சமூகக் கட்டமைப்பு என்பது சமூக விஞ்ஞானங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பதமாகும். இது 1930 களின் பின்னர்தான் சமூக விஞ்ஞானங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இது சமூகம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது? சமூக நிறுவனங்களுக்கும் சமூகக் குழுக்களுக்குமிடையிலான தொடர்பு எவ்வாறு உள்ளது? என்பனவற்றை விளக்குவதுடன் ஒரு சமூகத்தில் காணப்படும் சந்தைமுறமை , பணிக்குழுவாட்சி, அரசியல், கலாசாரம், சமயம், பொருளாதாரஅமைப்பு, சட்டஅமைப்பு என்பனவற்றையும் உள்ளடக்குகின்றது.

சமூகக்கட்டமைப்பு எனும் எண்ணக்கருவை சமூகவியலில் அகஸ்ட் கொம்ற், எமில் டுர்ஹைம், கேபர்ட் ஸ்பென்சர், ரால்கொட் பார்சன் என்பவர்களும் மானிடவியலில் ரட்கிளிப் பிறவுண், லெவிராட்ரஸ் போன்றவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.

மிகநீண்ட கால வரலாற்றினைக் கொண்ட இலங்கை மக்களின் வாழ்வியலை நோக்கும் போது, அது மன்னர்கள், அதிகாரிகள், நிலச்சுவாந்தர்கள் என உயர் நிலையிலுள்ள நாகரிகமான மக்களின் வாழ்க்கைமுறையே அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும.; .ஆனால் இலங்கையிக் மக்கள் தொகையில் சொற்ப அளவில் பழங்குடியினத்தவர் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.

பழங்குடிகள் எனப்படுபவர்கள் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவார் குறவர்களை வனக்குறவர், நரிக்குறவர் மற்றும் குறிசொல்லும் குறவர் என மூன்றுவகைப்படுத்தலாம். இவர்கள் மூவரதும் பொருளாதார சமூகப்பண்பாட்டுக் கோலங்கள் ஒத்ததன்மையாக இருப்பினும் இவர்களது வாழ்க்கை முறை, பழக்கவழக்கம், நம்பிக்கைகள் என்பன ஒவ்வொரு வகையிலிருந்தும் வேறுபடுவதாக இருக்கின்றது.

வனக்குறவர் என பொதுவாக கூறப்படுபவர்களில் அளிகம்பை கிராம வாசிகளும் முக்கியமானவர்களாவர். இவர்களது வாழ்க்கைப்போக்கானது இலங்கையில் வாழும் ஏனைய நாகரிக மனிதர்களது வாழ்க்கைப்போக்கைவிட வேறுபட்டதாகவும் தாழ்நிலையில் இருப்பதாகவும் காணப்படுகின்றது.

எனவே இவர்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை விளக்கும் சமூகக் கட்டமைப்பினை விளக்குவதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

ஆய்வின் நோக்கமானது அளிகம்பை பிரதேசத்தில் வாழும் மக்களை சந்தித்தது அவர்களுடைய வாழ்க்கை முறைகளை பண்பாடுகளை அறிந்துகொள்வது, அவர்களுடைய தேவைகள் பிரச்சனைகள் கோரிக்கைகள் என்பனவற்றை கேட்டு அறிவது அதனை வெளியுலகத்துக்கு கொண்டு வருவது இவர்கள் இலங்கைக்கு வந்த காரணம் இவ் இடத்தைதெரிவு செய்து தமது இருப்பிடங்களை அமைத்ததன் காரணம் இவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் வழிமுறைகள் இவர்களின் பண்பாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பனவற்றை அறிந்து கொள்வதாக அமைந்திருந்தது

அளிகம்பை கிராமத்தின் அமைவிடம் பற்றி நோக்கும்போது, இந்து சமுத்திரத்தின் நித்திலம் என்று போற்றப்படும் வரலாற்றுப்புகழ் மிக்க இரத்தினதுபீபமான இலங்கையில் காணப்படும் மாகாணங்களில் ஒன்றான கிழக்குமாகணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் கிராமமே அளிகம்பை கிராமமாகும்.

இலங்கையின் மொத்தபரப்பில் 6.7% நிலப்பரப்பை உள்ளடக்கிய மாவட்டமான அம்பாறை மாவட்டமானது 4415சதுரமஅ பரப்புடையது என நிலஅளவைத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 19 பிரதேசசெயலாளர் பிரிவுகள், 16 பிரதேசசபை, 1 மாகாணசபை , 1நகரசபை, 9வட்டாரம் , 4தேர்தல் பிரிவு, 53 கிராமசேவகர் பிரிவு 698 கிராமங்கள் என்பன உண்டு. இவற்றில் ஒரு கிராமமாகவே அளிகம்பை கிராமம் குறிப்பிடப்படுகின்றது..

அக்கரைப்பற்று நகரின் தென்திசையில் சாகமம் வீதியில் கூழாவடி சந்தியினூடாக அளிகம்பை கிராமத்துக்குச் செல்லும் பிரதான பாதை உண்டு. இவ்வீதி தார்வீதியாக இருப்பினும் உள்ளே காணப்படும் சிறு வீதிகள் குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றன.

கிராமத்தின் உருவாக்கம் தொடர்பான வரலாறு

அம்பாறை மாவட்டத்தில் அளிகம்பை எனும் கிராமம் உருவாகக் காரணமாக இருந்தவர் அருட்தந்தை கூக் அவர்களாவார். இக்கிராமத்தினைச் சேர்ந்த மக்களின் பூர்வீகமானது இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மக்களோடு தொடர்புபட்டதாகும்.

