கடந்த மே மாதம் 25 ஆம் தேதி சத்தீஸ்கரில் நக்சல்பரிகள் நடத்திய தாக்குதலில் அம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் உள்ளிட்ட 28 பேர் கொல்லப்பட்டனர். உடனடியாக ஊடகங்களில் அது பரபரப்பான விவாதமாகிவிட்டது. சில பத்திரிக்கைகள் நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கு பல்வேறு ஆலோசனைகள் கொண்ட பக்கங்களை ஒதுக்கியுள்ளன‌. ஆனால் இப் பிரச்சனை அரசு தனது பாதக செயல்களை நிறுத்தும் வரை தீரப்போவதில்லை. தனியார் மயம், தனியார் நிறுவனங்களான கார்ப்ரேட் கம்பெனிகள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் நக்சல்பாரிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக நக்சல்பாரிகள் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி, மன்னிப்பை கோரியுள்ளனர். ஆனால் கடந்த காலத்தில் ஒரு போதும் இது போன்ற தனது செயலுக்காக அரசு வருத்தப்பட்டதில்லை.

2009 டிசம்பர் மாதம் வணிகம் சார்ந்த ஒரு பத்திரிக்கையில் நான் பணிபுரிந்து வந்தபோது சத்தீஸ்கர் சென்றிருந்தேன். அங்கு அரசின் செயல்பாடுகளால் மக்கள் நக்சல்பாரிகளின் ஆதரவாளர்களாக மாறுவதை நேரில் கண்டேன். சத்தீஸ்கர் மாநிலம் பாக்சைட், நிலக்கரி உள்ளிட்ட ஏராளமான கனிம வளம் கொண்ட மாநிலம். இந்த வளங்களுக்காக இந்த மண் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அரசின் நிறுவனங்கள், டாடா குழுமம் உள்ளிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மக்களை அவர்களின் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தத் துவங்கியன‌. இப் பகுதியில் சட்டப்படி பழங்குடியில்லாதவர் நிலம் வாங்க முடியாது என்பதால், அரசு பழங்குடிகளின் நிலத்தை கையகப்படுத்தி பின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குகிறது.

இந்த அநீதிகள் யாவும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், அந்த முழக்கங்களுக்குப் பின் நிகழ்த்தப்பட்டன‌. பொது மக்கள் நிலங்களை இழந்து பெரும் துயரத்திற்கு உள்ளாயினர். அரசோ தனது சட்டத்தையும், காவல் படைகளையும் மக்களுக்கு எதிராக நிறுத்தியது. இச் செயலுக்கு எதிராக பொது மக்கள் எழுப்பும் சிறு எதிர்ப்பைக் கூட தீவிரவாதிகளின் தூண்டுதலால் எழுவ‌தாக முத்திரை குத்தியது. லட்சக்கணக்கான மக்கள் நிலங்களை இழந்து முகாம்களில் இருக்க நிர்பந்திக்கப்பட்டனர். இம் மக்களே தீவிரவாதிகளாக மாறுகின்றனர்.

நான் ஜகல்பூர் என்ற டவுனுக்கு சென்றிருந்தேன். அது பஸ்தர் மாவட்டத்தின் தண்டிவாடாவிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு டாடா ஸ்டீல் கம்பெனி தொழிற்சாலை துவங்கும் முயற்சியிலிருந்தது. அதற்காக அரசு 5,050 ஏக்கர் நிலத்தை ஐந்தாண்டுக்குள் கையகப்படுத்தி கொடுத்தது. இதனால் 10 கிராமங்களைச் சார்ந்த 1750 குடும்பங்கள் தங்களின் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். கம்பெனிக்காக நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை தருவதாக கம்பெனிகள் கூறினாலும் மக்கள் இதனை ஏற்கத் தயாராக இல்லை. இந்தியா உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என பறை சாற்றிக்கொண்ட போதும், ஜகல்பூர்வாசிகளுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக அம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூட அனுமதிக்கவில்லை. நிலத்தை இழந்த மக்கள் ஆளுனரிடம் மனு கொடுக்க இரண்டு பேருந்துகளில் பயணமான போது அவர்களை காவல்துறை தடுத்து, தாக்கி சிறைபடுத்தியது. (அதே சமயம் டாடா குழுமமோ நிலத்தை தாங்கள் கையகப்படுத்தவில்லை என்றும், அது அரசாங்கத்தின் வேலை என்றும் கூறி வருகின்றது)

