மாதுரி கிருஷ்ணமூர்த்தி சமூக ஊழியர், காந்தியவாதி, மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) மத்திய பிரதேச அமைப்பில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர். நமது நாட்டின் தலைமை விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் எஸ்.கிருஷ்ணசாமியின் மகள். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்களின் சனநாயக உரிமைகளுக்காக சகிரித் ஆதிவாசி தலித் சங்கர்தன் (Jagrit Adivasi Dalit Sanghatan) என்ற அமைப்பினை நடத்தி வருகின்றார். இவர் ஒரு தமிழ்ப் பெண். கடந்த 16.5.2013 ஆம் தேதி இவர் மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்கினை வாபஸ் பெறுவதற்காக நீதிமன்றத்தில் காவல் துறை ஆஜராக வேண்டிக் கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரானவரை நீதிபதி காவல்துறை வழக்கினை வாபஸ் பெற உரிய காரணம் கூறவில்லை எனக்கூறி மாதுரியை கைது செய்து சிறை படுத்தியுள்ளார்.

கடந்த 11.11.2008 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தின் சுக்பூரி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான பனியாபாய் தனது பிரசவத்திற்காக 15 மைல் மாட்டுவண்டியில் பயணம் செய்து மேனிமட்டா என்ற ஊரில் உள்ள ஆரமப சுகாதார நிலையத்தில் அவளின் மாமனார் மற்றும் மாமியாரால் சேர்க்கப்பட்டாள். அடுத்த நாள் அவளுக்கு பிரசவ வலி கண்ட சமயம் மருத்துவமனை கம்பவுண்டர் மற்றும் நர்ஸ் ரூபாய் 100 லஞ்சமாகக் கேட்டுள்ளனர். கையில் வெறும் 10 ரூபாய் வைத்துள்ள பழங்குடிகளால் பணம் தர இயலவில்லை. உடனடியாக பிரசவம் பார்க்கமுடியாது என மருத்துவமனையிலிருந்து விரட்டப்படுகின்றார் அப் பெண்மணி. நடக்கக்கூட இயலாத நிலையில் கர்ப்பிணிப்பெண் தவழ்ந்தபடி அங்கிருந்து வெளியேருகின்றனர். மார்க்கட் பகுதிக்கு சென்று லஞ்சம் கொடுக்க பண உதவி கோருகின்றனர். இதற்கிடையில் அங்கிருந்த நானா என்ற பெண் இவர்களுக்கான நியாய‌த்தைக் கேட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க மருத்துவனைக்கு அழைத்து வருகின்றாள். மருத்துவம‌னை வாசலிலேயே பனியாபாய்க்கு பிரசவம் நிகழ்கிறது. மாமனாரின் வேட்டியை மறைப்பாக்கி சாலையில் பிரசவம் பார்கின்றனர் உதவிக்கு வந்த பெண்ணும், மாமியாரும்.

இந்த நிகழ்வின் போது அங்கு வந்த சமூக ஊழியரான மாதுரி கிருஷ்ணசாமி இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பினார். சில்வாட் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அந்த சமயம் கம்பவுண்டரும் ஒரு பொய்யான புகாரை, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தருகின்றார். ஆனால் கம்பவுண்டரும், நர்ஸ் ஆகியோர் சஸ்பண்ட் செய்யப்படுகின்றனர். பின் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

அந்த நிகழ்வு சமயம் காவல்துறையிடம் கம்பவுண்டர் கொடுத்த பொய்ப் புகாரினை கைவிடப் போவதாக கவல்துறை முடிவு செய்து நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு மாதுரியை வேண்டுகின்றது. அச் சமயம் நீதிபதி, காவல்துறை வழக்கினை கைவிட உரிய காரணம் கூறவில்லை; எனவே வழக்கினை முடிக்க முடியாது எனக்கூறி மாதுரியை சிறைப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே நேற்று 26.5.2013 மத்தியப் பிரதேச அரசு, மத்தியபிரதேச பாதுகாப்புச்சட்டம் 1990 அடிப்படையில் மாதுரி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுத்துவதாகவும் கூறி பர்வானி உள்ளிட்ட மாதுரி பணி புரியும் 5 அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அவர் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்காகவும், தேசிய கிராம வேலைவாய்ப்பு திட்ட பலன்கள் மக்களுக்கு செல்லவும் அயராது பாடுபடும், தன்னலமில்லாத சமுக, மனித உர்மை ஆர்வலரை சிறை படுத்துவது, தடைவிதிப்பது போன்ற செயல்களின் மூலம் சனநாயக பண்புகளுக்கு எதிராக செயல்படும் மத்திய பிரதேச அரசைக் கண்டிப்பதுடன், உடனே மாதுரி கிருஷ்ணசாமியை விடுதலை செய்யவும், அவர் மீது போடப்பட்ட தடையை விலக்கிக் கொள்ளவும் கோருகின்றோம்.

-‍ ச.பாலமுருகன், மாநிலச் செயலர், மக்கள் சிவில் உரிமை கழகம், தமிழ்நாடு & புதுவை

Pin It