1960 களில் வேட்டையாடுதலை பிரதானமான தொழிலாகக் கொண்டு நாடோடிகளாக வாழ்ந்து திரிந்த மக்களை பாதிரியார் கூக் அவர்கள் ஒன்றாக இணைத்து கத்தோலிக்கராக ஞானஸ்தானம் வழங்கி அவர்களுக்கு இலங்கைப் பிரைஜாவுரிமை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து அம்மக்களை ஒரு கிராமமாகக் குடியமர்த்தினார். அவ்வாறே இக்கிராமம் தோற்றம் பெற்றது.

இம்மக்கள் அனைவரும் அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய இடமாக விளங்கிய அளிகம்பையில் குடியேறியமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் சில ஊகங்களாகவும் உள்ளன.

அளிகம்பை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்ததன் காரணத்தால் இவர்கள் அனைவரையும் இணைத்து ஒரு கிராமம் உருவாக்குவதற்கு ஏற்ற பாவனைக்கு உட்படாத பெருநிலம் இப்பகுதியில் காணப்பட்டதால் இவர்கள் அனைவரும் இங்கேயே குடியமர்த்தப்பட்டனர் எனக் கூறப்படுகின்றது. ஆனாலும் இவர்களின் குடியமர்விற்கு வேறுபல காரணங்களும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதாவது இங்கு வாழும் மக்கள் ஆரம்பகாலத்தில் வேட்டையாடுதல், உடும்பு பிடித்தல் என்பவற்றை பிரதான தொழில்களாகக் கொண்டிருந்தனர். இதனை மேற்கொள்வதற்கு வனாந்தரமாகக் காணப்பட்ட இவ்விடம் பொருத்தமானதாக இ;ந்ததாலும் காடுபடு பொருட்களான இறைச்சி, தேன் முதலியவற்றை அதிகம் உட்கொண்டமையாலும் அதற்கு ஏற்றவகையில் இவ்விடம் காணப்பட்டதால் இங்கேயே தம்முடைய குடியிருப்புக்களை அமைத்தனர் எனவும் நம்பப்படுகின்றது.

இதைப்போலவே இம்மக்களின் மூதாதையர்கள் ஆந்திராவில் அளிகம்பை போன்ற ஒரு வனாந்தரத்திலேயே வாழ்ந்தனர் என்றும் இத்தகைய உள்ளுணர்வினைக் கொண்ட இம்மக்கள் இலங்கையிலும் இதுபோன்ற இடங்களைத்தேடி அலைந்தனர் என்றும் இவர்களை பாதிரியார் கூக் இணைத்து ஒரு கிராமமாக மாற்றி இங்கே குடியமர்த்தினார் என்றும் ஊகங்கள் உண்டு.

இவ்வாறு அளிகம்பை கிராமத்தின் உருவாக்கம் தொடர்பான வரலாறு பலவாறு இருப்பினும், இயல்பாகவே நாகரிக மனிதர்களிடமிருந்து தனித்து வாழும் தன்மையுடைய மக்கள் தனிமையான ஒரு பிரதேசத்தைக் கண்டறிந்து வாழ முற்பட்டபோதே அளிகம்பை கிராமம் உருவாகியது எனச் சுருக்கமாகக் கூறலாம்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட அளிகம்பை எனப்படும் தேவகிராமமானது 1989-1990களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியலின் ஸ்திரமற்ற தன்மை காரணமாக ஏற்பட்ட இனவாத யுத்தத்தால் கல்லியந்தீவு எனுமிடத்திற்கு இடம் பெயர்க்கப்பட்டு சுமார் பத்து வருடங்களின் பின் 2001ம் ஆண்டளவில் அளிகம்பையில் மீளக்குடியேற்றப்பட்டது. இவ் மீள்குடியேற்றத்திற்கு அப்போதைய ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த கனகசுந்தரம் அவர்கள் வீடுகளைக் கட்டிக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிராமத்தின் தோற்றப்பொழிவும் கிராமமக்களும்

அளிகம்பை கிராமம் பார்ப்பதற்கு ஓர் குடியேற்றகிராமம் போல காட்சியளிக்கும். காரணம் அந்தளவிற்கு ஒவ்வொரு வீடுகளும் மிக நெருக்கமாக கிட்டத்தட்ட ஒரே அமைப்பிலும் காணப்படும்

அளிகம்பை கிராமத்தின் தொடக்க எல்லையிலே கிராமத்துக்கு அருள்வழங்கும் கிறீஸ்தவத் தேவாலயம் காணப்படுகின்றது. இக்கிராமத்தின் தோற்றப்பொழிவினைப் பார்க்கும் போது கிராமத்தின் நான்கு எல்லைகளும் அடர்ந்த காடுகளால் ஆனது. கிராமத்தின் மத்தியில் அடர்ந்த வயல் வெளிகளும் சிறிய பாறைக்குன்றுகளும் இணைந்து கிராமத்தை அலங்கரிக்கின்றன. இக்கிராமத்தில் அவ்அப்போது கிடைக்கின்ற மழைநீரைச் சேமிப்பதற்கு குளங்களும் காணப்படுகின்றன.

இங்கு மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்வதற்காக பொதுக்கிணறுகள் காணப்படுகின்றன. கிராமத்தின் ஊடாக கொங்கிறீட் வீதி செல்கின்றது. இது 2008ம் ஆண்டு மகிந்த சிந்தனையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இதனோடு இக்கிராமத்தவரின் வைத்திய தேவைக்காக ஒரு சிறுவைத்தியசாலையும் காணப்படுகின்றது.

இங்குள்ள மக்களின் வாழ்விடங்கள் பெரும்பாலும் குடிசைகளாகவும் குறிப்பிட்ட அளவு கல்வீடுகளாகவும் காணப்படுகின்றது.வீடுகளை அமைப்பதற்கு மக்கள் களிமண், செங்கல், ஓலை, காட்டுமரங்கள் போன்றவற்றை அனேகமாகப் பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் பாறைகளின் மேலே சிறிய வீடுகளை அமைக்கும் போது மழைகாலங்களில் நீர் வழிந்தோட இலகுவாக இருக்கும் என்பதாகும்.