நான் அங்கு சென்றிருந்த போது, ஐந்துபேர் ஒன்றாக சேர்ந்து செல்லக் கூட தடை இருந்தது. அங்கு மஸ்ரிமோரா என்ற இடத்தில் நிகழ்ந்த விநோதமான கைதினை கண்டேன். ஒரு விவசாயி தனது நிலத்தை கம்பெனிகளுக்கு விற்க மறுத்த காரணத்தால் காவல்துறையால் ஒரே வாரத்தில் மூன்று முறை கைது செய்யப்பட்டார். அவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, பூச்சிமருந்து அடிப்பது மற்றும் பக்கத்து நிலத்துக்காரருக்கும் தனக்கும் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்துக் கொண்டது கூட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என குற்றம்சாட்டப்பட்டது. அவர் வீட்டிற்கு 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்து, அவர் வீட்டுக் கதவினை உடைத்து அவரை தரதரவெனச் இழுத்து சென்றனர். அப்போதும் அந்த விவசாயி "என் நிலத்தை யருக்கும் விற்கமாட்டேன்" என்றார். பின்னிட்டு எனது நேர்காண‌லில் அவர்
"நான் எழுதப் படிக்கத் தெரியாதவன், பணத்துக்காக நிலத்தை விற்றால், விரைவில் பணம் தீர்ந்து போனபின் நான் எங்கே செல்வது, எனக்கு அரசாங்க வேலையா கிடைக்கப் போகிறது. எனது விவசாயம்தான் என்னைக் காப்பாற்றும்" என்றார். ஆனால் காவல்துறையினரோ தாங்கள் நிலப்பிரச்சனையில் தலையிடவில்லை என்றும் நக்சல்பாரிகளை தேடுவது மட்டுமே தங்கள் வேலை எனவும் கூறினர்.

நக்சல்பாரி வேட்டை என்ற பெயரில் அரசு மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை மக்கள் மீது நிகழ்த்தியுள்ளது. நான் அங்கு செல்வதற்கு ஒரு வாரம் முன்பு கோபட் என்ற கிராமத்தில் காவல்துறையினர் 16 கிராம மக்களை கொலை செய்தனர். அதில் வயதான தம்பதிகளும் அவர்களின் 25 வயதுள்ள மகளும் அடக்கம். அப் பெண் கத்தியினால் தலையில் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தாள். அவளின் இரண்டு மார்பகங்களும் அறுக்கப்பட்டிருந்தது. அப் பெண்ணின் 2 வயது குழந்தை அத் தாக்குதலில் பிழைத்துக்கொண்டது. ஆனால் அதன் கையிலிருந்த முன்று விரல்கள் வெட்டப்பட்டன. இந்த நிகழ்வை அக்கம் பக்கம் உள்ளவர்கள் கண்டுள்ளனர். அப் பெண் தப்பிக்க முயன்ற போது காவல்துறை அவளின் கால்களில் சுட்டு காயப்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் அந்த கிராமத்தவர் நக்சல்பாரி அனுதாபிகள் அல்லது தகவல் சொல்பவர்கள் என காவல்துறை கருதியதுதான். இது போன்ற நிகழ்வுகள் டாடா குழுமம், கார்ப்பரேட் குழுமங்கள் போன்றவை கடைவிரிக்க வந்ததற்குப் பின் அப் பகுதியில் சாதாரணமாக நிகழ்பவையாகிவிட்டன‌. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அரசினாலும் அல்லது நக்சல்பாரி நடவடிக்கை காரணமாகவும் தங்களின் கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு முகாம்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். நான் அங்கு சென்றிருந்த போது பஸ்தர் உள்ளிட்ட மாவட்டங்களில் 45,000 மக்கள் 23 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இன்று வரை ஒரு தரமான வாழ்க்கை அவர்களுக்கு உத்திரவாதப்படுத்தப்படவில்லை. இம் மக்கள் தங்களின் சொந்த நிலத்தில் சுயமரியாதையுடன் வாழ்ந்து விவசாயம் செய்து மற்றவருக்கும் சோறிட்ட மக்கள். அவர்கள் அரசின் தயவில் கையேந்தி வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். தரமான பள்ளிகளோ, சுகாதார வசதிகளோ ஏதுமில்லா அந்த முகாம்களிலிருந்து தங்களை யாரேனும் மீட்டு தங்களின் பழைய வாழ்க்கையைத் தர மாட்டார்களா என அவர்கள் ஏங்குகின்றனர்.

இந்த கிராம மக்கள் நக்சல்பாரிகளா அல்லது மவோயிஸ்ட் ஆதரவாளர்களா என்று யாருக்கும் தெரியாது . ஆனால் ஒன்று உறுதியாகத் தெரியும் அம் மக்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, சொந்த வாழ்விலிருந்து, மண்ணிலிருந்து, அனைத்து உரிமைகளையும் பறித்து விரட்டப்பட்டவர்கள் என்று.

அரசாங்கம் பெரும் கம்பெனிகளின் பிரதிநிதியாக, கூலிப்படைகளின் பாதுகாவலனாக செயல்படும் போது, இந்த மக்களை தங்களுக்கான நீதிக்காக போராடக்கூடாது என நாம் கூறத்தான் முடியுமா?

(4.6.2013 Deccan chronic வெளியான கட்டுரை. கட்டுரையாளர் மேகா பகரி பத்திரிக்கையாளர், அமெரிக்க ஓவர்சீஸ் பிரஸ் கிளப் விருதை தனது "இந்தியாவில் நக்சல்பாரிகள்" என்ற கட்டுரைக்காக 2011 ல் பெற்றவர்) (Twitter:@ mbahree)

தமிழில்: ச.பாலமுருகன்

Pin It