேரப் பொழுது போக்காக எஞ்சுகிறது. இனிவரும் காலங்களில் ஐ.பி.எல். போட்டிகளில் வெளிப்படும் விளையாட்டுத் திறன்கள் மதிக்கப்படாமல் போகலாம். ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த முரளி விஜய், பத்ரிநாத், ராகுல் சர்மா, ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான் போன்ற பெரும்பாலான வீரர்கள் சர்வதேச போட்டிகளில் தடுமாறுகிறார்கள்.

ஒரு சினிமாவைப் போல வெறும் பொழுது போக்காக மட்டுமே பார்க்கப்படும் ஐ.பி.எல். போட்டிகள் சில நேரங்களில் அதற்குரிய பரபரப்பும் விறுவிறுப்பும் இல்லாமற் போகின்றன. ஆட்டம் தொடங்கி சில ஓவர்களிலேயே முடிவு தெரிந்து விடும் போட்டிகள் மோசமான சினிமாவைப் போல ரசிகர்களை வெறுப்படையச் செய்கின்றன. இந்த நிலையைத் தவிர்க்கும் விதமாக இனி வரப்போகும் காலத்தில் போட்டிகள் முன்கூட்டியே வடிவமைக்கப்படும் நிலை வரலாம். மூன்று மணி நேரமும் விறுவிறுப்பு குறையாத வகையில் ஒரு புனைவாகப் போட்டிகள் உருவாக்கப்படும் என்று தோன்றுகிறது. முதலில் விளையாடும் அணி எவ்வளவு ரன்கள் சேர்க்க வேண்டும், பின்னர் விளையாடும் அணி எவ்வளவு சேர்க்க வேண்டும், எத்தனை ஓவர்களில் போட்டி முடிவடைய வேண்டும் என்பன போன்றவை ஒரு திரைக்கதைக்குரிய நேர்த்தியுடன் வடிவமைக்கப்படலாம். கடந்த இரண்டு ஆண்டுளில் நடந்த ஐ.பி.எல். தொடர்களில் பெங்களூருவில் நடந்த போட்டிகளைக் கவனித்துப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. அங்கு நடந்த பெரும்பாலான போட்டிகள் எந்த அணி வெல்லும் என்பது இறுதி ஓவர் வரை கணிக்க முடியாத அளவுக்குப் பரபரப்பு மிகுந்தவையாக இருந்தன. இதற்கும் சூதாட்டப் புகார்களுக்கும் தொடர்பிருக்கும் என்று தோன்றுகிறது.

டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளில் சூதாட்ட வாய்ப்புகள் அதிகம். அதே போல ஒருநாள் போட்டிகளை விட 'டுவென்டி டுவென்டி' போட்டிகளில் சூதாட்ட வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஒருநாள் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை மாற்ற குறைந்த பட்சம் இரண்டு மூன்று வீரர்களையாவது வளைத்தாக வேண்டும். ஆனால் இருபது ஓவர் போட்டிகளில் இதற்கு ஒரே ஒரு வீரர் போதும். வெறும் 40 ஓவர்களில் மொத்தப் போட்டியும் முடிந்து விடும் நிலையில், மோசமாக வீசப்படும் ஒரு ஓவரின் மூலம் ஒரு பவுலரால் ஆட்டத்தின் முடிவையே மாற்றி விடலாம். அதே போல முக்கியமான தருணத்தில் ரன் எடுக்காமல் பந்துகளை வீணடிப்பது அல்லது வேண்டுமென்றே அவுட் ஆவதன் மூலம் ஒரு பேட்ஸ்மேனால் தன்னுடைய அணியைத் தோல்வியுறச் செய்ய முடியும். எனவே சூதாட்ட தரகர்கள் ஓர் அணியில் ஒரே ஒரு வீரரை மட்டும் வளைத்து போட்டியின் முடிவைத் தீர்மானித்துப் பெரும் தொகையைச் சூதாட்டத்தின் பின்னணியிலுள்ள பெரும் தலைகளுக்குச் சம்பாதித்துத் தர முடியும். எனவே இருபது ஓவர் போட்டிகள் சூதாட்டத்திற்கான சரியான மிகப்பெரும் ஆடுகளமாக உருவெடுத்துள்ளன.