இவர்களுடைய வீடுகளில் சுமார் 50க்கு மேற்பட்ட வீடுகள் கல்வீடுகளாகவும் 200க்கு மேற்பட்ட வீடுகள் குடிசைகளாகவும் காணப்படுவதாகவும் கல்வீடுகள் வீடமைப்புத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகவும் அளிகம்பை கிராமத்தலைவர்(2010) மு.இராசகுமாரின் மனைவி இ.வசந்தா என்பவர் தெரிவித்தார்.

இக்கிராமத்தில் வாழும் மக்களைப்பற்றி நோக்கின், இவர்கள் ஒற்றுமையுணர்வு அதிகம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக வேலிகள் அமைக்கப்படாமல் காணப்படும் இவர்களின் குடியிருப்புக்களைக் குறிப்பிடலாம்.

அளிகம்பை கிராமத்தில் சுமார் 1250க்கு மேற்பட்ட மக்களைக்கொண்ட 280க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆரம்பத்தில் நாடோடிகளாகவே வாழ்ந்தனர். இவர்கள் இந்தியாவின் ரேணிகுண்டா எனும் இடத்தில் வாழும் மக்களின் சாயலை ஒத்தவர்கள். இவர்கள் ஆந்திராவில் இருந்து நாடோடிகளாக வருகைதந்த பழங்குடி மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மாற்ற எண்ணிய பாதிரியார் கூக் அவர்கள் அளிகம்பை எனும் இடத்தில் 1961ம் ஆண்டு புனித சவேரியார் தேவாலயத்தை அமைத்து அதனோடு இணைத்து சில குடிசைகளையும் இணைத்து இம்மக்களைக் குடியமர்த்தியதாக பேராசிரியர் க. குகபாலன் “இலங்கையில் பழங்குடிகள்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடைய வாழ்வியலைப்பற்றி நோக்கின், இவர்கள் உலகிலுள்ள நாகரிகமான மனிதர்களை விட்டுப் பிரிந்து வாழ்பவர்களாக ஆரம்பகாலத்தில் காணப்பட்டனர். அப்போது பாசிமணி கொண்ட மாலைகளை அணிந்தனர். ஆனால் இவர்கள் இன்று ஓரளவு நாகரிகமாக வாழப்பழகியுள்ளனர்.

இம்மக்கள் மத்தியில் சமயம், பண்பாடு, வணக்கமுறை, கல்வியறிவு என்பன தோன்றக் காரணமாக இருந்தவர்களாக பாதிரியார் கூக், பாதிரியார் சாமிநாதன், பாதிரியார் டயஸ், பாதிரியார் சொய்சா, பாதிரியார் பிலிப்ஸ், பாதிரியார் நிக்ஸன் போன்ற பலர் குறிப்பிடப்படுகின்றனர்.

இத்தரவுகளை அடிப்டையாகக் கொண்டு இக்கிராமத்தின் சமூகக்கட்டமைப்பினை ஆராய்வதற்கு இக்கிராம மக்களின் உறவுமுறை எவ்வாறு காணப்படுகின்றது? இவர்கள் எச்சமயத்தைப் பின்பற்றுகின்றனர்? இவர்கள் மத்தியில் குடும்ப அமைப்பு எவ்வாறு காணப்படுகின்றது? எவ்வாறான தொழில்களை மேற்கொள்கின்றனர்? இவர்களிடம் எவ்வாறான பழக்கவழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன? இவர்கள் மத்தியில் ஒழிந்திருக்கின்ற நம்பிக்கைகள் எவை? இக்கிராம மக்களிடையே சாதிப்பாகுபாடு எவ்வாறு உள்ளது? என்பனவற்றை அறிதல் அவசியமாகின்றது. இவற்றைக்கொண்டு அளிகம்பை கிராமத்தின் சமூகக்கட்டமைப்பை பின்வருமாறு ஆராயலாம்.

மதம்

அளிகம்பை கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் அனைவருமே உரோமன் கத்தோலிக்க மதத்தினைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் இவர்களின் உண்மையான மதம் இதுவல்ல. காரணம் இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் மூதாதையர்கள் இக்கிராமதத்லே வந்து குடியமர்வதற்கு முன்னர் இந்துமதம் முதலிய பிறமதத்தை தழுவியவர்களாகவே காணப்பட்டனர். இவர்களை ஒன்றாக இணைத்து குடியேற்றிய பாதிரியார் கூக் அவர்களே அம்மக்கள் அனைவரையும் ஒரே மதத்திற்கு மாற்றினார். இதன்பின்னரே இன்றுள்ள மக்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாகவே உள்ளனர்.

இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தமது ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக அக்கிராமத்திலுள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு செல்வது கட்டாய கடமையாகின்றது. இவ்வழிபாட்டின் பின்னர் மக்களுடன் கலந்துரையாடவேண்டிய விடயங்களைப் பாதிரியார் கலந்துரையாடுவார்.

இக்கிராமத்தவர்கள் தமது மதத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர்கள். அத்தோடு அன்று அருட்தந்தையாக இருந்த கூக் என்பவர் முதல் இன்று அருட்தந்தையாக இருக்கின்ற நிக்ஸன் வரைக்கும் இக்கிராமத்துக்கு பணியாற்றிய மதப்பெரியார்கள் அனைவரையும் மக்கள் மதித்து நடப்பது குறிப்பிடத்தக்கது.

சாதி

இக்கிராமத்தினைச் சேர்ந்த மக்களிடம் இன்று சாதிப்பாகுபாடு காணப்படுவதாக ஆய்வு மேற்கொண்ட போது எந்த தகவலும் அறியப்படவில்லை. ஆனால் அளிகம்பை கிராமத்தவர்கள் குடியமர்த்தப்பட்டபோது அவர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடு இருந்ததாக மக்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழிக்கட்டமைப்பு

அளிகம்பை கிராமத்தில் காணப்படும் மக்கள் பயன்படுத்தும் மொழியைப்பற்றி நோக்கின், இவர்களுடைய தாய்மொழி தெலுங்கு ஆகும். இதனை சாய்பாபாவின் மொழி என்றும் கூறுகின்றனர். இவர்கள் தாய்மொழி தெலுங்காக இருந்ததாலும் தமிழ் மொழியையும் நன்கு அறிந்தவர்களாக இம்மக்கள் உள்ளனர். ஆய்வுக்காகச் சென்றபோது இக்கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் தமிழிலேயே உரையாடினர். காரணம் இக்கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் தாய்மொழியாக தெலுங்கினைக் கொண்டிருந்திருந்தாலும் தமிழ்மொழி பேசும் மக்களுக்கு அருகில் இருப்பதால் தமிழ்மொழியையும் பேசுகின்றனர்.

இங்குள்ள மாணவர்கள் பாடசாலையிலே தமிழ் மொழியிலேயே கல்வியைத் தொடர்கின்றனர். ஆனால் வீடுகளில் பெற்றோருடன் உரையாடும் போது தெலுங்கிலேயே உரையாடுகின்றனர். இது இவர்களுக்கு நடைமுறைச்சிக்கலைக்கூடத் தோற்றுவிக்கின்றது. அதாவது வீட்டிலே ஒரு மொழியும் கல்விக்காக ஒரு மொழியும் பயன்படுத்துவதால் இவர்களுக்கு சிரமமாக உள்ளதாக இம்மக்கள் தெரிவித்தனர்.

இக்கிராம மக்களின் இன்றைய தலைமுறையினர் தமிழ் , தெலுங்கு என்பன மட்டுமன்றி ஆங்கிலம் , சிங்களம் என்பனவற்றையும் பேசக்கூடியவர்களாக காணப்படுகின்றனர்.

தொழிலும் பொருளாதாரமும்

அளிகம்பை கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் ஆற்றும் தொழில்கள் பற்றி நோக்கின், இவர்கள் பிரதான தொழிலாக இன்று விவசாயத்தினை மேற்கொள்கின்றனர். ஆனால் இவர்களின் பாரம்பரியமானதும் பரம்பரையினர் மேற்கொண்டதுமான தொழில் உடும்பு பிடித்தலாக உள்ளது. இதையும் இன்றுள்ள சிலர் வேட்டை நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளதும் கண்கூடாக அறிந்த ஒன்றாகும். இதற்குச் சான்றாக இக்கிராமத்தில் நாம் களப்பயணத்தில்  இதைவிட இக்கிராமத்து ஆண்கள் வயலுக்கு வரம்பு கட்டுதல், கூலி வேலை, மீன் பிடித்தல், விறகு வெட்டுதல் போன்ற தொழில்களில் பெண்கள் புல் பிடுங்குதல், நாற்று நடல், அரிவு வெட்டல், துணி தைத்தல், கதிர்சேகரித்தல் போன்ற தொழில்களிலும் அளிகம்பை கிராமத்தைச் சேர்ந்த சிலர் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் உள்ளனர். உதாரணமாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர், பேருந்துச்சாரதி போன்றவர்களைக் கூறலாம்.

சில ஆண்களும் பெண்களும் தொழில் நிமிர்த்தம் அக்கரைப்பற்று நகரப்பகுதி, வெலிகந்தை , மட்டக்களப்பு போன்ற வெளிமாவட்டங்களிலும் சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளிலும் சென்று வேலை செய்வதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கிராமத்தின் பொருளாதார நிலமையை ஆராய்கையில், ஏனைய கிராமங்களைவிட அளிகம்பை கிராமமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமமாகவே காணப்படுகின்றது. காரணம் இங்குள்ள கிராம மக்கள் ஏனைய கிராமத்தவர்களிடமிருந்து தனித்து வாழும் இயல்புடையவர்களாக இருப்பதாலும் ஏனைய இனத்தவர்கள் இவர்களை வேற்று இனத்தவராகக்கருதி வெறுத்து ஒதுக்குவதாலும் தொழில் ஸ்தாபனங்களில் கேலி செய்வதாலும் இவர்களால் நிம்மதியாகத் தொழில் செய்யமுடிவதில்லை என இங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

எனவே அவர்கள் தாமாகவே மேற்கொள்ளும் வேலைகளில் அவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே உள்ளனர்.

கல்விநிலை

அளிகம்பை கிராமமக்களின் கல்வி நிலை பற்றி நோக்கின், இவர்களுடைய கல்விநிலை ஆரம்ப காலத்தை விட இன்று உயர்ந்துள்ளது என்றே கூறலாம். காரணம் இக்கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் கல்வியறிவு குறைவானவர்களாகவே உள்ளனர். இதற்கு உதாரணமாக நான் சந்தித்த ராமக்கா எனும் பெண்மணி தன் பெயரை எழுதக்கூடத் தெரியாமல் இருந்ததையும் அவருடைய தாயாருக்கு வயது எத்தனை என்று தெரியாமல் இருந்ததையும் குறிப்பிடலாம்.

ஆனால் இன்று இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கல்விநிலையில் மேம்பட்டவர்களாக உள்ளனர். இதற்கு உதாரணமாக இக்கிராமத்தினைச் சேர்ந்த சொய்சா என்பவர் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்தமையையும் எலிசபெத் எனும் ஆசிரியர் அம்பாறை மாவட்டத்தில் கல்வி கற்பிப்பதையும் குறிப்பிடலாம்.