தற்போது சிக்கியிருக்கும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களும், பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் போன்றோரையும் தாண்டி சூதாட்டத்தின் மாயவலை விரிந்துகொண்டே செல்கிறது. ஐ.பி.எல். மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வரலாறே மறுபடி தோண்டியெடுக்கப்பட்டு எழுதப்பட வேண்டிய ஒன்றென்பது வெளிச்சமாகியுள்ளது. ஜக்மோகன் டால்மியா, ஏ.சி.முத்தையா, சீனிவாசன், குருநாத் மெய்யப்பன், சரத் பவார், ராஜிவ் சுக்லா, தாவூத் இப்ராகிம், சோட்டா ஷாகில் என தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், தாதாக்களின் ஆதிக்கத்தில்தான் இந்திய கிரிக்கெட் இயங்கி வந்துள்ளது.

பி.சி.சி.ஐ. தலைவர் பதவியிலிருந்து கொண்டே சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் வணிக அணியை நிர்வகிப்பதில் பல அனுகூலங்கள் சீனிவாசனுக்கு இருந்துள்ளன. சூப்பர் கிங்ஸ் அணியின் சந்தை மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதில் கிரிக்கெட் வாரியத்தை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனியை விலக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்ட போது அதைத் தடுத்து, அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்படாமல் பார்த்துக் கொண்டவர் சீனிவாசன். அதற்குக் காரணம் தோனி மீதான பாசமோ, நம்பிக்கையோ ஆல்ல. கேப்டன் பதவியிலிருந்து தோனி நீக்கப்பட்டால் அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சந்தை மதிப்பு குறையும் என்பதே. 'ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கப்பட்டால், ஐ.பி.எல்.லிலிருந்து விலகுவேன்' என்று கூறி தோனியும் தன்னுடைய எஜமான விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.

ஐ.பி.எல். தொடர் முடிந்து இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மட்டும் ஐந்து பேர் (தோனி, ரெய்னா, முரளி விஜய், அஸ்வின், ஜடேஜா) இடம்பிடித்துள்ளனர். இதற்கும் சீனிவாசனுக்கும் தொடர்பில்லை என்று எப்படி நம்புவது? முன்பு தேவ கவுடா கொஞ்சநாள் (!) பிரதமராயிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட்டில் கர்னாடக கிரிக்கெட் வாரியத்தின் கை ஓங்கியிருந்தது. ராகுல் டிராவிட், அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேச பிரசாத், சுனில் ஜோஷி என்று இந்திய கிரிக்கெட் அணி முழுக்க கர்னாடக வாசமடித்தது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வாசமடிக்கிறது. சீனிவாசன் பதவியிலிருந்து விலகிய பின்னர் டால்மியா மீண்டும் அப்பதவிக்கு வருவார் எனத் தெரிகிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஓட்டைகளைப் பூசி மெழுக இந்தியா சிமெண்டுக்குப் பின்னர் டால்மியா சிமெண்ட் தயாராகிறது.

ஊழல் புரையோடிப் போன கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? மற்ற விளையாட்டுகளைப் புறந்தள்ளி கிரிக்கெட் இந்தளவுக்கு வளர முடிந்தது எப்படி? இந்தக் கேள்விகளுக்கான பதிலில் பார்ப்பனியத்தின் பங்கும் ஒளிந்திருக்கிறது. கிரிக்கெட் பார்ப்பனர்களின் விளையாட்டு என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்டாண்டு காலமாகப் பார்ப்பனர்களே பெரும்பாலும் இடம்பிடித்துள்ளனர். அவ்வப்போது ஒரு சில வட இந்திய இஸ்லாமியர்கள் இடம்பெறுவதுண்டு. மற்றபடி பார்ப்பனரல்லாத பிற சாதியினருக்குப் பெரும்பாலும் இந்திய கிரிக்கெட் இடம் தருவதில்லை.

பார்ப்பனர்கள் கிரிக்கெட்டைத் தங்களுடையதாக்கி அதன் ஆதிக்கத்தைப் பரவலாக்கி வந்துள்ளனர். கால்பந்து, ஹாக்கி, கபாடி போன்ற உடலுழைப்பு தேவைப்படக் கூடிய மற்ற விளையாட்டுகளில் தங்களால் சாதிக்க முடியாத உண்மையை உணர்ந்து கிரிக்கெட்டில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர். அதாவது உடல் உறுதியும் உழைப்பும் தேவைப்படும் கலை மற்றும் விளையாட்டுகளைப் பார்ப்பனர்கள் புறக்கணித்துள்ளனர். அதற்கு மாறாக உடலுழைப்பு தேவைப்படாத கர்னாடக இசை, கிரிக்கெட் போன்றவை அவர்களுக்குத் தோதானவையாக இருந்ததால் அவற்றைத் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். அப்படிப்பட்ட துறைகளில் பிற சாதியினர் சாதிப்பதைப் பெரும்பாலும் அவர்கள் விரும்பியதில்லை. (குளிரூட்டப்பட்ட அறையில் உடலைக் கூட அசைக்காமல் மணிக்கணக்கில் உட்கார்ந்தபடி விளையாடும் சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் எனும் பிராமணரால் தொடர்ந்து சாதிக்க முடிகிறது.)

பார்ப்பனர்களின் கலைகளை உயரியவையாக நம்பும் பெரும்பான்மை மக்கள் கொண்ட இந்தியாவில் ஏற்கனவே மேட்டுக்குடியினரான ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற கிரிக்கெட்டை மற்ற விளையாட்டுகளை விட உயர்ந்த ஒன்றாக மக்கள் மனத்தில் பதிய வைப்பது கடினமான ஒன்றல்ல. பார்ப்பனிய மயமாகிப் போன ஊடகங்களும் கிரிக்கெட்டைத் தூக்கிப் பிடித்து ரசிகர்களைத் தொடர்ந்து அதற்கு அடிமைகளாக்கிப் பழக்குகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தையும் பணத்தையும் கிரிக்கெட் நோக்கிக் குவிப்பதில் ஊடகங்களும் பெரும்பங்காற்றியுள்ளன. இன்னும் ஆற்றி வருகின்றன.

கிரிக்கெட்டுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் எதுவும் இந்தியாவில் பிற விளையாட்டுகளுக்கு இருந்ததேயில்லை. மற்ற விளையாட்டு வீரர்கள் என்னதான் திறமையிருந்தாலும் கோடிகளில் சம்பாதிப்பது பெரும்பாலும் இந்தியாவில் சாத்தியமில்லாதது. சானியா மிர்சா போன்றவர்கள் விதிவிலக்குகள். சானியாவின் சந்தை மதிப்புக்கு அவருடைய விளையாட்டுத் திறமை மட்டுமே காரணமல்ல. மற்ற விளையாட்டுகள் இங்கு புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் கிரிக்கெட்டும் அதனைச் சுற்றியுள்ள கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் மாபெரும் பணச்சந்தையும்தான். மற்ற விளையாட்டு வீரர்கள் நாட்டிற்காக விளையாடி வென்று திரும்பி வந்தால் அவர்களை வரவேற்கக் கூட ஆட்கள் இருப்பதில்லை. இன்னும் சில வீரர்கள் தாங்கள் வென்ற பதக்கங்களை விற்று வயிற்றுப் பாட்டைப் பார்க்கும் அவல நிலையும் இந்தியாவில் சகஜம்.

தனியார் வசம் உள்ள கிரிக்கெட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பிற விளையாட்டுகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கு அரசு முயலவேண்டும். பி.சி.சி.ஐ. எனும் அரசுக்குக் கட்டுப்படாத ஓர் அமைப்புக்காக விளையாடும் கிரிக்கெட் அணியை இந்திய அணி என்று சொல்வதே முதலில் நிறுத்தப்பட வேண்டும். கிரிக்கெட் எனும் ஆலமரத்தின் நிழலில் வேறெந்த விளையாட்டும் செழித்து வளர வாய்ப்பில்லாத நிலை மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விழுங்கிச் செரித்து மேலும் மேலும் தன்னுடல் பெருத்து வளரும் கிரிக்கெட் எனும் ஆக்டோபஸ்.

Pin It