இக்கிராமத்தினைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தமது கற்றல் செயற்பாட்டினை அங்குள்ள பாடசாலையிலேயே மேற்கொள்கின்றனர். இதைத்தவிர கா.பொ.த சாதாரணதரம் மற்றும் க.பொ.த உயர்தரம் கற்கும் இக்கிராமத்து மாணவர்கள் தமது உயர்கல்வியை அக்கரைப்பற்று, பண்டாரவெல, மட்டக்களப்பு, இந்தியா போன்ற இடங்களில் விடுதியில் தங்கியிருந்து மேற்கொள்வதாக இக்கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

இக்கிராமத்தினைச் சேர்ந்த பல மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் 2010ம் ஆண்டு சித்தியடைந்துள்ளதோடு சிலர் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அளிகம்பை கிராம மக்களின் கல்விநிலை உயர்வுக்கு, இக்கிராமத்தினைச் சேர்ந்த பாதிரியார்களின் பங்களிப்பு பிரதானமானதாகும். அதாவது இக்கிராமத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கு தற்போதுள்ள நிக்சன் பாதிரியார் ஆங்கிலம் , கணிதம் போன்ற பாடங்களைக் கற்பித்துத் தருவதாகவும் இதன்மூலம் தமது கல்வியறிவை வளர்த்துக்கொள்ள முடிவதாகவும் இங்குள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

உறவுமுறை

அளிகம்பை கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் மத்தியில் காணப்படும் உறவுமுறையின் கட்டமைப்புகளை நோக்குமிடத்து, இவர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற ரீதியில் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

இங்கு குடும்பங்களானது தனிக்குடும்ப அமைப்பிலேயே காணப்படும். அதாவது திருமணமான பிள்ளைகள் ஆண்களானாலும் சரி பெண்களானாலும்சரி பெற்றோரைவிட்டு பிரிந்து தனியான ஓர் வதிவிடத்தினை அமைத்து வாழ்கின்றனர். ஆனாலும் அவ்வாழிடம் பொதுவாக பெற்றோரின் வீடுகளுக்கு அண்மையிலேயே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமைக்கு காரணம் யாதென ஆராய்ந்த போது பெற்றோர்கள் கூறியது யாதெனில், நாம் அனைவரும் ஒரவரில் இருந்து ஒருவர் வேறுபடாத ஒற்றுமை உணர்வினைக் கொண்டு இருந்ததால் அருகருகிலேயே வாழிடங்களை அமைத்து வாழ்ந்து வருவதாகவும் தமது பிள்ளைகள் விரும்பிய பெண்ணை மணம்முடிப்பதற்கு பெற்றோர்கள் ஆகிய நாம் பூரண சம்மதம் வழங்குவதாலும் பிள்ளைகள் தனித்து வாழ்ந்தால் தமது குடும்ப இலாப நட்டங்களை தாமே நிர்வகித்துக்கொள்வர் என்பதாலும் வயதான பெற்றோரை பராமரிப்பது இலகுவாக இருக்கும் என்பதாலும் பெற்றோர்களாகிய தமது வதிவிடங்களுக்கு அண்மையில் தனியான வீடுகளில் பிள்ளைகள் வசிப்பதாக கூறினர்.

இக்கிராமத்தவர்கள் ஒரு குடும்பத்தில் ஏதாவது நிகழ்வு நடந்தால் அதனை தன் குடும்ப நிகழ்வாக ஏற்று நடக்கும் இயல்புடையவர்களாக இருந்தனர். தம் இரத்தஉறவு அல்லாதவர்களுடனும் இரத்தஉறவினரைப் போல அன்போடு உறவாடினர்.

திருமணமான சகோதரியின் கணவனை “மாமா” என அழைத்தனர்.

திருமணமானவர்கள் மனதளவில் ஒத்துப்போகாத சந்தர்ப்பத்தில் பிரிந்தும் வாழ்ந்தனர். இவர்களில் சிலர் முறையான விவாகரத்தினைப் பெற்றும் உள்ளனர்.

சடங்குகள்

சடங்குகள் எனப்படும் போது அதனுள் பிறப்பு, ருதுவாதால், திருமணம், இறப்பு போன்ற வாழ்வின் அனைத்து அம்சங்களும் உள்ளடங்குகின்றன. இதில் ஒவ்வொரு அம்சங்களையும் மேற்கொள்ளும் போது பல்வேறு சடங்குகள் இடம்பெறுகின்றன. இவை ஒவ்வொன்றையும் பின்வருமாறு விளக்கலாம்.

குழந்தைப்பிறப்பு எனும் போது குழந்தையைப் பெற்றதாய்க்கு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பத்தியமான உணவை வழங்கும் முறை காணப்பட்டது. குழந்தையை நீராட்டல், உணவ+ட்டல் போன்றவற்றில் சில சம்பிரதாயங்கள் இடம் பெறுகின்றனர்.

பெண்பிள்ளை ருதுவான போது அப்பிள்ளையை ஐந்து நாட்கள் வீட்டில் மறைவான ஒரு இடத்தில் வைத்திருப்பர். அங்கே பெண்ணுக்கு உணவு வழங்குபவர்களாகவும், பெண்ணுக்குத் தேவையான சேவைகளைச் செய்பவர்களாகவும் சென்று பார்ப்பவர்களாகவும் பெண்கள் மட்டும் காணப்பட்டனர். ருதுவான பெண்ணுக்கு மதுபானம் கொடுக்கும் மரபும் இக்கிராமத்தி;ல் காணப்பட்டது. இவர்கள் மத்தியில் பூப்புனித நீராட்டு விழாவும் சிறப்பாக இடம் பெறுகின்றது.

திருமணம் எனும்போது அங்கு பல்வேறு சடங்குகள் இடம்பெறுகின்றது. இக்கிராமத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டதாகவும் ஊரில் உள்ளவர்கள் முன்னிலையில் இடம் பெறுகின்றது அதாவது இங்கு திருமணம் என்பது மணமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இடம்பெறும். திருமணத்தின் போது வீடு, நிலம் என வசதியுள்ள பெற்றோர் அவற்றை தம் பெண்பிள்ளைகளுக்கு சீதனமாக வழங்குகின்ற மரபும் உண்டு.

திருமணமானது அளிகம்பை கிராமத்தில் இதுவரை காலமும் இளவயதிலேயே இடம்பெற்று வந்துள்ளது. ஆனால் இன்று அந்நிலமை மாற்றத்துக்குள்ளாகி வருகின்றது. இது குறித்துக் கேட்டபோது இக்கிராமத்துப் பெரியவர்கள் கூறியது யாதெனில் “1990 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியலின் அசாதாரண சூழல் காரணமாக தம்பிள்ளைகளுக்கு இளவயதிலேயே திருமணம் செய்து வைத்தோம்” என்பதாகும்.

திருமணத்தின் போது ஆரம்ப காலத்தில் மணமகள் வீட்டார் மணமகனுக்கு ஆடு , பாம்பு, வேட்டை நாய் முதலான விலங்குகளை சீதனமாக வழங்கினர் என்றும் தாலியாக முத்துமாலையை அணிவித்தனர் என்றும் இக்கிராமத்தினைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தெரிவித்தார்.

திருமணத்தின் போது மொய் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், பாட்டுப்போட்டு விருந்தினர்கள் ஆடல், மாலை நேரம் மணமக்கள் பெண்வீட்டுக்குச் செல்லல், இரவு விருந்தினர்கள் மதுபானம் அருந்துதல் போன்ற சடங்குகள் இடம் பெறுவதும் குறிப்பிடப்படுகின்றனர்.

பழக்கவழக்கங்கள்

பழக்கவழக்கம் எனும்போது மக்கள் பாவிக்கும் ஆடை அணிகலன்கள், உண்ணும் உணவுகள், பெயர் வைக்கும் முறை, வைத்தியமுறை தொழில் முறை என்ற பல விடயங்கள்;

.இக்கிராமத்தவர்கள் வீட்டில் தெலுங்கு பேசுததோடு பாடசாலையில் கல்வி மொழியாக தமிழ், ஆங்கிலம் என்பனவற்றைப் பயில்கின்றனர்.

தமது கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காடுகளில் வேட்டையாடச் செல்கின்ற போது வேட்டை நாய்களைக் கூட்டிச் செல்கின்றனர். அத்தோடு மிருகங்கள் அஞ்சி ஓடும் வகையில் பெரிய ஒலிகளை எழுப்புகின்றனர்.

இவர்கள் தங்களுடைய பிரதான உணவாக கூடு எனப்படும் சோற்றினை உட்கொள்கின்றனர். இதைவிட உடும்பு இறைச்சி, மான் இறைச்சி, பன்றி இறைச்சி, கத்தரிக்காய், வெண்டிக்காய், பூசணி, நண்டு, இறால், மீன் முதலியவற்றினால் ஆக்கப்பட்ட கறிகள் என்பனவற்றையும் உட்கொள்கின்ற பழக்கமுடையவர்கள்.

பழங்களாக மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம் முதலானவற்றை அதிகம் விரும்பி உண்ணும் பழக்கமுடையவர்கள்.

ஆரம்ப காலத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூலி வேலைக்குச் செல்லும் போது வீட்டின் முகட்டில் ஒரு குடிலை அமைத்து அதில் பாதுகாப்பாக தம் பிள்ளைகளை வைத்துச் செல்லும் பழக்கமுடையவர்களாக இருந்தனர் என்பதை இக்கிராமத்து மூதாட்டி ஒருவரின் உரையாடலின் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது..

இக்கிராமத்தின் மக்களைப்பொறுத்தவரை பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் போது ஆந்திரா மரபுடன் கிறீஸ்தவ மரபையும் இணைத்து பெயர் வைக்கும் முறை காணப்பட்டது. இன்றைய காலத்தில் கிறீஸ்தவ முறைப்படியான பெயர்களே முற்றிலும் காணப்படுகின்றது. பிள்ளை பிறந்தவுடன் வைக்கின்ற பெயரே ஞானஸ்தானம் பெற்றபின்பும் நிலைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கிராமத்தவர்கள் பல்லில் நோய்க்கிருமியின் தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக புகையிலைக் காம்பினால் பல்தீட்டும் பழக்கமுடையவர்.

இக்கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வெற்றிலை, பாக்கு, புகையிலை என்பவற்றை அதிகம் மெல்லும் பழக்கமுடையவர்கள். முதியவர்கள் மட்டுமன்றி இளையவர்களும் வெற்றிலை மெல்லும் பழக்கமுடையவர்கள் என்பதை களப்பயணத்தின் போது உற்றுநோக்கியதிலிருந்து அறிந்து கொள்ளமுடிந்நது.

மாற்றங்கள்

அளிகம்பை கிராம மக்களிடம் ஆரம்ப காலத்தில் இருந்த ஒவ்வொரு அம்சங்களும் இன்று பல மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. இக்கிராமத்தின் சமூகக்கட்டமைப்பில் ஆரம்ப காலத்தினைவிட இன்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று ஆரம்ப காலத்தில் காணப்பட்ட அளிகம்பை கிராமம் சார்ந்த தரவுகள், தகவல் ஆகியவற்றையும் அக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அறியமுடிந்தது. அவற்றைப் பின்வருமாறு ஆராயலாம்.

அளிகம்பை கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் கிராமத்தின் தோற்றம், மக்களின் பொருளாதாரநிலமை, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, மக்களின் தோற்றப்பொழிவு குடும்கக்கட்டமைப்பு என்ற ஒவ்வொரு அம்சங்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்.

ஆரம்பகாலத்தில் அடர்ந்த காடாக காணப்பட்;ட அக்கிராமமானது இன்று ஆங்காங்கே வயல்நிலங்களைக் கொண்ட விருத்தியடைந்த கிராமமாக காட்சியளிக்கின்றது.

குடிசைகள் நிரம்பிக் காணப்பட்ட இக்கிராமத்தில் இன்று பல கல்லால் அமைந்த வீடுகள் காணப்பபடுகின்றன.

மக்கள் முந்தைய காலத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு அனேகமாக நடந்தே சென்றுள்ளனர். அத்தோடு மிக நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் எனில் “ரஜபடகம்” எனப்படும் சாக்கிலே பொருளையோ அல்லது மக்களையோ வைத்து தோழில் தூக்கிச் செல்லும் சாதனத்தின் உதவியுடன் தம் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்தனர். இம்முறையை இன்றும் சில மக்கள் பயன்படுத்தி வந்தாலும் இக்கிராம மக்கள் மத்தியில் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இன்று உழவுஇயந்திரம், துவிச்சக்கர வண்டி, பொதுச்சேவை பேருந்துகள், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள் என்ற பல வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரம்ப காலத்தினை விட இன்று திருமணத்தின் போது சீதனமாக கொடுக்கும் பொருளின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதாவது முன்னைய காலத்தில் வேட்டையாடுதலை இக்கிராம மக்கள் பிரதான தொழிலாகக் கொண்டிருந்த காரணத்தினால் திருமணத்தின்போது பெண்வீட்டார் சீதனமாக விலங்குகளையே அதிகம் கொடுத்துள்ளனர். ஆனால் இன்று இதன் பெறுமதியை விட ஒப்பீட்டளவில் அதிகமான வயல், வீடு, காணி, பணம் என்பவற்றை தமது தகுதிக்கு ஏற்ற வகையில் வழங்குகின்ற தன்மை காணப்படுகின்றது.

இக்கிராம மக்கள் கையெழுத்துக்குப்பதிலாக கைரேகை அடையாளம் வைக்கும் காலம்மாறி இன்று ஆங்கிலம், தமிழ், சிங்களம் எனும் மொழிகளில் கையெழுத்து வைக்கக் கூடியவர்களாகவும் பல நூல்களை வாசிக்கக் கூடியவர்களாகவும் பன்மொழி பேசக்கூடியவர்களாகவும் உருவாகியுள்ளதிலிருந்து இக்கிராமத்தில் ஏற்பட்ட கல்விநிலை தொடர்பான மாற்றத்தை அறியலாம்.

இதுபோன்று ஆரம்ப காலத்தில் காணப்பட்ட நிலமைகள் இன்று பல மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதும் அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சமூகக் கட்டமைப்புசார் குறைபாடுகள்

பல கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்ட அளிகம்பை கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பல தேவைகள் இருப்பதும் அவர்கள் சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதும் சில விடயங்கள் இக்கிராம மக்களுக்கு சவாலாக இருப்பதும் கட்டமைப்பு சார் குறைபாடுகள் எனப்படுகின்றன. இவை இக்கிராமத்துக்கு களப்பயணம் மேற்கொண்டு மக்களோடு கலந்துரையாடியதனூடாக அறியப்பட்டவையாகும்

இக்குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை உரியமுறையில் நிவர்த்தி செய்யக்கூடியவர்களுக்கு தெரியப்படுத்தி அதன்மூலம் இக்கிராம மக்கட்சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவேண்டியதும் ஆய்வின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

அந்தவகையில் இக்கிராமத்தில் இதுவரை அறியப்பட்டிருந்த – ஆய்வின் போது இனங்காணப்பட்டிருந்த - மக்களால் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகளாக பின்வருவனவற்றைப் பட்டியற்படுத்தலாம்.

அளிகம்பை கிராம மக்களுக்கு திடமான மொழி ஒன்று இல்லாமை பிரதானமான பிரச்சினை என இக்கிராமத்தைப்பற்றி ஏற்கனவே ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனான சுது என்பவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இக்கிராமத்தவர்கள் பேசுவது ஒரு மொழியாகவும் கற்பது ஒரு மொழியாகவும் இருக்கின்றது. இவர்களுடைய தாய்மொழியாகிய தெலுங்கு ஒரு பிரதான மொழியாக இலங்கையில் பிரகடனப்படுத்தப்படாமல் இருப்பதன் காரணமாக எழுத்தறிவற்ற இக்கிராமத்தவர்கள் தமிழ் மொழியைப் பேசினாலும் பொது இடங்களில் எந்தவொரு அரசகருமத்திற்கும் பிறரைத்தங்கியிருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது” என்றார்.

அளிகம்பை கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் அளிகம்பையில் குடியமர்த்தப்பட்டு இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளபோதும் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் வசதி, மருத்துவ சுகாதார வசதி என்பன பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன.

இக்கிராமத்தில் கிட்டத்தட்ட 300க்கு உட்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால் அவ்வளவு மக்களுடைய நீர்த்தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு இங்கு நீர்நிலைகள் காணப்படாமை பிரதானமான குறைபாடாகும். இக்கிராமத்தில் காணப்படுகின்ற பொதுக்கிணறுகளில் மக்கள் மழைகாலத்தில் நீரைப்பெறுவதோடு கோடை காலங்களில் குளம், ஆறுகளிற்குச் சென்றே தம் நீர்சார்ந்த தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் இக்குளங்களையும் இன்று வயல் செய்வதற்காகச் சுரண்டுகின்றனர் என்றும் அக்கிராமமக்கள் தெரிவித்தனர்.

இங்குள்ள பொதுக்கிணற்றினை மக்கள் குடிநீரைப் பெறுவதற்காக மட்டுமன்றி குளிப்பதற்காகவும் உடுப்புத்துவைப்பதற்காகவும் பயன்படுத்துவதால் சவர்க்காரம் கலந்த மாசடைந்த நீர் மீண்டும் மீண்டும் கிணற்றிற்குள் செல்வதால் குடிநீர் மாசடைவதை கண்னூடாகக் காணமுடிந்தது.

இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு மலசல கூடங்கள் இல்லாமையாலும் அதிகமான சிறுவர்கள் தன்னிச்சையாக வெளிஇடங்களில் சென்று மலம், சலம் கழிப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது.

நோய்க்கிருமியின் தாக்கத்தால் மக்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் சிகீச்சை பெறுவதற்கு அக்கரைப்பற்று பகுதிக்கே செல்லவேண்டியுள்ளது. காரணம் இக்கிராமத்தில் சிறு வைத்தியசாலையொன்றே காணப்படுகின்றது. அதன்மூலமாகவும் போதுமான வைத்திய சேவை கிடைப்பதில்லை என மக்கள் தெரிவித்தனர்.

சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் தமது போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான பொதுப்போக்குவரத்து சாதனங்கள் சேவையில் இங்குள்ள மக்களிற்கு மின்சார வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. அதாவது இக்கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறப்படுகின்றது. ஏனைய இடங்களில் மின்சாரம் இல்லை. இதனால் மின்வழி சாதனங்களை இயக்கமுடியாத இக்கிராம மக்கள் ஏனைய கிராமத்தவர்களைவிட தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கியுள்ளனர். இது இக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சினையாகும்.

இக்கிராமத்தினைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மது போதைக்கு அடிமையாவதும் அதன்மூலம் குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட்டு மணமுறிவு, தற்கொலைகள் என்பன ஏற்படுவதும் இக்கிராமத்தில் உள்ள மக்கள் மூலம் அறியப்பட்ட முக்கியமான பிரச்சினைகளாகும்

இதுமட்டுமன்றி இக்கிராமத்தினைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு நியாயமான வேலை கிடைக்காமையும் வேலை செய்பவர்கள் பிறசமூகங்களில் சென்று வேலை செய்யும் போது குறவர்கள் என கேலிசெய்யப்படுவதும் இக்கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரதானமான சவால்களாகும். இவற்றின் காரணமாக இக்கிராம மக்கள் ஏனைய மக்களிடமிருந்து பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

இத்தகைய பல பிரச்சினை இருந்தாலும் இக்கிராம மக்கள் வேறு இடங்களுக்குச் சென்று குடியேறவும் விரும்பவில்லை. இது குறித்துக் கேட்டபோது அவர்கள் “ இங்கே வறுமை இருந்தாலும் அன்றாடம் கூலிக்கு உழைத்தாலும் சுய கௌரவத்துடனும் மகிழ்வுடனும் மன நிம்மதியுடனும் வாழலாம்” எனக்கூறுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் இவர்களின் முக்கியமான கோரிக்கை யாதெனில் தங்களிடம் காணப்படும் பிரச்சினைகளும் தேவைகளும் வெளியுலகிற்கு அறிவிக்கப்பட்டு அதன்மூலம் தமக்கு சில உதவிகள் கிடைக்கவேண்டும் என்பதாகும்.

எனவே மேற்கூறப்பட்டவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து ஆய்வுப்பிரதேசமாகிய அளிகம்பை கிராமத்தின் சமூகக்கட்டமைப்பினை கிராமத்தின் அமைவிடம், கிராமத்தின் தோற்றப்பொழிவும் கிராமமக்களும், உறவுமுறை, மதம், சாதிக்கட்டமைப்பு, தொழிலும் பொருளாதாரமும், சடங்குகள், பழக்கவழக்கங்கள், கல்விநிலை, மொழிக்கட்டமைப்பு, மாற்றங்கள் என்ற தலைப்பின் கீழ் ஆராயப்பட்டது. இதனோடு இக்கிராம சமூகக்கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இவற்றிலிருந்து இக்கிராமத்து மக்களின் உள்ளுணர்வு, சமூகக் கட்டமைப்பு என்பன பாரதநாட்டின் ஆந்திராப்பகுதியில் வாழும் மக்களுடன் ஒத்திருப்பதையும் இவர்கள் ஆரம்ப காலத்தைவிட இன்று மாற்றமடைந்த சமூகக்கட்டமைப்பில் வாழ்கின்றனர் என்பதையும் இக்கிராம மக்கள் ஏனைய நாகரிக மக்களோடு போட்டிபோடும் அளவிற்கு திறமையும் வீரமும் மிக்கவர்களாக உள்ளனர் என்பதையும் இவர்களுடைய சமூகக்கட்டமைப்பானது ஏனைய சமூகத்தவர்களிடம் ஓர் ஒற்றுமை கலந்த சமூகக்கட்டமைப்பினை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக அமைகின்றது என்பதையும் அறிந்து கொள்ளமுடிந்தது.

அதுமட்டுமன்றி அளிகம்பை கிராம மக்களுக்கும் சமூக நிறுவனங்கள் மூலம் ஏனைய பிரதேச மக்களுக்கு கிடைப்பதைப் போன்ற ஆதரவும் சலுகைகளும் பாரபட்சமின்றி கிடைக்குமானால் இவர்களுடைய எதிர்பார்ப்பும் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமானால் இவர்களின் வாழ்வு இன்னும் பல மாறுதல்களைக் கண்டு சிறப்புறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

Pin It